Translate

1/22/2012

பழக்க வழக்கம்

பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தனது அன்பை அல்லது சிநேகத்தை அடுத்தவரிடம் எடுத்துரைக்கும் பழக்கம் சிறந்ததே. அவ்வாறே பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, தேர்வில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து என்று வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகின்ற வழக்கம் மிகவும் சிறந்தது. இவற்றைப்போன்றே மரணம், தேர்வில் தோல்வி போன்ற எதிர்வினையான காரியங்களை சந்தித்தவர்களிடம் ஆறுதல் கூறுவது, நல் வார்த்தைகள் பகிர்வதும் சிறந்த பழக்கம். மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளுவதில் சந்தோசம் இருப்பது போலவே சில எதிர்மறையான பிரச்சினைகளும் ஏற்ப்படுவது உண்டு. உதாரணமாக தனது மனைவிக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ நண்பர்களுக்கோ வாழ்த்து கூறுவதும், மறவாமல் பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பதும் வழக்கமாக்கி விட்டு பின்னர் ஏதாவது காரணத்தினால் விடுபட்டு போகின்ற போது, அந்த உறவுகளில் வருத்தம் ஏற்ப்பட வாய்ப்பாகிவிடுகிறது.

எனக்கு தெரிந்த ஒருவரது வீட்டில் அவர் தினமும் காலை வேலைக்கு கிளம்பி போகையில் தனது மனைவியின் கையிலிருந்து குறைந்தபட்சம் ஒரு ரூபாயேனும் வாங்கிக்கொண்டு செல்வதும், தனது பையிலிருந்து எடுக்கின்ற பணம் நூறு ரூபாயோ ஐநூறு ரூபாயோ எதுவாக இருப்பினும் அவற்றை ஒவ்வொரு குழந்தைகளிடமும் கைகளில் கொடுத்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்தது. சிறிய குழந்தைகளாக இருந்தவர்கள் வளர்ந்த போது தனது தாயிடம் எதையாவது காரணம் காண்பித்து பணத்தை வாங்கிச்சென்று தனது விருப்பம் போல செலவு செய்கின்ற பழக்கம் ஏற்ப்பட துவங்கியதில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் பழக்கமும் சிகரெட் விபசாரம் போன்றவற்றில் ஈடுபடும் வழியையும் ஏற்ப்படுத்தியது. தனது பிள்ளைகளின் தவறான போக்கை தகப்பனார் கண்டித்த போது அவர்களுக்கு தகப்பனின் மீது கோபம் வந்தது. அதனால் தகப்பன் மகன் உறவில் விரிசல் ஏற்பட்டு பகையானது.

தகப்பன் தாயிடம் 'இனி அவர்கள் வற்புறுத்தினாலும் பணம் கொடுக்காதே' என்று கூறி பணம் கொடுப்பதை நிறுத்தியபோது அதுவரையில் கையில் பணம் வைத்து செலவழித்து பழகிப்போனதால், அதனால் ஏற்பட்ட நட்பு வட்டாரம், குடி, புகை, விபசாரம் போன்ற பழக்கங்களை நிறுத்த இயலாமல் வேறு வழிகளில் பணம் புரட்ட ஈடுபட்டனர். இதையறிந்த தகப்பன் தற்கொலை செய்துகொண்டார். இதை போன்றே சில வீடுகளில் வேலைக்குச்சென்று திரும்புகின்ற பெற்றோர் அல்லது வீட்டிற்கு தவறாமல் வருகின்ற உறவினர்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட், முறுக்கு இன்னும் பலவிதமான பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம், அவ்வாறு தொடர்ந்து வாங்கிச்செல்லுகின்ற நபர்களிடம் குழந்தைகள் அவற்றை எதிர்பார்க்கின்ற வழக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். நாளடைவில் பெரியவர்களாய் வளர்ந்து அடுத்த வீட்டிற்கு மருமகளாகி அல்லது மருமகனாகிய போதும் அவ்வாறான எதிர்பார்ப்புகள் தொடர, தனது கணவன் தனக்கு ஏதேனும் வாங்கி கொடுக்கவேண்டும் என எதிர்ப்பார்க்கின்ற மனநிலையில் அவ்வாறான வழக்கம் இல்லாத கணவன் அமைந்துவிடும்போது அந்த வாழ்வில் சலிப்பு முளைக்கத்தொடங்குகிறது.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது பழமொழி. பழக்க வழக்கங்கள் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பெற்றிருக்கிறது. நல்ல பழக்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பல பழக்கங்கள் நமக்கே தீங்காக வாழ்க்கையை சலிப்படைய செய்துவிடுகின்ற அபாயங்களும் உண்டு. எந்த பழக்க வழக்கமும் மாற்றிக்கொள்ள இயலாத வகையில் பழக்கிகொள்வதால் பின்னர் அவற்றிலிருந்து விடுபட முயன்றாலும் இயலாமல் போகின்ற நிலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தி வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்துவிடுகின்றது.

சிலருக்கு விடியற்காலை நான்கு மணிக்கு உறக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிடும், இதற்க்குக் காரணம் நான்கு மணிக்கு எழுந்து பழகிப்போனதே, அவ்வாறு விடியற்காலையில் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்வதற்க்கு இரவு சற்று சீக்கிரம் உறங்கும் வழக்கமும் தேவைப்படுகிறது. இவ்வாறான வழக்கம் தேவைப்படுகின்ற காலத்தில் சரியானதாக இருப்பினும், தேவையற்ற காலத்தில் விரைவில் உறக்கம் நீங்கி எழும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாமல் அவதியுறுகின்ற நிலை ஏற்ப்படுகிறது. அத்துடன் நில்லாமல் தனது வீட்டில் உள்ளவர்களும் அவ்வாறு விடியலில் எழுந்து வேலைகளை அல்லது படிக்க செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதும் அவ்வாறு செய்யாதவர்களை ஏசுவதும் அடுத்தவர்களுக்கு ஓயாத தொல்லையாகிவிடுகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் காலையில் கண்விழிக்கின்ற போதே முதலில் தனது தலையணையின் அருகில் வைத்திருக்கும் சிகரெட் ஒன்றினை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்த பின்னர்தான் பல் துலக்குவது கழிப்பிடம் செல்வது எல்லாமே, ஒரு சிகரெட் தீருகின்ற தருவாயில் மற்றொரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொள்ளாமல் இருக்க இயல்வதில்லை, அவரே நினைத்தாலும் முயன்றாலும் அந்த பழக்கத்தை தவிர்க்கவே இயலவில்லை. மருத்துவர் இனி சிகரெட் குடிக்கவே கூடாது எனக் கூறியும் அப்பழக்கத்திலிருந்து மீளவே இயலாமல் தவித்தார். இது போன்று கெட்ட, நல்ல பழக்க வழக்கம் எதுவாக இருந்தாலும் அவை பலவிதங்களில் நமது வாழ்க்கையில் இடையுறு ஏற்ப்படுத்துவதை தவிர்க்க இயலுவதில்லை. குழந்தைகளாக இருக்கும் போது ஏற்ப்படுகின்ற பழக்க வழக்கங்களும் இவ்வாறே பல இடையூறுகளை ஏற்ப்படுத்த தவறுவதில்லை.

பழக்கம் என்பது மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொரு பொறுப்பு வகிப்பதால் முடிந்தவரையில் சிறு வயது முதலே எல்லா சூழலுக்கும் தகுந்தாற்போன்று பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கு தாயார் செய்துகொள்வது மிகவும் அவசியமானதொன்று.

..