Translate

4/01/2011

ஏகவாக், யெகவாக்.........


எனக்கு அப்போது நான்கு வயது இருக்கலாம், என் தாயார் சொல்லுவார் நான் பிறந்த நாளிலிருந்து ஒருபோதும் எனது பெற்றோரை எதற்காகவும் தொல்லை கொடுத்ததே கிடையாதாம், ஜுரம் விடாமல் அடித்துக்கொண்டிருக்கும் போது மட்டும் முழு நேரமும் என் அப்பாவின் தோள் மீது உறங்க வேண்டும் என்று கேட்பேன் என்று சொல்வார்கள், அதனால் என் அப்பா இரவு முழுவதும் தனது தோளைவிட்டு என்னை இறக்க இயலாமல் அவரும் உறங்க மாட்டாராம்.

இதை எதற்க்காக சொல்லுகிறேன், சுயபுராணமா என்று நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகவே கேட்கிறது, நாங்கள் வாழ்ந்த அப்பகுதியில் காது கேளாத ஊமையன் ஒருவன் இருந்தான், அவனை அறியாதவர்கள் அந்த பகுதியிலேயே யாரும் இருந்திருக்க முடியாது, அவன் அடிக்கடி நாங்கள் வசிக்கும் வீட்டிற்கும் வருவதுண்டு, அவனால் பேச முடிந்த ஒரே வார்த்தை 'ஏகவாக், ஏகவாக் யேகவாக்' என்பதுதான். நம்மை பொறுத்தவரையில் அவன் ஊமை அல்லது அவனது அந்த ஒரே வாக்கியத்திற்கு அர்த்தமிருக்காது, ஆனால் அவன் மொழியில் அந்த வார்த்தை எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கியிருந்தது.

அந்த சிறு வயதில் என் உயிரே போகின்ற அளவிற்கு பயப்படுகின்ற ஒரே ஆளும் அவனது அந்த ஒரே வார்த்தையும் தான். வேறே எதற்காகவும் அதன் பின்னர் இன்றுவரையில் அத்தனை பயம் எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்டதே கிடையாது என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். எனது குலையே நடுங்க வைக்கும் அவனது வருகை, என் அம்மா அவனிடம் மிகவும் அன்பு காட்டுவார் அதனால் அவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்க்கு வருவதும் தவிர்க்க இயலாததாகியிருந்தது. அவனுக்கு வயிறு காலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் அம்மாவை அடிக்கடி வந்து பாரத்துவிட்டு போவான், என் அம்மாவிடம் அவனை இங்கு வரவிடாதே என்று ஒருநாள் சொன்னேன், அதற்க்கு என் அம்மா 'பாவம், அவன் பசியெடுத்தால் எங்கேயும் சோறு கிடைக்கவில்லைஎன்றால் வருவான், அவனை எதற்கு இங்கு வரவேண்டாம் என்று சொல்லுகிறாய்' என்றார்.அதற்க்கு நான் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது அவன் சொல்லும் வார்த்தையை கேட்டாலே என் உயிரே போய்விடுகின்ற அளவிற்கு பயம் என்பதை நடுங்கிக்கொண்டே சொன்னேன், என் அம்மா என்னிடம் அவனிடம் இங்கே வராதே என்று சொன்னாலும் அவனால் விளங்கிக்கொள்ள இயலாதே, அவன் ஒரு நன்றியுள்ள நாயைப்போன்றவன், அவனை அறியாமலேயே சும்மா கூட வந்துவிட்டுத்தான் போவான்' என்றார். அவர் சொல்வதை அந்த வயதில் புரிந்துகொள்ளும் அளவு நான் இல்லை, இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் வெயல் காலத்தில் தர்பூசணி பழ துண்டுகள் வெள்ளரி பிஞ்சுகள், மாம்பழங்கள் என்று எதையாவது ஒரு கூடையில் போட்டு யாரோ அவனை விற்று வர அனுப்பி வைப்பார்கள், இப்போது நான் அதைப்பற்றி யோசித்துப்பார்க்கிறேன், அவன் அதை எப்படி விற்றிருப்பான் என்று.

ஆனால் அந்தகாலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பரிச்சயப்பட்ட வாய் பேச காது கேட்டக்க இயலாத நபரிடம் ஏமாற்றி பொருளை வாங்கிகொண்டு போகும் அளவிற்கு மக்கள் மிகவும் மோசமானவர்களாக இருந்திருக்க இயலாது . 'ஏகவாக் ஏகவாக்' என்று பேசியே அவனது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தான். அப்போது தேர்தல் சமயம் ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தை துண்டு பிரசுரத்தில் அச்சடித்து அவனிடம் கொடுத்து விநியோகம் செய்ய சொல்லியிருக்கிறார்கள், அவன் எல்லாரையும் 'ஏகவாக் ஏகவாக்' என்று கூவி அழைத்தபடி ஒவ்வொரு வாசலாக ஏறி இறங்கி அந்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தான், மற்றொரு முறை கொடியை கையில் எடுத்துக்கொண்டு சில இளம் வாலிபர்களுடன் 'ஜே' போட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தான், எல்லோரும் அந்த கட்சிக்கொடியுடன் வீராவேசமாக 'ஜே' என்று சொல்லும்போது அவன் என்னவென்று கூவியிருக்க முடியும் 'ஏகவாக்' என்றுதானே கூவியிருக்க முடியும்,

தேர்தல் முடிந்த பின்னர் கை நிறைய சாக்லெட்டுகளும் அந்த கட்சியின் சிறிய அளவிலான கொடியை தன் சட்டைபொத்தானின் மீது குத்திக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தான், எல்லா சாக்கலேட்டுகளையும் என் அம்மாவிடம் கொடுத்து சைகையில் என்னை காண்பித்து என்னிடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு மிகவும் சந்தோஷமாக அங்கிருந்து துள்ளி குதித்துக்கொண்டு சென்றான், அவனுக்கு தேர்தலில் ஜெயித்தவரைப்பற்றித் தெரியுமா, ஜனநாயகத்தைப்பற்றி தெரியுமா, எதையும் அறிந்து கொள்ள அவனால் முடிந்ததா, எதற்காக அவன் இத்தனை சந்தோஷப்படுகிறான், தான் தொண்டு செய்த கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர் வென்றுவிட்டது அவனுக்கு விளங்கியதா, இந்திய பிரஜைகளில் தானும் ஒருவன் என்பதால் அவன் சந்தோஷமடைந்தானா. இந்திய அரசியலின் நிலைமையும் இன்று அவனைப்போலத்தான் உள்ளது.இந்திய ஜனநாயகத்தை எத்தனைப் பேர் புரிந்திருக்கின்றார்கள், ஏகவாக்கை போலத்தான் பலரும் ஒட்டு கேட்கின்றார்கள், ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னால் தாங்கள் எதையெல்லாம் ஓட்டு போட்ட மக்களுக்கு செய்வோம் என்பதை சொல்லித்தான் ஒட்டு கேட்பது என்பது ஜனநாயக மரபு, ஆனால் காலம் முழுவதும் எதிர்க்கட்சி தலைவரையும் ஆளும் கட்சியையும் ஏளனம் செய்து, ஏசியே பழக்கப்பட்டுப்போன நாவும் மூளையும் எப்படி நலத்திட்டங்களை யோசித்து ஆராய்ந்து தயாரிக்க இயலப்போகிறது, எதைபற்றியும் அறியாது அரியணை ஏறுவதன் நோக்கமும் அர்த்தமும் விளங்காமல், கையிலிருக்கும் பண மூட்டையை, யாரோ கட்டி உருவாக்கிய கட்ச்சியினுள் புகுந்துவிட்டு, ஒப்பனை பூசி மெருகேற்றிய முகத்தை வெட்டவெளியில் அரையாடை அல்லது பகட்டாடைகள் கட்டி பதிவு செய்த ஒளிபேழையின் உதவியால் பல கோடிகளை இருட்டறைகளில் முடக்கி வைத்து, அவற்றை வெளிக்கொணர வழியின்றி செய்வதறியாது அரசியலில் கால் வைத்து, அரசியலில் அரிச்சுவடியைக்கூட அறியாமல் 'ஏகவாக், யேகவாக்' என்று பேசி ஓட்டு என்கின்ற ஜனாயக உரிமைகளை பாழாக்க நினைக்கும் சிலர் வெற்றி பெற்று தலைவரும் அமைச்சர்களுமாக பதவியேற்றால் இந்த பூமி தாங்குமா.

அடுத்த சுனாமி நிச்சயம் நம் நாட்டிற்கு வரும் பூகம்பம் வரும், இல்லையென்றால் மூன்றாவது உலகப்போரில் நாடழியும். அப்படிப்பட்ட தலைவர்களை பிரதமராகவும் முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் பெறுவதைவிட சாவதே மேல். எதிர்கட்சித்தலைவரை திட்டி திட்டியே பிரசாரம் செய்தால் அந்த தலைவரை வெறுப்போர் ஓட்டு கிடைக்கும், தேர்தலுக்கு கட்டிய டெபாசிட் தொகையாவது திரும்ப கிடைக்கும், மற்ற தலைவர்களை தலைவிகளை திட்டிப்பேசினால் அல்லது வாழ்த்திப் பேசினாலும் மரியாதை கூட கிடைக்காது. இன்று சிலரின் நிலை அப்படி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

'ஏகவாக் ஏகவாக் ஏகவாக்...............