Translate

2/08/2012

எனது காதலர் தின வாழ்த்து

காதலித்துப்பார் அதன் இனிமை விளங்கும், அதுநாள் வரையில் நீ கொண்டிருந்த உறவுகளின் மீதான பாசமெல்லாம் இரண்டாம் பட்சமாக்கி விடும் மாயாஜாலம், காதலின் முழுமையை பிரிவில் உணர்ந்துகொள், காதலில் நிரந்தர பிரிவு ஏற்ப்படுத்தும் அலைகழிப்பு தாணே புயலையும் சுனாமி ஆழிப்பேரலைகளையும் மிஞ்சிவிடும். காதல் என்பது எதை கண்டு யாரிடம் எதற்காக ஏற்ப்படும் என்பதை யாரும் கணிக்க இயலுவதில்லை. காரணமே இன்றியும் காதல் காற்றை போல் நுழைவதுண்டு. அவ்வாறு நுழைகின்ற காதலுக்கு காமம் இருப்பதில்லை, கவிஞர் கண்ணதாசன் சொல்லுவார் 'காமம் இல்லாமல் காதல் இல்லை' என்று. ஆனால் சில வகையான காதலுக்கு காமம் இடையுறு செய்வதே இல்லை.

நான் கவிஞர் திரு வைரமுத்துவை காதலிக்கிறேன், என்னைப் போன்ற லட்சம் பேர் அவரை காதலிக்ககூடும் அதில் ஒருபோதும் காமம் மூக்கை நுழைப்பதில்லை. எனக்கே தெரியாது நான் கவிஞரை காதலிக்கிறேன் என்று, ஓரு நாள் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தபோது அவரது மனதை போன்றே பளிச்சென்ற உடையும் அழகான கருத்த மீசையின் கீழே ஒளிர்ந்த வெண் பற்களில் தெரிந்த கண்ணியம் கலந்த புன்சிரிப்புடன் ஓரு மேசையின் எதிரெதிராக நாங்கள் இருவரும் ஓரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அமர்ந்திருக்கின்றோம், ஏற்கனவே பேசப்பட்ட ஏதோ ஓரு விஷயத்தைப்பற்றி மீண்டும் பேச தொடர்வதாக அவர் தான் முதலில் பேசுகிறார் சில நிமிட இடைவெளிக்குப் பின், 'எனது மனைவி பொன்மணி என்றால் எனக்கு உயிர், அவளுக்கு நான் ஒருபோதும் எனது வாழ்வில் துரோகம் செய்யமாட்டேன் என்பது உறுதி, இருந்தும் நீ என் மீது வைத்திருக்கும் தூய அன்பை நான் மதிக்கிறேன், உன்னையும் நீ வைத்துள்ள பாரபட்சமற்ற அன்பை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதால் மட்டுமே உன்னை இங்கு சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டேன், எக்காரணத்தை கொண்டும் நமது சந்திப்பு தொடருவது நியாயமற்றது, அதை நீயும் ஒத்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை உனது பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டேன், நாம் நண்பர்களாக பழகுகிறோம் என்று கூறிக்கொண்டு மீண்டும் சந்திப்பதால் இருவரின் வாழ்க்கையும் பிரச்சினைகளுக்குள்ளே சென்றுவிடும். அதானால்...............' என்று அவருக்கே உரிய அழகான தமிழில் பேசிவிட்டு எனது பதிலை எதிர்பார்ப்பவர் போல என்னை உற்று நோக்குகிறார்.

நான் சொல்ல நினைத்தவற்றை அல்லது எங்களது அந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு, நான் ஒன்றும் பேச தோன்றாமல் அவர் பேசுவதையே கவனித்துக்கொண்டிருக்கின்றேன், என் மனதில் ஒரு நிமிட
ம் திரு பொன்மணி வைரமுத்துவின் [மன்னிக்க வேண்டும் திருமதி பொன்மணி வைரமுத்து] மீது பொறாமை ஏற்பட்டு ஏற்பட்ட நொடியிலேயே காணாமலும் போய்விடுகிறது , அவரது மனைவியின் மீது நான் பொறாமை அடைவதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் , அவரிடம் கொட்டிகிடக்கும் தமிழ்ஆற்றல், இரண்டாவது காரணம் ஒழுக்கம் [ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதற்கு இவர் ஒட்டு மொத்த உதாரணம்], மூன்றாவது காரணம் பெரும்பாலான கவிஞர்களின் வாழ்க்கையில் இல்லாத, திட்டமிட்ட தெளிவான கட்டு கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது இவையனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல உள்ளது. ஒருசமயம் அவரது இயல்பிற்கும் எனது புரிதலுக்கும் நேர் எதிராய் எனது காதலை ஏற்று கொண்டேன் என்று கூறியிருந்தால் அவர் மீது எனக்கிருக்கும் காதல் கோட்டை சுக்கு நூறாய் சிதறிப்போய் இருக்கும், இவையெல்லாம் எனது மூடிய கண்களுக்குள் திரைப்படம் போல தோன்றி கண் திறந்தவுடன் எனக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. நான் ஒருபோதும் நினைத்து பார்த்திராத அக்காட்சிகள் ஒருபுறம் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் அவ்வாறான காட்சிகள் கண்களுக்குள் தோன்றுவதற்கு காரணம் அறியாமல் நான் இன்றுவரை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

காதலர் தினத்தில் இப்படியொரு முற்றிலும் வித்தியாசமான காதலை எண்ணி வியந்து போகிறேன், காதல் எத்தனையோ வகை, இந்த காதல் எந்த வகை என்பதை அறிய இயலாமல் ரசிக்கிறேன். எனது காதலர் தின வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு :

[நன்றி koodal.com ]

காலத்தை வென்ற கவித்துவம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் என்பதை உலகறியும், அவருக்கு முன்னும் பின்னும் அல்லது அவரது சமகாலத்து கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அக்கவிஞர்களின் மீது மானசீககாதல் ஏற்ப்படுத்துகின்ற வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது. கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சீரற்ற நிலை அவர்கள் மீது உயர்வான அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்த தவறிவிட்டது. எழுத்துக்களையும் கற்பனைகளையும் அனுபவங்களையும் ஏட்டில் எழுதி விற்கப்பட்டது போன்று தோன்றுகிறது. திருவள்ளுவர் தனது வாழ்க்கை முறையை அவரது எழுத்துக்களை விட அதிக மேன்மையாக வாழ்ந்து சென்றதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன, எழுத்துக்கள் கற்பனை கதைகளாக இருக்கும் பட்சத்தில் யாரும் அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

தவமிருந்து கிடைக்கின்ற தத்துவார்த்தமான சிந்தனைகள் அதை வாசிக்கின்றவரின் நாடி நரம்புகளினூடே புலன்களை சென்று அடைவதாக உள்ளது. திருக்குறள் உலக பொதுமறையாக போ
ற்றப்படுதலுக்கு காரணம் வள்ளுவன் வாசுகியின் நேர்மையான புனிதமான தவம். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பிரமிக்க வைக்கும் இரண்டடி 'பா'க்களின் சிறப்பை உலகறியும்.