Translate

8/19/2011

அன்பு சகோதரி கனிமொழிக்கு - கடிதம்


வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேர்மையாக வாக்குகள் கிடைக்காது என்று போராடியவர்கள் பெருவாரியான வாக்குகளைப்பெற்று ஆட்ச்சியை கைப்பற்றியபோது மட்டும் இயந்திரம் நேர்மையான வாக்குப்பதிவை கொடுத்ததாக எண்ணி 'ஜனநாயகத்தின் வெற்றி' என்று சொல்லிக்கொள்வது 'எதையோ' நமக்கு சொல்லாமல் சொல்கிறதே?

கலைஞர் தொலைக்காட்சியையும் கலைஞரது குடும்ப ஆட்சியையும் அவதூறு பேசுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம், போதாக்குறைக்கு தவிச்ச வாய்க்கு அவல் கனிமொழியின் கைது. தி மு காவையும் கலைஞர் குடும்பத்தையும் வசைபாடுவதற்கு இதைவிட்டால் வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? [கால அவகாசம் ஐந்து வருடம் போதாதா என்ன?].

திண்ணை பேச்சு, ஊர் வம்பு, டீக்கடை வம்பு, என்ற வம்பு பேச்சுகளெல்லாம் இப்போது கூகுள் கொடுத்த (வரமோ சாபமோ) இணையதள திண்ணை என்கின்ற வலைப்பூவில் வம்பு பேச்சில் சிக்கி கனிமொழி, தி மு க, காங்கரஸ், அன்னா அசாரே, ஊழல் என்று புது பெயர் சூட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டிருப்பது இப்போதைய டிரண்டோ?

****************************************************

அன்புள்ள சகோதரி கனிமொழிக்கு,

நீங்கள் நலமா நாங்கள் இங்கு நலம் என்று கடிதங்களில் விசாரிக்கும் முறைப்படி கடிதத்தை துவக்குவதற்கு எனக்கும் ஆசைதான், ஆனால் அது பொய்யானதாகத்தான் இருக்கும், ஏனென்றால் அங்கு (சிறையில்) உள்ள நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும், அதே போன்று சிறைக்கு வெளியே இருக்கும் நாங்கள் எல்லாரும் நலமென்று எப்படி பீத்திக்கொள்ள முடியும். இரண்டுமே இல்லாத ஒன்று, யாருடைய நலமும் தற்போது நிஜமானது இல்லை என்பதால் கடிதத்தை நல விசாரிப்புகள் இல்லாமலேயே துவங்க வேண்டுமென்று நினைக்கிறன்.

சகோதரி, சிறைவாசத்தில் தங்களுக்கு அனுபவம் இல்லை, அதிலும் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக சிறைவாசம் செய்யும் உங்களைப் போன்ற பலரது நிலையை தற்போது நீங்களும் உணர்ந்திருப்பீர்கள், முற்றிலும் வித்தியாசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை சிறையினுள் நீங்கள் சந்திக்க கூடும், வித்தியாசமான அந்த உலகத்தை, அந்த அனுபவத்தைப் பற்றி வேறு ஒருவர் மூலம் நாம் அறிவதைவிட அதிலே வாழ்ந்து அறிவதென்பது நிச்சயம் வேறாகத்தான் இருக்கும். அவற்றை தங்களது அழகிய உரை நடைகளில் எழுத்துக்களாக்கினால் எங்களைப் போன்றவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்று நான் நினைகிறேன்.

சிறைக்கு செல்வதில் எத்தனையோ காரணங்கள் உண்டு கோவலனை கூட சிலம்பு திருடிய கள்வன் என சிறைவைத்தான் கோப்பெரும் சோழன், பனைமரத்தடியில் இருந்து குடிப்பதெல்லாம் கள்ளாகிவிடுமா, இந்த உலகத்தில் பல சமயங்களில் பால் கள்ளென்றும் சொல்லப்படுவதுண்டு. மனம் தளராமல் காத்திருங்கள், உண்மை என்பதை யாராலும் மூடி வைக்க இயலாது, நிச்சயம் வெளிவரும். அற்ப சந்தோஷத்திற்காக நேர்மையற்ற காரியங்கள் பல செய்வதில் பலருக்கு ஆர்வம் அதிகம். அதை பொருட்படுத்துவது அவசியமற்றது.

மனம் நிம்மதியாக இருக்க எவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டுமோ அவைகளை மட்டும் சிந்தியுங்கள், நடப்பது எல்லாம் நன்மையாய் நடக்கும் என்றே நம்பிக்கையுடன் இருங்கள். 'சொல்வது எளிது' என்பது எனக்கு தெரியும் ஆனால் சகோதரி நான் 'அற்ற குளத்து அருநீர் பறவை போல' என்றிருக்க மனம் கேட்கவில்லை என்பதால் இவற்றையெல்லாம் சொல்லுகிறேன். மிகவும் முக்கியமாக அடிக்கடி உங்களுக்கு பெற்றோரின் நினைவும் மகனின் நினைவும் வந்து துன்புருத்தாமலிராது. வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் கலந்தது என்பார்கள் ஆனால் உண்மையல்ல, கடலளவு துன்பத்தில் கடுகளவு இன்பம்தான் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இன்பத்தின் அளவு.

நமக்கு நாம் மட்டுமே பல சமயங்களில் நண்பனும் விரோதியும் என்பது என் கருத்து, கிடைத்திருக்கும் அரிய இந்த சந்தர்ப்பத்தை கைவிடாமல் உங்களை நீங்களே புதிதாக்கிக் கொள்ளுங்கள், வீறு நடை போட்டு பெண் சிங்கமாக வெளியே வாருங்கள் காலம் எல்லாவித மாற்றங்களையும் மாறாமல் எல்லோர்க்கும் கொடுக்கும். வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பு சகோதரி
ரத்னா