Translate

4/15/2011

பதில்......கடிதம்

[ எனது கடிதத்திற்கு பதில் கடிதம்]


அன்புள்ள ..........

ஏறக்குறைய 31 வருடங்களுக்குப் பின்னர் உனது கடிதம் வாசித்தேன், கடிதம் கண்டவுடன் உலக அதிசயங்களில் ஏதோ ஒன்றை கண்டுவிட்ட உணர்வு ஏற்பட்டது, அதன் காரணத்தை நீ நன்கு அறிவாய், உன் நிலைமையை பற்றியும் உனது குடும்பத்தாரைப் பற்றிய நினைவே இல்லாமல் நான் தான் உனக்கு பலமுறை தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன், எனது ஒரு கடிதத்திற்கும் பதில் கடிதம் எழுதும் வழக்கத்தை கடைசிவரையில் நீ ஏற்ப்படுத்திக் கொண்டதே இல்லை என்பது காலம் பல கடந்து வயது முதிர்ந்து போனாலும் எனக்கு மிகவும் நன்றாக நினைவு இருக்கின்றது. உனது முதல் கடிதத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து வாசித்தப் பின்னர் ஆச்சரியம் கலந்த ஏதோ ஒரு உணர்வில் உந்தப்பட்டு கடிதத்தை முழுவதையும் ஒரே மூச்சில் படிக்க இயலாமல் துக்கம் என் தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது.

நான் ஒரு துரோகி என்பதை அழகாய் எடுத்துகூறியதுடன் உன் எழுத்துக்களில் கூட உனது ஏமாற்றத்தின் விளிம்பை தொட்டது என்னை கூனி குறுகச் செய்துவிட்டது. எங்கேயோ கண் காணா இடத்தில் உன் பெற்றோருடன் நீ அமைதியாய் வாழ்ந்திருந்த போது காதல் சுனாமியை உன் இதயத்தில் ஏற்படுத்த காரணமாய் நான் இருந்தேன் என்பதும் பிறகு உன் இதயத்தின் அளவிட இயலாத துக்கத்திற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை எனக்கு நாசுக்காக சுட்டிக் காண்பித்து இருந்தாய். அதை நான் மறுக்கவில்லை, அதனால் தானோ என்னவோ எனது வாழ்வில் துன்பம் நிறைந்தே உள்ளது. இன்னும் இந்த நய வஞ்சகனை நினைவில் வைத்திருக்கின்றாயே அதற்க்கு எனது நன்றிகள். வாழ்க்கை என்பது யாருக்கும் அவரவர் விரும்பியப்படி கிடைபதில்லை என்பதை யாவரும் அறிவர். தோல்விகளும் காயங்களும் இல்லாமல் வாழ்க்கை கிடையாது என்பதை நீ அறிந்திருப்பாய். புதிதாக நான் என்ன சொல்லிவிடப் போகிறேன். காலம் கடந்துதான் பல விஷயங்கள் நமக்கு விளங்குகிறது. இதை விதியென்று சிலர் சொல்லுவர். ஆனால் எனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லை, ஒன்று மட்டும் நான் நம்புகிறேன், ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு சிறிய பெரிய எல்லா சம்பவங்களும் நாம் பிறப்பதற்கு முன்பே அவரவர் பெயரில் அட்டவணை தயாரிக்கப்பட்டு விடுகிறது. அவற்றை யாராலும் எதற்காகவும் மாற்றம் செய்வது இயலாத ஒன்றாகி விடுகிறது.

நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
புதிதாக எதையாவது விளங்கிக் கொண்டே இருக்கிறோம், வாழ்க்கை மிகவும் சிறியது அதில் கிடைக்கின்ற பொழுதை வருந்தி கழிப்பது கூட நமக்கு முன் குறித்தவையே. அதனால் யார் மீதும் எதற்காகவும் வருத்தபடுவது அறியாமை. எஞ்சியுள்ள உன் வாழ்நாளில் குதூகலமாகவும் எல்லோரிடமும் அன்பாகவும் இருக்க முயன்று பார், நிச்சயம் வாழ்க்கைக்கு அர்த்தம் விளங்கும். என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் செய்திகள் இருந்தால் மறக்காமல் கடிதம் எழுது, உன் மடல்களை எதிர் நோக்கும்.


அன்பு ..........###########