Translate

9/29/2011

அப்ஸ்ஷெஷனா லாபமா நட்டமா

கணிணி மூலம் வலைதளத்தை அடைந்து, அங்கே கொட்டி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வகையான வலைத்தளங்களை படிப்பதும் அறிந்து கொள்வதும் காண்பதும் சுவாரஸ்யமானது, இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தொழில் நுட்ப்பங்களுள் ஒன்று. அவ்வாறு அறிந்து கொள்கின்ற தகவல் ஒருபுறம் இருக்க, வலைபூக்கள் [ப்ளாக்] மூலம் நமது உணர்வுகளை கருத்துக்களை எழுதி வைப்பது இன்னொரு வகையான அனுபவம், இவற்றில் லாப நட்ட கணக்கு பார்ப்பது என்பதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும், சிலருக்கு பொழுது போக்கிற்காக பயன்படுகின்ற ஒரு அம்சம் மற்றவருக்கு தொழிலாக இருக்கும்போது, யார் லாப நட்டம் எதிர்பார்க்க முடியும்.

சினிமா என்பது ரசிகனுக்கு பொழுது போக்கு அம்சமாக கருதபட்டாலும் அவற்றை உருவாக்குபவர்களுக்கும் அதில் ஈடுபடுகின்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அது ஒரு வேலையாக வயிற்று பிழைப்பாக உள்ளது போன்றே வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் நோக்கம் வெவ்வேராக இருக்கின்ற போதும் அவற்றை உருவாக்கிய அல்லது உருவாக்குகின்றவர்களுக்கு தொழிலாக உள்ளது. எந்த கருவியாக இருப்பினும் அதன் பயன்பாடும் அவற்றை உருவாக்கியதன் நோக்கமும் வெவ்வேறாக இருப்பது என்பது புதிதல்ல. கைபேசியின் அவசியம் என்பது மிகவும் உன்னதமானது, அதிலிருந்து மற்றவருக்கு அனுப்புகின்ற குறுஞ்செய்திகளுக்கான வசதி உருவாக்கியதன் நோக்கம் மிகவும் முக்கியமானதாக கருதபட்டடாலும் அதை பெரும்பாலும் பயன்படுத்துவது பொழுதுபோக்காகி போனது அதை உபயோகப்படுத்துபவரின் இழிச்செயல்.

ஈடு இணையற்ற இணையதள வசதிகளும் இழிச்செயல்களுக்கு உபயோகிப்பவரது நோக்கமாக இருப்பதும் அப்படிப்பட்ட ஒன்று. இதனால் இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் வீணென்று கருத இயலுமா, குறுஞ்செய்திகளை வீணாகவும் இழிச்செயல்களுக்கும் பயன்படுத்துகின்ற நிலை இந்தியாவில் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வலைதளங்களை இழிச்செயல்களுக்காக, தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்ற ஆசாமிகள் குறைவா என்ன, ஆனால் அப்படிப்பட்ட வலைத்தளங்களை தவிர்ப்பதும் அவரவரது பயன்பாட்டை பொறுத்துள்ளது. சில சமூக விரோதிகளின் அத்து மீறல்கள் வலைதளங்களில் மிக அதிகம். அப்படிப்பட்டவர்களின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான தண்டனைகளும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

அரசுமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வாடிக்கையாளரின் வங்கிகணக்கிலிருந்த பெருந்தொகை ஒன்றை மும்பையிலிருந்து செயல்படுகின்ற வலைதள திருடர்களின் கூட்டமொன்று அபகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது, இன்றளவும் அந்த கும்பல் அகப்படவில்லை என்பதன் காரணம் என்ன என்பது விளங்காத புதிர் என்றே சொல்லலாம். நெட் பாங்கிங் என்பது அந்த அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளதா அல்லது வங்கியில் பணிபுரிகின்ற ஊழியரின் ஒத்துழைப்பும் சதித்திட்டமும் காரணமாக இருக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு வெவ்வேறு பாதுகாப்பு முறைகளை கையாள சொன்னாலும் திருடனை தன்னுள் வைத்துக் கொண்டு பாதுகாப்பு பற்றி பேசுவதில் என்ன லாபம் இருக்கப்போகிறது என்பது விளங்கவில்லை. கையும் மெய்யுமாக பிடிபடுகின்ற வரையில் வேலியே பயிரை மேய்கின்ற கதைதான்.

ப்ளாக் எழுதுவதை அப்ஷெஷன் என்று என்னால் ஒருக்காலும் சொல்ல இயலாது, அப்படி ஒரு பெயரை சூட்டுவதாக இருந்தால் நாம் அன்றாடம் செய்கின்ற பல காரியங்களையும் இந்த அப்ஷெஷன் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ஏதேனும் ஆதாயம் எதிர்பார்த்துதான் ஒவ்வொரு காரியத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் நிறைய காரியங்களை நாம் செய்யவே இயலாது. நாம் எழுதுவதை பத்து பேர் படிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் டயரி எழுதும் பழக்கத்தை எதனுடன் சேர்ப்பது. என்னைப் பொறுத்த அளவில் எழுதுவது என்பது எனக்கு பிடித்திருக்கிறது, எனது கருத்துக்களை உணர்வுகளை நான் நினைக்கின்ற போது எழுத ஒரு இடம் ப்ளாக். இதற்க்கு மேல் வியாக்கியானம் செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு எழுதுவதில், லாப நோக்கில் எழுதுவது போன்ற எழுதுவதற்கென்று எவ்வித எதிர்பார்ப்பும் என்னை பொருத்தமட்டில் இல்லை.

விதைக்கின்ற விதைகள் அனைத்துமே முளைப்பதில்லை, முளைக்கின்ற அனைத்துமே வளர்ந்து மரமாவதில்லை, மரமான அத்தனையுமே காய் கனிகளை தருவதில்லை. அப்படியே காய் கனிகள் விளைந்தாலும் எல்லாமே தின்பதற்கு உகந்தவைகளாக இருப்பதில்லை. இது இயற்கையின் விதி.


********************************************************************************************