Translate

2/19/2012

எல்லோருக்கும் எனது நன்றி [500வது பதிவு]

2000 ஆண்டு திடீரென்று கம்ப்யூட்டர் பற்றி படிக்கும் ஆர்வம் ஏற்ப்பட்டது அருகிலிருந்த NIIT யில் 15ooo ரூபாய் கட்டி ஒருவருட course படித்தேன், அங்கேயிருந்த கம்ப்யூட்டரில் செயல்முறை சொல்லி கொடுத்தபோதுதான் முதல் முதலாக கம்ப்யூட்டரை உபயோகித்தேன், கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல ஒன்றுமே விளங்கவில்லை, சொல்லி கொடுப்பவர்களிடம் தலையாட்டி விட்டு வீடு வந்து சேருகின்ற வரையில் மனதில் ஒரு பெரும் போராட்டம் நடக்கும், 15,000 பணத்தை வீணடிக்கிறேனோ என்று மனம் பதறும், ஆறு மாதங்கள் பயின்றவுடன் தேர்வு, தேறிவிட்டேன், ஆனால் அடுத்த ஆறுமாதங்களில் கடுமையான பாடங்களையும் செய்முறைகளையும் புரிந்துகொள்ள இயலுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது, கிளை தலைவரிடம் சென்று உண்மைகளை விளக்கிகூறினேன், அவர் மிகவும் நல்லவர் என்று நம்புகிறேன், எனது 10,000 பணத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செக் மூலம் அனுப்பிவைத்தார், ஆனால் மனதில் நிறைவு ஏற்படவில்லை, காரணம் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்திருந்தால் செய்முறை விளக்கத்தையும் வேறு விளக்கங்களையும் அறிந்துகொண்டு தேர்வு எழுதும் தைரியம் ஏற்ப்பட்டிருக்கும் அதற்காக கம்ப்யூட்டர் வாங்கிகொடுக்க சொல்ல முடியுமா,

2002 ஆம் ஆண்டு HP Home கம்ப்யூட்டர் வாங்கியபோது அதனுடன் இலவசமாக அப்போது பிரபலமாக இருந்த சத்யம் ஆன்லைன் இணையதள சேவை கிடைத்தது, அப்போதிலிருந்து இணையத்தை பயன்படுத்தினாலும் ப்ளாக் எழுதுவது பற்றி யோசித்ததே கிடையாது, அப்படியொன்று இருப்பது கூட அறிந்துகொள்ளாமல் வேறு எதையெல்லாமோ [சில சமயம் பொழுது போக்கிற்காக தேவையற்ற சாட்டிங் ] செய்துள்ளேன், அவற்றில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை, மன நிறைவும் கிடைத்ததில்லை மாறாக பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமே எஞ்சியது. இந்நிலையில் ஒருமுறை எதேச்சையாக 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் அவர்கள் ஆன்லைனில் ஒருமுறை ப்ளாக் எழுதுங்கள் என்று சொன்னார், அதற்க்கு பின்னர் அவரை இன்றுவரையில் காணவேயில்லை. ஆனால் அவர் சொன்ன பிறகுதான் ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.

நான் எழுத ஆரம்பித்தபோது நிறைய bloggers எனது எழுத்துக்களை படித்துவிட்டு கருத்துகள் கூறுவதுண்டு, அவர்களில் ஒருவரைக் கூட இப்போது காணவில்லை. அப்போதெல்லாம் எனக்கு தமிழ் திரட்டிகளைப்பற்றிய விவரம் ஏதும் தெரியாது, ப்ளாக்கிற்கு வந்து போகின்றவர்களை எண்ணுகின்ற widget பற்றியோ வேறு எந்த விவரமும் தெரியாது, ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரே இவற்றைப்பற்றிய விவரங்களை நானே அறிந்துகொண்டேன், இன்றைய தேதிவரையில் bloggers ஒருவரைக்கூட பரிச்சயம் கிடையாது. பரிச்சயப்படுத்திகொள்வதில் சிக்கல் இருப்பதாக பலரது ப்ளாகில் எழுதியதை படித்தப் பின்னர்தான் அதை பற்றி எனக்குத் தெரிந்தது, இங்கேயும் சண்டைகள் உண்டு என்பதை இரண்டு வருடங்கள் கழித்தே அறிந்துகொள்ள முடிந்தது.

இதையெல்லாம் எதற்க்காக எழுதி நேரத்தை வீணடிக்கிறேன் என்று நீங்கள் குறைகூறுவது எனக்கு கேட்கிறது, இது என்னுடைய 500வது பதிவு, இதுவரையில் நான் எழுதிய எந்த பதிவையும் மீண்டும் மீள் பதிவாக இடுவது கிடையாது. அதற்க்கு காரணம் எனக்கு எதையுமே ஒருமுறைதான் படிக்க பிடிக்கும், அதே போன்று எதையும் முன்னேற்பாடாக சிந்தித்து வைத்து 'இவற்றையெல்லாம் எழுதியே தீர வேண்டும்' என்று எழுதுவது கிடையாது, சில சமயங்களில் கூகுளின் உதவியுடன் சில படங்களை தேடி என் பதிவில் போடுவேன், இதைத்தவிர வேறு ஒரு இடத்திலிருந்து எடுத்து எழுதுவதில் ஆர்வம் இல்லை, மாறாக அவற்றை படித்துவிட்டு என் சொந்த வாக்கியங்களில் கட்டுரையாக்குவதிலேயே எனக்கு திருப்தி கிடைக்கிறது. இன்னொரு இடத்தில் பிரசுரித்திருப்பதை அப்படியே எடுத்து நான் எழுதுவதால் எனக்கு திருப்தியோ புகழோ வேறு எதவும் கிடைக்கபோதில்லை, முக்கியமாக எனக்கு மனநிறைவை தரப்போவதில்லை.

இதுவரையில் எனது பதிவுகளை வாசித்தும் தங்களது கருத்துக்களை எனது பதிவில் குறிப்பிடாமல் இருந்தாலும், படித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி, எனது பதிவுகளை திரட்டி மூலம் இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்திய அனைத்து திரட்டிகளுக்கும் எனது நன்றிகள், உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் எப்போதும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி