Translate

1/07/2012

மருத்துவர்கள் தெய்வமா வியாபாரிகளா

நமது நாட்டில் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் விபரீதங்கள் நடந்த பின்பு மக்களின் ஏகோபித்த கோஷங்களும் எதிர்ப்புகளும் ஆவேசங்களும் கிளம்பும் பின்பு, அது கிளம்பிய வேகத்திலேயே சில நாட்களில் அடங்கிவிடும். அடுத்த முறை அதே போன்று அல்லது அதை விட அதிகமான, தீவிரமானதொரு பிரச்சினை ஏற்ப்படும் அப்போதும் கோஷங்களும் எதிர்ப்புகளும் ஆவேசங்களும் கிளம்பும் அதுவும் அடங்கி போகும். இதுதான் வழக்கம், இதற்க்கு உதாரணம் போலி மருத்துவர்களை கண்டு பிடித்து கைது செய்தது, போலி மருந்துகளை கண்டு பிடித்தது போன்றவற்றை குறிப்பிடலாம். எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை அரசாங்கம் எடுத்து அதற்க்காகடுமையான சட்டங்களை வரையறுத்து குற்றங்களுக்கு மிக அதிகபட்ச தண்டனைகளை வழங்காவிடில் எந்த பிரச்சினைக்கும் முடிவு என்று ஒன்றை நாம் காணவே வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சென்றால் உடனே மருத்துவம் பார்ப்பது கிடையாது, அதற்கென்று வரைமுறைகள் சட்டங்கள் மிகவும் கடுமையானதாக உள்ளது, அதை போன்றே மருந்து மாத்திரைகளை நமது இஷ்டம் போல எங்கேவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாங்கி உண்ண முடியாது. விதிமுறைகளும் அதை மீறுவோர் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் அங்கு சாதாரணமானவை அல்ல. அது போன்ற கடுமையான வரைமுறைகளுக்கு உட்பட்ட மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் இந்தியாவிலும் நடைமுறைக்கு வராத வரையில் இது போன்ற அசம்பாவிதங்களை சந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. உறவுகளை இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனைகளை முற்றுகையிடுவது சகஜமாகி நமது நாட்டில் இருந்துவருகின்ற நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.

திரைப்பட இயக்குனர்கள் மீது குறை சொல்லி பயனில்லை, திரைப்படங்களில் சற்றே அதிகமாக சித்தரிக்கப்படுவதால் மக்களோ அரசாங்கமோ இதுவரையில் எந்த தீர்க்கமான முடிவையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் சமீபத்திய மருத்துவரின் கொலையும் அதனால் ஏற்பட்ட ஆவேசங்களும் நமக்கு எடுத்து காட்டுகிறது. திரைப்படம் பார்த்துவிட்டுத்தான் இவ்வாறான செயல்கள் நடக்கிறது என்பதை நாம் காரணம் காட்டினால், எத்தனையோ திரைப்படங்களில் நல்ல விஷயங்களை எடுத்து மிகைப்படுத்தி காட்டி இருக்கின்றார்களே அதனால் மக்கள் என்ன ஒட்டு மொத்தமாக திருந்தி விட்டார்களா என்கின்ற கேள்வி முன்வைக்கபடுகிறதே அதற்க்கு என்ன பதிலை நம்மால் கூற முடியும். திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதை முழுக்க கற்பனை என்று கூறி ஒட்டு மொத்த தவறுகளுக்கும் திரைப்படங்களே காரணம் எனக்கூறினால் அத்திரைப்படங்கள் திரைக்கு வந்தபோதே மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து அக்காட்சியை அத்திரைப்படத்திலிருந்து எடுக்க கோஷமிட்டிருக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட இயக்குனரையோ, திரைப்பட சங்கத்தின் தலைவரையோ நாடி அதற்க்கு ஒரு தீர்வை ஏற்ப்படுத்த தவறியதற்கு என்ன காரணம்.

உயிர்காக்கும் மருத்துவமே வியாபார நோக்கில் செயல்படுகின்றபோது ஊடகங்கள் வியாபார நோக்கில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை கூறுவது வியப்புக்குரியது. ஊடகங்கள் வியாபார ரீதியானவை, அவைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறுவதில் சில சமயம் உண்மையும் உள்ளது அதற்க்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததை நேரடி காட்ச்சியாக காண்பித்து பெரும் புரட்சியை, கதாநாயகனை வெளிச்சம் போட்டு காட்டியது. அது அவர்களுக்கு வியாபாரம்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பதற்கு இந்த கொலை மட்டுமே காரணமா, ஒரு நோயாளியின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்த நோயாளியை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றிவிட முடியுமா முடியாதா என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் அந்நோயாளியின் முக்கிய உறவினர்களிடம் தெரிவிப்பது மருத்துவரின் கடமையல்லவா. உத்திரவாதம் கொடுக்க இயலாத நிலையிருந்தால் அதையும் தகுந்த முறையில் அந்நோயாளியின் உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு என்பதை மருத்துவர்கள் அறியவில்லையா. உத்திரவாதம் கொடுக்க இயலாத நிலையில் உறவினர்களிடம் கையொப்பம் பெற்ற பின்னரே அறுவை சிகிச்சை செய்வதுதானே முறை, அவ்வாறு அறிவிக்காமல் அறுவை சிகிச்சை செய்து நோயாளி இறந்துவிட்டால் குற்றவாளி அந்த மருத்துவர் தானே?

அவ்வாறு கையொப்பம் பெற்று, நோயாளியின் உண்மை நிலவரத்தை உறவினர்களிடம் எடுத்து சொன்ன பின்னர் அவர்கள் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை நடைபெற்று நோயாளி இறந்துவிட்டால் அதற்க்கு மருத்துவரை பொறுப்பேற்க சொல்வது உறவினர்களின் குற்றம். இதில் எங்கு தவறு இருந்தாலும் குற்றம் செய்தவர் அதை ஒதுக்கொள்வதுதானே முறை, இது போன்ற நிலை மறைந்த மருத்துவ மேதை ரங்காச்சாரி காலத்திலோ, அதற்க்கு பின்னர் குறைந்தது 40 வருடங்களிலோ நடைபெறாததற்கு காரணம் என்ன? அப்போது மருத்துவர்களை தெய்வம் என மக்கள் கருதியதன் காரணம் என்ன? இன்றைக்கு மிகவும் சாதாரணமாக மாறிப்போகும் மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு? மருத்துவர்கள் மருத்துவத்தை வியாபாரமாக கருதினால் இவ்வாறான விபரீதங்கள் ஏற்ப்பட வழிவகுக்கும் என்பதை எடுத்துகாட்டுவதாகவே இச்சம்பவம் நடந்துள்ளது. மனித நேயமற்ற நிலை உருவாகுமானால் கொலை கொள்ளைச் சம்பவங்கள் எங்கும் அதிகரிக்கும் என்பதையே கொலைகளும் கொள்ளைச்சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது.