Translate

8/16/2011

வாழும் வரை போராடு

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி, அதுபோன்று ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் எழுத்துலகம் என்னை திரும்பவும் தன் பால் இழுத்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஆட்சிமாறியவுடன் பல காட்சிகள் அவசரகதியில் மாற்றம் அதனால் ஏற்பட்ட ஏகோபித்த மக்கள் ஓலம், என தமிழகம் சந்தித்து வருகின்ற திடுக்கிடும் சம்பவங்கள் போதாது என்று அடுத்த மாநிலத்தில் எடியூரப்பாவின் ஆட்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் அவற்றை அவர் சமாளித்து வந்த விதம், ஆளுநரும் முதலமைச்சரும் எலியும் பூனையுமாகி 'மிக்கியும் டோனல்டையும்' நினைவுப்படுத்தி ஒருவழியாக ஏதோ ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதும், கேரளாவில் தேர்தலுக்குப் பின்னர் அச்சுதானந்தன் கீழிறக்கப்பட்டு ஒம்மன் சாண்டி பொறுப்பேற்றப் சில மாதங்களிலேயே பத்பநாப கோவிலில் கிடைத்த பொக்கிஷங்களும் அதை தொடர்ந்து அதைப்பற்றிய செய்திகளும், வங்கதேசத்தில் கம்யுனிஸ்டுகளின் இருக்கத்திலிருந்து மீண்ட மாநில ஆட்சியை திரினாமுல் காங்கிரஸ் கைப்பற்றி மம்தா ஆட்சி பொறுப்பை ஏற்றது போன்ற மிகவும் சுவாரஸ்மான பல காட்சிகள் அரங்கேறியிருப்பதுடன் இன்னும் பல சுவாரஸ்ய செய்திகளும் எழுத்துக்கும் கருத்துக்கும் காத்துக் கிடந்தாலும் ஏதோ ஒன்று எனது எழுத்தை சற்றே நிறுத்தியிருந்தது.

சமச்சீர் கல்வி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக நினைத்து சற்றே பெருமூச்சு விட்டால், இல்லை இன்னும் அந்த பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுபட்டபாடில்லை என தெரிவிக்கும் செய்திகள் தொடர்ந்து கொண்டே இருக்க 'பாவம் இந்த வருடத்து மாணவர்களும் ஆசிரியர்களும், அத்துடன் சேர்த்து அவர்களது பெற்றோர்களும்' என ஆதங்கப்பட வைக்கிறது செய்திகள்.

'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது பழமொழி, செய்திகளைத்தேடி அலைய வேண்டிய வேலையே இல்லாமல் செய்திகள் மிகவும் சூடாகவும் மேலும் மேலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது செய்திகள் சேகரிப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்ப்படுத்தும். அன்னா அசாரே என்பவர் சமூகநலத்திற்காக பாடுபடுபவராக இருப்பதில் யாருக்கும் பிரச்சினைகள் இருக்காது, அவரை யார் கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்றைய பிரச்சினைகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் புதிர்.

அன்னா அசாரேயைப்போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டால் நாட்டின் நிலை என்னாகும், ஊழலை தடுக்க பாடுபடுகிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நாட்டில் உள்ள மக்களுக்குள்ளேயும் கட்சிகளுக்குள்ளேயும் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது என்பது எந்த சமூக ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. அன்னா அசாரேயை கருவியாக்கும் சிலரால் நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் ஏற்படுமேத் தவிர ஊழலை ஒழித்துவிட முடியாது.

திருவனந்தபுரம் பத்மநாபர் கோவில் மட்டுமில்லை ஒவ்வொரு கோவிலையும் அக்காலத்து மன்னர்களும் குறுநில மன்னர்களும் தங்களது அளவிற்கு மீறிய சொத்துக்களையும் பொக்கிஷங்களையும் பாதுகாக்குமிடமாக பயன்படுத்தி வந்ததுடன் அந்த பொக்கிஷங்களை திருடினால் தெய்வ குற்றம் ஏற்ப்படும் என்று மக்களிடம் இல்லாத வதந்திகளை பொக்கிஷங்களை பாதுகாக்கின்ற தந்திரமாக புரளி ஏற்ப்படுத்தி வந்தனர். அக்காலத்தில் வங்கிகளும் பொக்கிஷங்களை பாதுகாக்கும் லாக்கர்களும் இல்லை என்பதே இதற்க்கு முதன்மையான காரணம்.

அளவிற்கு அதிகமான நிலங்களை கோவிலுக்கு எழுதி வைப்பதும் வாரிசு இல்லாத சொத்துக்களை கோவிலுக்கு எழுதுவதும் அக்கால முறைகள். கடவுளுக்கு நகைகளும் பொக்கிஷங்களும் அவசியமில்லை, கடவுள்தான் அவற்றை மக்களுக்கு வாரி வழங்க வேண்டுமேத் தவிர மக்கள் கடவுளுக்கு வாரி வழங்க வேண்டிய கஷ்டத்தில் கடவுள் எப்படி இருக்க முடியும். பொக்கிஷ அறைகளைத் திறக்க அரச குடும்பத்தினர் கூறும் காரணங்கள் பழங்கால கதைகள் இந்த காலத்தில் அவதியுறும் கோடானு கோடி மக்களின் துயர் துடைக்க அந்த பொக்கிஷங்களை அரசு ஏற்று நல திட்டங்களை உருவாக்கி நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டும்.

புட்டபர்த்தி சாய்பாபாவின் சொத்துக்களுக்கும் இதே கதி உருவாகியிருப்பது ஏழை எளியோரை கோடிக்கோடியாக தன்னுள்ளே வைத்திருக்கும் நமது இந்திய நாட்டில் பொக்கிஷங்களும் பணமும் சாமி என்ற பெயரில் சில இடங்களில் குவிக்கபட்டிருப்பது வேதனை தருவதாக உள்ளது.