Translate

1/04/2012

பணமா குணமா

1950களில் பணமா பாசமா என்று கேட்டால் பாசம் என்று பதில் கிடைத்தது, அப்போது சவரன் விலை நூறு ரூபாய் கூட இல்லை, தங்க நகைகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் மக்களிடம் பெருமளவில் காணப்படவும் இல்லை, 1970களில் இரண்டு பெரிய படுக்கை அறைகளும், மிகப்பெரிய நடுக்கூடமும் காற்று வசதியுடைய சமையலறையும் கொண்ட தனி வீடு மாத வாடகை ஐந்நூறு ரூபாய்க்கு கிடைத்தது. முன்தொகை என்ற பெயரில் அதிகபட்சமாக ஒரு மாத வாடகைப்பணம் கொடுத்தால் போதும் அதிலும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் மட்டுமே முன்பணம் பெற்று கொண்ட பின்னர் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும், அறிமுகமான நபர்களின் சிபாரிசு இருந்தால் முன் பணம் வாங்கும் வழக்கம் கிடையாது. சென்னையில் இன்றைக்கு மிக முக்கிய பகுதிகளாக இருக்கின்ற பல பகுதிகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் எங்கு பார்த்தாலும் வேலிகாத்தான் செடிகளும் புல் பூண்டு செடி கொடிகளும் நிறைந்துருந்தது. மனை வாங்கி சொந்தவீடு கட்டிக்கொண்டு குடித்தனம் போகவேண்டிய எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்ப்பட்டதே இல்லை.

1980களில் நிலைமை சற்று மாற்றமடையத் துவங்கியது, இன்றைய நெருக்கடியான பகுதிகளில் வீடுகள் நிறைந்துவிட மக்கள் நகரத்தின் இதர பகுதிகளில் குடியேறும் நிலை ஆரம்பித்தது புறநகர்களில் வீடு மனைகள் தோன்ற ஆரம்பித்தது, ஏரிகள் மற்றும் விளை நிலங்களும் மனித ஆக்கிரமிப்புகளாக மாறிக்கொண்டு வந்தது. அப்போதும் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஆயிரத்தை எட்டவில்லை. 1990களில் நிலைமை இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தாலும் ஒரு மனை ஒரு லட்சம் வரையிலாவது வீடு கட்டுவதற்கு கிடைத்தது. ஆனால் 1990ரிலிருந்து 2000த்திற்குள் சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட விற்ப்பனைக்கு மனைகள் கிடைப்பது முற்றிலும் ரிதாகி ஏற்கனவே வாங்கியுள்ள மனைகளை விற்பவர்கள் இன்னும் மனைகளின் விலை ஏறும் என்று எதிர்பார்த்து விற்காமல் வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே தனி வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்களிடம் அந்த வீடுகளை வாங்கி இரண்டு அல்லது அதற்க்கு அதிகமான பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதுவரையில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ்ந்திருந்த நிலப்பரப்பில் இருபதுக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற அடுக்குமாடிகள் எழும்பத்துவங்கியது. இதன் மூலம் நிலத்தை விற்றவருக்கும் வாங்கி கட்டி விற்பனை செய்தவருக்கும் அதிக லாபமடையும் நிலை ஏற்பட்டது, இந்நிலையில் ஆபரண தங்கம் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இன்று தங்கமும் சொந்த வீடும் உச்சத்தில் நிற்கிறது. நுகர்வோரின் எண்ணிக்கையும் அதற்கேற்றார் போலவே அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பணமா பாசமா என்று ஒருவரை கேட்டால் பணமும் தங்கமும் என்று பதில் கூறுவது சாதாரணமாகிவிட்டது.

ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் திருமணத்திற்கு நகை வாங்குவதை யாரும் குறைத்துக்கொள்வதில்லை, சராசரியாக 40 சவரன் ஆபரண தங்கம் திருமணத்திற்கு பெண் வீட்டாரிடம் கேட்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ள போகும் பெண் பட்டம் பெற்று வேலைப்பார்ப்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்ணிற்கு திருமணத்திற்கு செலவழிக்க லட்ச்சங்கள் தேவைப்படுகிறது. மணபெண் குணவதியா ஆரோக்கியமானவளா நன்னடத்தையுடையவளா என்பதை பற்றிய கேள்வி எழுவதே இல்லை, அதே போன்று மணமகன் என்ன படித்திருக்கிறார் எங்கே பணிபுரிகின்றார் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை பற்றி மட்டுமே விசாரிக்கின்றனர், அவரது குணம் என்ன நடத்தை என்ன அவரது குடும்பத்தில் தனது பெண்ணையோ பையனையோ திருமணம் செய்வித்தால் வாழ்க்கை நலமுடன் இருக்குமா என்பதைப்பற்றி நினைப்பதே இல்லை.

பணம், தங்கம், வசதிகள் அழகு, படிப்பு, உத்தியோகம் போன்றவற்றிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் செலுத்தப்படுவதை பார்க்கும்போது இந்த நிலையில் அன்பு பண்பு நேர்மை நாணயம் போன்ற மிகப்பெரிய ஈடு இணையற்ற குணநலன்கள் மக்களைவிட்டு முற்றிலுமாக காணாமல் போகிறது என்பதை நமக்கு காட்டுகிறது.

..................................................................CCCCCCCC.................................................................