Translate

4/12/2011

அன்புள்ள எனது.....கடிதம்

அன்புள்ள எனது .........

நான் உன்னை பிரிந்த நாளாய் நலமில்லை, நீ அங்கு நலமா, கனவுகளே இல்லாமல் வாழ்ந்து வந்த என்னை விடாமல் பின் தொடர்ந்தாயே, ஒரு நாளா ஒரு மாதமா, ஒரு வருடமாக பின் தொடர்ந்தாய், நீ எழுதிய காதல் கடிதங்களை எடுத்து வந்த தபால்காரரிடம் பெறுவதற்கும் உனது கடிதங்களை என் பெற்றோரிடமிருந்து மறைக்கவும் பின்னர் பாதுகாத்து படிக்கவும் ஒவ்வொருமுறையும் நான் பட்ட கஷ்டம் அப்பப்பா... அதை திறந்து படிக்க வீட்டில் யாருமில்லா ஏற்ற சமயத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் அந்த இடைவெளியில் கடித உருவத்தில் கம்பளி பூச்சாக நீ என்னை நெருடி எனது குழந்தைத்தனமான இயல்பை கள்ளத்தனமாக மாற்றினாயே. அத்தனை விடாப்பிடியாக என்னை நீ தொடர்ந்தது நிச்சயம் காதலினால் அல்லவென்று அந்த இளமை வயதிலும் என் உள்மனம் என்னிடம் விடாமல் கூவிக்கொண்டே இருந்ததே.

உன்னுடன் பழகிய அந்த சில மாதங்கள் என் மனதில் உன்மீது மாறாதக் காதலை ஏற்ப்படுத்தியதே, இவை எல்லாம் உண்மை என்பதை நீ உனக்கு நிரூபித்துக் கொள்ள என்னை காதலித்தது போல பாவனை செய்தாய் என்பதை பின்னால் அல்லவா பேதை நான் உணர்ந்தேன். நீ என்னுடன் பழகிய அந்த சில மாதங்களில் என் ஸ்பரிசத்தை நீ விரும்பவில்லை, என் பெண்மையை கிளுகிளுக்க வைக்க எவ்வித முயற்ச்சிகளையும் செய்ததில்லை. காதல் என்ற உணர்வை எனக்கு முதன் முதலில் உணர வைத்தாயே. காலம் பல கடந்த பின்னர் இன்று அந்தக் காதல் சாகவும் முடியாமல் வாழவும் இயலாமல் என்னை வம்பு செய்கிறதே, என் மனதை நான் கேட்பதுண்டு 'இன்னும் நீ அவனை காதலிக்கின்றாயா' என்று என் மனம் என்னிடம் அழுதுகொண்டே கேட்கிறது 'சாகத்தான் எண்ணுகிறேன் இயலவில்லை, வாழத்தான் எண்ணினேன், கானல் நீராகியது, நான் என்ன செய்வதென அறியாமல் காலமெல்லாம் வேதனைப்படுகிறேன்' என்கிறது.

உன் நிலை என்னவென்று என்னால் யோசித்து ஒரு முடிவிற்கு வர இயலவில்லை, ஒன்றுமட்டும் உறுதி, என் உருவம் அல்லது என் நினைவுகள் வந்து உனது மனதில் குற்ற உணர்வுகளை ஏற்ப்படுத்த தவறாது. திருமணமாகி மனைவி குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் நமது நினைவுகளை குறைத்திருக்கும், உனக்கு என்னிடம் நிச்சயம் காதல் ஏற்ப்படவில்லை, உனது காதலி திருமணமாகி உன்னைவிட்டு அதிக தூரம் பிரிந்து போனாள் என்பதால் ஏற்பட்ட உனது துயர் அகற்றும் இன்னொரு பெண்ணாக என்னை வந்தடைந்தாய், நாம் இருவரும் பணி செய்த நிறுவனத்தில் பணி புரிந்த பெண்களை பற்றிய கட்டுக்கதைகள் நிறையவே பொழுதை போக்குவதற்கு பேசப்பட்டதில், நான் புதிதாய் அந்நிறுவனத்தில் சேர்ந்ததினால் என்னைப்பற்றிய கிசு கிசுக்கள் சற்று சுவாரஸ்யமானதாக பேசப்பட்டதை நீ அறிந்து கொண்டு அவை உண்மைதானா என்றறிய என்னிடம் காதல் மொழி பேசி மயக்க வைக்க முயன்றாய் என்பதை அறிந்தபோது நான் உன் மீது வைத்திருந்த மரியாதை தகர்ந்தது.

அடிக்கடி நீ குறிப்பிடுவாயே, ' உடம்பை தொடுகின்ற ஆசையில் பழகவில்லை' என்பாயே. என் உடம்பை நீ தொடும் ஆசையில் பழகியிருந்தால் கூட நான் உன்னிடமிருந்து ஒரு சில நிமிடங்களில் விலகியிருந்திருபேன். மனதை தொட்டாயே அதற்க்கான அத்தனை தகுதியையும் காட்டினாயே. காதல் வலைக்குள் என்னை சிக்க வைத்துப் பின் விதி வசத்தால் நாம் பிரிந்தோமே. அப்படி பிரிந்ததில் உனக்கொன்றும் காயம் ஏற்ப்பட்டிருக்காது, ஒருசமயம் அவ்வாறு ஒரு பிரிவை நீ எதிர்பார்த்திருந்திருப்பாய். அந்த பிரிவு கூட எத்தனை அழகாய் எனக்கு சம்பவித்தது. காலமெல்லாம் என் இறைவனுக்கு நான் நன்றி கடன்பட்டவள் என்பதை இவ்வாறு பல சம்பவங்கள் எனக்கு உணர்த்துகின்றன.

உனக்கு நிச்சயம் பெண்குழந்தை இருக்கவேண்டும் அவளுக்கும் திருமணம் செய்திருப்பாய், தகப்பனின் வேதனைகளை இப்போது உணர்ந்திருப்பாய், நிச்சயம் அந்த வேதனை வழிகளை நீயும் கடந்திருப்பாய். என்னைப்பற்றிய நினைவுகளும் சம்பவங்களும் உன் கண் முன் திரைப்படம் போல ஓடியிருக்கும். என்னை அடிக்கடி நினைவுபடுத்தியிருக்கும், அதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி உன் நினைவு எனக்கு ஏற்ப்படுகிறது என்று நம்புகிறேன். உன்னை கடைசியாக பார்த்த உடையுடன் என் கண் முன் வந்து நிற்கிறாய், நீ அடிக்கடி உபயோகிக்கும் கருப்பு நிற பான்ட்டும் நீலநிற முழுக்கைச்சட்டையை முக்கால் கை தெரிய மடித்துவிட்டுக்கொண்டு தொடர்வண்டி நிலையத்தில் எனக்காக காத்திருப்பாயே..... என் கண் முன் நிழலாடுகிறது உனது பழைய உருவம்.

எனக்கு உன் மீது ஏக்கம் இல்லை. கோபம் இல்லை, காதலுமில்லை, இவை யாவற்றையும் தாண்டிய ஓர் உணர்வு, என்னால் வார்த்தைகளால் வருணிக்கத் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழிந்துவிட்டதால் உன் உருவம் நிச்சயம் மாறி இருக்கும், நீ இப்போது எப்படி இருப்பாய் என்று கற்பனை செய்து பார்க்கிறேன், என் கற்பனையில் வரும் முகங்களைஎல்லாம் ஒவ்வொன்றாய் மனக்கண்ணில் பாரத்துவிட்டு இறுதியில் இப்படியெல்லாம் இருக்கப்போவது நிச்சயமில்லை என்ற சலிப்பும் ஏற்ப்படும். நீ எத்தனை நல்லவன், நீ எத்தனை படிப்பாளி, நீ எத்தனை துடிப்பானவன், உன்னுடன் நான் பழகிய அந்த நாட்கள் இன்று நினைத்தாலும் அருமை......எல்லா காதலர்களும் கடற்கரைக்கு போவார்கள், நாமும் சென்றோம், ஆனால் அந்த அலைகள் கரையை தொடும் இடத்தில் நாமிருவரும் சனத்திரளுள் அமர்ந்து கொண்ட போது நீ என்னுடன் பேசிய உரையாடல் போல மற்ற காதலர்கள் பெரும்பாலும் பேசியிருக்க மாட்டார்கள் என்பதை நான் பல காலம் கழிந்த பின்னரே அறிந்தேன்.

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஏன் வந்தது என்கின்ற கேள்வியை என்னிடம் கேட்டாய் நான் பதில் சொல்ல இயலாமல் விழித்தபோது அதை பற்றிய விரிவுரை தந்தாய், கப்பல் எப்படி நடுக்கடலில் மூழ்காமல் மிதக்கிறது என்றாய், நான் உன் சிகப்பு இதழ்களையே பார்த்திருந்தேன், கடற்காற்றில் கூத்தாடிய முன் நெற்றி மீது அழகாக விழுந்த ரோமங்களை ஏக்கமுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நீயும் நானும் பழகிய அந்த நாட்களை அழகிய தொகுப்பாக எழுத ஆசைப்படுகிறேன். எனக்குள் கிடக்கும் அந்த எண்ணக் கவிதைகளை எழுத்தின் மூலம் பதிக்க விரும்புகிறேன். ஒருசமயம் நீ படித்தால் அல்லது நாம் இறப்பதற்கு முன்னால் சந்திக்க நேர்ந்தால் இவற்றை உனக்கு காண்பிப்பேன். இல்லையென்றால் சிறு காவியமாய் இருந்துவிட்டு போகட்டும்.

உன்னை என்றும் மறவாத

நான்


@@@@@@@@@@@