Translate

12/27/2011

பெண்களை பிடித்திருக்கும் சனி

இந்திய தேசத்தில் பெண்களை தெய்வம் என்று வணங்குகின்றனர், தாய்க்கென்று ஒரு தனி இடம் இந்திய தேசத்தில் இருப்பதால் 'தாய்நாடு', 'தாய்மொழி' என்று தாயின் ஸ்தானத்தை கொடுக்கின்றனர், இவ்வாறெல்லாம் போற்றப்படும் பெண்ணினத்தை இந்திய சமுதாயத்தில் மிக கேவலமான முறைகளில் குற்றம் சுமத்தப்படுவதும் மிகவும் சகஜமான ஒன்று. காலம் எத்தனைதான் மாறினாலும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் அதிகரித்தாலும் பெண்களின் மீது சுமத்தப்படுகின்ற கேவலமான நிந்தைகள் மட்டும் சமுதாயத்தில் மாறுவதாகவே தெரியவில்லை. நமது நாட்டில் மாற்றங்கள் அதிகம் ஏற்ப்பட்டுவிட்டதாக நினைப்பது வெறும் பிரம்மையே. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்று கூறுவது வெறும் பேச்சளவில் மட்டுமே. ஆண்களுடன் பெண்கள் அதிகம் பழகினால் அப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் வீண் பழிகள் சுமத்துவதும் இந்திய கலாசாரத்தின் மிகவும் முக்கிய பணி.

பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகபடுவதும் அதை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளாமலேயே அச்செய்தியை திரித்து பன்மடங்காக்கி விமரிசனம் செய்வதும் மிக சாதாரணமாக சமுதாயத்தில் காணப்படும் அவலம். தங்கள் வீடுகளில் இருக்கும் தாய், சகோதரி, அத்தை, சித்தி, மாமி என்ற பெண்களைப்பற்றிய விவரங்களை மற்றவர்களும் அவ்வாறே திரித்து பன்மடங்காக்கி வீதிகளில் விமரிசனம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் போதும் அவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் முற்றிலுமாக காணாமல் போவார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது, வேறு பெண்களைப் பற்றிய வதந்திகளை காதுகொடுத்து கேட்பதற்கும் அதை இன்னும் சில பல மாற்றங்களுடன் கேட்பவர் உள்ளத்தின் ஆவலை தூண்டுகின்ற வகையில் ஜோடித்து எல்லோரிடமும் விமரிசனம் செய்வதில் இந்திய சமுதாயத்திற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாத அளவிற்கு கற்பனையை தங்கள் விருப்பத்திற்க்கேற்றபடி கயிறு திரிக்க வல்லவர்கள்.

எதிலெல்லாம் தங்களது திறமையை காட்ட வேண்டுமோ அவைகளில் காட்டுவதற்கு வழி அறியாத 'கண்ணிருந்தும் குருடர்களும், காதிருந்தும் செவிடர்களுமாக' வாழ்ந்து கொண்டிருக்கும் செத்த பிணங்கள். அறிவியலும் கல்வியும் வளர்ச்சியடைந்தாலும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்ப்படாத வரையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைவதில் யாருக்கும் நன்மை இருக்கப்போவதில்லை. சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் அடைந்த நாடுகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியின் முழுமையை காணமுடிகிறது. அவ்வாறு இரண்டிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே வல்லரசுகள் என்ற மேன்மையை அடைய முடியும். இந்தியாவை வல்லரசாக்க நினைப்பவர்கள் முதலில் சமுதாயத்தில் கடைநிலையில் வாழுகின்ற பெண்ணைகூட மதிக்கின்ற தனது தாயைப்போல, தங்கையை போல ஏற்றுக்கொள்ளும் மனம் எப்போது வளர்ச்சியடைகிறதோ அன்றைக்குத்தான் சமுதாயம் முழு முன்னேற்றத்தை கிரகித்துக்கொள்ளுகின்ற தரத்தை பெறமுடியும்.

பேருந்தில் தன்னுடன் பயணிக்கின்ற சக பயணியை உரசிக்கொண்டு சுகம் காண துடிக்கும் ஓநாய்களும், அடுத்தவன் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணம், நகைகளை கொள்ளையடித்து சந்தோஷமாக தனது வாழ்நாளை அனுபவிக்க ஆசைப்படுகின்ற பிணம் தின்னி கழுகுகளும், எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்க்கையை தரம்கெட்ட விதத்தில் வாழ்ந்துவிட நினைக்கும் மாக்கள் நிறைந்த சமுதாயத்தினால் நாட்டிற்கும் கேடு சமுதாயத்திற்கும் கேடு. கேடு நிறைந்த சமுதாயத்தை உள்ளடக்கிய நாடு ஒருகாலமும் வளர்ச்சியை அடையும் வாய்ப்பே இல்லை. அடிப்படை கல்வியும் அடிப்படை தகுதிகளும் கொண்ட சமுதாயம் மட்டுமே விஞ்ஞான மற்றும் கல்வி வளர்ச்சியில் முழு பங்காற்றும் தரத்தை உடையது. அவ்வாறு இல்லாத 'ஆட்டு மந்தை' சமுதாயம் வல்லரசாகவோ முன்னேற்றப்பாதையை தொடுவதற்க்கோ கூட லாயக்கு அற்றது.


....................................................@@@............................................

12/14/2011

சின்னக்குயில் சித்ரா


பழைய திரைப்பட பாடல்களை இரவின் நிசப்த்ததில் கேட்கின்ற சுகம் அலாதியானது. அதிலும் மொட்டை மாடியில் பவுர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கேட்க்கும்போது அதன் சுகம் இனிமையானது, பீ. சுசீலாவின் இனியகுரல் நாடி நரம்புகளுக்குள் புகுந்து ஏற்ப்படுத்துகின்ற உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பீ.லீலா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பீ.சுசீலா போன்றவர்களின் அழகிய குரல்களுக்குப்பின்னர் சித்ராவின் குயிலோசை சிந்தையை ஈர்த்து வந்தது, வாழ்க்கையில் குறிப்பிட்ட முன்னேற்றம் மற்றும் உச்சங்களை அடைந்தவர்களுக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும் அல்லது ஏற்ப்படும் என்பது நம்பிக்கை. மேற்கூறிய அத்தனை பாடகர்களும் தங்களது தொழிலிலும் பிரபலத்திலும் எல்லாவித நிறைவுகளையும் பெற்று வாழ்க்கையை நிறைவு செய்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சித்ராவின் பாடல்களை தேடிக்கொண்டிருந்தபோது அதிர்ச்சியளித்த செய்தி எனது தேடலில் தொய்வை ஏற்ப்படுத்தியது, அதற்க்கு காரணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி [இன்றுடன் சரியாக 8 மாதம் நிறைவடைந்துள்ளது] ஷார்ஜாவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு தனது எட்டு வயது மகள் நந்தனாவையும் உடன் அழைத்து சென்ற பாடகி சித்ராவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, அவர் குளிக்க சென்ற சமயம் அவரது குழந்தை நந்தனா அருகிலிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துகிடந்தாள் என்பது செய்தி.

இந்த
செய்தியை கேட்டவுடன் அவர் என்ன நிலையை அடைந்திருப்பார் என்பதை நினைத்துப்பார்க்கவே வேதனையாக உள்ளது. ஏறக்குறைய ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சித்ராவின் ஒரே குழந்தை அகால மரணத்தை தழுவியது சாதாரண வேதனையாக இருந்திருக்காது. துபாயைவிட்டு இறந்த குழந்தையுடன் திரும்புவோம் என்று அவர் நினைத்திருக்க முடியாது, எப்போதும் குழந்தையைப்போல சிரித்த முகத்துடன் காணப்படும் சித்ராவிற்கு இப்படியொரு சோதனையா என்று என் மனம் மிகவும் வேதனையடைந்தது. விஜெய் தொலைக்காட்ச்சியில் அதே வயதொத்த குழந்தைகளுடன் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தனது குழந்தையின் நினைவு ஏற்பட்டு இன்னும் மனவேதனை அதிகம் ஆகாமலிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்படுவதுண்டு. இனியொரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இழந்த குழந்தையைப் பற்றிய வேதனையை மறப்பதற்கு இறைவன் துணையிருக்கவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். விருதுகள் அதிகம் வாங்கிய ஒரே தெனிந்திய பாடகி சித்ராதான், அவரது இனிய குரலுக்கு கோடிகணக்கில் ரசிகர்கள் கூட்டம் உண்டு, எல்லோரையும் தனது இனிய குரலின் மூலம் மகிழ்வித்து வருகின்ற இவரது வேதனைக்கு ஈடுசெய்யவோ ஆறுதல் கூறவோ இயலாது.


..............ooooooooooo..............

இந்திய காதல்

காதல் என்ற வார்த்தைக்கு என்றுமே தனி இடம் உண்டு. மனித வாழ்க்கையில் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களையும் இந்த மந்திரச்சொல் யுக யுகமாக ஆட்கொண்டிருக்கிறது, இதன் புனிதம் என்பதை மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாலும் காதலுக்கென்று, அன்புக்கென்று சிறப்பான இடம் இயற்க்கை கொடுத்த வரம். காதல் என்கின்ற அன்பு எங்கே எப்போது சீர்குலைகிறதோ அங்கே வன்மம் தழைத்தோங்குகிறது. காதல் என்கின்ற அன்பு இடத்திற்கிடம் நபருக்கு நபர் உறவுக்கு உறவு வெவ்வேறு நிலைகளில் உயிரினங்களை ஆண்டுக்கொண்டிருந்தாலும், சில உறவுகளுடன் மட்டும் இதன் ஆழம் அகலம் அதிகரித்து காணப்படுவது இயற்கையின் மற்றொரு ஆச்சரியம்.

ஒரு பெண்ணை பல ஆண்கள் காதலிப்பதாக இருந்தாலும், அத்தனை ஆண்களுமே அவளை தன் உயிரினும் மேலாக அன்பு கூர்வதை அப்பெண் அறிந்திருந்தாலும் அவர்களில் யாரேனும் ஒருவரை அல்லது முற்றிலும் புதிய நபரை அப்பெண்ணின் மனம் நாடுவது இயற்கையின் மற்றொரு விந்தை. ஒரு ஆண் தான் உயிரினும் மேலாக அன்பு கூர்ந்த பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து பார்க்ககூட இயலாது என்று கருதி இருக்கின்ற நிலையில் முற்றிலும் தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறான வேறு பெண்ணுடன் இணைத்துக்கொண்டு வாழ்நாளை கழிக்கின்றபோது தன்னால் எப்படி தன் விருப்பத்திற்கு எதிர்மாறான குணமும் தோற்றமும் கொண்ட பெண்ணுடன் வாழ முடிந்தது என்று தன்னைத்தானே அதிசயப்படுகின்ற விதத்தில் வாழுகின்ற இயற்கையின் விளையாட்டும் அதிசயம்தான்.

இப்படி பலவிதமான அன்பு அல்லது காதலை உள்ளடக்கிய இயற்கையின் விந்தைகளுள் மற்றுமொரு சுவாரசியமான செயல்பாடும் நாம் காண்பதுண்டு. ஒரு பெண் தான் காதலித்த அல்லது நேசித்த பலரில் ஒருவரை மட்டும் நேசித்தது உண்மையாக இருந்தபோது காலம் அவர்களை ஒன்றாக வாழவிடாமல் தவிர்த்து, பிரிந்து விட்ட காதலர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர, பல ஆண்டுகள் கடந்த பின்னர் தன் மனதில் பழைய காதலின் சுவடே காணாமல் போனதென்று நினைத்து தன்னைத்தானே அதிசயித்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டு அவ்வாறு சந்தித்தபோது இருவரும் பேச மறந்து செயலிழந்து விடுவதும் இயற்கையே, ஏனெனில் அதுவரையில் தங்களது வாழ்நாளில் இனி ஒருமுறையேனும் இருவரும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே இல்லை என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அந்த சந்திப்பு சத்திய சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு. அதுவரையில் அவ்வாறு ஒருமுறை சந்திக்க நேர்ந்தால் எவ்வாறெல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்க வேண்டும் என்று இருவரும் மனதில் பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்தார்களோ அத்தனை கேள்விகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் மாயம் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

"வாழ்ந்தால் உன்னுடன்தான் என்று நாம் இருந்தோமே விதி நம்மை பிரித்து விட்டது அதனால் வா நாமிருவரும் எஞ்சியுள்ள வாழ்நாளிலாவது ஒன்றாக வாழ்ந்துவிடுவோம்" என்று காதலன் தனது காதலிக்கு இறுதி வாய்ப்பை கொடுக்க முன்வரும்போது அப்பெண் அந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று ஏற்றுக்கொள்வாளா, தன்னைத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொள்வாள், அதுவரையில் தன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் கணவனின் நிலையை எண்ணி பார்ப்பாள், தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக தங்களுக்கு பிறந்திருக்கின்ற குழந்தைகளின் நிலையை எண்ணி பார்ப்பாள், தான் தனது பழைய காதலனை திடீரென்று சந்தித்ததுபோல தன் கணவன் அவனது காதலியை சந்தித்து இதுபோன்றதொரு விபரீத முடிவெடுத்து தன்னை குழந்தைகளுடன் விட்டுவிட்டு பிரிந்து சென்றால் தனது நிலையைப்பற்றி யோசித்து பார்ப்பாள், காதலா திருமணவாழ்க்கையா என்ற குழப்பம் ஏற்ப்படும்,

இளம் வயதில் மனதில் தோன்றிய காதலும் உறுதியுடன் இருவரும் எடுத்துக்கொண்ட முடிவுகளும் அப்போதைய சூழலுக்கு சரியானதாக தோன்றியது உண்மை, அக்காதல் திருமணத்தில் முடியாமல் மாறாத துயரை ஏற்ப்படுத்தியது என்பதற்காக காலம் கடந்த பின்னர் அக்காதலை தொடரும் வாய்ப்பு கிடைத்ததை நியாயப்படுத்த நினைப்பது சரியானதாக இருக்க முடியுமா. திருமண வாழ்க்கையில் என்னதான் குறை நிறைகள் இருந்தாலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாகிவிட, தன்னை நம்பியிருக்கும் குழந்தைகள் மற்றொருபுறம். இந்நிலையில் மனதைவிட அறிவு மேலோங்கி செயல்பட்டு கேள்விக்கணைகளை அள்ளிவீசும், இங்கே காதல் தோற்றுப்போகும், உறவுகளின் மீதிருக்கும் அக்கறை மேலோங்கிவிடும், சுயநலம் காணாமல் போகும், "வாழ்ந்தால் தன் காதலனோடு வாழ்ந்துவிட வேண்டும்" என்கின்ற வீரியம் பொசுங்கிவிடும். பிடித்தோ பிடிக்காமலோ இதுவரையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கை பழகிவிடும், நோக்கம் தனது காதலின் மீது இல்லாமல் தன் மூலம் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட உயிர்களின் நல்வாழ்க்கையின் மீது நிலைத்துவிடும் இதுவும் இயற்கையின் அதிசயம்.


..................oooooooo................

12/07/2011

விழித்திரு !!!

கூடங்குளம் அணுமின் நிலையம், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, முல்லை பெரியார் அணை பற்றிய சர்ச்சை என நாட்டில் பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளப்பப்பட்டு எதற்கு முதலிடம் எதற்கு இரண்டாம் மூன்றாம் இடம் கொடுப்பது என்று அறிந்துகொள்ள இயலாத அளவிற்கு இன்னும் பல பிரச்சினைகளும் ஒன்றை ஒன்று முந்திகொள்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அச்சுதானந்தன் அரசு கேரளாவில் ஆட்ச்சியில் இருந்த போது முல்லை பெரியார் அணை மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அணையில் ஏற்ப்படும் அசம்பாவிதங்களால் பாதிப்பு அடையும் என்கின்ற காரணத்தை கூறி புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது.

பல நிபுணர் குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் மூலம் அணை நல்ல நிலையில் இருப்பதை மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளிக்கப்பட்டபின்னர் புதிய அணை கட்டும் அவசியம் இல்லை என்றும் முல்லை பெரியார் அணையை தகர்க்கும் அவசியம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய பின்னர், கேரள குழுக்கள் வேறு சதித்திட்டம் தீட்ட சிறிது அவகாசம் எடுத்துக் கொண்ட பின்னர் தற்போது பூகம்பம் ஏற்ப்படும் அபாயம் அப்பகுதியில் உள்ளதாகவும் அவ்வாறு பூகம்பம் ஏற்ப்பட்டால் அணை உடைந்து சுற்றியுள்ள கிராமங்கள் அழியும் என்ற வதந்தியை திரைபடமாக்கி பொதுமக்களிடம் விநியோகித்து அதன் மூலம் மக்களை பீதியில் ஆழ்த்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட சதி செய்து வருகிறது.

இதேபோன்ற பீதியை இதே கேரள குழுக்கள் கூடன்குள அணுமின் நிலைய விவகாரத்திலும் வேறு நபர்களின் மூலம் பொதுமக்களிடம் பரப்பி தமிழகத்தின் முன்னேற்றத்தை நாசப்படுத்தும் நோக்கில் சதி வேலைகளில் ஈடுபடுகிறதோ என்கின்ற சந்தேகம் எழுகிறது. கேரள சதி குழுக்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு வேறு நாடுகளின் பண உதவிகளை பெற்று இவ்வாறு சதி திட்டங்களை செயல்படுத்துகிறதா அல்லது கேரள சதி குழுக்களே இவ்வாறு தன்னிச்சையாக செயல்படுகிறதா என்பது சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது.

உள்நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்க சதி நடக்கிறதா என்கின்ற ஐயம் ஏற்ப்படுகிறது. கேரளாவில் எதற்கெடுத்தாலும் கடையடைப்பு போராட்டம் என்ற நிலை இருந்து வருவது போல தமிழகத்தையும் சீர் குலைக்கும் சதிசெயலுக்கு முல்லைபெரியாறு அணையும் கூடங்குளம் அணு மின் நிலையமும் தற்போது இலக்காகி உள்ளது. அமைதியை சீர்குலைக்க இவ்வாறு தூண்டப்படும் சதி திட்டங்களை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்க்க கூடாது. அவற்றிக்கு துணை போகவும் சம்மதிக்க அல்லது இடம் கொடுக்க கூடாது. விழிப்புடனும் அறிவாற்றலுடனும் இல்லாவிடில் நாடு போர்க்களமாகும், யாருக்காக எதற்க்காக நாம் போராடுகிறோம் என்கின்ற விவரங்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு செயல்பட கூடாது. விழிப்புடன் இல்லாவிட்டால் அமைதிக்கு பங்கம் விளையும் சதிகாரர்களின் வெற்றிக்கு நாம் துணை போவதாக ஆகிவிடும். அமைதியை குலைக்கும் சதி திட்டங்களுக்கு செவி சாய்க்க கூடாது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்..................oooOooo.............