Translate

2/20/2012

"தொல்லை"காட்சி

ஊடகங்கள் பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களை அதிகம் கொண்டவையாக இருந்தது, தற்போது எந்த மாநிலமானாலும் தொடர்கதைகள் இல்லாத தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளே இல்லை, இடையிடையே நடப்பு செய்திகளையும் செருகி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது, இவற்றை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர் என்பதை மூலதனமாக வைத்து ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பபடுகிறது. தற்போது விளம்பரம் செய்பவருக்கு ஒருவிதத்தில் லாபம் என்றால் அதை ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு செய்வதிலும் பத்திரிகைகள் மற்றும் செய்திதாள்களில் அச்சிடப்படுவதற்க்கும் மிகவும் கணிசமான தொகைகள் அதாவது கோடிகணக்கில் லாபம் பெறுகின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப்ப பொறியாளர்களை விட ஏகப்பட்ட லாபம், ஒரு விளம்பரத்தை தயாரிப்பதற்க்கே லட்சங்கள் கோடிகள் செலவு செய்யப்படுகிறது, ஆனால் எந்த லாபமும் அடையாமலேயே அதை காணுகின்ற மக்கள் முட்டாள்களாக்கப்படுவதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம், நாம் அந்த விளம்பரத்தை காண்பதற்கு அவர்கள் நமக்கு என்ன கொடுக்கின்றனர் என்பதைப்பற்றி என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா,


சிலர் கூறுவது போல விளம்பரப்படுத்தப்படுகின்ற புதிய பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பார்கள், மிகவும் சரியான கேள்விதான், ஆனாலும் விளம்பரப்படுத்தப்படுகின்ற பொருட்களில் அவர்கள் கூறுவது போன்ற நன்மைகள் ஒரு சதவிகிதமாவது பொதுமக்களுக்கு அந்த பொருட்களினால் கிடைக்கிறது என்றால் நிச்சயம் மக்களுக்கு அந்த விளம்பரம் நன்மையை செய்வதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உதாரணத்திற்கு சருமத்தை ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ அவர்கள் விளம்பரத்தின்படி வெண்மைநிறமாக மாற்றிவிடுவதாக காண்பிப்பது போன்று ஒரு வருடம் அந்த பொருளை உபயோகித்தாலும் கூட வெண்மை நிறமாக மாற்றப்படுவதில்லை என்பது நிதர்சனமாக இருக்கின்ற நிலையில் உண்மையை அறியாத பாமர மக்கள் குறிப்பிட்ட பொருளை வாங்கி தொடந்து உபயோகிக்கின்றதில் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள். அவ்வாறு சுரண்டப்படும் ஒரு காரியத்தை தொடர்ந்து ஒளிபரப்புவதோ அச்சிட்டு விற்பனை செய்வதோ தவறு கிடையாதா. தவறு என்றால் அவ்வாறான விளம்பரங்கள் தொடர்வதை பொதுநலம் கருதி தடை செய்யாதது ஏன். உண்மையில் பார்க்கப்போனால் விளம்பரங்களில் காட்டுகின்ற பொருட்களை வாங்கி உபயோகிப்பதனால் சருமம் மற்றும் தலைமுடி போன்றவை மிகவும் மோசமான பாதிப்புகளை அடைவது நிச்சயம். போதாக்குறைக்கு பாலிவுட் கோலிவுட் நடிகர் நடிகைகள் வேறு நடித்து காட்டுகின்றனர். அவர்களும் வியாபாரிகளைப்போன்றவர்கள் தானே, பணம் கிடைத்தால் போதும்.[இந்த மாதிரி யாராவது சாக்கலேட் சாப்பிடுவாங்களா, பார்த்தாலே சாப்பிடவேண்டும் என்கின்ற ஆசையே போயிடும்].


தலைமுடியை
சுத்தம் செய்வதற்கான ஷாம்பூக்கள் பற்றி சொல்வதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அத்தனை பொய்யானவற்றை கூறும் விளம்பரங்கள் உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தில் நகர இயலாத நிலையில் நின்றுவிட்ட லாரியை ஒரு பெண் தனது கூந்தலை கட்டி இழுக்கின்ற அளவிற்கு உறுதியை கொடுப்பதாக காண்பிப்பது, அதைவிட கேவலமான விளம்பரம் பெண்களுக்கான பாட்[pad] பற்றி என்னவெல்லாம் காண்பிக்கின்றனர், விட்டால் பெண்ணை வைத்து நேரிலேயே விளக்கமளிப்பார்கள். இரண்டு செய்திதாள்கள் கொடுக்கின்ற விளம்பரம், இருவருக்கும் போட்டி என்பதால் மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாமே, சமீபத்தில் ஒரு பத்திரிகை தனது போட்டியை காண்பிப்பதற்கு எடுத்து உபயோகித்திருக்கின்ற விதம் நமது தமிழ் சினிமாக்களில் எப்படி ஆங்கிலப்படத்தை திருடி தாங்களே சொந்தமாக கற்பனை செய்து எடுத்ததை போல பெருமைப்பட்டு கொள்வார்களோ அதை போன்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் மிகவும் ரசித்த, பரபரப்பாக பேசப்பட்ட உண்மைச்சம்பவத்தை பதிவு செய்திருந்த வீடியோ காட்சியினைப்போல தமிழில் விளம்பரப்படம் எடுத்து ஒளிபரப்பும் செய்து வருகின்றனர் அந்த ஒரிஜினல் ஆங்கிலப்பட வீடியோவை காண கீழே சொடுக்குங்கள்.ஒரு நிகழ்ச்சியை, தொடர்கதையை, செய்தியை, திரைப்படத்தை என்று எவற்றை தொலைக்கட்ச்சியில் பார்க்க நினைத்தாலும் ஐந்து நிமிடம்தான் தொடர்ந்து பார்க்க முடியும் மிஞ்சிப் போனால் பத்து நிமிடம், அடுத்த பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு 'தொல்லை' ஆரம்பித்துவிடும், நம்ம இந்திய மக்களுக்கு ரொம்பவே சகிப்புத்தன்மை அதனாலத்தானே இந்தியாவில் மூணுமணிநேரம் திரைப்படம் எடுக்கவேண்டியிருக்கிறது, ஆங்கில திரைப்படங்களை மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்க யாரும் பொறுமை கிடையாது, மிஞ்சி போனால் ஒன்றரை மணி நேரம், சில வரலாற்று சிறப்பு வாய்ந்த கதைகள் மட்டுமே இரண்டரை மணிநேரம் காண்பிக்கபடுகிறது. நமது சகிப்புத்தன்மையை விளம்பரம் என்ற பெயரில் ஊடகங்களின் வாயிலாக பணமாக்கிகொண்டிருக்கும் பலரும் கோடிகளை சேர்த்து வைக்க இடமில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தற்போது இந்தியாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பவர்களை தேடி பிடிக்கின்ற பணி தீவிரமாக நடைமுறையில் உள்ளது. பத்திரிகைகள் செய்திதாள்கள் என்று ஒரு இடத்தையும் இவர்கள் விடுவதில்லை, இப்போதெல்லாம் பகட்டான விளம்பரங்களை பத்திரிகைகள் பெரிதாக எல்லோர் கண்களிலும் தவறாமல் பார்க்கும்படியாக பிரசுரிக்கப்படுகிறது.

..

2/19/2012

எல்லோருக்கும் எனது நன்றி [500வது பதிவு]

2000 ஆண்டு திடீரென்று கம்ப்யூட்டர் பற்றி படிக்கும் ஆர்வம் ஏற்ப்பட்டது அருகிலிருந்த NIIT யில் 15ooo ரூபாய் கட்டி ஒருவருட course படித்தேன், அங்கேயிருந்த கம்ப்யூட்டரில் செயல்முறை சொல்லி கொடுத்தபோதுதான் முதல் முதலாக கம்ப்யூட்டரை உபயோகித்தேன், கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல ஒன்றுமே விளங்கவில்லை, சொல்லி கொடுப்பவர்களிடம் தலையாட்டி விட்டு வீடு வந்து சேருகின்ற வரையில் மனதில் ஒரு பெரும் போராட்டம் நடக்கும், 15,000 பணத்தை வீணடிக்கிறேனோ என்று மனம் பதறும், ஆறு மாதங்கள் பயின்றவுடன் தேர்வு, தேறிவிட்டேன், ஆனால் அடுத்த ஆறுமாதங்களில் கடுமையான பாடங்களையும் செய்முறைகளையும் புரிந்துகொள்ள இயலுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது, கிளை தலைவரிடம் சென்று உண்மைகளை விளக்கிகூறினேன், அவர் மிகவும் நல்லவர் என்று நம்புகிறேன், எனது 10,000 பணத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செக் மூலம் அனுப்பிவைத்தார், ஆனால் மனதில் நிறைவு ஏற்படவில்லை, காரணம் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்திருந்தால் செய்முறை விளக்கத்தையும் வேறு விளக்கங்களையும் அறிந்துகொண்டு தேர்வு எழுதும் தைரியம் ஏற்ப்பட்டிருக்கும் அதற்காக கம்ப்யூட்டர் வாங்கிகொடுக்க சொல்ல முடியுமா,

2002 ஆம் ஆண்டு HP Home கம்ப்யூட்டர் வாங்கியபோது அதனுடன் இலவசமாக அப்போது பிரபலமாக இருந்த சத்யம் ஆன்லைன் இணையதள சேவை கிடைத்தது, அப்போதிலிருந்து இணையத்தை பயன்படுத்தினாலும் ப்ளாக் எழுதுவது பற்றி யோசித்ததே கிடையாது, அப்படியொன்று இருப்பது கூட அறிந்துகொள்ளாமல் வேறு எதையெல்லாமோ [சில சமயம் பொழுது போக்கிற்காக தேவையற்ற சாட்டிங் ] செய்துள்ளேன், அவற்றில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை, மன நிறைவும் கிடைத்ததில்லை மாறாக பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமே எஞ்சியது. இந்நிலையில் ஒருமுறை எதேச்சையாக 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் அவர்கள் ஆன்லைனில் ஒருமுறை ப்ளாக் எழுதுங்கள் என்று சொன்னார், அதற்க்கு பின்னர் அவரை இன்றுவரையில் காணவேயில்லை. ஆனால் அவர் சொன்ன பிறகுதான் ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.

நான் எழுத ஆரம்பித்தபோது நிறைய bloggers எனது எழுத்துக்களை படித்துவிட்டு கருத்துகள் கூறுவதுண்டு, அவர்களில் ஒருவரைக் கூட இப்போது காணவில்லை. அப்போதெல்லாம் எனக்கு தமிழ் திரட்டிகளைப்பற்றிய விவரம் ஏதும் தெரியாது, ப்ளாக்கிற்கு வந்து போகின்றவர்களை எண்ணுகின்ற widget பற்றியோ வேறு எந்த விவரமும் தெரியாது, ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரே இவற்றைப்பற்றிய விவரங்களை நானே அறிந்துகொண்டேன், இன்றைய தேதிவரையில் bloggers ஒருவரைக்கூட பரிச்சயம் கிடையாது. பரிச்சயப்படுத்திகொள்வதில் சிக்கல் இருப்பதாக பலரது ப்ளாகில் எழுதியதை படித்தப் பின்னர்தான் அதை பற்றி எனக்குத் தெரிந்தது, இங்கேயும் சண்டைகள் உண்டு என்பதை இரண்டு வருடங்கள் கழித்தே அறிந்துகொள்ள முடிந்தது.

இதையெல்லாம் எதற்க்காக எழுதி நேரத்தை வீணடிக்கிறேன் என்று நீங்கள் குறைகூறுவது எனக்கு கேட்கிறது, இது என்னுடைய 500வது பதிவு, இதுவரையில் நான் எழுதிய எந்த பதிவையும் மீண்டும் மீள் பதிவாக இடுவது கிடையாது. அதற்க்கு காரணம் எனக்கு எதையுமே ஒருமுறைதான் படிக்க பிடிக்கும், அதே போன்று எதையும் முன்னேற்பாடாக சிந்தித்து வைத்து 'இவற்றையெல்லாம் எழுதியே தீர வேண்டும்' என்று எழுதுவது கிடையாது, சில சமயங்களில் கூகுளின் உதவியுடன் சில படங்களை தேடி என் பதிவில் போடுவேன், இதைத்தவிர வேறு ஒரு இடத்திலிருந்து எடுத்து எழுதுவதில் ஆர்வம் இல்லை, மாறாக அவற்றை படித்துவிட்டு என் சொந்த வாக்கியங்களில் கட்டுரையாக்குவதிலேயே எனக்கு திருப்தி கிடைக்கிறது. இன்னொரு இடத்தில் பிரசுரித்திருப்பதை அப்படியே எடுத்து நான் எழுதுவதால் எனக்கு திருப்தியோ புகழோ வேறு எதவும் கிடைக்கபோதில்லை, முக்கியமாக எனக்கு மனநிறைவை தரப்போவதில்லை.

இதுவரையில் எனது பதிவுகளை வாசித்தும் தங்களது கருத்துக்களை எனது பதிவில் குறிப்பிடாமல் இருந்தாலும், படித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி, எனது பதிவுகளை திரட்டி மூலம் இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்திய அனைத்து திரட்டிகளுக்கும் எனது நன்றிகள், உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் எப்போதும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி

2/16/2012

கடமைகள் உரிமைகள்

குழந்தைகள் இல்லாத வீடு கலகலப்பில்லாமல் இருக்கும் என்பர், குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பிறப்பின்றி இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை ஒருபுறமிருக்க காண்போரெல்லாம் துக்கம் விசாரிப்பது போன்ற தோரணையில் விசாரிப்பதும் பார்ப்பதும் கொடுமை. குழந்தைகளை பெற்ற பின்னர் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் நடந்த பிறகு பிள்ளைகளால் பெற்றவர்கள் படுகின்ற அவச்த்தைகளும் மன உளைச்சல்களையும் விரல்விட்டு எண்ணிவிட இயலாது, பெற்றவர்கள் பிள்ளைகளால் சுகம் காணவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை என்றாலும் துன்பமாவது இல்லாமல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை உருவாகி, இவர்கள் பிறந்த போதும் வளருகின்ற போதும் தாம் அடைந்த இன்ப துன்பத்தையெல்லாம் மிஞ்சி விடுகின்ற அளவிற்கு 'இவர்களை எதற்க்காக பெற்றெடுத்தோம்' என்று வேதனைக் கண்நீரை வரவழைக்கும் பிள்ளைச்செல்வங்கள், 'போதும் போதும் இந்த வாழ்க்கை' என்று மரணத்தை துணைக்கழைக்கும் பெற்றோர்களை காணுகின்ற போது 'என்ன உலகமிது' என்று வெறுக்க வைக்கிறது.

'திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது மேல்' என்று தோன்றும் அளவிற்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், அதற்க்கு பின்னர் குழந்தைகளினால் பிரச்சினைகள், ஒரு குழந்தையை பெற்றவர்க்கு தங்கள் முதுமையில் அக்குழந்தை தன்னை விட்டுவிட்டு சென்றுவிடக் கூடாது என்ற தவிப்பு. ஒன்றிற்கு மேல் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு பெற்றோரை பங்கு போடும் நிலை, அந்த காலத்தில் பெற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கவனித்துக்கொள்வதென்பது கடமையாக இருந்தது, பெற்றோரின் பேச்சுக்கு கீழ்ப்படியவேண்டும் என்றோ அல்லது, வயதான பெற்றோரை பராமரிப்பது கடமை என்று கூறினாலோ இக்காலத்து பிள்ளைகள் கூறும் புதுமொழி 'உங்களால் பெற்றெடுக்கப்பட்டதால் உங்களுக்கு சொந்தமானவர்கள் கிடையாது, எங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் நோக்கங்கள் என்பது உண்டு அதன்படி நாங்கள் செய்வோம், பெற்றோரே ஆனாலும் அவர்கள் கூறுகின்ற எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை' என்று உரிமையைப் பற்றி பேசுகிறார்கள்.

'உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால், கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது. உரிமைகளுக்காக போராட்டங்கள் செய்பவர்களும் பெற்றோர்களிடம் வாதிடும் பிள்ளைச்செல்வங்களும் தங்களது கடமையை முழுவதும் மறந்துவிட்டு போராடுவது அவர்களின் மடமையை காண்பிக்கிறது. இப்படிப்பட்ட வளர்ச்சியை உள்ளடக்கி எந்த சமுதாயமும் முதலில் முன்னேற்ற பாதையை பற்றிய கனவை தீயிலிட்டு பொசுக்கிவிட வேண்டும். வீட்டில் பட்டினியாக கிடக்கும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வயிறு நிறைய மூன்று வேளை உணவு கொடுக்க இயலாதவர்கள் உண்ணா விரத போராட்டம், கருப்புக்கொடி பிடித்து போராட்டம் என்று சமூகத்தை காப்பாற்ற கவலையடைவது உரிமைக்கு குரல் கொடுத்தலாகுமா.

பெற்றோரை நேர்வழி நடத்த இயலாத பிள்ளைகளால் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முன்வர இயலுமா, அவ்வாறு முன் வந்தால் அதன் பெயர் உரிமை போராட்டமா, வேடிக்கையான மானிதர்கள், கடமைகளை மறந்தவர் உரிமையைப் பற்றி பெருமை பாராட்டும் தகுதியை இழந்துவிடுகின்றனர். 'ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது' என்பது இதற்க்கு நன்றாகவே பொருந்தும். பெற்றோரை மதித்து நடக்கத் தெரியாதவர்கள் எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க முடியாதோ, பெற்ற பிள்ளைகளையும் மனைவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களும் தங்களது கடமைகளை தட்டி கழிப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் உரிமை பற்றி நினைப்பதற்க்கோ பேசுவதற்கோ தகுதி அற்றவர்கள்.

..

2/14/2012

ஆசிரியர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

எங்கு பார்த்தாலும் திருட்டு, பணம் நகைகளை திருடுவதற்கு கொலைகள், வங்கியில் பட்டப் பகலில் துணிகர கொள்ளை, ஏ.டி.எம். பெட்டியிலிருந்து பணம் திருடும் கொள்ளையர்கள், இதனிடையே மருத்துவர் கொலை, ஆசிரியர் கொலை என்று காவல்துறையை அலைகழிக்கும் குற்றங்கள், ஒருபுறம் மின்சாரம் வேண்டி குரல் கொடுக்கும் கூட்டம், இன்னொரு புறம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி போராட்டம், இதனிடையே செவிலிகளின் போராட்டம், திரும்ப பணியில் அமர்த்த கோரி போராட்டம், மின்சார கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் இவ்வாறான போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையின் பரபரப்பு. இவற்றில் எதையும் முக்கியமற்றது என கருத இயலாத வண்ணம் ஒவ்வொரு கோரிக்கைக்குப் பின்னாலும் ஒவ்வொரு நியாயம்.

[http://www.thehindu.com/news/cities/chennai/article2773833.ece]

இவற்றின் ஒட்டு மொத்த கட்டுபாடுகளையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு, அதாவது சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பை வைத்திருக்கும் காவல்துறைக்குதான் மூச்சு திணறும் தருணம். போராட்டங்களில் பொதுவாக எல்லாவற்றிலுமே மிக முக்கியமான நியாயங்கள் முன் வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விதத்தில் உள்ளது, இன்னும் சில மாதங்களில் தேர்வுகள் துவங்கவிருக்கின்ற நிலையில், ஏற்கனவே சமசீர் கல்வியால் பள்ளிகளில் பாடங்களை துவங்க இயலாமல் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய நிலையில், ஆசிரியை மாணவனால் கொலை செய்யப்பட்டதால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு 'எங்களுக்கு மாணவர்களிடம் பாதுகாப்பு இல்லை, காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், எல்லா பள்ளிகளும் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரவேண்டும்' என்று கோஷமிட்டு பள்ளிகளில் பாடம் நடத்தாமல் வீதிகளில் போராட்டங்கள் செய்வதை தவித்து வரபோகின்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தாயார் செய்யும் பணியில் முழு கவனத்தை செலுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/protesting-nurses-arrested-tamil-nadu-623

மருத்துவரின் கொலைக்காக பாதுகாப்பு வேண்டும் என்று நோயாளிகளை கவனிக்கின்ற பொறுப்பை துச்சமாக தூக்கியெரிந்துவிட்டு போராட்டம் நடத்திய படித்த பண்புள்ளம் கொண்ட மருத்துவர்களைப் போன்று இல்லாமல், தங்களது சொந்த கோரிக்கைகளுக்காக நோயாளிகளின் சேவைகளை மறந்துவிட்டு போராட்டத்தையே முக்கியமாக கருதிய செவிலிகளை போல்லில்லாமல் ஆசிரியர்கள் தங்களது பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியையின் கொலையை காரணம் காண்பித்து பாடம் நடத்துவதை புறம்தள்ளிவிட்டு போராட்டம் செய்வதற்கு முன்வராமல் தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வருவது நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. இவ்வாறு தங்களது பொறுப்புணர்ந்து சேவைகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திகொள்வதை முன் உதாரணமாக காண்பித்த தமிழக ஆசிரிய பெருமக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன் . நன்றி.....

2/13/2012

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
காதல் என்பதை பொதுவுடைமை, பயித்தியகாரத்தனம், தெய்வீகமானது சுவாசக்காற்று, உயிர் என்று பலவாறாக சொல்வதுண்டு, அனுபவமும் உருவாகிய விதமும் இதற்க்கு அடிப்படை காரணங்கள் என்று கூறபட்டாலும் இந்த உணர்வின் இயல்புகள் மிகவும் விசித்திரமானவை. இதை ஒருவித வியாதி என்று கூட சொல்லலாம், ஒருவரின் அன்றாட செயல்களிலிருந்து முடங்கச் செய்வது, தான் காதலிப்பவரை தனது கட்டளைகளுக்கு கீழ்படுத்த நினைக்கின்ற சுயநலவாதியாக்கும் இதன் உச்சகட்டம் கொடுமையானது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சை' போன்று காதல் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடுகிறது. காதல் கொண்ட காரணத்திற்க்காக தனது சுய சிந்தையை சுய கட்டுபாடுகளை விட்டு விடுவது அல்லது கொடுத்துவிடுவது அசம்பாவிதங்களை கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. காதலில் தோல்வி ஏமாற்றம் இரண்டுமே இரட்டை குழந்தைகள். அந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பது அறியாது வாழ்க்கை முழுவதையும் பாழாக்கி கொள்ளும் மனநிலையை தவிர்ப்பதற்கு தயாராக இருத்தல் அவசியம்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் இவ்வாறு சொன்னார், ' காதலில் எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு அதிலிருந்து விடுபட வேண்டிய நிலை வரும்போது அதை விட நூறு மடங்கு அதிகமாக விலகுவதற்கு தேவையான வேகமும் வழிகளும் விவேகமும் அறிந்து செயல் பட வேண்டும் அல்லது காதல் நோய் நம்மை சிதைத்துவிடும்'. நான் கேட்பேன் 'அது எப்படி சாத்தியம்'. அவர் சொன்னார், 'எனது காதலியை நான் காதலித்த அளவிற்கு வேறு யாரும் காதலித்து இருக்க முடியாது [எல்லா காதலர்களும் சொல்லுகின்ற 'டையலாக்'] பனிரெண்டு வருடமாக காதலித்தோம், திருமணத்திற்கும் தயாராகவே இருந்தோம் எனது விருப்பம் என்னவோ அவையனைத்தும் அவளிடம் இருந்தது, அவளது ஆசைகளும் விருப்பங்களும் என்னவோ அவையனைத்தும் என்னிடமிருப்பதாக அவள் மகிழ்ச்சியுருவாள். பனிரெண்டு வருடத்திற்கு பிறகு நாங்கள் நிரந்தரமாக ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சந்தர்ப்பம் உருவானது, நானோ அவளோ ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அந்த சந்தர்ப்பம் எனது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது, அவளை மறக்க இயலாமல் தவித்தேன், வேலைக்கு போக முடியவில்லை பயித்தியம் பிடித்தவனைப்போல நினைத்த இடங்களில் விழுந்துகிடந்தேன், பல மாதங்கள் இந்த போராட்டம் தொடர்ந்தது, ஓர் இருண்ட முடிவில்லா குகைப்பாதையில் நான் மட்டும் தனியே இருப்பது போல உணர்த்தேன், ஒருநாள் எனக்குள் திடீரென்று ஒரு எதிர்மறையான எண்ணம் தோன்றியது, அந்த எண்ணம் அவளது அழிக்க முடியாத நினைவுகளிலிருந்து என்னை விலக்க போராடியது, நீண்ட கால போராட்டத்தின் முடிவில் அந்த எதிர்மறையான எண்ணம் வென்று விட்டது அதன் பின்னர் அவளை நினைக்கின்றபோது என்னை தாக்கி வந்த அந்த கொடூரமான சோகம் காணாமல் போனது, அவளும் நானும் ஒன்றாக வாழ்ந்த அந்த நினைவுகள் மட்டும் எப்போதும் என் மனதையும் கண்களையும் விட்டு விட்டு நீங்குவதே இல்லை' என்றார்.'அது என்ன எதிர்மறையான எண்ணம் உங்களை கொடூரத்திலிருந்து காப்பாற்றியது' என்றேன், அதற்க்கு அவர் 'துவக்கத்தில் அந்த எதிர்மறையான எண்ணத்தால் உடனே என்னை தூக்கி நிறுத்த முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக என்னை முற்றிலுமாக விடுவித்தது என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், அவள் எனக்கு செய்த சில துரோகங்களை அந்த எதிர்மறை எண்ணம் என் மனதிடம் மீண்டும் மீண்டும் காட்ச்சிகளைப்போல எடுத்து காண்பித்துக் கொண்டே இருந்தது, அவளது துரோகச் செயல்களை நான் மன்னித்துவிட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இப்படிபட்டவளையா மறக்க இயலாமல் தவிக்கின்றாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தது, இதன் மூலம் நான் கற்ற பாடம் காதலித்தவரை எளிதில் மறக்கவேண்டுமென்றால் அவருடன் பழகிய நாட்களில் நடந்த கசப்பான மற்றும் அவர் நம்மிடம் சொன்ன பொய்கள் நாம் வெறுக்கின்ற விதங்களில் அவர் நம்மிடம் நடந்துகொண்ட சமயங்களை மீண்டும் மீண்டும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி பார்ப்போமானால் நாளடைவில் அவர் மீதிருந்த காதலின் வேகம் குறைந்து நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் விலகிவிட முடியும்' என்றார்.

காதலிக்கின்ற போது நாம் நம்மை சுற்றி இருக்கின்ற உறவுகளின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு அல்லது மறந்துவிட்டு காதலில் முழுமையாக மூழ்கிவிடுவதால் உறவுகளை காயப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் நம்மையும் அறியாமல் காதலின் அடிமைகளாக்கப்பட்டு பின்னர் வேண்டாதபோது அதிலிருந்து வெளியேற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையின் முழுமையை அறிந்துகொள்ளாத முடமாகிவிடுகிறோம். மனதை எவ்வாறு காப்பாற்றிக்கொள்ள பழகிக்கொள்வது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

..

2/10/2012

சில துர்தேவதைகள்

கெட்டவர்கள் நிறைந்த உலகம் அநியாயத்திற்கு நல்லவர்களையும் இந்த உலகம் உள்ளடக்கி துன்புறுத்துகிறது , அந்த நல்ல மனிதர்களை காணும் வாய்ப்பை பெறுகின்ற போது, அதனை நமது மனம் மறக்க இயலாத ஒன்றாக பதிவு செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறது. எனது அனுபவத்தில் நான் பார்த்த அத்தகைய மனிதர்களுள் சிலரைப்பற்றி எழுதுவதென்று தீர்மானித்தேன், இவர்களை நான் வெறும் மனிதர்களாக எண்ணுவதே கிடையாது கடவுளின் படைப்பில் எத்தனையோ அபூர்வங்களில் இவர்களும் சிலர் என்றே எண்ணுகிறேன். முதலில் என் எழுத்திற்குள் வருகின்ற நபர் என் உறவினர் என்பதால் என் குழந்தைப்பருவம் முதலே அவரை கவனிக்க முடிந்தது. இவருக்கு குறிப்பிட்ட வயதில் திருமணம் முடிக்க இவரது பெற்றோர் இல்லை என்கின்ற காரணத்தால் இளமை முழுவதும் என்னுடன் கழித்தார், அவரை பிரிந்தால் எனக்கு காய்ச்சல் வந்துவிடும் அளவிற்கு எனக்கு அவர் மீது எல்லையற்ற பாசம், அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும் ஒரு முறை அவருக்கு அம்மை போட்டு உடல் முழுவதும் கொப்புளங்கள் நிறைந்திருந்தது, அவருடன் இணைந்து ஒரே படுக்கையில் உறங்க கூடாது என்று எனது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என் பெற்றோரிடம் தவறாமல் சொல்லி வந்தனர், ஆனால் நானோ அவரை இறுக கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவதையே தொடர்ந்து செய்து வந்தேன் . அவரிடமிருந்து வலுகட்டாயமாக என்னை பிரித்தால் எனக்கு கடும் காய்ச்சல் வந்துவிடும் என்பதால் என் பெற்றோரும் என்னை அவரிடமிருந்து பிரிக்க முயற்ச்சிக்கவில்லை, எல்லோரும் பயந்ததைப்போல எனக்கு அம்மை போடவில்லை.

எனக்கு பத்து வயதிருக்கும் அப்போது அவருக்கு நாற்பது வயது அவரது சித்தப்பாவும் சித்தியும் திருச்சியில் பெண் பார்த்து திருச்சியிலேயே அவருக்கு திருமணம் முடித்தனர், மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தபோது மணப்பெண்ணை முதலில் அருந்த சொன்னார், பிறகு அவர் சிறிது அருந்திவிட்டு மீதம் எனக்கு கொடுத்து அருந்த வைத்தார். அதை கண்ட மணப்பெண் என்ன நினைத்திருப்பார் என்பதை இப்போது என்னால் சிந்திக்க முடிகிறது. அவர்கள் இருவரும் சென்னையில் தனி வீட்டில் குடித்தனம் நடத்த துவங்கியபோது தினமும் தனது புது மனைவியுடன் மாலையில் என்னை வந்து பாரத்துவிட்டு செல்வார். அப்போதே என்னிடமிருந்து அவர் பிரியத்துவங்கிவிட்டார். ஆனால் எனக்கு பத்து வயது என்பதால் நிலைமையை முழுவதுமாக விளங்கிக்கொள்ள இயலவில்லை என்றாலும் அவரது பிரிவு எனக்கு காய்ச்சலை ஏற்ப்படுத்தவில்லை.

அவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட, இரண்டாவது பெண் குழந்தையை அவரது மனைவி அவருக்கு பெற்று கொடுத்தார், இதற்கிடையிலே அவர் எங்கள் வீட்டிற்கு வந்து போவது முழுவதுமாக நின்றுவிட்டிருந்தது. ஆனால் எனது பெற்றோருடன் அவரது குழந்தையை நான் பாரத்துவிட்டு வருவதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன், அவரை அதிக நாட்கள் கழித்து பார்த்ததில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, நேராக சென்று அவரது கழுத்தை கட்டி பிடித்துக்கொண்டு முத்தமழை பொழிந்தேன், அவர் தனது மகிழ்ச்சியை அப்போது வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தார் என்பதை நான் அறியவில்லை, ஆனால் அவரது மாற்றம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்பது உண்மை. அதை கவனித்த என் பெற்றோருக்கு சொல்லொண்ணா மன வருத்தம் [பின்னொரு நாளில் அறிந்தேன்]. நாட்கள் மாதமாகி மாதங்கள் வருடங்களாகியது.

அவர் எப்போதும் எங்கள் வீட்டுக்கருகிலேயே வசித்து வந்தார் என்பதால் நான் அவர் வீட்டிற்கு சென்று அவர்களை பாரத்துவிட்டு வருவேன், அவரோ அவரது மனைவியோ மகளோ எங்களை பார்க்க வருவதே கிடையாது. ஆனால் தினமும் எங்களது வீட்டை கடந்துதான் அவர் வேலைக்குச் சென்று வரவேண்டும் என்பதால் அவர் எங்கள் வீட்டை கடந்து செல்லும்போது எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தால் 'அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே நிற்காமல் சென்றுவிடுவார். ஞாயிற்றுகிழமை அல்லது விடுமுறை நாட்களில் எப்போதாவது அவரது வீட்டிற்கு நான் போவதுண்டு, அவரது மனைவி என்னுடன் பேசுவதே கிடையாது, அவர் மகளையும் என்னுடன் பேச விடுவதில்லை, ஈசி சேர் [Easy Chair] ஒன்று அவரது வீட்டின் முன்னால் போடபட்டிருக்கும் அதில் உட்கார்ந்துகொள்வேன், முதன் முதலாக அதில் நான் உட்கார்ந்தபோது அவரது மனைவி அவருடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார், அப்போது அவர் மனைவி சத்தமாக கூறிய வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தது, 'முதலில் அந்த சேரை(Chair) எடுத்து மடித்து பரணையில போடு', அதற்க்கு அவர் 'அவள் கொஞ்ச நேரம் அதில உட்கார்ந்து விட்டு போயிடுவா பிறகு மடிச்சு வைக்கலாம்; சத்தமா சொல்லாத அவ காதில கேட்க போகுது' என்றார் அதற்க்கு அவர் மனைவி, 'கேட்கட்டும் அது என் அம்மா வீட்டிலிருந்து நான் எடுத்து வந்தது' என்றார். அதன் பிறகு அந்த இடத்தில் அந்த இருக்கையை நான் பார்க்கவே இல்லை. இந்நிலையில் நான் அவர்களது வீட்டிற்கு அழையா விருந்தாளியைப்போல சென்று வருவதுண்டு. அவரை பார்ப்பதற்காக.

அவ்வாறு அவர் வீட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் அவர் அடுத்த வீட்டின் கிணற்றிலிருந்து நீரை எடுத்துவந்து அவரது வீட்டில் இருந்த பெரிய தொட்டிகளில் நிரப்பிக்கொண்டிருப்பார், அல்லது கடைக்குச் சென்று அடுப்பெரிப்பதற்க்கு [அப்போதெல்லாம் சமையல் எரிவாயு எல்லா இடங்களிலும் கிடைக்காது] விறகுகளை கடையில் வாங்கி சுமப்பதற்கு கடையில் கூலியாள் கிடப்பது அரிது என்பதால் அவரே சுமந்து கொண்டு வருவார். அல்லது மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டுவர சென்றுவிடுவார். இவற்றையெல்லாம் அவர் செய்வது என்னிடம் பேசாமல் தவிர்ப்பதற்காக என்று நான் நினைத்ததே இல்லை, ஏனென்றால் அது அவரது வேலையாக இருந்ததென்பது எனக்குத் தெரியும். சில நாட்கள் கணவன் மனைவிக்கு வாக்குவாதம் பெருத்து சண்டை நடந்துகொண்டிருக்கும், அவ்வாறு சண்டையின் போதெல்லாம் அவரது மனைவி திரும்ப திரும்ப சொல்லும் ஒரே கோரிக்கை 'என் அம்மா வீட்டில் எனக்கு போட்ட புலிநக தோடும், ஒரு மோதிரமும் வட்டி கடையிலிருந்து எடுத்து கொடு' என்பதுதான். இவை இரண்டு மட்டுமே அவருக்கு அவரது அம்மா வீட்டில் திருமணத்திற்கு கொடுத்ததாம்.

அவர் தென்னிந்திய தொடர்வண்டி அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்ததால் நினைத்தபோதெல்லாம் திருச்சிக்கு பயணப்படுவார்கள், அவ்வாறு பயணப்படுகின்ற போதெல்லாம், அவருடைய மனைவியின் மூன்று சகோதரிகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் அங்கே அதிகம் கிடைக்காத கடல் மீன்கள் வறுவல், இறால் வறுவல், பெண்கள் அணியும் உள்ளாடைகள், உப்பிட்ட காய்ந்த மீன்கள் இன்னும் என்னவெல்லாம் அவர்கள் கடிதத்தில் வாங்கி வரும்படி கேட்டு எழுதியிருந்தார்களோ அவையனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் தொடரும். இவ்வாறு வருடத்திற்கு பலமுறை நடக்கும். இதனால் ஏற்ப்படும் அதிகப்படியான செலவை சமாளிக்க கடன் வாங்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது, கடன் சுமையை சமாளிக்க இயலாமல் மேலும் கடன் வாங்கினார், ஆனால் எங்கள் குடும்பத்திற்கு கொடுப்பதற்காக அவரது திருமணத்திற்கு முன்பே வாங்கிய கடனால்தான் தங்கள் குடும்பம் கடன் சுமையால் அவதிப்படுகிறது என்று எங்களிடமும் மற்றவர்களிடமும் அவரது மனைவி கூறி வந்தார், உண்மையில் அவருக்கு விடுதியில் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சினை அதிகமானதன் காரணம் என்பது எல்லோரும் அறிந்தது, அதுமட்டுமில்லாமல் நாற்பது வயதிற்கு மேலாகிய பின்னரும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதன் காரணமும் அவரது வயிற்று பிரச்சினை, விடுதி உணவு என்பதை எல்லோரும் நன்கு அறிந்திருந்தனர். அவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார், மகளின் திருமணத்திற்காக இருந்த வீட்டை விற்கவேண்டும் என்று மனைவி சொல்ல வீட்டையும் விற்று பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியின் விருப்பபடி திருச்சி சென்று 'செட்டில்' ஆகி விட்டனர், கையிலிருந்த பணமுழுவதையும் தனது அண்ணனிடம் கொடுத்து தனது மகளின் திருமணத்தை நடத்திவைக்க சொல்லும்படி அவரது மனைவி வற்புறுத்தவே இவர் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் மனைவியின் அண்ணனிடம் கொடுத்துவிட்டு காத்திருந்தார் சில மாதங்களில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால் அவர் கொடுத்த பணத்திற்கு ஏற்ற செலவினங்கள் இல்லாமல் வெறும் தாலி கட்டிய திருமணமாக நடந்தேறியது. கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டபோது மனைவியின் அண்ணனிடம் கடுமையான விரோதம் ஏற்ப்பட்டது மட்டும்தான் மிச்சம், பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டதை பற்றிய அவரது கவலை அதிகமாகியது ஏற்க்கனவே இருந்த கடன் தொல்லை வேறு, சென்னைக்கு வருகின்ற போதெல்லாம் எங்கள் வீட்டில் தங்குவார் அப்போது என் அப்பாவிடம் தான் ஏமாற்றப்பட்டதை சொல்லி வருத்தமடைவார்.

அவரது மகளின் திருமணத்திற்கு முன்னர் திருமண பத்திரிகையுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார் , ஆனால் எங்களிடம் அவர் முன் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமாக இருந்ததை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும், ஏனென்றால் திருமண அழைப்பிதழுடன் ஒருவரை அழைக்க வருபவர்கள் அழைப்பிதழை கொடுத்துவிட்டு 'மறக்காமல் குடும்பத்துடன் வந்துடுங்க' என்று சொல்வது வழக்கம் ஆனால் இவரோ 'திருமணத்திற்கு நீங்கள் திருச்சிக்கு வருவதானால் செலவு அதிகம் என்பதைவிட உங்களை வரவேற்று தங்க வைப்பதற்கு போதுமான வசதி அங்கில்லை என்பதால் நீங்கள் மணமகளுக்கு கொடுக்க நினைக்கின்ற பரிசை பணமாக என்னிடமே கொடுத்துவிட்டால் நல்லது' என்றார். அவர் விருப்பப்படியே அவரது கையிலேயே ஒரு தொகையை கொடுத்துவிட்டோம். சில மாதங்கள் கழித்து என் வீட்டிற்கு வந்த அவர், சென்னையில் இன்னும் சில கொடுக்கல் வாங்கல்கள் இருக்கிறது அத்துடன் மிகவும் முக்கியமான வேலை எனக்கு பின்னர் மாதாமாதம் எனது பென்ஷன் தொகையை பெறுவதற்கு பெயரை பதிவு செய்யும் பணிக்காக வரவேண்டியுள்ளது என்றார். அந்த வேலையெல்லாம் ஓய்வு பெறுவதற்கு முன்பே முடிந்துவிடுமே என்றேன் நான், அது மனைவிக்குத்தானே கொடுக்கும் வழக்கம் என்றேன் சந்தேகத்துடன்.

இன்னமும் சில மாதங்கள் கழித்து ஒருநாள் எனது வீட்டின் கதவை தட்டிய அவர் திருச்சியில் ஒருவருக்கு கொடுப்பதற்கு அவசரமாக பணம் வேண்டும், உடனே தரும்படி வற்ப்புருத்தினார், எனக்கு எரிச்சல் உண்டானது உன் மனைவி மனைவியின் சொந்த பந்தங்கள் எல்லாரும் திருச்சியில் இருக்கும் போது எங்களை எதற்கு தொந்தரவு கொடுக்கிறார் என்று கோபத்தில் திட்டினேன், ஏனென்றால் பல முறை அவருக்கு பெரும் தொகைகளை கொடுத்து என் கணவர் உதவினார். அதற்க்கு அவர், 'நான் என் மனைவி மகளுடன் இல்லை அவர்கள் என்னை வீட்டை விட்டு விரட்டியதோடு நில்லாமல் எனக்கு வருகின்ற மாத பென்ஷன் புத்தகத்தையும் என்னிடமிருந்து பிடுங்கி கொண்டனர்' என்றார். 'உன் அப்பா சொன்ன உபதேசங்கள் ஒன்றையுமே நான் அப்போது பெரிசா நினைக்கல, அவர் எப்பவுமே என்கிட்டே சொல்லுவார் உனக்கு வேண்டப்பட்டவர்கள் நாலுபேர் உன்னை சுற்றி வசிக்கின்ற ஊரிலேயே நீ வாழாமல் வேறு ஊருக்கு மொத்தமாக செல்வது எந்த விதத்திலும் சிறந்ததல்ல என்பார், அதைவிட மிகப்பெரிய ரகசியம் இத்தனை வருடங்களாக உன் பெற்றோரிடம் கூறாமல் நான் மறைக்க வேண்டியிருந்த ஒன்றை இன்றைக்கு உன்னிடம் சொல்லுகிறேன், அவர்கள் ஆத்மா இந்த வார்த்தைகளை உன்னிடம் நான் சொன்ன பிறகாவது என்னை மன்னிக்குமா அல்லது சாந்தி அடையுமா தெரியவில்லை'. என்றார்.

நான் பேசாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் முழுவதுமாய் நரைத்து இளைத்து கருத்து போயிருந்த அவரை உற்று பார்த்தேன் அவரில்லாமல் நான் காய்ச்சலால் கிடந்த ஞாபகம் என்னை சித்திரவதை செய்தது, என்னை கை பிடித்து தினமும் கடைக்கு கூட்டிச்சென்று எனக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கி கொடுத்தது நான் ஆசையாய் அவரது கழுத்தை கட்டி பிடித்துக்கொள்ளும் போது அவரும் நானும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தது ஒவ்வொன்றாய் என் நினைவில் வந்தது, ஒரு நிமிடம் என் கண்முன் தோன்றி மறைந்த அந்த பழைய ஞாபகங்கள்..... இப்போது எனது பெற்றோர் இல்லை, ஒருசமயம் அவர்கள் இதை கேட்டுக்கொண்டிருந்தால் அவர் சொன்னது போல அவர்கள் மனம் சாந்தியடைந்திருக்காது மாறாக வேதனை அடைந்திருக்கும், அவர் தொடர்ந்து அந்த பல வருட ரகசியத்தை சொல்ல தொடங்கினார், 'உன் மீதும் உன் அப்பா அம்மா மீதும் எனக்கிருந்த பாசத்தை முற்றிலுமாக துண்டிக்க என் மனைவி என்னிடம் பல விதங்களில் சொல்லி பார்த்தாள், ஆனால் என்னால் அத்தனை சீக்கிரத்தில் அந்த பாசத்தை துண்டிக்க இயலாது என்று நான் சொன்ன போதெல்லாம் அவள் எனக்கு ஏதாவதொரு விதத்தில் தண்டனை கொடுத்து வந்தாள், அந்த தண்டனைகளை பற்றி உன் பெற்றோரிடம் சொன்னால் நீயோ உன் பெற்றோரோ தாங்கிக்கொள்வது கடினம். அவர்களை வேதனைபடுத்த நான் விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்கிறேன் என்று என் மனைவியிடம் சொல்லுவேன் ஆனால் அவளோ பிடிவாதமாக சத்தியம் செய்து தரும்படி என்னை வற்ப்புருத்துவாள் சத்தியமும் செய்து கொடுத்தேன்

அவ்வாறு எனக்கு அவள் கொடுக்கின்ற எத்தனையோ விதமான தண்டனைகளை தாங்கிக்கொண்ட எனக்கு ஒருநாள் கொடுத்த தண்டனை வெகுவாக காயப்படுத்தி நிலைக்குலைய செய்தது, உன் அம்மாவுடன் என்னை இணைத்து பேசினாள், என் தாயைப்போல் நான் மதிக்கும் உன் தாயைப்பற்றி அவள் தரம் கெட்ட முறையில் சித்தரித்தபோது என்னால் கோபத்தை அடக்க இயலாமல் என் மனைவியை கண் மூடித்தனமாக அடித்தேன், அவ்வாறு அவள் தரம் கெட்ட முறையில் என்னை பேசினாலாவது உங்கள் குடும்பத்துடன் நான் பழகாமல் நிறுத்தி விடுவேன் என்பது அவளது குறிக்கோளாய் இருந்ததால் தொடர்ந்து அவ்வாறே பேசினாள், நானும் அவள் அவ்வாறு பேசுகின்ற போதெல்லாம் கண்மூடித்தனமாக அடிப்பேன், இந்நிலையில் இவளும் எனது மூத்த அண்ணனின் மனைவியும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருப்பதை நான் அப்போது அறியவில்லை, எப்போதும்போல என் மனைவியின் வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்த போது என் மனைவியின் அம்மா உடல் நலமில்லாமல் படுக்கையாக இருந்ததை சரியான தருணமாக உபயோகித்த என் மனைவி அவளது சதியை செயல் படுத்திக்கொண்டாள், அவளது அம்மாவிடம் சொல்லி அவர் கேட்பதற்கு கையடித்து சத்தியம் வாங்க சொல்லி முதல் கட்டளையாக ஓய்வு பெற்று வருகின்ற பணம், ஓய்வு ஊதியம் முதலியவற்றை மனைவியின் கையில் முழுவதுமாக கொடுத்து மனைவியின் விருப்பத்தின் பேரில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அடுத்ததாக என் பெற்றோரிடமும் என்னிடமும் எக்காரணம் கொண்டும் இனி ஒருபோதும் பேசவோ உறவு வைத்துக்கொள்ளவோ கூடாது என்பதுதான் அவர்கள் கேட்ட சத்தியத்திற்க்கான கட்டளைகள். வேறு வழியின்றி மரண படுக்கையில் இருக்கும் மாமியாருக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டார். அதனால் வேறு வழியின்றி என்னையும் எனது பெற்றோரையும் நிரந்தரமாக தன்னிடமிருந்து பிரிந்துவிட்டார். அப்படியாவது அவரது வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட்டதா

ஒரு வருடத்திற்கு பின்னர் விபத்தில் மரண அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு அவரது மனைவியோ மகளோ தயாராக இல்லை என்பதால் ஒருநாள் முழுவதும் உயிர் உடலை விட்டு பிரிய இயலாமல் தவித்துக்கொண்டிருந்துவிட்டு பின்னர் அவர் இறந்ததாகவும் செய்தி கேட்டேன். அவருக்கு அப்போது வயது 82. மனம் தாங்கொண்ணா துக்கத்தால் நிறைந்தது. தற்போது அவர் மனைவி நடுவன் அரசின் கணிசமான ஓய்வூதியம் பெற்று நலமுடன் தனது விருப்பபடி வாழ்ந்து வருவதாக அவரது சகோதரிகள் பொறாமையுடன் புலம்புகின்றனர். அவர் ஆன்மா சாந்தியடைந்திருக்குமா, மரணத்திற்கு பின்னும் வேதனையா.

..

2/08/2012

இதெல்லாம் கூட காதலாம்

காதலர் தினத்தை பற்றி உண்மைகள் ஒருபுறமிருக்க சில காதலர்கள் அவற்றிற்கு துளியேனும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை என்னவென்று சொல்வது. அந்த பெண் பொறியியல் படித்து விட்டு பொறியாளராக நிறுவனமொன்றில் சில வருடம் பணியாற்றி வந்தாள், அவள் அவனை எங்கே எவ்வாறு சந்தித்தாளோ விவரம் அறிந்துகொள்ளவில்லை, அவளது காதலன் மருத்துவர், காதல் என்றால் திருமணத்தில் முடிய வேண்டும் என்கின்ற மரபை அவர்கள் இருவரும் 'புதுமை' என்கின்ற பெயரில் தவிர்த்து விடவும் தயாராகவே இருந்தனர், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை [அவரும் பொறியாளர்] திருமணம் செய்து கொண்டாள் அந்த பெண், அவள் காதலனும் அவரது பெற்றோர் பார்த்து நடத்திய திருமணத்தை ஏற்று கொண்டுவிட்டார். இதில் அதிசயம் என்னவென்றால் இருவரது காதலும் எந்தவித தங்கு தடையும் இன்றி தொடர்ந்துகொண்டே இருந்தது, இதை என்னிடம் சொன்ன அவர்களது நண்பர் அவளுக்கு பிறந்திருக்கின்ற குழந்தைகள் கணவருக்குத்தான் பிறந்ததா இல்லை காதலனுக்கு பிறந்ததா என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்று சொன்னார், இருவரும் இன்றுவரை காதலர்தினம் கொண்டாடி வருவதுடன் திருமண வாழ்க்கையையும் செவ்வனே நடத்தி வருகின்றனர் என்றார். இதைத்தான் ரெட்டை குதிரைச் சவாரி என்றனர் போலும், இப்படியும் சிலர்.

மேற்கூறிய காதல் பற்றிய விவரத்தை எனது நண்பர் என்னிடம் சொன்னதற்கு இன்னொரு விபரீத காதல் காரணம், அந்த காதல் என் நண்பருடைய காதல், என் நண்பரின் பெற்றோர் அவருக்கு திருமணம் முடிக்க வற்ப்புறுத்தி வருகின்றனர், ஆனால் நண்பரோ அதை தவிர்த்து கொண்டே இருக்கிறார் அதனால் அவருக்கும் பெற்றோருக்கும் மனகசப்பு ஏற்ப்படுவதை அவரால் தவிர்க்கவே இயலவில்லை, நான் அவரிடம் 'என்னிடமாவது உண்மையைச் சொல்லுங்கள் எதற்க்காக திருமணத்தை தவிர்த்து வருகிறீர்கள், பாவம் பெற்றோர் வயதான காலத்தில் அவர்களுடன் எதற்கு சண்டை' என்றேன் அவர் தனது காதல் கதையை சொல்ல அதை கேட்டு என்னால் பதில் கூற இயலாமல் போனது, இந்த காதல் முந்தைய கதையை விடக் கொடுமை, என் நண்பரும் அவரது காதலியும் ஐந்து வருடங்களாக பள்ளிப்பருவ முதல் கல்லூரி வரையில் காதலித்து வந்தனர், இருவரும் ஒரே வீதியில் வாழ்ந்து வந்தனர், அதே வீதியில் வசித்து வந்த வேறொரு இளம் பெண் பெயர் இந்து, இவரது காதலியின் தோழி, அதனால் இவர்களது காதலைப்பற்றி நன்கு அறிந்திருந்தாள், என் நண்பருக்கு அவரது தங்கையின் திருமணம் முக்கியமானதாக இருந்ததால் தனது காதலைப்பற்றி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே இருந்து வந்தார், இதற்கிடையில் அவரது காதலியின் தோழி இந்துவிற்கு திருமணம் முடிந்தது, அவளது புகுந்த வீடு பக்கத்து ஊரில் இருந்தால் அவள் தன் தாய் வீட்டிற்கு வருகின்றபோதேல்லாம் தனது தோழியை சந்தித்துவிட்டு செல்வது வழக்கம், அவ்வாறு தனது தோழியின் வீட்டிற்கு வந்தபோது அவள் தோழி அப்போது வீட்டில் இல்லாதிருந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தாள், தனது தோழியின் பெற்றோரிடம் அவளுக்கு சீக்கிரம் திருமணம் செய்துவிடும்படி வற்ப்புறுத்தி கூறிச்சென்றாள், அதை கேட்ட அவளது பெற்றோர் அவளுக்கு ஒருசில மாதங்களில் திருமணம் முடித்தனர்,

தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போனதிலிருந்து மன வேதனையில் இருந்து வந்த என் நண்பரிடம் இந்து 'நீ உயிருக்கு உயிராய் நேசித்திருந்தும் உனக்காக காத்திராமல் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டாள் உன் காதலி அவளுக்கு உன் மீது அவ்வளவுதான் காதல்' என்று கபட நாடகம் ஆடினாள், உண்மைகளை அறியாத காதலர் இருவரும் கலங்கித் தவித்தனர், இந்த சூழலை மறுபடியும் தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வில்லி இந்து என் நண்பரை தனது வீட்டிற்கு அடிக்கடி வரும்படி அழைத்திருக்கிறாள், அங்கே சென்ற எனது நண்பனுடன் அவள் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறாள், காதலியை பிரிந்த சோகத்தில் இருந்த என் நண்பருக்கு அவளது அனுசரணை இதமாக இருந்தது, அதை தொடர்ந்து இருவரும் கணவன் மனைவியைப்போல வாழ தொடங்கினர், அவ்வாறு வாழத்தொடங்கியத்தில் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தனர், இந்துவின் கணவனுக்கு அவர்களது நடப்பில் ஒருபோதும் சந்தேகம் ஏற்ப்படாதவாறு மிகவும் ஜாக்கிரதையாக அவர்களது உறவு தொடர்ந்தது, என் நண்பரின் தங்கைக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, என் நண்பரை திருமணம் செய்துகொள்ள விடாமல் தன்னுடன் மட்டுமே தொடர்ந்து உறவு வைத்துகொள்ளச் சொல்லி வற்ப்புறுத்தி வருகின்ற அந்த பெண்ணைப் [இந்துவை] பற்றி என்னிடம் கூறிய எனது நண்பரின் கதை வித்தியாசமானதாக இருந்தது.

தனது காதல் கணவனுடன் எட்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் தனது மூத்த மகனின் வயதொத்த குடும்ப நண்பர்களாக பழகி வந்த இளைஞனிடம் காதல் கொண்ட அப்பெண் தனது ஏழு குழந்தைகளையும் உடல் நலம் குன்றிய எட்டாவது குழந்தையையும் விட்டு விட்டு அந்த இளைஞனுடன் ஏற்ப்பட்ட காதலில் வீட்டை விட்டு சென்றுவிட்டாள், தன் குடும்பமே தனது வாழ்க்கை என்றிருந்த அவளது கணவன் செய்வதறியாது திகைத்து நின்றார், இதுவும் காதல் என்று கூறப்படுமா, விளங்கவில்லை. இவ்வித மனநிலை எப்படி உண்டாகிறது என்பது விடை கிடைக்காத கேள்வி.

..

..

எனது காதலர் தின வாழ்த்து

காதலித்துப்பார் அதன் இனிமை விளங்கும், அதுநாள் வரையில் நீ கொண்டிருந்த உறவுகளின் மீதான பாசமெல்லாம் இரண்டாம் பட்சமாக்கி விடும் மாயாஜாலம், காதலின் முழுமையை பிரிவில் உணர்ந்துகொள், காதலில் நிரந்தர பிரிவு ஏற்ப்படுத்தும் அலைகழிப்பு தாணே புயலையும் சுனாமி ஆழிப்பேரலைகளையும் மிஞ்சிவிடும். காதல் என்பது எதை கண்டு யாரிடம் எதற்காக ஏற்ப்படும் என்பதை யாரும் கணிக்க இயலுவதில்லை. காரணமே இன்றியும் காதல் காற்றை போல் நுழைவதுண்டு. அவ்வாறு நுழைகின்ற காதலுக்கு காமம் இருப்பதில்லை, கவிஞர் கண்ணதாசன் சொல்லுவார் 'காமம் இல்லாமல் காதல் இல்லை' என்று. ஆனால் சில வகையான காதலுக்கு காமம் இடையுறு செய்வதே இல்லை.

நான் கவிஞர் திரு வைரமுத்துவை காதலிக்கிறேன், என்னைப் போன்ற லட்சம் பேர் அவரை காதலிக்ககூடும் அதில் ஒருபோதும் காமம் மூக்கை நுழைப்பதில்லை. எனக்கே தெரியாது நான் கவிஞரை காதலிக்கிறேன் என்று, ஓரு நாள் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தபோது அவரது மனதை போன்றே பளிச்சென்ற உடையும் அழகான கருத்த மீசையின் கீழே ஒளிர்ந்த வெண் பற்களில் தெரிந்த கண்ணியம் கலந்த புன்சிரிப்புடன் ஓரு மேசையின் எதிரெதிராக நாங்கள் இருவரும் ஓரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அமர்ந்திருக்கின்றோம், ஏற்கனவே பேசப்பட்ட ஏதோ ஓரு விஷயத்தைப்பற்றி மீண்டும் பேச தொடர்வதாக அவர் தான் முதலில் பேசுகிறார் சில நிமிட இடைவெளிக்குப் பின், 'எனது மனைவி பொன்மணி என்றால் எனக்கு உயிர், அவளுக்கு நான் ஒருபோதும் எனது வாழ்வில் துரோகம் செய்யமாட்டேன் என்பது உறுதி, இருந்தும் நீ என் மீது வைத்திருக்கும் தூய அன்பை நான் மதிக்கிறேன், உன்னையும் நீ வைத்துள்ள பாரபட்சமற்ற அன்பை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதால் மட்டுமே உன்னை இங்கு சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டேன், எக்காரணத்தை கொண்டும் நமது சந்திப்பு தொடருவது நியாயமற்றது, அதை நீயும் ஒத்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை உனது பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டேன், நாம் நண்பர்களாக பழகுகிறோம் என்று கூறிக்கொண்டு மீண்டும் சந்திப்பதால் இருவரின் வாழ்க்கையும் பிரச்சினைகளுக்குள்ளே சென்றுவிடும். அதானால்...............' என்று அவருக்கே உரிய அழகான தமிழில் பேசிவிட்டு எனது பதிலை எதிர்பார்ப்பவர் போல என்னை உற்று நோக்குகிறார்.

நான் சொல்ல நினைத்தவற்றை அல்லது எங்களது அந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு, நான் ஒன்றும் பேச தோன்றாமல் அவர் பேசுவதையே கவனித்துக்கொண்டிருக்கின்றேன், என் மனதில் ஒரு நிமிட
ம் திரு பொன்மணி வைரமுத்துவின் [மன்னிக்க வேண்டும் திருமதி பொன்மணி வைரமுத்து] மீது பொறாமை ஏற்பட்டு ஏற்பட்ட நொடியிலேயே காணாமலும் போய்விடுகிறது , அவரது மனைவியின் மீது நான் பொறாமை அடைவதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் , அவரிடம் கொட்டிகிடக்கும் தமிழ்ஆற்றல், இரண்டாவது காரணம் ஒழுக்கம் [ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதற்கு இவர் ஒட்டு மொத்த உதாரணம்], மூன்றாவது காரணம் பெரும்பாலான கவிஞர்களின் வாழ்க்கையில் இல்லாத, திட்டமிட்ட தெளிவான கட்டு கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது இவையனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல உள்ளது. ஒருசமயம் அவரது இயல்பிற்கும் எனது புரிதலுக்கும் நேர் எதிராய் எனது காதலை ஏற்று கொண்டேன் என்று கூறியிருந்தால் அவர் மீது எனக்கிருக்கும் காதல் கோட்டை சுக்கு நூறாய் சிதறிப்போய் இருக்கும், இவையெல்லாம் எனது மூடிய கண்களுக்குள் திரைப்படம் போல தோன்றி கண் திறந்தவுடன் எனக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. நான் ஒருபோதும் நினைத்து பார்த்திராத அக்காட்சிகள் ஒருபுறம் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் அவ்வாறான காட்சிகள் கண்களுக்குள் தோன்றுவதற்கு காரணம் அறியாமல் நான் இன்றுவரை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

காதலர் தினத்தில் இப்படியொரு முற்றிலும் வித்தியாசமான காதலை எண்ணி வியந்து போகிறேன், காதல் எத்தனையோ வகை, இந்த காதல் எந்த வகை என்பதை அறிய இயலாமல் ரசிக்கிறேன். எனது காதலர் தின வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு :

[நன்றி koodal.com ]

காலத்தை வென்ற கவித்துவம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் என்பதை உலகறியும், அவருக்கு முன்னும் பின்னும் அல்லது அவரது சமகாலத்து கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அக்கவிஞர்களின் மீது மானசீககாதல் ஏற்ப்படுத்துகின்ற வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது. கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சீரற்ற நிலை அவர்கள் மீது உயர்வான அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்த தவறிவிட்டது. எழுத்துக்களையும் கற்பனைகளையும் அனுபவங்களையும் ஏட்டில் எழுதி விற்கப்பட்டது போன்று தோன்றுகிறது. திருவள்ளுவர் தனது வாழ்க்கை முறையை அவரது எழுத்துக்களை விட அதிக மேன்மையாக வாழ்ந்து சென்றதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன, எழுத்துக்கள் கற்பனை கதைகளாக இருக்கும் பட்சத்தில் யாரும் அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

தவமிருந்து கிடைக்கின்ற தத்துவார்த்தமான சிந்தனைகள் அதை வாசிக்கின்றவரின் நாடி நரம்புகளினூடே புலன்களை சென்று அடைவதாக உள்ளது. திருக்குறள் உலக பொதுமறையாக போ
ற்றப்படுதலுக்கு காரணம் வள்ளுவன் வாசுகியின் நேர்மையான புனிதமான தவம். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பிரமிக்க வைக்கும் இரண்டடி 'பா'க்களின் சிறப்பை உலகறியும்.


2/04/2012

வேண்டாம் இந்த கொலைவெறி


இசை என்பது புலன்களுக்கு அமைதியையும் புத்துணர்வையும் ஏற்ப்படுத்துகிறது. அதிலும் அவ்விசைக்கு ஏற்ப வார்த்தைகளை மிகவும் நேர்த்தியாக கோர்த்து இணைக்கப்பட்ட பாடல்களை கேட்கும்போது மனதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்ப்படுவதை உணரமுடிகிறது. வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு அதே விதமா ஆனந்த உணர்வுகளை அளிக்கிறது என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தாயின் அத்தனை உணர்வுகளையும் அறிந்துகொள்ளும் சக்தி உண்டென்பதால் கருவுற்றிருக்கும் பெண்களின் மனம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவம் கூறுகிறது. வண்ண மலர்கள் அழகிய இயற்க்கை போன்ற கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய காட்ச்சிகளை எப்போதும் கருவுற்ற பெண் ரசித்து பரவசமடைதலால் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமான மனநிறைவுடன் வளர்கிறது என்பதையும் அறிவியல் நிரூபித்திருக்கிறது.

வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு மட்டுமே இவை உரித்தானது இல்லை மனிதர்களின் மனதிற்கும் இவ்வகையான அழகிய மலர்களும் இயற்கையும் ரம்மியமான இசையும் மன அமைதியையும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது. ' கெட்டவற்றை பார்க்காதே, கெட்டவற்றை கேளாதே, கெட்டவற்றை பேசாதே' என்கின்ற காந்தீய கொள்கையை சித்தரிக்கும் மூன்று குரங்குகளின் மூலம் சொல்லப்பட்ட மகத்துவமான கோட்ப்பாடும் அதுவே. அதுமட்டுமின்றி நாம் பிறர் மீது பொறாமை அல்லது வன்மம் கொள்ளும்போது நமது உடலில் தேவையற்ற ரசாயன மாற்றங்கள் நிகழ்வதால் தேவையற்ற நோய்களை நாமே வலிய சென்று அழைத்து நம்முடலில் இணைத்துகொள்கின்றோம். இவைகளின் அடிப்படையில் உருவானவை கடவுள் வழிப்பாடு. கடவுளை வழிபடுகின்ற போது நமது இரு கண்களையும் மூடிக்கொண்டு குறிப்பிட்ட காரணத்தைப்பற்றிய முழு சிந்தையுடன் முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கின்றோம், அதுவும் அவ்வாறே நடந்துவிடுகிறது. இதற்க்கு கடவுள் காரணம் என்று நாம் முழுமையாக நம்புகிறோம். அவ்வாறே அடுத்தவருக்கு கேடு விளைவிக்கும் எண்ணங்களையும் நம் மனதில் வன்மத்துடன் சிந்திக்கின்றோம், செயல்படுகின்றோம். ஒரே மனதில் கெட்ட மற்றும் தீயவற்றிற்க்கும் இடம் கொடுத்தாலும் நாளடைவில் நாம் எதிர் நோக்கி காத்திருக்கும் வேண்டுதல்கள் பலனளிக்காமல் வேதனையுறுகிறோம், இவற்றிக்கு காரணம் கடவுள் கெட்டவனுக்கு பதில் அளிப்பதில்லை என்று நாம் நம்புகிறோம்.

நமது செயல்களும் எண்ணங்களும் அதிகமான தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தி பழகிவிடுகின்ற போது நமக்குள் நாமே எதிர்வினைகளால் நிரப்பப்பட்டு விடுகிறோம், அவ்வாறு நிரப்பப்படும் எதிர் வினைகளினூடே நல்லதிற்க்காகவோ சுகத்திற்க்காகவோ நாம் வேண்டிக்கொள்ளுகின்ற போது அல்லது எதிர்பார்த்து காத்திருக்கின்ற போது அவை நம்மை வந்து அடைய விடாமல் எதிர்வினைகளால் நிறைவேற்ற இயலாமல் தடுக்கப்படுகிறது. தோல்விகளை இழப்புகளை சந்திக்க நேர்ந்து மன அமைதி இழக்க நேருகிறது, ஆக நமது சிந்தையும் செயலும் நல்லவற்றையே நாடி அதற்காக காத்திருக்கும் போது அவை நடந்துவிடுவதற்க்கு தடையாக எதிர்வினைகள் ஏதுமின்றி நடந்துவிடுகிறது. நாம் நற்சிந்தையும் செயலும் கொண்டவர்களாக இருப்பது நமக்குத்தான் பெரும் அமைதியையும் வெற்றிகளையும் ஏற்ப்படுத்தி கொடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.

'கொலைவெறி கொலைவெறி' என்று நாம் விளையாட்டாக பாடிக்கொண்டிருந்தாலும் அல்லது அவ்வாறு பாடுவதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பதாலும் நம்மை சுற்றி அல்லது நமது மனதினுள் எதிர்வினையான தாக்கங்களை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 'மனசே சரியில்லை' என்று கூறிவிட்டு மனதை சரியாக்குவதற்க்காக இசை கேட்க்கிறேன் பேர்வழி என்று 'கொலைவெறி' பாடலையோ அதைப்போன்ற பாடல்களையோ அல்லது பழிக்கு பழி வாங்கும் திரைப்படங்களையோ பார்த்து ரசிப்பதால் மன உளைச்சல் அதிகரிக்குமே தவிர நிச்சயமாக குறையாது. எத்தனையோ அருமையான வார்த்தைகளை கொண்ட அழகிய மெல்லிசைபாடல்கள் ஏராளமாக இருக்க மக்கள் எதற்க்காக இந்த 'கொலைவெறி' பிரியர்களாக்கப்படுகிரார்கள் என்பது வேதனைக்குரிய கேள்வி. விளையாட்டாக கூட இவ்விதமான சொற்களை திரும்ப திரும்ப உபயோகிப்பது நாமே நமக்கு ஆப்பு வைத்துக்கொள்ளுகிறோம் என்பதுதான் நிஜம்.

இசை மூலம் பல அறிய நோய்கள் குணமாக்கப்படுவதை அறிவியல் நிருபித்துள்ளது என்பதை நாம் அறிந்திருந்தும் இவ்வாறான தவறுகளை எதற்க்காக செய்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்னர் வந்த பழைய திரைப்படபாடல் ஒன்று மிகவும் மோசமானதாக அக்காலத்தில் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டது. 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான், அதை கொடுத்தாலும் வாங்கவில்லை எந்தன் கன்னம் வேண்டுமென்றான்', 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே, மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற', இன்னும் பல பாடல்கள். பெரும்பாலும் இவை அக்காலத்தில் கவிஞர் வாலி அவர்களாலேயே எழுதப்பட்டதால் அவரை கொச்சையாக விமரிசித்து பேசப்பட்டதுண்டு. ஆனால் இப்போது 'தயிர் சாதம் வடு மாங்காய்' வரை மிக சகஜமாக எழுதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகி ஐக்கியமாகிவிட்டது.

மாசுபடுத்தப்படுவது சுற்றுப்புற சூழலை மட்டுமல்ல மனித மனங்களைக்கூடத்தான், இவ்வகையான மாசு சமூகத்தில் மனிதர்களின் மனங்களில் எதிர்வினைகள் செழித்தோங்க வழிவகுக்கிறது. புகை பிடிப்பதால் புகை பிடிப்பவரை விட அக்கம் பக்கத்தில் அந்த புகையை சுவாசிக்கின்ற அனைவருக்குமே உடலில் புற்று நோய் உருவாக்குவது போல இவ்வகையான பாடல்களும் மனதில் தீயவற்றை விதைக்கவே பயன்படும் என்பதை நாம் உணர வேண்டும்.


..

2/03/2012

கோடீஸ்வரராக ஆசையா????


சுவற்றில் மாட்டியிருந்த நாட்காட்டியில் மாங்கல்ய படம் அச்சிடப்பட்ட நாட்களை அதிகமாக காணமுடிந்தது, திருமணங்கள் செய்வதற்கான சிறந்த நாட்களாக கணித்து அந்நாட்களை மாங்கல்ய குறியுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது போலும், அதைவிட அன்றைய அதிசயமாக வீட்டிற்கு வந்திருந்த திருமண அழைப்பிதழ் என்னை சிந்திக்க செய்தது அதற்க்கு காரணம் பெரிய எவர் சில்வர் தாம்பாள தட்டில் நடுவே மிகவும் அழகான வார்த்தைகளால் பொறிக்கப்பட்டிருந்த மணமக்களின் பெயருடன் அத்தட்டில் வைத்து விநியோகிக்கப்பட்டிருந்த அத்தாம்பாள தட்டை விட மிகவும் பெரிதான திருமண அழைப்பிதழ். திருமணத்திற்கு தேவையான ஒரு மாங்கல்யமோ புடவையோ கூட வாங்கி திருமணம் நடத்த இயலாத மக்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நமது இந்திய சமுதாயத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மூன்று வேளைக்கு போதுமான உணவிற்கு வசதியில்லாமல் வாழ்ந்து வந்த ஒரு தனி நபர் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே பல கோடிகளுக்கு சொந்தக்காரர், அவர் தகவல் தொழில்நுட்பப பொறியாளர் இல்லை, மழைக்கோ வாக்களிப்பதற்க்கோ கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை, ஒருசமயம் ஓட்டளிப்பதற்க்காக வாக்காளர்களை கூட்டிச் சென்றிருக்கலாம் அல்லது ஏதாவதொரு அரசியல் கட்ச்சிக்காக குண்டர் கூட்டத்தில் சேர்ந்துகொண்டு அங்கே காவல் செய்யும் பணிக்காக சென்றிருக்கலாம் தவிர அட்ச்சரம் கற்றரிவதற்க்காகவோ, எண்களை கூட்டிக் கழிக்க படித்தறிவதற்க்காகவோ பள்ளிக்கூடத்திற்கு சென்றிக்க வாய்ப்பே இல்லை. அவர் என்ன செய்வார் அவரை பெற்றவர்கள் அவரை படிக்கவைக்கவில்லையோ, அல்லது படிக்க வைத்தும் படிக்க அவருக்கு விருப்பமில்லையோ. சமுதாயத்தில் சம்பாதிக்க அவரால் கவர்ந்திழுக்கப்பட்ட ஏதோ ஒரு வழி அவரை இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரராக மாற்றி இருக்கிறது. அவருக்கு தெரிந்ததெல்லாம் பணத்தை எப்படியாவது சேர்த்துவிடுவது ஒன்றுதான், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

எவ்வழியிலாவது பணம் சேர்க்கின்ற அதே சமயம் அவர் வேறு ஒன்றையும் அவரை அறியாமலேயே சேர்த்து வைத்திருப்பதை பாவம் அவர் அறியவில்லை. அதைப்பற்றி அவரிடம் எடுத்து சொல்வதற்கு ஆளில்லாமல் போனதால் அவருக்கு தெரியாமல் போனதா? அல்லது
யாராவது சொல்லியிருந்தாலும் அவருக்கு அது நகைச்சுவையாக இருந்திருக்குமோ என்னவோ, சம்பாதித்த பணத்தில் தனது பிள்ளைகளை அமெரிக்காவிற்கோ ஆஸ்த்திரேலியாவிற்கோ அனுப்பி, படிப்பதற்கு போதிய ஆர்வமோ போதிய அறிவோ இல்லாவிட்டால் கூட தான் படிக்காத பெரிய படிப்பை படிக்க வைத்து தன்னை விட பண வசதியிலும் படிப்பிலும் அதிகமாக வாழுகின்ற பணக்கார வீட்டில் சம்பந்தம் ஏற்ப்படுத்தி அத்திருமத்திற்க்கு ஊரிலிருக்கின்ற பெரிய பிரமுகர்களை அழைத்து அவர்களை அழைப்பதற்கே பணத்தை வாரியிறைத்து மிகவும் விமரிசையாக தடபுடலாக ஊரே ஆச்சரியப்படும்படி நடத்தி முடித்து, தான் பெற்ற பிள்ளைகளுக்கு பல கோடிக்கணக்கில் சொத்துக்கள் வழங்கி மீதமிருக்கின்ற சில இலட்ச்சங்களை தன் பெருமை புகழ் பாடுகின்றவர்களுக்கு இலவச படிப்பு இலவச அறுவை சிகிச்சை என்று உபகாரங்கள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வதிற்கு பதிலாக பெருமையை தேடிக்கொண்டு வாழுகின்ற மனிதனின் ஒட்டு மொத்த பாவச்சின்னமாக அந்த திருமண பத்திரிகை பிரதிபலித்தது.

நமது பிள்ளைகளுக்கு சிறப்பானவற்றையே அதிகபட்சமாக கொடுக்க ஆசைபடுகின்ற நாம், அவ்வாறு பிரயாசப்பட்டு சம்பாதிக்கின்ற போது அநியாயமான வழிகளில் அதிசீக்கிரமாக அதிக பணத்தை அடைய எடுக்கின்ற வழிகளில் அவர்களுக்கு பாவ சாபங்களை நம்மையும் அறியாமல் அதிகமாக சேமித்து கொடுக்கிறோம் என்பதை ஏன் உணருவதில்லை. அவ்வாறு சேமிக்கப்படுகின்ற பணம் நமக்கும் நமது தலைமுறையினருக்கும் பயன்படாமலேயே போய்விடும் என்பதை ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை. 'பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையில்லை' என்று நம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதினாலே. கல்லூரி பள்ளிகளில் கட்டணம் என்கின்ற பெயரில் கொள்ளை, நகை பணத்திற்காக கொலை, லஞ்சம், வருவாய்க்கு மேல் சொத்து சேர்ப்பது, நிலமோசடி, வழிப்பறி, கள்ள ரூபாய் நோட்டு, நில தகராறுகள், சொத்து பிரிப்பதில் வன்மம் இன்னும் பல சமுதாய விரோத செயல்கள் மலிந்து வருவதை நமக்கு எடுத்து காட்டுகிறது. உடலிலிருந்து உயிர் பிரிகின்ற தருவாயில் மரண படுக்கையில் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தி கிடப்பதில் யாருக்கு பிரயோசனம். வாழ்கின்ற நாளில் அவற்றை சிந்தித்து செயல்படுதலே சிறந்தது.

..