Translate

4/06/2011

நடிகை திருமதி சுஜாதா -அஞ்சலி


நடிகை சுஜாதா நான் ரசிக்கும் நடிகைகளில் ஒருவர், மிகவும் அதிஷ்டகாரர் எடுத்த எடுப்பிலேயே திரு கே. பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர், அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவருடைய முதல் திரைப்படம் வெளியாகி பலராலும் புகழ்ச்சியின் உச்சியில் பேசப்பட்டார், திரு பாலச்சந்தர் என்றாலே பெமினிஸ்ட், [பெண்ணியவாதி] என்ற முத்திரையுடன் முதல் முறையாக நடிப்பவர்களை உருவாக்கும் சிற்பி என்றும் [ஸ்ரீதருக்குப் பின்னர்] கருதப்பட்டவர் என்பதாலோ என்னவோ பட்டை தீட்டிய வைரமாக நடிப்பின் எல்லைக்கே சென்றவர் திருமதி சுஜாதா அவர்கள்.

எந்த கிசு கிசுவிற்கும் அவர் இடம் கொடுத்ததில்லை என்று நிச்சயமாக சொல்லலாம், நல்ல கதைகளமும் அதற்கேற்றார் போல் இயக்குனர்களும் இருந்த காலம். அவரது தமிழ் திரைப்படங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையுமே நான் பார்த்துவிடுவதுண்டு. திரு பாலச்சந்தர், திரு பீ. மாதவன், திரு கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுக்கு பெண்கள் புதிதாய் நடிப்பதற்கு வந்துவிட்டால் தங்கள் கற்பனையில் கண்ட நாயகியை 99% அப்படியே பதிவு செய்துவிடும் வல்லவர்கள். அதில் திருமதி சுஜாதாவிற்கு நடிப்பு கைவந்த கலை. அவரைப்பற்றிய எந்த துணுக்குச் செய்தி பத்திரிகையில் இருந்தாலும் தவறாமல் படிப்பது என் வழக்கம்.

ஆரம்ப காலத்தில் தான் வாழ்க்கையில் மிகவும் வறுமை நிலையில் இருந்ததாக அவன் கூறியிருந்தார், மாற்றி கட்டும் ஒரு சேலையோ அடுத்தவேளை உணவோ இன்றி இருந்த சமயத்தில் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் திரு பாலச்சந்தர் அவர்களின் அலுவலகம் சென்று ஸ்க்ரீன் டெஸ்ட் செல்ல நேர்ந்தபோது மாற்றுடை இல்லாமல் தான் அவதியுற்றதை கூறிய போது நெஞ்சம் நெகிழ்ந்தது. அவர் இலங்கையில் பிறந்ததும் அவரது அப்பா மருத்துவர் என்றும் விரைவிலேயே காலமாகிவிட்டார் என்பதும் அதனால் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வந்து பிழைக்க வழி தேடியதையும் அவரது பேட்டிகளில் நான் படித்து, கேட்டதுண்டு. அவரைவிட வயதிலும் நடிப்புத்துறையிலும் முதிர்ந்தவர்கள் எத்தனையோ பேர் நலமுடன் வாழ்ந்திருக்க இந்த பெண்மணி இத்தனை சீக்கிரத்தில் காலமானது நெஞ்சை வேதனையடையச் செய்கிறது.

'தானுண்டு தன் வேலையுண்டு' என்கின்ற அவரது பழக்கவழக்கம் திரைப்படத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள் நன்கு அறிவர். ஆரம்ப காலத்தில் ஜெயகர் என்பவற்றின் வீட்டில் குடியிருந்தபோது ஜெயகருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து, இரண்டு மகன்களுக்கும் தாயானார் என்பது வரையில் அவரைப்பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து படித்து அறிந்து கொண்டேன், அதற்க்கு பின்னர் பல ஆண்டுகளாக அவரைப்பற்றிய செய்திகள் அதிகம் ஏதும் வெளியிடப்படவில்லை, இன்றைய செய்திகளில் அவர் பேஸ் மேக்கர் பொருந்தியிருந்ததும் அது பழுதடைந்து சில தினங்களில் இறந்தார் என்பதும் கேட்டபோது நெஞ்சின் வேதனை அதிகரித்தது, மலையாள உச்சரிப்புகளுடன் அவர் தமிழைப் பேசி நடித்தாலும் நடிப்பில் சாவித்திரி, பத்மினி என்பவர்களின் வரிசையில் சுஜாதாவும் சிறந்த நடிகை என்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


&&&&&&&