Translate

1/26/2012

மனநோய் முற்றினால் ....காமம் அல்ல

என்னதான் காலம் படுவேகமாக முன்னேறினாலும் உணர்வுகள் மாறப்போவது கிடையாது, இந்தியாவில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் மட்டுமின்றி உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். பசி, தாகம், கோபம், சிரிப்பு, காதல் காமம், ஆசை, மோகம் இன்னும் எத்தனையோ இயற்கையில் கிடைத்துள்ள அதிசயங்கள். பசி எடுத்தால் விடுதிக்குச் சென்று தேவையான உணவு வகைகளை அவரவர் விருப்பபடி வாங்கி மக்கள் கூட்டத்தில் முன் பின் தெரியாதவர்களின் முன்னால் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதில் யாரும் கூச்சப்படுவது கிடையாது, அக்கம்பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் நாம் உண்பதை பார்க்ககூடாது என்று நாம் நினைப்பதில்லை. ஆனால் சிறுநீர் கழிப்பதற்க்கோ, மலம் கழிப்பதற்க்கோ குளிப்பதற்க்கோ அடுத்தவரின் பார்வை படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் கழிவறைக்கு தனித்தனியே சென்று அவற்றை செய்துவிட்டு வருகிறோம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எதற்க்காக என்பது எல்லோரும் அறிந்திருந்தும் அதனை வெளிப்படையாக பேசுவது என்பது உலகில் எங்கேயும் கிடையாது. அதே போன்று டைனிங் டேபிளில் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்ணும் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் படுக்கையறையில் படுத்து தனித்தனியே உறங்குவதும் உலகம் முழுவதும் ஒன்று. என்னதான் பரம ஏழையாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் மட்டுமே இணைந்து படுத்துறங்குவது உலகெங்கும் ஒன்றுதான். குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆணிற்கும் பெண்ணிற்கும் உடலுறவு தேவை என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும், கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் வெட்டவெளியில் பட்டபகலில் நடுத்தெருவில் உடலுறவில் ஈடுபடுவதில்லை. எல்லாவற்றிற்கும் நியமம் என்பது உலகமெங்குமுள்ள நீதி.

பொதுவிடங்களில் அடுத்தவரின் பார்வை படுகின்ற இடங்களில் கட்டிப்பிடித்து தழுவிக்கொள்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே உள்ள வழக்கம், அதை மற்ற நாடுகளில் செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை யாவரும் அறிவர். சென்சார் போர்ட் என்பது திரைப்படத்திற்கு மட்டும் உள்ளது என்றிராமல் பத்திரிகை, பாடல் வரிகள் என இதன் எல்லை வளர்ந்து இன்றைக்கு இணையதளத்திற்கும் வந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆபாச [porn] காட்சிகளை வழங்கும் இணையதளங்களை பார்ப்பதற்கு தனியாக பணம் செலுத்தி சந்தாதாரர்கள் ஆன பிறகே அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக வீடுகளில் சைல்ட் லாக் [ child lock] செய்யப்பட்டு குறிப்பிட்ட வலைத்தளங்களை தடை செய்துகொள்ளும் வசதிகள் செய்யப்பட்ட கணினிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் உபயோகிக்கின்றனர்.

பொது இடங்களில் சுவரொட்டிகளில் ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் நிர்வாண படத்தை ஒட்டி வைத்தால் அதை காவல்துறை கண்டும் காணாதது போன்று இருக்குமா. அல்லது ஒரு பெண்ணோ ஆணோ நிர்வாணமாக தெருவில் நடந்தால் காவல்துறை சும்மா இருக்குமா. இவற்றிக்கெல்லாம் தடை செய்யபட்டிருப்பது எதற்க்காக, எல்லோரது உடலும் ஒரே மாதிரியானது தானே ஒருவர் நிர்வாணத்தை அடுத்தவர் ஏன் பார்க்க கூடாது என்று கேட்டால் அதற்க்கு பதில் என்னவாக இருக்க முடியும், காமம் எல்லாருக்கும் உண்டு அதை குறித்து பேசினால் எழுதினால் என்ன தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறியாமலேயே தவறுதலாக அவ்வாறு செய்கின்றனர் என்று அர்த்தமா. எல்லோர் வயிற்றிலும் கழிவுகள் உள்ளது கழிவறைக்குச் சென்றால் கழிவை கழிக்கத்தான் செல்லுகிறார்கள் என்பதை எல்லோருமே அறிந்திருப்பது போல படுக்கையறைக்குள் இருக்கும் கணவன்மனைவி உடலுறவில் ஈடுபடுவதற்க்குத்தான் போகின்றனர் என்பதை சுற்றியுள்ளவர்கள் அறிந்திருப்பது போல காமம் என்பதை சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் தனி இடம் உண்டு.

காமத்தை சித்தரிக்கும் காட்சிகளை சொற்களை பொதுவிடங்களில் எழுதுவதும் எழுதியதுடன் நில்லாமல் அவற்றை எல்லோரது கண்களிலும் காண்பது போன்று விளம்பரப்படுத்துவதும் குற்றம், தனது பதிவிலே மட்டும் வைத்துக்கொண்டால் அவரை பின்தொடருகின்றவர்கள் மட்டுமே படிக்கவும் காணவும் முடியும் ஏனைய வலைதளங்களில் அவற்றை பிரபலப்படுத்தி எல்லோரையும் காணச்செய்வது என்பது ஒருவகை மனநோய். சில ஆண்கள் தனியே வீதியில் செல்லும் பெண்களிடம் தங்களது ஆணுறுப்பை எடுத்து காண்பித்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பார்கள். அவ்வாறு தனது உறுப்பை பெண்கள் பார்ப்பதில் அந்த கயவர்களுக்கு என்னதான் சந்தோசம் கிடைக்கப் போகிறது என்பது கடவுளுக்குதான் தெரியும். அதை காண்கின்ற ஒரு பெண்ணும் அதை ரசிக்கமாட்டார், மாறாக மலத்தை கண்டது போன்ற அருவருப்பு அடைவார்கள். இதை ஒருவகை மேனியாக் [maniac - a person who has an obsession with or excessive enthusiasm for something, afflicted with or characteristic of mental derangement] என்று கூறுகின்றனர். இவர்களுடைய அளவிற்கு மீறிய காம உணர்வை வெளிபடுத்தும் ஒரு வழியாக இணையத்தில், அதிலும் பொது இடங்களில் தங்களது பலகீனத்தை காட்டி சந்தோஷப்படுகின்றனர். இவர்கள் நல்லதொரு மனநல மருத்துவரை அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் அதுவரையில் யார் எதிர்த்து நின்று கேள்விகள் எழுப்பினாலும் அதிலிருக்கும் நியாயத்தைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற வாய்ப்பே கிடையாது.
..

1/22/2012

பழக்க வழக்கம்

பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தனது அன்பை அல்லது சிநேகத்தை அடுத்தவரிடம் எடுத்துரைக்கும் பழக்கம் சிறந்ததே. அவ்வாறே பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, தேர்வில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து என்று வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகின்ற வழக்கம் மிகவும் சிறந்தது. இவற்றைப்போன்றே மரணம், தேர்வில் தோல்வி போன்ற எதிர்வினையான காரியங்களை சந்தித்தவர்களிடம் ஆறுதல் கூறுவது, நல் வார்த்தைகள் பகிர்வதும் சிறந்த பழக்கம். மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளுவதில் சந்தோசம் இருப்பது போலவே சில எதிர்மறையான பிரச்சினைகளும் ஏற்ப்படுவது உண்டு. உதாரணமாக தனது மனைவிக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ நண்பர்களுக்கோ வாழ்த்து கூறுவதும், மறவாமல் பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பதும் வழக்கமாக்கி விட்டு பின்னர் ஏதாவது காரணத்தினால் விடுபட்டு போகின்ற போது, அந்த உறவுகளில் வருத்தம் ஏற்ப்பட வாய்ப்பாகிவிடுகிறது.

எனக்கு தெரிந்த ஒருவரது வீட்டில் அவர் தினமும் காலை வேலைக்கு கிளம்பி போகையில் தனது மனைவியின் கையிலிருந்து குறைந்தபட்சம் ஒரு ரூபாயேனும் வாங்கிக்கொண்டு செல்வதும், தனது பையிலிருந்து எடுக்கின்ற பணம் நூறு ரூபாயோ ஐநூறு ரூபாயோ எதுவாக இருப்பினும் அவற்றை ஒவ்வொரு குழந்தைகளிடமும் கைகளில் கொடுத்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்தது. சிறிய குழந்தைகளாக இருந்தவர்கள் வளர்ந்த போது தனது தாயிடம் எதையாவது காரணம் காண்பித்து பணத்தை வாங்கிச்சென்று தனது விருப்பம் போல செலவு செய்கின்ற பழக்கம் ஏற்ப்பட துவங்கியதில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் பழக்கமும் சிகரெட் விபசாரம் போன்றவற்றில் ஈடுபடும் வழியையும் ஏற்ப்படுத்தியது. தனது பிள்ளைகளின் தவறான போக்கை தகப்பனார் கண்டித்த போது அவர்களுக்கு தகப்பனின் மீது கோபம் வந்தது. அதனால் தகப்பன் மகன் உறவில் விரிசல் ஏற்பட்டு பகையானது.

தகப்பன் தாயிடம் 'இனி அவர்கள் வற்புறுத்தினாலும் பணம் கொடுக்காதே' என்று கூறி பணம் கொடுப்பதை நிறுத்தியபோது அதுவரையில் கையில் பணம் வைத்து செலவழித்து பழகிப்போனதால், அதனால் ஏற்பட்ட நட்பு வட்டாரம், குடி, புகை, விபசாரம் போன்ற பழக்கங்களை நிறுத்த இயலாமல் வேறு வழிகளில் பணம் புரட்ட ஈடுபட்டனர். இதையறிந்த தகப்பன் தற்கொலை செய்துகொண்டார். இதை போன்றே சில வீடுகளில் வேலைக்குச்சென்று திரும்புகின்ற பெற்றோர் அல்லது வீட்டிற்கு தவறாமல் வருகின்ற உறவினர்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட், முறுக்கு இன்னும் பலவிதமான பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம், அவ்வாறு தொடர்ந்து வாங்கிச்செல்லுகின்ற நபர்களிடம் குழந்தைகள் அவற்றை எதிர்பார்க்கின்ற வழக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். நாளடைவில் பெரியவர்களாய் வளர்ந்து அடுத்த வீட்டிற்கு மருமகளாகி அல்லது மருமகனாகிய போதும் அவ்வாறான எதிர்பார்ப்புகள் தொடர, தனது கணவன் தனக்கு ஏதேனும் வாங்கி கொடுக்கவேண்டும் என எதிர்ப்பார்க்கின்ற மனநிலையில் அவ்வாறான வழக்கம் இல்லாத கணவன் அமைந்துவிடும்போது அந்த வாழ்வில் சலிப்பு முளைக்கத்தொடங்குகிறது.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது பழமொழி. பழக்க வழக்கங்கள் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பெற்றிருக்கிறது. நல்ல பழக்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பல பழக்கங்கள் நமக்கே தீங்காக வாழ்க்கையை சலிப்படைய செய்துவிடுகின்ற அபாயங்களும் உண்டு. எந்த பழக்க வழக்கமும் மாற்றிக்கொள்ள இயலாத வகையில் பழக்கிகொள்வதால் பின்னர் அவற்றிலிருந்து விடுபட முயன்றாலும் இயலாமல் போகின்ற நிலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தி வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்துவிடுகின்றது.

சிலருக்கு விடியற்காலை நான்கு மணிக்கு உறக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிடும், இதற்க்குக் காரணம் நான்கு மணிக்கு எழுந்து பழகிப்போனதே, அவ்வாறு விடியற்காலையில் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்வதற்க்கு இரவு சற்று சீக்கிரம் உறங்கும் வழக்கமும் தேவைப்படுகிறது. இவ்வாறான வழக்கம் தேவைப்படுகின்ற காலத்தில் சரியானதாக இருப்பினும், தேவையற்ற காலத்தில் விரைவில் உறக்கம் நீங்கி எழும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாமல் அவதியுறுகின்ற நிலை ஏற்ப்படுகிறது. அத்துடன் நில்லாமல் தனது வீட்டில் உள்ளவர்களும் அவ்வாறு விடியலில் எழுந்து வேலைகளை அல்லது படிக்க செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதும் அவ்வாறு செய்யாதவர்களை ஏசுவதும் அடுத்தவர்களுக்கு ஓயாத தொல்லையாகிவிடுகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் காலையில் கண்விழிக்கின்ற போதே முதலில் தனது தலையணையின் அருகில் வைத்திருக்கும் சிகரெட் ஒன்றினை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்த பின்னர்தான் பல் துலக்குவது கழிப்பிடம் செல்வது எல்லாமே, ஒரு சிகரெட் தீருகின்ற தருவாயில் மற்றொரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொள்ளாமல் இருக்க இயல்வதில்லை, அவரே நினைத்தாலும் முயன்றாலும் அந்த பழக்கத்தை தவிர்க்கவே இயலவில்லை. மருத்துவர் இனி சிகரெட் குடிக்கவே கூடாது எனக் கூறியும் அப்பழக்கத்திலிருந்து மீளவே இயலாமல் தவித்தார். இது போன்று கெட்ட, நல்ல பழக்க வழக்கம் எதுவாக இருந்தாலும் அவை பலவிதங்களில் நமது வாழ்க்கையில் இடையுறு ஏற்ப்படுத்துவதை தவிர்க்க இயலுவதில்லை. குழந்தைகளாக இருக்கும் போது ஏற்ப்படுகின்ற பழக்க வழக்கங்களும் இவ்வாறே பல இடையூறுகளை ஏற்ப்படுத்த தவறுவதில்லை.

பழக்கம் என்பது மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொரு பொறுப்பு வகிப்பதால் முடிந்தவரையில் சிறு வயது முதலே எல்லா சூழலுக்கும் தகுந்தாற்போன்று பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கு தாயார் செய்துகொள்வது மிகவும் அவசியமானதொன்று.

..

உறுதி வேண்டும்

எல்லா காலங்களிலும் மனிதனுக்கு எதிரி உண்டு, முதல் மனிதன் ஆதாமின் முதலிரண்டு பிள்ளைகளில் இளையவன் மீது மூத்தவனுக்கு பொறாமை, எதிரியாக நினைப்பவனை அழிக்க வேண்டுமென்று அன்று தொடங்கிய மனோநிலை வளர்ந்து பெருகியது. ஊருக்கு ஊர் எதிரி, மனிதனுக்கு மனிதன் எதிரி, நாட்டுக்கு நாடு எதிரி. அதனால் போர்க்களம், அழிவு என்பதும் இன்றுவரை தொடருகின்ற கதை. மனிதனால் உண்டாக்கப்பட்டது மதம் என்று சிலர் கூறுவதுண்டு. கிறிஸ்த்தவம் மனிதர்களால் உண்டாக்கப்படாமல் இறைவனால் உண்டானது, இதற்க்கான சான்றுகள் ஏராளம். இறைவனின் கட்டளைகளை பின்பற்றுபவர்களாக இருந்த பல அரசியல் தலைவர்கள், மன்னர்கள், ஆட்சியாளர்கள் எல்லாம் எதிரி என்று தாங்கள் கருதுபவரை அழிக்கவே செய்தனர் என்று வரலாறு கூறுகின்றது. இதற்க்கு அடிப்படையான காரணமாக கூறப்படுவது, தன்னை தாக்க வருகின்ற எதிரியை எதிரிட்டு தாக்கி அழிப்பது என்பது. இந்நிலையில் மனிதம் என்பதும் இறைவனின் கட்டளைகள் என்பதும் இல்லாமல் போகிறது.

இவ்வாறு அழிந்து போகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இறைவனின் சித்தமாகவும் இருந்திருக்கக்கூடும், அநியாயமாய் அழிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். எதிரிகளை அழித்து வெற்றிவாகை சூடியவர்களில் அவர்களின் வேறு எதிரிகளால் அழிக்கப்படவும் கூடும். கிறிஸ்த்தவ வேதாகமத்தில் உள்ளது போன்று இறைவனுக்கு கீழ்படியாத மக்களை இறைவன் போர்களின் மூலமாகவும் வாதை நோய்களின் மூலமாகவும் பஞ்சம் பட்டினி போன்ற கொடுமைகளாலும் அழித்திருப்பதை காணமுடிகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு அவருடன் இருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு அதாவது, உலகத்தில் கொடுமையான காரியங்களை செய்து வருகின்றவர்களை ஏன் இன்னும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள், கெட்டவர்களால் நல்லவர்களுக்கு பெரும் தொல்லைகளும் வியாகுலமும் வேதனைகளும் உண்டாக்கப்படுகிறதே' என்று கேட்கின்றனர். அதற்க்கு இயேசு 'வயலில் நெற்பயிருடன் களைகளும் செழித்து வளருவதைப்போல கொடுமையானவர்கள் பூமியில் செழித்து வளரட்டும், இறுதியில் அறுவடையின் போது நெற்கதிர்களை சேமித்து களைகளை அழித்துபோடுவது போன்று கொடியவர்கள் இறுதியில் அழிக்கப்படுவார்கள்' என்று அழகான உதாரணத்துடன் அவர்களிடம் விளக்குகின்றார்.

கொடியவர்கள் செழித்து வளருவதைக் கண்டு நாம் அதிசயிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒன்றுக்கும் உதவாத களைகளாக இறுதி அறுவடையில் சுட்டெரிக்கப்படுவது உறுதி. கொடியவரிடம் நியாயத்தைப்பற்றியோ, நீதியை பற்றியோ நேர்மையை பற்றியோ எடுத்து சொல்வதனால் ஒரு பயனும் கிடையாது, செவிடன் காதில் சங்கு ஊதுவதை போன்று வீண் முயற்சி. ஆட்டு மந்தைகள் ஆயிரம் இருந்தாலும் அதனதன் மேய்ப்பனின் குரலை ஆடுகள் அறியும். எந்த மந்தையை சேர்த்த ஆடோ அது அந்த மந்தைக்கு தானே சென்று சேர்ந்து கொள்ளும். அதைப்போலவே பூமியில் பிறக்கின்ற மனிதர்களில் யார் யார் எதனுடன் இணைக்கப்பட வேண்டுமோ அதனுடன் எப்படியாவது சென்று சேர்ந்துவிடுவார்கள். அதனால் 'அவன் அக்கிரமம் செய்கிறான் இருந்ததும் அவன் நன்றாக செழிப்புடன் வாழ்கிறான், நானோ நேர்மையாய் நீதியை கடை பிடித்தும் மிகவும் துன்பப்படுகிறேனே' என்று வருந்த வேண்டிய அவசியம் இல்லை.

தூய்மையான மனதும் நேர்மையான, உண்மையான வாழ்க்கையும் நிச்சயம் ஆன்மாவை உயர்நிலை அடையச் செய்யும் என்பது உறுதி. இடையிலே உண்டாகின்ற துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் உறுதியாக அதிலேயே தொடர்ந்து வாழ்க்கையை மேற்கொள்வது என்பது அவசியம்.

1/13/2012

ஒருவழிப்பாதை

அழுத்தம் வேண்டாமென
அறைக்கதவை
திறந்து வைத்தேன்
இருட்டு வேண்டாம்
என்று
தீபமொன்றை
ஏற்றி வைத்தேன்

உள்ளே நீ
வருவாய் என்று
நிச்சயமாய்
நான் அறியேன்
கனம் எனக்கு
தாங்காது
உத்தமம் நீ
வெளியேறு

அடுத்தவரின் அறைக்குள்ளே
அனுமதியின்றி
நுழைவதெல்லாம்
மதி கெட்ட
வேலையென்று
சொல்லாமல்
அறியாயோ

வெளியேறும் வழி
அறியேன்
என்று சொல்லி
என்னுள் நீ
காலமெல்லாம்
கனக்கின்றாய்
1/11/2012

கனவுகள்

பட்டப்பகலில்
நிதானமாய் நடக்கிறேன்
கருமிருட்டில்
யாரும் துரத்தாமலேயே
மூச்சிரைக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
கால்களுக்கடியில்
இடறவில்லை குத்தவில்லை
அதிக தூரம் ஓடினேன்
மூச்சிரைக்கவில்லை
வியர்வையில் நனையவில்லை

ஒட்டு கந்தை
உடலிலில்லை
வெட்கம்
உயிர் சாவதுபோல்
விம்மி விம்மி
அழுகின்றேன்
கன்னத்தில் துளியேனும்
கண்ணீரில்லை

ஒற்றை சக்கர
மிதிவண்டி
வேகமாய் ஓட்டி
வானில் பறக்கின்றேன்
பள்ளிச்செல்லும்
அவசரமும்
பரீட்சை எழுதும்
பரிதவிப்பும்
விடாது என்னை
பற்றிக்கொள்ள

சிங்கம் யானை
மிருகமெல்லாம்
என்னை துரத்த
பயத்தாலெந்தன்
உடல் முழுதும்
நடுக்கத்துடன்
நான் ஓடி
ஏதோ ஓர்
வீட்டின் மீது
ஏறிச் சென்று
நிற்கின்றேன்

திரைப்படமும்
பார்ப்பதில்லை
எந்த நடிகருக்கும்
நான் விசிறியில்லை
கமலஹாசன்
பல சமயம்
சரத்குமார்
சில சமயம்
இப்போதெல்லாம்
சத்யராஜ் என்று
இவரையெல்லாம்
இலவசமாய்
காண்கின்றேன்

இன்னும் இன்னும்
எத்தனையோ
வியக்கவைக்கும்
காட்சியெல்லாம்
கண்டு மனம்
ரசித்ததுண்டு
லயித்ததுண்டு
காமம் மட்டும்
இடைமறித்ததில்லை
கண்விழித்த பின்னும்
சில நேரம்
நினைவினிலே அவை
தொடர்வதுண்டு
மறக்கவே கூடாதென்று
எண்ணியவை பலவுண்டு
ஆனால்
தான்னாலே
மறந்த போது
மனம்
தவியாய் தவிப்பதுண்டு


1/10/2012

நாலு பேர்

ஊர் சுற்றி பார்க்கச் சென்றவர் விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்ற செய்தி அவர்கள் வீட்டை நிலை குலைய செய்தது, அடிக்கடி உள்ளூர் பயணம் செய்யும்போதெல்லாம் அவரது மனைவிக்கு தினமும் செய்திகளில் வருகின்ற விபத்துக்கள் நினைவில் வரும், ஆனால் அவரது கணவருக்கு விபத்தைப் பற்றிய நினைப்பே இருக்காது, பிரயாணம் செய்கின்ற போது கூட அங்கு சென்று தான் தங்கவேண்டிய விடுதி சந்திக்க வேண்டிய நபர்கள் அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்து பிரயாணத்தை மறக்க செய்துவிடும். ஏகப்பட்ட உறவினர்கள் நண்பர்கள் என அவரை சுற்றியுள்ள கூட்டமும் பெரிது. அவர் சாதாரண காய்ச்சலால் மருத்துவமனையில் இரண்டு நாள் படுத்தாலே உறவினர்களும் நண்பர்களும் பார்வையாளர்களாக குவிந்துவிடுவர். பெரிய கூட்டத்தின் நடுவிலேயே எப்போதும் இருப்பதில் அவர் மனைவிக்கு சிரமம் உண்டு. அதைப் பற்றி அவரிடம் அவர் மனைவி சொல்லும்போதெல்லாம் 'நாலு பேர் நமக்கு வேணும்' என்பார்.

உடல்களை கண்டெடுக்க இயலாமல் விமானத்தின் பாகங்கள் சில கரிந்து சிதறிக்கிடந்தது. ஈமக்கடன் செய்வதற்கு கூட சாம்பல் கிடைக்கவில்லை, ' நாலு பே'ருக்கு வேலையின்றி போனது. 'அந்த நாலு பேர்' என்பவர்கள் எங்கு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 'அந்த நாலு பேர்' நாம் நன்கு பழகியவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை.

1/09/2012

ஊர் வாய மூட முடியாது.

வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்று என் கணவர் என்னிடம் சொன்னார், இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு, என் அப்பாவிடம் சொன்னேன், தேடுதல் ஆரம்பமாயிற்று, தெரிந்த நபர்களின் மூலம் என் அப்பா பார்த்த வீடுகள் எத்தனை என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் நிறைய பாரத்துவிட்டு சரியாக அமையவில்லை என்றார். எனது அப்பாவின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் பேச்சுவாக்கில் வீடு தேடும் கதையைப்பற்றி சொன்னோம் அவரும் எங்களிடம் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன அனுபவங்களில் பலவற்றை நான் இன்னும் நினைவில் வைத்துள்ளேன் ஏனென்றால் அவை எனக்கு சுவாரசியமாக இருந்தது. அவற்றில் ஒன்று, சென்னையில் மிகவும் முக்கியமானதொரு இடத்தில் இருந்த பழைய காலத்து பங்களா ஒன்றை அதன் உரிமையாளர் அந்த பங்களாவை விலைக்கு வாங்கி அதில் சில மறு சீரமைப்பு வேலைகள் செய்துதரும்படி நண்பரிடத்தில் சொல்லியிருக்கிறார், நண்பர் செய்து முடிக்கப்பட்ட மரசாமான்களை பொருத்துவதற்க்காக அந்த வீட்டிற்கு வண்டியில் அனுப்பிவிட்டு அவையனைத்தும் அங்கு சென்றடைந்துள்ளதா என்று பார்ப்பதற்காக அன்றைய தனது அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்புகின்றபோது இரவு சுமார் 8.30 மணிக்கு அவ்வீட்டிற்கு சென்று இருக்கிறார், அந்த வீட்டின் சாவி காவல்கார கிழவனிடம் இருந்தது, அந்த கிழவன் இரவில் அந்த பங்களாவில் தங்குவது வழக்கம் என்றாலும் வாசலில் எரிகின்ற விளக்கை போட்டுவிட்டு செல்வது வழக்கம், அன்றைக்கு பங்களாவின் முகப்பில் விளக்கு இல்லாத காரணத்தால் தெருவிலிருந்த அவ்வீட்டின் கேட்டின் அருகில் நின்றுகொண்டு காவல்கார கிழவன் வருகைக்காக காத்திருந்தார்.

இருட்டில் மூழ்கி கிடந்தாலும் தெருவிளக்குகளின் வெளிச்சமும் அடுத்த பங்களாக்களில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சமும் பங்களாவின் முகப்பை காண முடிகின்ற அரையிருட்டாக இருந்த பங்களாவை பார்த்தவாறு இருந்த சமயம் அவர் சற்றும் எதிர்பார்த்திரா சம்பவம் ஒன்று நடந்ததாம். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைகளை இணைத்துக்கொண்டு அந்த பங்களாவினுள் நுழைந்தனராம் . பூட்டிக்கிடக்கும் பங்களாவினுள் இவர்களால் எப்படி போக முடிந்தது என்ற ஆச்சரியத்தில் திகைத்த அவரால் அந்த இடத்தைவிட்டு நகர இயலவில்லை. மறுபடியும் அந்த பங்களாவின் முகப்பையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த போது மறுபடியும் அதே ஜோடிகள் தங்கள் இருவரின் கைகளை இணைத்துக்கொண்டு வேறு பக்கத்திலிருந்து நடந்துவந்து அந்த பங்களாவினுள் சென்றனராம். அங்கிருந்து அவர் தனதுவீட்டிற்கு சென்று சேருகின்ற வரையில் அவர் கண்ட காட்சிகள் திரும்பத்திரும்ப கண்முன் வந்து கொண்டே இருந்ததாம். அந்த பங்களாவின் மரவேலைகள் மற்றும் இதர வேலைகள் யாவும் முடிந்து புதிதாக வந்த குடும்பம் அங்கு வாழத்துவங்கியது. புதிதாக வந்த குடும்பத்தினருக்கும் அவ்வாறு உருவங்களை அந்த பங்களாவில் காண முடிந்ததா என்று அறிந்துகொள்ளும் ஆவல் கொண்ட என் அப்பாவின் நண்பர், அந்த பங்களாவிற்கு வேறு ஏதேனும் பணிகளுக்காக செல்வதுண்டு, அங்கு வந்த குடும்பத்தினர் யாருக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருத்துவிடவே, அக்குடும்பத்தினர் அங்கேயே வாழ்ந்தனர் என்று கதையை முடித்தார்.

சில மாதங்களுக்குப்பின்னர் எங்களுக்கு சென்னையை அடுத்த உள்ளகரத்தில் அருமையான வீடு விலைக்கு கிடைத்தது, அந்த வீட்டை விற்பவர்கள் கடன் வாங்கி வீடு கட்டியிருந்ததால் அந்த கடனை அடைத்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு போவதற்காக அந்த வீட்டை விற்பதாக எங்களிடம் சொன்னார்கள். அந்த வீட்டை வாங்கினோம் அப்போது எனது முதல் பிரசவம். எனது குழந்தையை பார்ப்பதற்கு அந்த வீட்டை விற்ற தம்பதியினர் வந்தனர், அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது பெரிய குறையாம்.பழைய வீட்டை வாங்கியதால் அதில் மேலும் பல லட்சங்களை செலவழித்து எங்களது விருப்பத்திற்கும் அதே சமயத்தில் பணமின்மை காரணமாக விடப்பட்ட மிகவும் முக்கிய கட்டுமான மற்றும் மரவேலைகளை செய்ய வேண்டியிருந்தது. அந்த வீட்டில் குடியேறிய சில மாதங்களில் அடுத்த வீட்டு அம்மா என்னிடம் அவரது மகளுக்கு வீடு வாங்கும் யோசனை இருந்தது ஆனால் இந்த வீட்டை வாங்குவதற்கு சிபாரிசு செய்யவில்லை என்றும் காரணம் ஏற்கனவே இருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு குழந்தை பாக்கியமே இல்லை, அடுத்ததாக, அந்த வீட்டில் வந்து தாங்கும் உறவினர்கள் யாராக இருந்தாலும் காரணமே இல்லை என்றாலும் எப்போதும் சண்டை ஏற்படுமாம், அங்கு தங்கியிருந்த வீட்டுக்காரரின் வயதான பெற்றோர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு முதியவர் வயதான தன் மனைவியை முரட்டுத்தனமாக அடிப்பார், ஆனால் அந்த முதியவர்கள் இருவருமே மிகவும் பொறுமையும் அன்பானவர்கள் இருந்தும் எதற்க்காக சண்டை ஏற்பட்டு அடிக்க தூண்டுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி வருந்துவாராம். தீராத கடன் தொல்லை, அந்த வீட்டை வாங்க வருகின்ற எல்லோரும் ஒரேயொரு முறைதான் அங்கு வருவார்கள் பிறகு வருவதே இல்லை. அதனால் அந்த வீடு ராசியான வீடு இல்லை என்பதாலும், எதோ விலக்க இயலாத காத்து கருப்புகளோ செய்வினைகளோ அதற்க்கு காரணமாக இருக்குமோவென்ற சந்தேகம் என்று அடுக்கடுக்காய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது முழுவதும் பொய் இல்லை என்பதை எங்களாலும் அங்கு நடக்கும் சில தவிர்க்க இயலாத தொடர் சம்பவங்கள் உறுதி செய்வதாகவே நடந்தது. அந்த வீட்டிற்க்குச் சென்ற ஐந்தாம் வருடம் எனது இரண்டாவது குழந்தையும் நல்லபடியாகவே பிறந்தது. நாங்கள் எல்லாவற்றிற்கும் இயேசுவை மட்டுமே நம்பி எங்கள் வேதத்தை வாசித்து ஜெபம் செய்வது வழக்கம். அதையே தவறாமல் செய்து வந்தோம்.

ஆறாவது வருடம் முடிகின்ற தருவாயில் திடீரென்று அடுத்த தெருவில் இருந்த என் கணவரின் அக்கா மகன் கொலை வெறியுடன் எங்கள் வீட்டிற்கு நன்றாக குடித்து விட்டு வந்து இரவு ஏறக்குறைய ஒன்பது மணிக்கு ஜன்னல்களிலிருந்த கண்ணாடிகளை உடைத்தான், சத்தம் கேட்டு வெளியே சென்ற என் தகப்பனாரை [வயது 75 ] முரட்டுத்தனமாக தள்ளியதில் அவரது முதுகெலும்பு காயத்தின் வலியை தாங்க இயலாமல் அப்படியே கீழே கிடந்தார். அவரையடுத்து சென்ற என் அம்மாவின் கையில் எனது இரண்டாவது குழந்தை [ஒரு வயது], அந்த குழந்தையை என் அம்மாவிடமிருந்து அந்த முரடன் பிடுங்க முயற்ச்சித்ததில் குழந்தை அலற ஆரம்பித்தது. அதற்குள் அடுத்து சென்ற என் கணவர் அவனை விலக்க என் அம்மா குழந்தையுடன் வெளியேறி வேறு வீட்டிற்கு சென்று விட, இவ்வாறு சற்றும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி காட்ச்சிகள் முடிவுற்றது. அதே மாதத்தில் அந்த வீட்டை விற்க என் கணவர் முயற்சி செய்தார். அடுத்த வீட்டுக்கார பெண்ணிற்கு தெரிந்த ஒருவருக்கு அந்த வீட்டை எங்களுக்குத் தெரியாமலேயே 'அடி மாட்டு' விலைக்கு அதே மாதத்தில் விற்றுவிட்டார் என் கணவர் என்பது எங்களுக்கு தெரியாது, வேறு ஒரு இடத்திற்கு 'வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்க போக வேண்டும் கிளம்பு' என்று என் கணவர் என்னிடம் கூறியபோதுதான் வீட்டை விற்றுவிட்ட சமாச்சாரம் தெரிந்தது. அடுத்த வீடு வாங்கும் படலம் மீண்டும் ஆரம்பமாயிற்று, இம்முறை வீடு வாங்கி குடிபெயர்ந்தாகி விட்டது. அந்த வீட்டிற்கு தேவையான சில்லறை வேலை செய்வதற்கு வந்திருந்த அதே இடத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் வந்தார், அவர் எங்களிடம் 'போயும் போயும் இந்த இடத்தை வாங்கினீங்களே, இந்த தெருவுல எத்தனை கொலை நடந்திருக்குது தெரியுமா, அதோட போகல, சாவு போகிற தெருவே இதுதான். இங்க பக்கத்துல குடியிருக்கிற ஜனங்கள நம்பி வீட்டு வேலைக்கு வச்சிடாதீங்க, திருடுங்க, கேட்க்க முடியாது எல்லோரும் குடிகாரனுங்க' என்றார். அவர் கூறியதில் எதுவுமே பொய்யில்லை என்பதை நாங்களும் பின்னர் அறிந்தோம். இந்நிலையில் தனது மகளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த என் நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார், அவர் அங்கு வந்ததற்கு காரணம் எங்கள் வீட்டிற்கு சிறிது தொலைவில் ஒரு மாப்பிள்ளை வீடு இருப்பதாகவும் திருமணத்தை நிச்சயம் செய்வதற்கு முன்பு அந்த மாப்பிள்ளையை பற்றிய தகவல்களை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அறிந்து கொண்ட பின்னர் நிச்சயிக்கலாம் என்றிருப்பதாக சொன்னார். அவர் விசாரித்த சிலரில் அந்த மாப்பிள்ளை வீட்டின் அருகிலிருந்த சிறிய மளிகை கடையும் ஒன்று, அந்த கடையிலிருந்தவரிடம் விசாரித்தபோது, 'சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க, அப்போது என் கடையில வந்து கடன் கேட்டு மளிகை சாமான்களை வாங்கிட்டு போவாங்க, இப்போ அந்த பையன் நல்லா சம்பாதிக்கறான், நம்ம கடைய கண்ணு தெரியல, கிரெடிட் கார்டுல பெரிய கடைங்கள்ள வாங்குறாங்கன்னு கேள்விபட்டேன்', வீடு கூட ரொம்ப சின்னதா இருதுச்சி, இப்போ பாங்க்குல லோன் வாங்கி மூணு அடுக்கு மாடிவீடு கட்டி, காரு வாங்கிட்டாங்க'. என்றார். பேசிக்கொண்டிருந்தபோதே அங்கு வந்து நின்ற வேறு ஒரு பெண், 'யாரு அந்த வூடா, ரொம்ப மோசம், வூட்டு வேல செய்றவங்கதானே, அவசரத்துக்கு கடன் கேட்டா குடுக்கவே குடுக்காது' என்றாள். ஆவலுடன் சேர்ந்துகொண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும், 'அந்த பையனோட அம்மா அவங்க வூட்டுகாறு வேலைக்கு போனதும் அடிக்கடி ஆட்டோ எடுத்துகினு எங்கியோ போவும், அந்த பையனோட தங்கச்சிகூட சரியில்லன்னு கேள்விபட்டேன்'. என்றார்.

என் வீட்டிற்கு வந்த நண்பரிடம் நான் கேட்டேன், நீங்கள் என்ன முடிவு எடுத்தீர்கள் என்று, அவர் சொன்னார் என் பெண்ணைப்பற்றி மாப்பிள்ளை வீட்டார் என் வீட்டருகில் வந்து விசாரித்தாலும் இவர்கள் கூறுகின்ற
அத்தனை குறைகளை விட இன்னும் கூடுதலாகவே சொல்லக்கூடும். அவற்றில் எத்தனை உண்மைகள் உள்ளது என்பது நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்வதுதான் சரி, அடுத்தவர்கள் கூறுகின்ற அத்தனையும் நம்பினால் நம்மால் பல விஷயங்களுக்கு சரியான முடிவை எடுக்கவே இயலாமல் போகும்.1/07/2012

மருத்துவர்கள் தெய்வமா வியாபாரிகளா

நமது நாட்டில் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் விபரீதங்கள் நடந்த பின்பு மக்களின் ஏகோபித்த கோஷங்களும் எதிர்ப்புகளும் ஆவேசங்களும் கிளம்பும் பின்பு, அது கிளம்பிய வேகத்திலேயே சில நாட்களில் அடங்கிவிடும். அடுத்த முறை அதே போன்று அல்லது அதை விட அதிகமான, தீவிரமானதொரு பிரச்சினை ஏற்ப்படும் அப்போதும் கோஷங்களும் எதிர்ப்புகளும் ஆவேசங்களும் கிளம்பும் அதுவும் அடங்கி போகும். இதுதான் வழக்கம், இதற்க்கு உதாரணம் போலி மருத்துவர்களை கண்டு பிடித்து கைது செய்தது, போலி மருந்துகளை கண்டு பிடித்தது போன்றவற்றை குறிப்பிடலாம். எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை அரசாங்கம் எடுத்து அதற்க்காகடுமையான சட்டங்களை வரையறுத்து குற்றங்களுக்கு மிக அதிகபட்ச தண்டனைகளை வழங்காவிடில் எந்த பிரச்சினைக்கும் முடிவு என்று ஒன்றை நாம் காணவே வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சென்றால் உடனே மருத்துவம் பார்ப்பது கிடையாது, அதற்கென்று வரைமுறைகள் சட்டங்கள் மிகவும் கடுமையானதாக உள்ளது, அதை போன்றே மருந்து மாத்திரைகளை நமது இஷ்டம் போல எங்கேவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாங்கி உண்ண முடியாது. விதிமுறைகளும் அதை மீறுவோர் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் அங்கு சாதாரணமானவை அல்ல. அது போன்ற கடுமையான வரைமுறைகளுக்கு உட்பட்ட மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் இந்தியாவிலும் நடைமுறைக்கு வராத வரையில் இது போன்ற அசம்பாவிதங்களை சந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. உறவுகளை இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனைகளை முற்றுகையிடுவது சகஜமாகி நமது நாட்டில் இருந்துவருகின்ற நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.

திரைப்பட இயக்குனர்கள் மீது குறை சொல்லி பயனில்லை, திரைப்படங்களில் சற்றே அதிகமாக சித்தரிக்கப்படுவதால் மக்களோ அரசாங்கமோ இதுவரையில் எந்த தீர்க்கமான முடிவையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் சமீபத்திய மருத்துவரின் கொலையும் அதனால் ஏற்பட்ட ஆவேசங்களும் நமக்கு எடுத்து காட்டுகிறது. திரைப்படம் பார்த்துவிட்டுத்தான் இவ்வாறான செயல்கள் நடக்கிறது என்பதை நாம் காரணம் காட்டினால், எத்தனையோ திரைப்படங்களில் நல்ல விஷயங்களை எடுத்து மிகைப்படுத்தி காட்டி இருக்கின்றார்களே அதனால் மக்கள் என்ன ஒட்டு மொத்தமாக திருந்தி விட்டார்களா என்கின்ற கேள்வி முன்வைக்கபடுகிறதே அதற்க்கு என்ன பதிலை நம்மால் கூற முடியும். திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதை முழுக்க கற்பனை என்று கூறி ஒட்டு மொத்த தவறுகளுக்கும் திரைப்படங்களே காரணம் எனக்கூறினால் அத்திரைப்படங்கள் திரைக்கு வந்தபோதே மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து அக்காட்சியை அத்திரைப்படத்திலிருந்து எடுக்க கோஷமிட்டிருக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட இயக்குனரையோ, திரைப்பட சங்கத்தின் தலைவரையோ நாடி அதற்க்கு ஒரு தீர்வை ஏற்ப்படுத்த தவறியதற்கு என்ன காரணம்.

உயிர்காக்கும் மருத்துவமே வியாபார நோக்கில் செயல்படுகின்றபோது ஊடகங்கள் வியாபார நோக்கில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை கூறுவது வியப்புக்குரியது. ஊடகங்கள் வியாபார ரீதியானவை, அவைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறுவதில் சில சமயம் உண்மையும் உள்ளது அதற்க்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததை நேரடி காட்ச்சியாக காண்பித்து பெரும் புரட்சியை, கதாநாயகனை வெளிச்சம் போட்டு காட்டியது. அது அவர்களுக்கு வியாபாரம்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பதற்கு இந்த கொலை மட்டுமே காரணமா, ஒரு நோயாளியின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்த நோயாளியை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றிவிட முடியுமா முடியாதா என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் அந்நோயாளியின் முக்கிய உறவினர்களிடம் தெரிவிப்பது மருத்துவரின் கடமையல்லவா. உத்திரவாதம் கொடுக்க இயலாத நிலையிருந்தால் அதையும் தகுந்த முறையில் அந்நோயாளியின் உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு என்பதை மருத்துவர்கள் அறியவில்லையா. உத்திரவாதம் கொடுக்க இயலாத நிலையில் உறவினர்களிடம் கையொப்பம் பெற்ற பின்னரே அறுவை சிகிச்சை செய்வதுதானே முறை, அவ்வாறு அறிவிக்காமல் அறுவை சிகிச்சை செய்து நோயாளி இறந்துவிட்டால் குற்றவாளி அந்த மருத்துவர் தானே?

அவ்வாறு கையொப்பம் பெற்று, நோயாளியின் உண்மை நிலவரத்தை உறவினர்களிடம் எடுத்து சொன்ன பின்னர் அவர்கள் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை நடைபெற்று நோயாளி இறந்துவிட்டால் அதற்க்கு மருத்துவரை பொறுப்பேற்க சொல்வது உறவினர்களின் குற்றம். இதில் எங்கு தவறு இருந்தாலும் குற்றம் செய்தவர் அதை ஒதுக்கொள்வதுதானே முறை, இது போன்ற நிலை மறைந்த மருத்துவ மேதை ரங்காச்சாரி காலத்திலோ, அதற்க்கு பின்னர் குறைந்தது 40 வருடங்களிலோ நடைபெறாததற்கு காரணம் என்ன? அப்போது மருத்துவர்களை தெய்வம் என மக்கள் கருதியதன் காரணம் என்ன? இன்றைக்கு மிகவும் சாதாரணமாக மாறிப்போகும் மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு? மருத்துவர்கள் மருத்துவத்தை வியாபாரமாக கருதினால் இவ்வாறான விபரீதங்கள் ஏற்ப்பட வழிவகுக்கும் என்பதை எடுத்துகாட்டுவதாகவே இச்சம்பவம் நடந்துள்ளது. மனித நேயமற்ற நிலை உருவாகுமானால் கொலை கொள்ளைச் சம்பவங்கள் எங்கும் அதிகரிக்கும் என்பதையே கொலைகளும் கொள்ளைச்சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது.

1/05/2012

கோவிலுக்கு சென்று சாமியை வழிபட வேண்டுமா

ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்டது 'கோவிலுக்கு எதுக்கு போகணும்', அதன் தாய் சொன்னாள் 'சாமி கும்பிடணுமில்ல', குழந்தை கேட்டது 'நம் வீட்டில் தான் தினமும் சாமி கும்புடுரோமே', அதற்க்கு தாயிடம் பதிலில்லை. அந்த குழந்தை தாயின் சொற்படி கேட்டாகவேண்டும் தனது தாய் தன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் எதற்க்காக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்கின்ற கேள்விக்கு பதிலின்றி சென்று வந்தது. குழந்தை சில காலம் நோய்வாய் படுக்கையில் கிடந்தது அப்போது அந்த தாய் குழந்தையின் சுகத்திற்க்காக வேண்டிக்கொள்ள தினமும் கோவிலுக்குச் சென்று வருவதாக குழந்தையிடம் சொன்னாள், அந்த குழந்தை கேட்டது அம்மா நீ மட்டும் தினமும் கோவிலுக்கு சென்று எனக்காக வேண்டிக்கொண்டால் போதுமா அப்போது எனக்கு சுகம் கிடைத்துவிடுமா என்றது. அந்த தாய் தன் குழந்தையிடம் நிச்சயம் சுகம் கிடைத்துவிடும் அதனால்தான் நான் தினமும் கோவிலுக்கு செல்கிறேன் என்றாள்.

சில மாதங்களுக்குப் பின்னர் குழந்தை நலமுடன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள் அவளுடன் ஒன்றாக பள்ளியில் படித்து வந்த குழந்தையொன்று உடல் நலமின்றி சில நாட்கள் பள்ளிக்கு வராமல் போனது, அப்போது அக்குழந்தை தனது அம்மாவிடம் எனது வகுப்பில் படிக்கும் பெண்ணுக்கு உடல் நலமில்லையென சொன்னார்கள் அதனால் நீ தினமும் கோவிலுக்கு சென்று அவளுக்காக வேண்டிக்கொள் அப்போதுதான் அவள் சீக்கிரம் நலடைவாள் என்றது. அதற்க்கு அந்த தாய் அந்த குழந்தைக்காக அந்த குழந்தையின் தாய் கோவிலுக்குச்சென்று வேண்டிக்கொள்வார்கள் நாம் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொள்ளும் அவசியம் இல்லை என்றாள். அதற்க்கு அந்த குழந்தை மீண்டும் தன் தாயிடம் 'அவளுக்கு அப்பா அம்மா யாருமே இல்லை, அவள் அநாதை' என்றாள்.

இப்போதும் அந்த தாயிடம் குழந்தையின் கேள்விக்கான பதில் இல்லை. குழந்தை வளர்ந்து பெண்ணாகிறாள் அவளுக்குள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் கிடைக்காமலேயே இருந்து வந்தது. காலப்போக்கில் அவளது பெற்றோரும் இயற்க்கை எய்தினர், எப்போதும் போல சாதாரண ஜுரம் வந்து படுத்திருந்தபோது தான் சிறு வயதில் தனது தாயிடம் கேட்ட அதே கேள்விகள் நினைவிற்கு வந்தது. யாரிடமாவது இதற்க்கான பதிலை தெரிந்து கொண்டே ஆகவேண்டுமென எண்ணினாள் அதற்காக பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தாள், சிலர் சில புத்தகங்களை படிக்க சொன்னார்கள். சிலர் சில அப்பியாசங்களை கற்றுக்கொண்டு அதன்படி இருந்தால் இதற்க்கான சரியானதொரு விடை கிடைக்கும் என்றனர். எல்லா மத குருக்களிடமும் ஆலோசனைகள் கேட்டு அறிந்தாள், அவள் தேடிய கேள்விக்கான பதிலை விட அதிகமாகவே அறிந்து கொண்டாள்.

தேடிய பதில் கிடைத்த பின்னர் அதை பிரசங்கிக்க வேண்டும் என்கின்ற உந்துதல் அவளுக்குள் உருவானது, அதற்க்கு காரணம் தன்னை போன்றே பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கடவுள் வழிபாடுகளை களைந்தெரிவதா தொடர்வதா என்று அறியாமல் வாழும் பலர்க்கு பயனுற வேண்டும் என்று நினைத்தாள், தன் எஞ்சிய வாழ்நாளில் அதையே தனது முழுநேர பணியாக ஆக்கிகொண்டாள். கோவில் என்பது தெய்வம் இருக்குமிடம் என்றால், மனிதர்களால் கட்டிய கோவில்களில் கடவுள் வந்து தங்குகின்றாரா, வீட்டிலோ மற்ற இடங்களிலோ கடவுளை வணங்குவதால் கடவுள் நமது வேண்டுதல்களை கேட்க்க மாட்டாரா. அப்படியென்றால் கோவில்கள் எதற்க்காக உண்டாக்கப்பட்டது. கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது மனிதர்களால் ஏற்ப்படுத்தப்பட்டதா அல்லது தெய்வம் மனிதர்களிடம் தனக்கென்று கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியதா.

இதுபோன்ற கேள்விகளுக்கு நியாமான நேர்மையா பதிலை தேடுகின்ற போது மதங்கள் + தெய்வங்கள் + மனிதர்கள் + கோவில்கள் = தெய்வ வழிபாடுகள் + நம்பிக்கைகள் = வணங்குதல். வணங்குதல் மட்டும் எல்லாவற்றிலும் அடிப்படையானது என்பது தெளிவாகும், வணங்குதலில் அவரவர் விருப்பத்தின்படி அமைந்துகொள்வதற்க்கு தடை ஏதுமில்லை என்றாலும் தான் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் சரியானதொரு விளக்கத்தை அர்த்தத்தை அறிந்து செயல்படுதல் என்பதே சரியா வழிபாடு.


................................................................................................................................................................

1/04/2012

பணமா குணமா

1950களில் பணமா பாசமா என்று கேட்டால் பாசம் என்று பதில் கிடைத்தது, அப்போது சவரன் விலை நூறு ரூபாய் கூட இல்லை, தங்க நகைகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் மக்களிடம் பெருமளவில் காணப்படவும் இல்லை, 1970களில் இரண்டு பெரிய படுக்கை அறைகளும், மிகப்பெரிய நடுக்கூடமும் காற்று வசதியுடைய சமையலறையும் கொண்ட தனி வீடு மாத வாடகை ஐந்நூறு ரூபாய்க்கு கிடைத்தது. முன்தொகை என்ற பெயரில் அதிகபட்சமாக ஒரு மாத வாடகைப்பணம் கொடுத்தால் போதும் அதிலும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் மட்டுமே முன்பணம் பெற்று கொண்ட பின்னர் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும், அறிமுகமான நபர்களின் சிபாரிசு இருந்தால் முன் பணம் வாங்கும் வழக்கம் கிடையாது. சென்னையில் இன்றைக்கு மிக முக்கிய பகுதிகளாக இருக்கின்ற பல பகுதிகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் எங்கு பார்த்தாலும் வேலிகாத்தான் செடிகளும் புல் பூண்டு செடி கொடிகளும் நிறைந்துருந்தது. மனை வாங்கி சொந்தவீடு கட்டிக்கொண்டு குடித்தனம் போகவேண்டிய எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்ப்பட்டதே இல்லை.

1980களில் நிலைமை சற்று மாற்றமடையத் துவங்கியது, இன்றைய நெருக்கடியான பகுதிகளில் வீடுகள் நிறைந்துவிட மக்கள் நகரத்தின் இதர பகுதிகளில் குடியேறும் நிலை ஆரம்பித்தது புறநகர்களில் வீடு மனைகள் தோன்ற ஆரம்பித்தது, ஏரிகள் மற்றும் விளை நிலங்களும் மனித ஆக்கிரமிப்புகளாக மாறிக்கொண்டு வந்தது. அப்போதும் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஆயிரத்தை எட்டவில்லை. 1990களில் நிலைமை இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தாலும் ஒரு மனை ஒரு லட்சம் வரையிலாவது வீடு கட்டுவதற்கு கிடைத்தது. ஆனால் 1990ரிலிருந்து 2000த்திற்குள் சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட விற்ப்பனைக்கு மனைகள் கிடைப்பது முற்றிலும் ரிதாகி ஏற்கனவே வாங்கியுள்ள மனைகளை விற்பவர்கள் இன்னும் மனைகளின் விலை ஏறும் என்று எதிர்பார்த்து விற்காமல் வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே தனி வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்களிடம் அந்த வீடுகளை வாங்கி இரண்டு அல்லது அதற்க்கு அதிகமான பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதுவரையில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ்ந்திருந்த நிலப்பரப்பில் இருபதுக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற அடுக்குமாடிகள் எழும்பத்துவங்கியது. இதன் மூலம் நிலத்தை விற்றவருக்கும் வாங்கி கட்டி விற்பனை செய்தவருக்கும் அதிக லாபமடையும் நிலை ஏற்பட்டது, இந்நிலையில் ஆபரண தங்கம் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இன்று தங்கமும் சொந்த வீடும் உச்சத்தில் நிற்கிறது. நுகர்வோரின் எண்ணிக்கையும் அதற்கேற்றார் போலவே அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பணமா பாசமா என்று ஒருவரை கேட்டால் பணமும் தங்கமும் என்று பதில் கூறுவது சாதாரணமாகிவிட்டது.

ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் திருமணத்திற்கு நகை வாங்குவதை யாரும் குறைத்துக்கொள்வதில்லை, சராசரியாக 40 சவரன் ஆபரண தங்கம் திருமணத்திற்கு பெண் வீட்டாரிடம் கேட்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ள போகும் பெண் பட்டம் பெற்று வேலைப்பார்ப்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்ணிற்கு திருமணத்திற்கு செலவழிக்க லட்ச்சங்கள் தேவைப்படுகிறது. மணபெண் குணவதியா ஆரோக்கியமானவளா நன்னடத்தையுடையவளா என்பதை பற்றிய கேள்வி எழுவதே இல்லை, அதே போன்று மணமகன் என்ன படித்திருக்கிறார் எங்கே பணிபுரிகின்றார் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை பற்றி மட்டுமே விசாரிக்கின்றனர், அவரது குணம் என்ன நடத்தை என்ன அவரது குடும்பத்தில் தனது பெண்ணையோ பையனையோ திருமணம் செய்வித்தால் வாழ்க்கை நலமுடன் இருக்குமா என்பதைப்பற்றி நினைப்பதே இல்லை.

பணம், தங்கம், வசதிகள் அழகு, படிப்பு, உத்தியோகம் போன்றவற்றிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் செலுத்தப்படுவதை பார்க்கும்போது இந்த நிலையில் அன்பு பண்பு நேர்மை நாணயம் போன்ற மிகப்பெரிய ஈடு இணையற்ற குணநலன்கள் மக்களைவிட்டு முற்றிலுமாக காணாமல் போகிறது என்பதை நமக்கு காட்டுகிறது.

..................................................................CCCCCCCC.................................................................

1/03/2012

யார் குற்றம்

ஒரு பெண் மீது ஆணோ ஒரு ஆண் மீது பெண்ணோ அன்பு கூறுவதற்குப் பெயர் காதல். ஆனால் தான் அன்பு கூறுகின்ற ஆணோ பெண்ணோ திருமண வாழ்விலும் எல்லாவித சுகதுக்கத்திலும் அதே அன்பாய் அல்லது காதலுடன் வாழ்ந்து வாழ்க்கை என்னும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இயலுமா என்பதை அறிந்துகொள்வதற்கு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும்போது மட்டுமே முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு முடியும் என்பதை காதலிக்கும்போது அறிந்துகொள்வது இயலாத காரியம் என்பதாலேயே காதலித்து திருமணத்தில் முடிகின்ற திருமண வாழ்க்கைகள் பல சமயங்களில் பெரும் தோல்வியை சந்திக்கிறது. திருமணம் என்பது இருமனங்கள் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்திருந்தாலும் கூட மனதிற்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதற்கு முக்கியத்துவமின்றி வரன்களை பல்வேறு காரணங்களுக்காக திருமணத்தில் இணைத்துவிடுவதும் பின்னர் திருமணத்தில் இணைய போகின்ற இருவருக்கும் பிடித்திருந்தாலும் வேறு காரணங்களுக்காக திருமணபந்தத்தில் இணைவதற்கு எதிர்ப்பதும் அதற்க்கு காரணமாக சமுதாயத்தில் சொல்லப்படும் எண்ணிமுடியாத விதிகளும் இந்திய கலாச்சாரத்தில் பெரும்பான்மையான மனிதர்களின் சோககதைகளின் பின்புலமாக, அன்றாடம் சந்திக்கின்ற பலரின் சொந்தகதைகள்.

திருமணம் என்பதை ஆண் பெண் இருவருக்கும் குறிப்பிட்ட வயதில் எப்படியாவது முடித்து விடவேண்டும் என்கின்ற பெற்றோரின் ஆதங்கம் ஒருபுறமும் அவ்வாறு குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடைபெறாமல் போனால் சமுதாயத்திற்கும் உறவினர் நண்பர்களுக்கும் கேள்விக்குறியாக அப்பெண்ணோ ஆணோ ஆளாக்கப்படுவதும், அவ்வாறு ஆளாகாமல் பார்த்துக்கொள்வதையே மிகப்பெரிய காரணமாக முன்வைத்து அவசர கதியில் திருமணம் என்கின்ற ஆயுள்தண்டனையை பெண்களுக்கும் பையன்களுக்கும் ஏற்ப்படுத்திவைக்கின்ற பெற்றோரும் சுற்றமும் நட்ப்பும் பின்னர் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல துயரங்களை சரி செய்வதற்கு வழி அறியாமல் விலகிச்செல்வதும் வாடிக்கையாகிவிட்ட வேதனைகள்.

இவ்வாறு அவசர கதியில் இயங்காமல் நன்றாக யோசித்து மனப்பொருத்தம் ஜாதகப்பொருத்தம் அந்தஸ்த்து என்று வரிசையாக பல பொருத்தங்களை கவனித்து ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் தடபுடலாக நடந்து பிள்ளைகள் ஒன்றோ இரண்டோ பெற்றுக்கொண்ட பின்னர் சாவகாசமாக கணவனைப்பற்றி மனைவியும் மனைவியைப்பற்றி கணவனும் அறிந்துகொள்ளும் பல்வேறு செய்திகளும் அதனால் ஏற்ப்படுகின்ற விளைவுகளை தாங்க இயலாமல் விவாகத்தை ரத்து செய்வதும் சமுதாயத்தில் தற்போது சாதாரணமான விஷயங்களாகிவிட்டது. மேல்மட்டமானாலும் கீழ்மட்டமானாலும் பெண்களானாலும் ஆண்களானாலும் மனமும் எண்ணங்களும் சிந்தனைகளும் செயலும் ஒன்றுதான். பல சமயங்களில் மனவேற்றுமையோ வேறு வேற்றுமையோ காரணமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணின் மனதும் பெண்ணின் மனதும் வெறுப்பின் ஆதிக்கத்தினால் அதுவரையில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலும் கண்ணியமும் காணாமல் போக, மனம் வெறுமையாய் வெறுப்புற்று கிடக்க, அந்த சமயம் பார்த்து வேறு ஒரு நபரின் துணை அமையும்போது அங்கே அவ்விருவருக்கும் ஏற்ப்படுகின்ற உறவுக்குப் பெயர் 'கள்ளக்காதல்' என்று கூறப்படுவது வேடிக்கை.

கள்ளக்காதல் என்று கூறுவதற்குக் அக்காதலில் ஈடுபடுகின்ற இருவருக்கும் சட்டப்படி வேறு மனைவியோ கணவனோ இருப்பது என்பது காரணமாக கூறப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வகையான எழுதப்படாத பல சட்டங்களை சமுதாயம் வைத்து இருக்கிறது, ஆனால் அதே சமுதாயத்தில் திருமணமான ஆண் தனது சுகத்திற்க்காக விபசாரியை நாடுவதற்கும், மது அருந்துவதற்கும் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதற்கோ தடை விதித்து எவ்வித எழுதப்படாத சட்டதிட்டங்களையும் விதிப்பதில்லை. இதனால் விபசாரம் என்பதும் மது அருந்துவதும் பெரும்பாலும் ஆண்களுக்குரியதாக காலம் காலமாக சமுதாயம் தருகின்ற எழுதப்படாத சுதந்திரம். கள்ளக்காதலின் அடிப்படையே சமுதாயத்தில் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பலவித கட்டுப்பாடுகளின் தீவிரத்தை நமக்கு காட்டுகிறது.

கலாச்சாரம் என்பதைப்பற்றிய அக்கறை உள்ளவர்கள் அதன் சீரழிவை பற்றி அக்கறைபடுபவர்கள் பெண்கள் உடுத்துகின்ற உடை, பெண்களின் நடத்தை மீது மட்டுமே குறிப்பாக குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம் என்பது விளங்கவில்லை. கலாச்சாரத்தை காக்கின்ற பொறுப்பு பெண்கள் மட்டுமே காரணமா என்பது பதிலில்லாத கேள்வி. சமுதாயத்தில் பெரும் பொறுப்பை பெண்கள் மீது சுமத்திவிட்டு கலாச்சார சீரழிவிற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போன்ற எழுதப்படாத விதியை சுமத்துகிற சமுதாயம் கள்ளக்காதலை உருவாக்கிய பொறுப்பு மிகுந்த நற்ப்பணியை இலவசமாக பெண்களுக்கு வழங்கிவருகிறது.

....................................ooooooooooo.....................