Translate

1/09/2012

ஊர் வாய மூட முடியாது.

வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்று என் கணவர் என்னிடம் சொன்னார், இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு, என் அப்பாவிடம் சொன்னேன், தேடுதல் ஆரம்பமாயிற்று, தெரிந்த நபர்களின் மூலம் என் அப்பா பார்த்த வீடுகள் எத்தனை என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் நிறைய பாரத்துவிட்டு சரியாக அமையவில்லை என்றார். எனது அப்பாவின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் பேச்சுவாக்கில் வீடு தேடும் கதையைப்பற்றி சொன்னோம் அவரும் எங்களிடம் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன அனுபவங்களில் பலவற்றை நான் இன்னும் நினைவில் வைத்துள்ளேன் ஏனென்றால் அவை எனக்கு சுவாரசியமாக இருந்தது. அவற்றில் ஒன்று, சென்னையில் மிகவும் முக்கியமானதொரு இடத்தில் இருந்த பழைய காலத்து பங்களா ஒன்றை அதன் உரிமையாளர் அந்த பங்களாவை விலைக்கு வாங்கி அதில் சில மறு சீரமைப்பு வேலைகள் செய்துதரும்படி நண்பரிடத்தில் சொல்லியிருக்கிறார், நண்பர் செய்து முடிக்கப்பட்ட மரசாமான்களை பொருத்துவதற்க்காக அந்த வீட்டிற்கு வண்டியில் அனுப்பிவிட்டு அவையனைத்தும் அங்கு சென்றடைந்துள்ளதா என்று பார்ப்பதற்காக அன்றைய தனது அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்புகின்றபோது இரவு சுமார் 8.30 மணிக்கு அவ்வீட்டிற்கு சென்று இருக்கிறார், அந்த வீட்டின் சாவி காவல்கார கிழவனிடம் இருந்தது, அந்த கிழவன் இரவில் அந்த பங்களாவில் தங்குவது வழக்கம் என்றாலும் வாசலில் எரிகின்ற விளக்கை போட்டுவிட்டு செல்வது வழக்கம், அன்றைக்கு பங்களாவின் முகப்பில் விளக்கு இல்லாத காரணத்தால் தெருவிலிருந்த அவ்வீட்டின் கேட்டின் அருகில் நின்றுகொண்டு காவல்கார கிழவன் வருகைக்காக காத்திருந்தார்.

இருட்டில் மூழ்கி கிடந்தாலும் தெருவிளக்குகளின் வெளிச்சமும் அடுத்த பங்களாக்களில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சமும் பங்களாவின் முகப்பை காண முடிகின்ற அரையிருட்டாக இருந்த பங்களாவை பார்த்தவாறு இருந்த சமயம் அவர் சற்றும் எதிர்பார்த்திரா சம்பவம் ஒன்று நடந்ததாம். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைகளை இணைத்துக்கொண்டு அந்த பங்களாவினுள் நுழைந்தனராம் . பூட்டிக்கிடக்கும் பங்களாவினுள் இவர்களால் எப்படி போக முடிந்தது என்ற ஆச்சரியத்தில் திகைத்த அவரால் அந்த இடத்தைவிட்டு நகர இயலவில்லை. மறுபடியும் அந்த பங்களாவின் முகப்பையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த போது மறுபடியும் அதே ஜோடிகள் தங்கள் இருவரின் கைகளை இணைத்துக்கொண்டு வேறு பக்கத்திலிருந்து நடந்துவந்து அந்த பங்களாவினுள் சென்றனராம். அங்கிருந்து அவர் தனதுவீட்டிற்கு சென்று சேருகின்ற வரையில் அவர் கண்ட காட்சிகள் திரும்பத்திரும்ப கண்முன் வந்து கொண்டே இருந்ததாம். அந்த பங்களாவின் மரவேலைகள் மற்றும் இதர வேலைகள் யாவும் முடிந்து புதிதாக வந்த குடும்பம் அங்கு வாழத்துவங்கியது. புதிதாக வந்த குடும்பத்தினருக்கும் அவ்வாறு உருவங்களை அந்த பங்களாவில் காண முடிந்ததா என்று அறிந்துகொள்ளும் ஆவல் கொண்ட என் அப்பாவின் நண்பர், அந்த பங்களாவிற்கு வேறு ஏதேனும் பணிகளுக்காக செல்வதுண்டு, அங்கு வந்த குடும்பத்தினர் யாருக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருத்துவிடவே, அக்குடும்பத்தினர் அங்கேயே வாழ்ந்தனர் என்று கதையை முடித்தார்.

சில மாதங்களுக்குப்பின்னர் எங்களுக்கு சென்னையை அடுத்த உள்ளகரத்தில் அருமையான வீடு விலைக்கு கிடைத்தது, அந்த வீட்டை விற்பவர்கள் கடன் வாங்கி வீடு கட்டியிருந்ததால் அந்த கடனை அடைத்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு போவதற்காக அந்த வீட்டை விற்பதாக எங்களிடம் சொன்னார்கள். அந்த வீட்டை வாங்கினோம் அப்போது எனது முதல் பிரசவம். எனது குழந்தையை பார்ப்பதற்கு அந்த வீட்டை விற்ற தம்பதியினர் வந்தனர், அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது பெரிய குறையாம்.பழைய வீட்டை வாங்கியதால் அதில் மேலும் பல லட்சங்களை செலவழித்து எங்களது விருப்பத்திற்கும் அதே சமயத்தில் பணமின்மை காரணமாக விடப்பட்ட மிகவும் முக்கிய கட்டுமான மற்றும் மரவேலைகளை செய்ய வேண்டியிருந்தது. அந்த வீட்டில் குடியேறிய சில மாதங்களில் அடுத்த வீட்டு அம்மா என்னிடம் அவரது மகளுக்கு வீடு வாங்கும் யோசனை இருந்தது ஆனால் இந்த வீட்டை வாங்குவதற்கு சிபாரிசு செய்யவில்லை என்றும் காரணம் ஏற்கனவே இருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு குழந்தை பாக்கியமே இல்லை, அடுத்ததாக, அந்த வீட்டில் வந்து தாங்கும் உறவினர்கள் யாராக இருந்தாலும் காரணமே இல்லை என்றாலும் எப்போதும் சண்டை ஏற்படுமாம், அங்கு தங்கியிருந்த வீட்டுக்காரரின் வயதான பெற்றோர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு முதியவர் வயதான தன் மனைவியை முரட்டுத்தனமாக அடிப்பார், ஆனால் அந்த முதியவர்கள் இருவருமே மிகவும் பொறுமையும் அன்பானவர்கள் இருந்தும் எதற்க்காக சண்டை ஏற்பட்டு அடிக்க தூண்டுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி வருந்துவாராம். தீராத கடன் தொல்லை, அந்த வீட்டை வாங்க வருகின்ற எல்லோரும் ஒரேயொரு முறைதான் அங்கு வருவார்கள் பிறகு வருவதே இல்லை. அதனால் அந்த வீடு ராசியான வீடு இல்லை என்பதாலும், எதோ விலக்க இயலாத காத்து கருப்புகளோ செய்வினைகளோ அதற்க்கு காரணமாக இருக்குமோவென்ற சந்தேகம் என்று அடுக்கடுக்காய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது முழுவதும் பொய் இல்லை என்பதை எங்களாலும் அங்கு நடக்கும் சில தவிர்க்க இயலாத தொடர் சம்பவங்கள் உறுதி செய்வதாகவே நடந்தது. அந்த வீட்டிற்க்குச் சென்ற ஐந்தாம் வருடம் எனது இரண்டாவது குழந்தையும் நல்லபடியாகவே பிறந்தது. நாங்கள் எல்லாவற்றிற்கும் இயேசுவை மட்டுமே நம்பி எங்கள் வேதத்தை வாசித்து ஜெபம் செய்வது வழக்கம். அதையே தவறாமல் செய்து வந்தோம்.

ஆறாவது வருடம் முடிகின்ற தருவாயில் திடீரென்று அடுத்த தெருவில் இருந்த என் கணவரின் அக்கா மகன் கொலை வெறியுடன் எங்கள் வீட்டிற்கு நன்றாக குடித்து விட்டு வந்து இரவு ஏறக்குறைய ஒன்பது மணிக்கு ஜன்னல்களிலிருந்த கண்ணாடிகளை உடைத்தான், சத்தம் கேட்டு வெளியே சென்ற என் தகப்பனாரை [வயது 75 ] முரட்டுத்தனமாக தள்ளியதில் அவரது முதுகெலும்பு காயத்தின் வலியை தாங்க இயலாமல் அப்படியே கீழே கிடந்தார். அவரையடுத்து சென்ற என் அம்மாவின் கையில் எனது இரண்டாவது குழந்தை [ஒரு வயது], அந்த குழந்தையை என் அம்மாவிடமிருந்து அந்த முரடன் பிடுங்க முயற்ச்சித்ததில் குழந்தை அலற ஆரம்பித்தது. அதற்குள் அடுத்து சென்ற என் கணவர் அவனை விலக்க என் அம்மா குழந்தையுடன் வெளியேறி வேறு வீட்டிற்கு சென்று விட, இவ்வாறு சற்றும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி காட்ச்சிகள் முடிவுற்றது. அதே மாதத்தில் அந்த வீட்டை விற்க என் கணவர் முயற்சி செய்தார். அடுத்த வீட்டுக்கார பெண்ணிற்கு தெரிந்த ஒருவருக்கு அந்த வீட்டை எங்களுக்குத் தெரியாமலேயே 'அடி மாட்டு' விலைக்கு அதே மாதத்தில் விற்றுவிட்டார் என் கணவர் என்பது எங்களுக்கு தெரியாது, வேறு ஒரு இடத்திற்கு 'வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்க போக வேண்டும் கிளம்பு' என்று என் கணவர் என்னிடம் கூறியபோதுதான் வீட்டை விற்றுவிட்ட சமாச்சாரம் தெரிந்தது. அடுத்த வீடு வாங்கும் படலம் மீண்டும் ஆரம்பமாயிற்று, இம்முறை வீடு வாங்கி குடிபெயர்ந்தாகி விட்டது. அந்த வீட்டிற்கு தேவையான சில்லறை வேலை செய்வதற்கு வந்திருந்த அதே இடத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் வந்தார், அவர் எங்களிடம் 'போயும் போயும் இந்த இடத்தை வாங்கினீங்களே, இந்த தெருவுல எத்தனை கொலை நடந்திருக்குது தெரியுமா, அதோட போகல, சாவு போகிற தெருவே இதுதான். இங்க பக்கத்துல குடியிருக்கிற ஜனங்கள நம்பி வீட்டு வேலைக்கு வச்சிடாதீங்க, திருடுங்க, கேட்க்க முடியாது எல்லோரும் குடிகாரனுங்க' என்றார். அவர் கூறியதில் எதுவுமே பொய்யில்லை என்பதை நாங்களும் பின்னர் அறிந்தோம். இந்நிலையில் தனது மகளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த என் நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார், அவர் அங்கு வந்ததற்கு காரணம் எங்கள் வீட்டிற்கு சிறிது தொலைவில் ஒரு மாப்பிள்ளை வீடு இருப்பதாகவும் திருமணத்தை நிச்சயம் செய்வதற்கு முன்பு அந்த மாப்பிள்ளையை பற்றிய தகவல்களை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அறிந்து கொண்ட பின்னர் நிச்சயிக்கலாம் என்றிருப்பதாக சொன்னார். அவர் விசாரித்த சிலரில் அந்த மாப்பிள்ளை வீட்டின் அருகிலிருந்த சிறிய மளிகை கடையும் ஒன்று, அந்த கடையிலிருந்தவரிடம் விசாரித்தபோது, 'சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க, அப்போது என் கடையில வந்து கடன் கேட்டு மளிகை சாமான்களை வாங்கிட்டு போவாங்க, இப்போ அந்த பையன் நல்லா சம்பாதிக்கறான், நம்ம கடைய கண்ணு தெரியல, கிரெடிட் கார்டுல பெரிய கடைங்கள்ள வாங்குறாங்கன்னு கேள்விபட்டேன்', வீடு கூட ரொம்ப சின்னதா இருதுச்சி, இப்போ பாங்க்குல லோன் வாங்கி மூணு அடுக்கு மாடிவீடு கட்டி, காரு வாங்கிட்டாங்க'. என்றார். பேசிக்கொண்டிருந்தபோதே அங்கு வந்து நின்ற வேறு ஒரு பெண், 'யாரு அந்த வூடா, ரொம்ப மோசம், வூட்டு வேல செய்றவங்கதானே, அவசரத்துக்கு கடன் கேட்டா குடுக்கவே குடுக்காது' என்றாள். ஆவலுடன் சேர்ந்துகொண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும், 'அந்த பையனோட அம்மா அவங்க வூட்டுகாறு வேலைக்கு போனதும் அடிக்கடி ஆட்டோ எடுத்துகினு எங்கியோ போவும், அந்த பையனோட தங்கச்சிகூட சரியில்லன்னு கேள்விபட்டேன்'. என்றார்.

என் வீட்டிற்கு வந்த நண்பரிடம் நான் கேட்டேன், நீங்கள் என்ன முடிவு எடுத்தீர்கள் என்று, அவர் சொன்னார் என் பெண்ணைப்பற்றி மாப்பிள்ளை வீட்டார் என் வீட்டருகில் வந்து விசாரித்தாலும் இவர்கள் கூறுகின்ற
அத்தனை குறைகளை விட இன்னும் கூடுதலாகவே சொல்லக்கூடும். அவற்றில் எத்தனை உண்மைகள் உள்ளது என்பது நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்வதுதான் சரி, அடுத்தவர்கள் கூறுகின்ற அத்தனையும் நம்பினால் நம்மால் பல விஷயங்களுக்கு சரியான முடிவை எடுக்கவே இயலாமல் போகும்.