Translate

8/30/2011

காலக் குதிரை


கடிகாரம் தனது வேலையை சீராகத்தான் செய்கிறது, இப்போதெல்லாம் கடிகாரத்தை பார்க்கும் போது மனதில் வெறுமை மிஞ்சுகிறது, 'நேரமாகிவிட்டது' என்று காலையில் அரக்க பறக்க எழுந்த காலங்களை நினைக்கும் போது 'அது ஒரு காலம்' என்று நம்மையும் அறியாமல் மனதை ஏக்கம் நிரப்புகிறது. 'அந்த ஒரு காலத்தில்' காலையில் வசரமாக கண் விழிக்கும் சமயங்களில், 'இன்னும் கொஞ்சம் நேரம் படுக்கையில் விருப்பம் போல உறங்க முடியாதா' என்று மனம் ஏங்கியது நினைவிற்கு வரும். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருப்பது இல்லை. நேற்றைக்குத்தான் நடந்தது போல இருக்கும் பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் 'அதற்குள் இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்டதா' என்று ஒரு கணம் அசர வைக்கிறது. ஆனால் அன்றோ, 'எப்போதுதான் இந்த அவசரகதியான இயக்கத்திலிருந்து ஓய்வு கிடைக்குமோ' என்று ஏங்க வைத்த நினைவுகள் வரும், இன்று நினைத்தாலும் காலம் செய்யும் மாற்றங்களையும் அது ஓடி மறைந்த அவசரங்களையும் வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது.

அன்று இருந்தவர் யாரும் இன்றில்லை, அவ்வாறே இன்றிருக்கும் நானும் நாளை இருக்கப்போவதில்லை, அதற்குள்ளாகவா இத்தனை மாற்றங்கள், அன்றைக்கு இருந்தவர்களும் என்னைப் போன்றே நினைத்திருக்க கூடும் அதனால்தானோ என்னவோ அவர்களின் முகங்களில் ஏதோ ஒரு ஏக்கமும் வேதனையும் அப்போது காண முடிந்தது. அந்த ஏக்கமும் வேதனைகளும் என்னவென்பதை அப்போது என்னால் விளங்கிக் கொள்ள இயலாமல் போனது. இன்றைக்கு என் முகத்தில் இருக்கும் வேதனைகளும் ஏக்கமும் என்னவென்பதை [இளம் வயதினர் என்னுடன் வாழ்வோரும்] என்னை சுற்றியுள்ளவர்களாலும் புரிந்து கொள்வதற்கு இயலாதது. எது மரணத்தின் முதற் படி?, நினைவுகளா, வயதா, நோயா.எதுவென்று நாம் அறிந்தால் அதை நிறுத்திவிடும் வழி அறிய முயலுவோமா, மரணத்தை ஒத்திப் போடும் வழி வகை நாம் அறிந்து இருக்கிறோமா. காலம் என்பது முன்னோக்கி ஓடும் ஓட்டக்குதிரையல்லவா, ஒவ்வொருவர் வாழ்விலும் அந்த குதிரை முன்னோக்கி மட்டும் நம்மை இழுத்துச் செல்லுமே தவிர பின்னோக்கி இழுப்பதில்லை. எங்கே, எதுவரை ஓடும் என்கின்ற அளவை குதிரை எப்படி அறிந்திருக்க முடியும், ஆனால் எங்கோ ஒருநாள் அந்த குதிரை நம்மை விட்டுவிடும் என்பது நிச்சயம் அல்லவா. இந்த ஓட்டத்தில் அதிக வேகம் ஓடும் குதிரைகளும் உண்டு ஆனால் மிக குறைந்த வேகத்தில் ஓடுகின்ற குதிரை என்பதே கிடையாது.

பல சமயங்களில், எல்லோரையும் இழுத்துச் செல்கின்ற குதிரைகள் வெவேறு வழிகளில் ஓடினாலும் அவைகள் கொண்டு போய் சேர்க்கின்ற இடம் (மரணம்) ஒன்றாகவே இருக்கின்றதல்லவா. பணக்காரன் ஏழை, உயர்ந்தோன் தாழ்ந்தோன், என்கின்ற பேதங்கள் இன்றி எல்லோரையும் ஒரே விதமாகவே இழுத்துச் சென்று சேர்க்குமிடம் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் 'காலம்' என்கின்ற குதிரையின் பிடியிலிருந்து விடுபடும் ஞானம் மனிதனாக பிறந்த எவர்க்கேனும் உள்ளதா. எல்லாவற்றிற்கும் மரணம் மட்டுமே முடிவாக்கப்படவில்லை என்றால் மனிதன் மமதை கொண்டவனாக இருந்திருப்பானோ என்னவோ. வாழ்க்கைக்கு முடிவு என்று ஒன்று இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பதே போராட்டமாகவும் போர்களமாகவும் இருந்திருக்குமோ, நினைத்துப் பார்க்கவே இயலாத உணர்வுகளை கொண்டவனாக மனித இனம் உலகில் வாழ்ந்திருக்குமோ.மரணம் என்பது இருந்திருந்தும் அதனைப் பற்றிய மறதிமட்டுமே மனிதனின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகி விட்டதோ, மரண பயம் என்பது மரணம் தன்னை நெருங்கி வருகின்ற வரையில் ஏற்ப்படுவதே இல்லை, எந்த ஒரு மனிதனும் தான் இறக்கின்ற கடைசி நிமிடத்திலாவது (நினைவு இருந்தால்) அதை கண்டு அஞ்சாமல் இறப்பதில்லை. எத்தனை பெரிய வீரனாக அஞ்சா நெஞ்சனாக இருந்தாலும் கூட மரணம் தன் எதிரில் நிற்கும் போது அதை கண்டு அஞ்சுவது என்பது இயற்க்கையானதொன்று. வயது முதிர்வடைகின்ற முதியவர்களும் கொடிய நோய்களின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களும் மரண திகில் சூழ ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழிக்கின்ற வேதனைகளில் வாழ்வதும் தவிர்க்க இயலாத அனுபவம். ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் முடிவாக இருந்த போதிலும் அதனை பற்றிய மறதி அதைவிட அதிகமாக இருப்பதே வாழ்க்கையின் அதிசயம்.