Translate

8/30/2011

காலக் குதிரை


கடிகாரம் தனது வேலையை சீராகத்தான் செய்கிறது, இப்போதெல்லாம் கடிகாரத்தை பார்க்கும் போது மனதில் வெறுமை மிஞ்சுகிறது, 'நேரமாகிவிட்டது' என்று காலையில் அரக்க பறக்க எழுந்த காலங்களை நினைக்கும் போது 'அது ஒரு காலம்' என்று நம்மையும் அறியாமல் மனதை ஏக்கம் நிரப்புகிறது. 'அந்த ஒரு காலத்தில்' காலையில் வசரமாக கண் விழிக்கும் சமயங்களில், 'இன்னும் கொஞ்சம் நேரம் படுக்கையில் விருப்பம் போல உறங்க முடியாதா' என்று மனம் ஏங்கியது நினைவிற்கு வரும். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருப்பது இல்லை. நேற்றைக்குத்தான் நடந்தது போல இருக்கும் பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் 'அதற்குள் இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்டதா' என்று ஒரு கணம் அசர வைக்கிறது. ஆனால் அன்றோ, 'எப்போதுதான் இந்த அவசரகதியான இயக்கத்திலிருந்து ஓய்வு கிடைக்குமோ' என்று ஏங்க வைத்த நினைவுகள் வரும், இன்று நினைத்தாலும் காலம் செய்யும் மாற்றங்களையும் அது ஓடி மறைந்த அவசரங்களையும் வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது.

அன்று இருந்தவர் யாரும் இன்றில்லை, அவ்வாறே இன்றிருக்கும் நானும் நாளை இருக்கப்போவதில்லை, அதற்குள்ளாகவா இத்தனை மாற்றங்கள், அன்றைக்கு இருந்தவர்களும் என்னைப் போன்றே நினைத்திருக்க கூடும் அதனால்தானோ என்னவோ அவர்களின் முகங்களில் ஏதோ ஒரு ஏக்கமும் வேதனையும் அப்போது காண முடிந்தது. அந்த ஏக்கமும் வேதனைகளும் என்னவென்பதை அப்போது என்னால் விளங்கிக் கொள்ள இயலாமல் போனது. இன்றைக்கு என் முகத்தில் இருக்கும் வேதனைகளும் ஏக்கமும் என்னவென்பதை [இளம் வயதினர் என்னுடன் வாழ்வோரும்] என்னை சுற்றியுள்ளவர்களாலும் புரிந்து கொள்வதற்கு இயலாதது. எது மரணத்தின் முதற் படி?, நினைவுகளா, வயதா, நோயா.எதுவென்று நாம் அறிந்தால் அதை நிறுத்திவிடும் வழி அறிய முயலுவோமா, மரணத்தை ஒத்திப் போடும் வழி வகை நாம் அறிந்து இருக்கிறோமா. காலம் என்பது முன்னோக்கி ஓடும் ஓட்டக்குதிரையல்லவா, ஒவ்வொருவர் வாழ்விலும் அந்த குதிரை முன்னோக்கி மட்டும் நம்மை இழுத்துச் செல்லுமே தவிர பின்னோக்கி இழுப்பதில்லை. எங்கே, எதுவரை ஓடும் என்கின்ற அளவை குதிரை எப்படி அறிந்திருக்க முடியும், ஆனால் எங்கோ ஒருநாள் அந்த குதிரை நம்மை விட்டுவிடும் என்பது நிச்சயம் அல்லவா. இந்த ஓட்டத்தில் அதிக வேகம் ஓடும் குதிரைகளும் உண்டு ஆனால் மிக குறைந்த வேகத்தில் ஓடுகின்ற குதிரை என்பதே கிடையாது.

பல சமயங்களில், எல்லோரையும் இழுத்துச் செல்கின்ற குதிரைகள் வெவேறு வழிகளில் ஓடினாலும் அவைகள் கொண்டு போய் சேர்க்கின்ற இடம் (மரணம்) ஒன்றாகவே இருக்கின்றதல்லவா. பணக்காரன் ஏழை, உயர்ந்தோன் தாழ்ந்தோன், என்கின்ற பேதங்கள் இன்றி எல்லோரையும் ஒரே விதமாகவே இழுத்துச் சென்று சேர்க்குமிடம் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் 'காலம்' என்கின்ற குதிரையின் பிடியிலிருந்து விடுபடும் ஞானம் மனிதனாக பிறந்த எவர்க்கேனும் உள்ளதா. எல்லாவற்றிற்கும் மரணம் மட்டுமே முடிவாக்கப்படவில்லை என்றால் மனிதன் மமதை கொண்டவனாக இருந்திருப்பானோ என்னவோ. வாழ்க்கைக்கு முடிவு என்று ஒன்று இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பதே போராட்டமாகவும் போர்களமாகவும் இருந்திருக்குமோ, நினைத்துப் பார்க்கவே இயலாத உணர்வுகளை கொண்டவனாக மனித இனம் உலகில் வாழ்ந்திருக்குமோ.மரணம் என்பது இருந்திருந்தும் அதனைப் பற்றிய மறதிமட்டுமே மனிதனின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகி விட்டதோ, மரண பயம் என்பது மரணம் தன்னை நெருங்கி வருகின்ற வரையில் ஏற்ப்படுவதே இல்லை, எந்த ஒரு மனிதனும் தான் இறக்கின்ற கடைசி நிமிடத்திலாவது (நினைவு இருந்தால்) அதை கண்டு அஞ்சாமல் இறப்பதில்லை. எத்தனை பெரிய வீரனாக அஞ்சா நெஞ்சனாக இருந்தாலும் கூட மரணம் தன் எதிரில் நிற்கும் போது அதை கண்டு அஞ்சுவது என்பது இயற்க்கையானதொன்று. வயது முதிர்வடைகின்ற முதியவர்களும் கொடிய நோய்களின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களும் மரண திகில் சூழ ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழிக்கின்ற வேதனைகளில் வாழ்வதும் தவிர்க்க இயலாத அனுபவம். ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் முடிவாக இருந்த போதிலும் அதனை பற்றிய மறதி அதைவிட அதிகமாக இருப்பதே வாழ்க்கையின் அதிசயம்.
8/24/2011

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !!

கோவில்களும் தர்ம சாஸ்திரங்களும் வேதங்களும் திருவிழாக்களும் பஞ்சமில்லாமல் ஊரெங்கும் நிரம்பி கிடக்கின்ற நமது இந்திய தேசம், கோவில்கள் தோறும் வழிபாடுகளுக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் இருக்க கட்சிகள் வேறு போட்டி போட்டுக்கொண்டு வல்லூறுகளாய் சுற்றிக்கொண்டிருக்கும் தேசம் நமது இந்திய தேசம். அதே தேசத்தில் இன்றைக்கு ஊழலுக்காக வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கின்ற போராட்டம், இதை ஆதரிக்கும் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. இதென்ன கூத்து?

'படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவிலா?' கோவில் உண்டியல்களில் நிரம்பி வழிகின்ற கருப்புப்பணம், கணக்கில் வராத பொன் ஆபரணங்கள், கடவுளுக்கே லஞ்சம், கடவுள் மன்னிப்பாரா? லஞ்சம் வாங்கிய பணத்தை கோவில் கும்பாபிஷேகத்திற்கு, கோவில் திருவிழாக்களுக்கு, நேர்த்தி கடன்களுக்கும் செலவிட்டால் கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்வார் என்போமானால் லஞ்சம் வாங்குவதும் கணக்கில் வராத கருப்புப்பணம் சேர்ப்பதும் பாவமில்லையா? பாவமில்லை என்போமானால் எதற்காக அன்னா ஹசாரேயை ஆதரிக்கும் ஊர்வலங்களும் கோஷங்களுக்கும் ஆதரவு? அல்லது எதற்க்காக ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம்?

சட்டமும் கடவுளைப்போன்றதுதானே? தவறுகளையும் மீறுதல்களையும் பொருத்துக் கொள்வதற்காக அல்லவே? சட்டத்தை மீறி இருப்பினும் கடவுளின் பார்வைக்கு தப்ப முடியாதல்லவா? இவ்வாறிருக்க ஊழலும் லஞ்சமும் கருப்புப்பணமும் எதனால் நமது தேசத்தில் அதிகமாயிற்று? மனிதனுக்கு கடவுளையும் சட்டத்தையும் விட பண ஆசை, இல்லை இல்லை பேராசை காரணம் என்று சொல்வோமா? அப்படியானால் கடவுளை வணங்குதல் என்பது கடமையா அல்லது நாடகமா?

'எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு போகபோவதில்லை' என்று வாய் கிழியப் பேசினாலும் தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிட சேமித்து வைத்துவிட்டு போகவேண்டும் என்கின்ற பேராசையை மேற்கொள்ள சம்மதமில்லை என்பதுதான் இதன் பொருளா? அல்லது ஊருக்கு உபதேசமா? அன்னா ஹசாரேயின் லோக்பால் மசோதாவை ஆதரிப்பவர்கள் எல்லோருமே தங்களது சொந்த வாழ்க்கையில் கருப்புப்பணம் வாங்கியதோ ஊழல் செய்வதில் ஈடுபட்டதோ இல்லையா? யார் தான் ஊழலை ஆதரிக்கபோகின்றார்கள்? ஊழலை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வார்களா? உள்ளொன்றும் புறமொன்றும் என்பதுதான் பழகிப்போனதாயிற்றே!!

உண்மையில் பார்க்கப்போனால் ஏழை எளிய மக்கள், மாதாந்திர சம்பளம் வாங்கி பற்றாக்குறையோடு வாழ்க்கையின் போராட்டத்தில் சிக்கித் தவிப்போரைத் தவிர ஊழலுக்கு எதிராக உண்மை குரல் கொடுப்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?

@@@@@@

8/19/2011

அன்பு சகோதரி கனிமொழிக்கு - கடிதம்


வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேர்மையாக வாக்குகள் கிடைக்காது என்று போராடியவர்கள் பெருவாரியான வாக்குகளைப்பெற்று ஆட்ச்சியை கைப்பற்றியபோது மட்டும் இயந்திரம் நேர்மையான வாக்குப்பதிவை கொடுத்ததாக எண்ணி 'ஜனநாயகத்தின் வெற்றி' என்று சொல்லிக்கொள்வது 'எதையோ' நமக்கு சொல்லாமல் சொல்கிறதே?

கலைஞர் தொலைக்காட்சியையும் கலைஞரது குடும்ப ஆட்சியையும் அவதூறு பேசுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம், போதாக்குறைக்கு தவிச்ச வாய்க்கு அவல் கனிமொழியின் கைது. தி மு காவையும் கலைஞர் குடும்பத்தையும் வசைபாடுவதற்கு இதைவிட்டால் வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? [கால அவகாசம் ஐந்து வருடம் போதாதா என்ன?].

திண்ணை பேச்சு, ஊர் வம்பு, டீக்கடை வம்பு, என்ற வம்பு பேச்சுகளெல்லாம் இப்போது கூகுள் கொடுத்த (வரமோ சாபமோ) இணையதள திண்ணை என்கின்ற வலைப்பூவில் வம்பு பேச்சில் சிக்கி கனிமொழி, தி மு க, காங்கரஸ், அன்னா அசாரே, ஊழல் என்று புது பெயர் சூட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டிருப்பது இப்போதைய டிரண்டோ?

****************************************************

அன்புள்ள சகோதரி கனிமொழிக்கு,

நீங்கள் நலமா நாங்கள் இங்கு நலம் என்று கடிதங்களில் விசாரிக்கும் முறைப்படி கடிதத்தை துவக்குவதற்கு எனக்கும் ஆசைதான், ஆனால் அது பொய்யானதாகத்தான் இருக்கும், ஏனென்றால் அங்கு (சிறையில்) உள்ள நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும், அதே போன்று சிறைக்கு வெளியே இருக்கும் நாங்கள் எல்லாரும் நலமென்று எப்படி பீத்திக்கொள்ள முடியும். இரண்டுமே இல்லாத ஒன்று, யாருடைய நலமும் தற்போது நிஜமானது இல்லை என்பதால் கடிதத்தை நல விசாரிப்புகள் இல்லாமலேயே துவங்க வேண்டுமென்று நினைக்கிறன்.

சகோதரி, சிறைவாசத்தில் தங்களுக்கு அனுபவம் இல்லை, அதிலும் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக சிறைவாசம் செய்யும் உங்களைப் போன்ற பலரது நிலையை தற்போது நீங்களும் உணர்ந்திருப்பீர்கள், முற்றிலும் வித்தியாசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை சிறையினுள் நீங்கள் சந்திக்க கூடும், வித்தியாசமான அந்த உலகத்தை, அந்த அனுபவத்தைப் பற்றி வேறு ஒருவர் மூலம் நாம் அறிவதைவிட அதிலே வாழ்ந்து அறிவதென்பது நிச்சயம் வேறாகத்தான் இருக்கும். அவற்றை தங்களது அழகிய உரை நடைகளில் எழுத்துக்களாக்கினால் எங்களைப் போன்றவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்று நான் நினைகிறேன்.

சிறைக்கு செல்வதில் எத்தனையோ காரணங்கள் உண்டு கோவலனை கூட சிலம்பு திருடிய கள்வன் என சிறைவைத்தான் கோப்பெரும் சோழன், பனைமரத்தடியில் இருந்து குடிப்பதெல்லாம் கள்ளாகிவிடுமா, இந்த உலகத்தில் பல சமயங்களில் பால் கள்ளென்றும் சொல்லப்படுவதுண்டு. மனம் தளராமல் காத்திருங்கள், உண்மை என்பதை யாராலும் மூடி வைக்க இயலாது, நிச்சயம் வெளிவரும். அற்ப சந்தோஷத்திற்காக நேர்மையற்ற காரியங்கள் பல செய்வதில் பலருக்கு ஆர்வம் அதிகம். அதை பொருட்படுத்துவது அவசியமற்றது.

மனம் நிம்மதியாக இருக்க எவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டுமோ அவைகளை மட்டும் சிந்தியுங்கள், நடப்பது எல்லாம் நன்மையாய் நடக்கும் என்றே நம்பிக்கையுடன் இருங்கள். 'சொல்வது எளிது' என்பது எனக்கு தெரியும் ஆனால் சகோதரி நான் 'அற்ற குளத்து அருநீர் பறவை போல' என்றிருக்க மனம் கேட்கவில்லை என்பதால் இவற்றையெல்லாம் சொல்லுகிறேன். மிகவும் முக்கியமாக அடிக்கடி உங்களுக்கு பெற்றோரின் நினைவும் மகனின் நினைவும் வந்து துன்புருத்தாமலிராது. வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் கலந்தது என்பார்கள் ஆனால் உண்மையல்ல, கடலளவு துன்பத்தில் கடுகளவு இன்பம்தான் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இன்பத்தின் அளவு.

நமக்கு நாம் மட்டுமே பல சமயங்களில் நண்பனும் விரோதியும் என்பது என் கருத்து, கிடைத்திருக்கும் அரிய இந்த சந்தர்ப்பத்தை கைவிடாமல் உங்களை நீங்களே புதிதாக்கிக் கொள்ளுங்கள், வீறு நடை போட்டு பெண் சிங்கமாக வெளியே வாருங்கள் காலம் எல்லாவித மாற்றங்களையும் மாறாமல் எல்லோர்க்கும் கொடுக்கும். வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பு சகோதரி
ரத்னா


8/17/2011

சுதந்திரம் - ஜனநாயகம் ?

விடுமுறைக்குப்பின் பள்ளிக்கூடங்கள் திறந்தால் போதும் ஆரம்பமாகிவிடும் 'படி, ஹோம் வொர்க் எழுது' போன்ற அம்மாவிற்கும் பிள்ளைகளுக்குமான ஒரே மாதிரியான உரையாடல்கள், மாலையில் வீடு திரும்பும் பெற்றோர் அல்லது அப்பாக்களிடமிருந்தும் இதே உரையாடல்களைத்தான் கேட்க முடியும். ஆனால் பள்ளிகள் திறந்தும் படிப்பதற்கு புத்தகமில்லாமல் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் இந்த உரையாடல்களை நடத்த இயலாமல் போனது அதிஷ்டவசமானதோ துரதிஷ்டவசமானதோ, தவறாமல் தினச்செய்திகளை படிப்பதும் இன்று ஏதாவது செய்தி கிடைக்குமா என்று பெற்றோருடன் சேர்ந்து கொண்டு பிள்ளைகளும் கண்ணும் கருத்துமாக தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதும் கடந்த இருமாத காலமாக வீடு தோறும் நடந்து வந்தது.

அவ்வாறு செய்திகளை கவனித்துக்கொண்டிருந்த பையன் ஒருவன் தான் கண்ட செய்திகளின் அர்த்தம் விளங்காமல் தன் பெற்றோரிடம் இப்படி கேட்டான், எங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பதால் பள்ளிக்கூடங்களில் பாடம் சொல்லி கொடுக்க முடியவில்லை என்பதற்காக கைகளில் பதாதைகளை ஏந்திக்கொண்டு பலர் கோஷமிடுகின்றனர், ஆனால் வங்கிகளில் வேலைபார்ப்பவர்களும், அன்னா ஹசாரே என்பவரும் உண்ணாவிரதம் இருப்பதும் கோஷமிடுவதும் கூட இது போன்ற காரணத்திற்காகத் தானா' என்றான். அவனது பெற்றோர் தங்களுக்கு இயன்ற முறையில் விளக்கமளித்தும் சரியான விடை கிடைக்காமல் தனது பள்ளித்தோழனிடம் இதைப் பற்றி கேட்டான், அவனது பெற்றோர் வங்கியில் பணியாற்றி வந்தனர் என்பதால் தனது பெற்றோரிடம் கேட்டு சரியான பதில் சொல்வதாக சொன்னான்.

அவன் தன் பெற்றோரிடம் சென்று அன்னா ஹசாரேயும் அவரது உடன் கோஷமிடுபவர்களும் வங்கியில் பணி செய்பவர்களைபோல பதாதைகளை ஏந்திகொண்டு கோஷமிடும் காரணம் என்ன என்று கேட்டான். அதற்க்கு அவனது பெற்றோர் அவனிடம் 'எல்லோருமே ஏதாவது கோரிக்கைகளை முன் வைத்துதான் கோஷமிடுகின்றனர்' என்றார்கள். அந்த சிறுவனுக்கு முழுவதுமாக விளங்கவில்லை, ஆனால், தனக்குள் 'ஏதாவது வேண்டும் என்றால் நாமும் உண்ணாவிரதமிருந்து கோஷமிட வேண்டும்' என்ற முடிவிற்கு வந்தான்.

சுதந்திரம் நமக்கு கொடுத்திருக்கும் மாபெரும் வரம் பதாதைகளை ஏந்திக்கொண்டு கோஷமிடுவதும் உண்ணாவிரதமிருப்பதும் என்பது மட்டும் தானோ என்கின்ற கேள்வி எழுகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற அல்லது தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்த மக்களாட்சியில் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற இந்த சுதந்திரம் உண்மைதான் என்றாலும் வரம்புகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் அதே ஜனநாயகம் நமக்கு உணர்த்துவதை மறந்துவிடுவது குற்றமாகும், நான் எனது நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் அதே நேரத்தில் ஜனநாயகத்தில் உள்ள அரசியலமைப்பின் சட்டதிட்டங்களையும் கடை பிடித்தாக வேண்டும் அப்படி கடைபிடிக்கத் தவறும்போது குற்றவாளியாக கருதப்படுவதை சுதந்திரத்தால் தடுக்க இயலாது.

எந்த அளவிற்கு சுதந்திரத்தை கொண்டாடுகிறோமோ அதே அளவிற்கு சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகிறது. சட்டத்தையும் ஜனநாயக அரசியலமைப்பையும் அவமதிப்பது எவ்வாறு சுதந்திரமாக கருதப்படும்.

8/16/2011

வாழும் வரை போராடு

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி, அதுபோன்று ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் எழுத்துலகம் என்னை திரும்பவும் தன் பால் இழுத்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஆட்சிமாறியவுடன் பல காட்சிகள் அவசரகதியில் மாற்றம் அதனால் ஏற்பட்ட ஏகோபித்த மக்கள் ஓலம், என தமிழகம் சந்தித்து வருகின்ற திடுக்கிடும் சம்பவங்கள் போதாது என்று அடுத்த மாநிலத்தில் எடியூரப்பாவின் ஆட்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் அவற்றை அவர் சமாளித்து வந்த விதம், ஆளுநரும் முதலமைச்சரும் எலியும் பூனையுமாகி 'மிக்கியும் டோனல்டையும்' நினைவுப்படுத்தி ஒருவழியாக ஏதோ ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதும், கேரளாவில் தேர்தலுக்குப் பின்னர் அச்சுதானந்தன் கீழிறக்கப்பட்டு ஒம்மன் சாண்டி பொறுப்பேற்றப் சில மாதங்களிலேயே பத்பநாப கோவிலில் கிடைத்த பொக்கிஷங்களும் அதை தொடர்ந்து அதைப்பற்றிய செய்திகளும், வங்கதேசத்தில் கம்யுனிஸ்டுகளின் இருக்கத்திலிருந்து மீண்ட மாநில ஆட்சியை திரினாமுல் காங்கிரஸ் கைப்பற்றி மம்தா ஆட்சி பொறுப்பை ஏற்றது போன்ற மிகவும் சுவாரஸ்மான பல காட்சிகள் அரங்கேறியிருப்பதுடன் இன்னும் பல சுவாரஸ்ய செய்திகளும் எழுத்துக்கும் கருத்துக்கும் காத்துக் கிடந்தாலும் ஏதோ ஒன்று எனது எழுத்தை சற்றே நிறுத்தியிருந்தது.

சமச்சீர் கல்வி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக நினைத்து சற்றே பெருமூச்சு விட்டால், இல்லை இன்னும் அந்த பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுபட்டபாடில்லை என தெரிவிக்கும் செய்திகள் தொடர்ந்து கொண்டே இருக்க 'பாவம் இந்த வருடத்து மாணவர்களும் ஆசிரியர்களும், அத்துடன் சேர்த்து அவர்களது பெற்றோர்களும்' என ஆதங்கப்பட வைக்கிறது செய்திகள்.

'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது பழமொழி, செய்திகளைத்தேடி அலைய வேண்டிய வேலையே இல்லாமல் செய்திகள் மிகவும் சூடாகவும் மேலும் மேலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது செய்திகள் சேகரிப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்ப்படுத்தும். அன்னா அசாரே என்பவர் சமூகநலத்திற்காக பாடுபடுபவராக இருப்பதில் யாருக்கும் பிரச்சினைகள் இருக்காது, அவரை யார் கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்றைய பிரச்சினைகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் புதிர்.

அன்னா அசாரேயைப்போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டால் நாட்டின் நிலை என்னாகும், ஊழலை தடுக்க பாடுபடுகிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நாட்டில் உள்ள மக்களுக்குள்ளேயும் கட்சிகளுக்குள்ளேயும் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது என்பது எந்த சமூக ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. அன்னா அசாரேயை கருவியாக்கும் சிலரால் நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் ஏற்படுமேத் தவிர ஊழலை ஒழித்துவிட முடியாது.

திருவனந்தபுரம் பத்மநாபர் கோவில் மட்டுமில்லை ஒவ்வொரு கோவிலையும் அக்காலத்து மன்னர்களும் குறுநில மன்னர்களும் தங்களது அளவிற்கு மீறிய சொத்துக்களையும் பொக்கிஷங்களையும் பாதுகாக்குமிடமாக பயன்படுத்தி வந்ததுடன் அந்த பொக்கிஷங்களை திருடினால் தெய்வ குற்றம் ஏற்ப்படும் என்று மக்களிடம் இல்லாத வதந்திகளை பொக்கிஷங்களை பாதுகாக்கின்ற தந்திரமாக புரளி ஏற்ப்படுத்தி வந்தனர். அக்காலத்தில் வங்கிகளும் பொக்கிஷங்களை பாதுகாக்கும் லாக்கர்களும் இல்லை என்பதே இதற்க்கு முதன்மையான காரணம்.

அளவிற்கு அதிகமான நிலங்களை கோவிலுக்கு எழுதி வைப்பதும் வாரிசு இல்லாத சொத்துக்களை கோவிலுக்கு எழுதுவதும் அக்கால முறைகள். கடவுளுக்கு நகைகளும் பொக்கிஷங்களும் அவசியமில்லை, கடவுள்தான் அவற்றை மக்களுக்கு வாரி வழங்க வேண்டுமேத் தவிர மக்கள் கடவுளுக்கு வாரி வழங்க வேண்டிய கஷ்டத்தில் கடவுள் எப்படி இருக்க முடியும். பொக்கிஷ அறைகளைத் திறக்க அரச குடும்பத்தினர் கூறும் காரணங்கள் பழங்கால கதைகள் இந்த காலத்தில் அவதியுறும் கோடானு கோடி மக்களின் துயர் துடைக்க அந்த பொக்கிஷங்களை அரசு ஏற்று நல திட்டங்களை உருவாக்கி நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டும்.

புட்டபர்த்தி சாய்பாபாவின் சொத்துக்களுக்கும் இதே கதி உருவாகியிருப்பது ஏழை எளியோரை கோடிக்கோடியாக தன்னுள்ளே வைத்திருக்கும் நமது இந்திய நாட்டில் பொக்கிஷங்களும் பணமும் சாமி என்ற பெயரில் சில இடங்களில் குவிக்கபட்டிருப்பது வேதனை தருவதாக உள்ளது.