Translate

4/21/2011

GOOD FRIDAY - EASTER


நண்பர் ஒருவர் எனக்கு Happy Good Friday என்று வாழ்த்துக் கூறினார், அவர் ஒரு MBA பட்டதாரி. படித்ததினால் எல்லோருக்கும் எல்லாமே தெரிந்து விடுவதில்லை, பொது அறிவு என்பது உலக நடப்புக்களை அறிகின்ற அறிவு அவசியப்படுகிறது. நமது துறைக்கு அப்பாற்பட்ட செய்திகளையும் அறிந்திருப்பது என்பது எல்லோருக்கும் அவசியம் ஆனால் அவசியமில்லை என்கின்ற எண்ணம் தான் பரவலாக உள்ளது. அதைவிட இன்னும் பெரிய விஷயம் தான் சம்பந்தபட்டிருக்கும் துறையிலேயே அல்லது தான் வணங்கும் மதத்தைப்பற்றியும் தான் வாழ்ந்த வாழுகின்ற ஊரை, இடத்தினை பற்றியோ கூட அறிந்துகொள்வது அவசியம் அற்றதாக கருதும் பலரும் படித்த நபர்களில் அதிகம்.

இதற்க்கு காரணம் என்ன, பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் முக்கிய கருவியாக கல்வி இன்றைய சூழலில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பதே. பணம் வாழ்வின் மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவதால் அதை அடையும் வழிகளைப்பற்றி அது நன்மையானதோ தீமையானதோ அதைப் பற்றிய உணர்வின்றி பணத்தை அடைகின்ற வழிகளை கண்டுபிடித்து பணம் சேமிக்கும் முறைகளில் வல்லவர்களாக வேண்டும் என்கின்ற உந்துதல் மட்டுமே இன்றைய காலத்தின் முக்கிய பணியாக கருதுகின்றனர்.

இயேசு கிறிஸ்த்து என்பவர் பிறக்கப்போவதையும் அவர் குறிப்பிட்ட காலத்திலே இறக்கப்போவதையும் தீர்க்கதரிசிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருந்தனர். அதன்படி இயேசு கிறிஸ்த்து பிறந்து முப்பதாண்டுகள் வாழ்ந்து சிலுவையில் கொல்லப்படுகின்றார், சிலுவை என்பது இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் இருந்த மரண தண்டனை, திருடர்கள் மற்ற கொலை குற்றங்கள் செய்பவர்களுக்கு அக்காலத்தில் அங்கு இருந்த அதிகபட்ச தண்டனை, இயேசு கிறிஸ்துவின் மீது மத விரோதிகள் நடத்திய கொடுமையின் விளிம்பு இயேசுவை சிலுவையில் கொல்ல ஏற்பாடு ஆகியது, அவரை கொன்ற அந்த நாள் வெள்ளிக்கிழமை அந்நாளை பிற்காலத்தில் Good Friday என்று வழங்கினர். புனித வெள்ளி என்று தமிழிலில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இயேசுவை கொன்ற நாளை ஏன் Good என்று குறிப்பிட வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருக்கலாம்,

அவர் இறந்தது மனு குலத்தின் பாவங்களை அகற்ற, அது எப்படி அவர் இறப்பதால் மனுக் குலத்தின் பாவங்கள் அகலும் என்று இன்னுமொரு கேள்வி உருவாகும், ஆதி காலத்தில் விவிலியத்தில் [பைபிள்] உள்ளபடி ஆதாம் ஏவாள் என்பவர்களை ஆண்டவர் படைத்த பின்னர் அவர்களுக்கு கூறப்பட்ட கட்டளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்பது அப்படி அவர்கள் அதை உண்ணும் நாளில் பாவம் என்பதை அறிய நேரும் அப்போது அவர்கள் சாவார்கள் என்பது. சாத்தான் என்கின்ற பிசாசு நயவஞ்சகம் செய்து பூமியின் முதல் பெண் ஏவாளை தனது பேச்சால் நம்ப வைத்து அந்த பழத்தை உண்ணச் செய்தது, மீதியை பூமியின் முதல் ஆண் ஆதாமிற்கும் கொடுத்து உண்ணச் செய்தது. பாவம் என்பதை அறிந்த இருவரும் ஆண்டவரின் சாபத்திற்குள்ளாக நேர்ந்தது.

இந்த பாவம் தொடர்ந்தது, பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பூமியில் அதே பாவத்தை தொடர்ந்து செய்து பிள்ளைகளை பெற்று உலகம் முழுவதும் மனித இனம் பெருகியது. ஆதாம் ஏவாளுக்கு முதலில் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளின் மீதும் இந்த பாவம் தொடர்ந்தது, சாபத்தை சாத்தான் என்பவன் வேறு வகையில் பூமியின் மீது பெருகச் செய்கிறான், ஆதாமின் மகன் பூமியின் மண்ணை உழுது விதைத்து பின்னர் அறுவடை செய்த தானியங்களையும் காய் கனிகளையும் ஆண்டவனுக்கு படைக்க அவனை ஆண்டவர் ஆசீர்வதிப்பதை இன்னொரு மகன் கவனிக்கிறான், முதல் முதலாக இன்னொரு பாவம் அரங்கேற்றப்படுகிறது தன் சகோதரன் மீது பொறாமை கொண்டு அவனை அங்கேயே வெட்டி கொலை செய்கிறான். முதன் முதலில் மனிதனின் ரத்தம் பூமியின் மீது பாவ செய்கையினால் விழுகிறது இவ்வாறு பாவம் பூமியில் தழைக்கிறது பாவத்தை போக்கும் நிவாரணியாக விலங்குகள் பறவைகள் முதலியவற்றின் ரத்தம் பலியிட ஆண்டவர் கட்டளையிடுகிறார் பாவங்களுக்கேற்ப பலிகள் நிர்ணயிக்கப்படுகிறது. யூதர்கள் அவ்வாறே விலங்குகளையும் பறவைகளையும் மேடைகளை கட்டி அதன் மீது பலியிட்டு தங்களது பாவத்தை நிவிர்த்தி செய்கின்றனர். ஆனாலும் யூதர்களின் பாவம் குறைவதாக இல்லை ஏனெனில் அவர்கள் இன்னும் அதிகமான பாவங்களை செய்து ஆண்டவரை கோபப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

ஆண்டவர் யூதர்களின் பாவத்தை களைய பல தீர்க்கதரிசிகளை அவர்களிடையே எழுப்புகிறார் ஆனாலும் பாவம் பெருகிக்கொண்டே போனது, கடைசியாக நோவா என்கின்ற ஒருவரைத் தவிர பாவம் செய்யாதவன்
மற்றும் ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்படியாதவன் ஒருவனும் இல்லை என்கின்ற நிலைமை உருவாகிறது, அப்போது நோவாவிடம் ஆண்டவர் பூமியை அழிக்கப்போகின்ற விவரத்தை கூறி அதற்க்கு முன் ஜனங்களுக்கு அதைப்பற்றி எடுத்துச் சொல்ல சொல்லுகின்றார், நோவா என்பவர் மக்களிடம் பூமி அழிக்கப்பட போகிறது ஏனென்றால் பாவம் பெருகிவிட்டது என்கின்ற செய்தியை சொல்லுகிறான், அதை நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை, நோவாவிடம் ஆண்டவர் ஒரு பெரிய மதகை உருவாக்கச்சொல்லுகிறார். அதன்படி ஒரு பெரிய மதகை நோவா உருவாக்குகின்றார். அதில் நோவாவின் மகன்கள் மருமகள்கள் என நோவாவின் குடும்பத்துடன் ஊர்வன பறப்பன காட்டு மற்றும் நாட்டு மிருகங்களில் ஜோடி ஜோடியாக அடைக்கப்பட்ட பின்னர் பகல் இரவு என்று 30 நாட்கள் ஓயாத மழை பெய்து பூமி அழிக்கப்படுகின்றது.

பின்னர் உண்டான ஜனமும் தொடர்ந்து பாவத்தில் மூழ்க ஆரம்பித்தது, ஆண்டவர் இம்முறை தனது சொந்த மகனை பூமியின் மீது மனிதனாக பிறக்கச் செய்து அவருடைய பாவமற்ற ரத்தம் பூமியின் மீது விழச் செய்து பூமியில் படிந்துள்ள பாவத்தை போக்க பாவ நிவாரண பலியாக செய்கிறார். இயேசு கிறிஸ்த்துவை சிலுவையில் பாவிகளுடன் பாவியாக கொல்லப்பட்டு பாவம் நிவிர்த்தி செய்யப்படுவதே Good Friday. மனிதர்களின் நலத்துக்காக ஆண்டவன் தனது மகனை பலியாக செய்வதை நினைவு கூறும் தினம், முன் குறித்தபடி மூன்றாம் நாள்
உயிர்த்து எழுந்து உலகில் பரிசுத்த ஆவியானவராக தனது கடமைகளை செய்து வருகிறார். ஆதாமில் தோன்றிய மரணத்தை சிலுவையின் மீது ஜெயித்தார் என்பதை நினைவு கூறும் நாள் ஈஸ்ட்டர் சண்டே என உலக முழுதும் கொண்டாடப்படுகிறது.@@@@@@@@@@@@@@@

4/15/2011

பதில்......கடிதம்

[ எனது கடிதத்திற்கு பதில் கடிதம்]


அன்புள்ள ..........

ஏறக்குறைய 31 வருடங்களுக்குப் பின்னர் உனது கடிதம் வாசித்தேன், கடிதம் கண்டவுடன் உலக அதிசயங்களில் ஏதோ ஒன்றை கண்டுவிட்ட உணர்வு ஏற்பட்டது, அதன் காரணத்தை நீ நன்கு அறிவாய், உன் நிலைமையை பற்றியும் உனது குடும்பத்தாரைப் பற்றிய நினைவே இல்லாமல் நான் தான் உனக்கு பலமுறை தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன், எனது ஒரு கடிதத்திற்கும் பதில் கடிதம் எழுதும் வழக்கத்தை கடைசிவரையில் நீ ஏற்ப்படுத்திக் கொண்டதே இல்லை என்பது காலம் பல கடந்து வயது முதிர்ந்து போனாலும் எனக்கு மிகவும் நன்றாக நினைவு இருக்கின்றது. உனது முதல் கடிதத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து வாசித்தப் பின்னர் ஆச்சரியம் கலந்த ஏதோ ஒரு உணர்வில் உந்தப்பட்டு கடிதத்தை முழுவதையும் ஒரே மூச்சில் படிக்க இயலாமல் துக்கம் என் தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது.

நான் ஒரு துரோகி என்பதை அழகாய் எடுத்துகூறியதுடன் உன் எழுத்துக்களில் கூட உனது ஏமாற்றத்தின் விளிம்பை தொட்டது என்னை கூனி குறுகச் செய்துவிட்டது. எங்கேயோ கண் காணா இடத்தில் உன் பெற்றோருடன் நீ அமைதியாய் வாழ்ந்திருந்த போது காதல் சுனாமியை உன் இதயத்தில் ஏற்படுத்த காரணமாய் நான் இருந்தேன் என்பதும் பிறகு உன் இதயத்தின் அளவிட இயலாத துக்கத்திற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை எனக்கு நாசுக்காக சுட்டிக் காண்பித்து இருந்தாய். அதை நான் மறுக்கவில்லை, அதனால் தானோ என்னவோ எனது வாழ்வில் துன்பம் நிறைந்தே உள்ளது. இன்னும் இந்த நய வஞ்சகனை நினைவில் வைத்திருக்கின்றாயே அதற்க்கு எனது நன்றிகள். வாழ்க்கை என்பது யாருக்கும் அவரவர் விரும்பியப்படி கிடைபதில்லை என்பதை யாவரும் அறிவர். தோல்விகளும் காயங்களும் இல்லாமல் வாழ்க்கை கிடையாது என்பதை நீ அறிந்திருப்பாய். புதிதாக நான் என்ன சொல்லிவிடப் போகிறேன். காலம் கடந்துதான் பல விஷயங்கள் நமக்கு விளங்குகிறது. இதை விதியென்று சிலர் சொல்லுவர். ஆனால் எனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லை, ஒன்று மட்டும் நான் நம்புகிறேன், ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு சிறிய பெரிய எல்லா சம்பவங்களும் நாம் பிறப்பதற்கு முன்பே அவரவர் பெயரில் அட்டவணை தயாரிக்கப்பட்டு விடுகிறது. அவற்றை யாராலும் எதற்காகவும் மாற்றம் செய்வது இயலாத ஒன்றாகி விடுகிறது.

நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
புதிதாக எதையாவது விளங்கிக் கொண்டே இருக்கிறோம், வாழ்க்கை மிகவும் சிறியது அதில் கிடைக்கின்ற பொழுதை வருந்தி கழிப்பது கூட நமக்கு முன் குறித்தவையே. அதனால் யார் மீதும் எதற்காகவும் வருத்தபடுவது அறியாமை. எஞ்சியுள்ள உன் வாழ்நாளில் குதூகலமாகவும் எல்லோரிடமும் அன்பாகவும் இருக்க முயன்று பார், நிச்சயம் வாழ்க்கைக்கு அர்த்தம் விளங்கும். என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் செய்திகள் இருந்தால் மறக்காமல் கடிதம் எழுது, உன் மடல்களை எதிர் நோக்கும்.


அன்பு ..........###########

4/14/2011

கடி தாங்க முடியல
ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு வருகிற விருந்தாளிகள் பொதுவாக திரும்பவும் உடனே போக மாட்டார்கள், அதனால் பல வீடுகளில் அவர்களை அழையா விருந்தாளி என்று கூட சொல்வதுண்டு. வீட்டினுள் படுக்கையறை முதல் எல்லா இடங்களையும் ஒன்று விடாமல் நுழைந்து சுற்றி விட்டு, கடைசியாகத்தான் படுக்கையறைபக்கம் நுழைவது இவர்கள் வேலை. வீட்டில் அனைவரும் எப்போது உறங்குவார்கள் எப்போது விளக்குகளை அணைப்பார்கள் என்று ஒதுங்கி இருந்து கவனித்துவிட்டு பின்னர் ஒவ்வொருவரையும் சத்தம் போடாமல் தொல்லை கொடுப்பது, இரவு நேரங்களில் செந்நீர் குடிக்கும் அரக்க கூட்டம்.

கடினப்பட்டு சேமித்து வைத்த சிவப்புயிரை இலவசமாய் வன்முறையில் பிடுங்கிக் கொள்ளும் அசாதாரணமான அரக்கன் இவன், அரக்கர்கள் ஒன்று கூடி ஒரு பெரிய முடிவெடுத்தனர், இனி தங்களுக்கு பெரிய வலுவான உடலமைப்பு வேண்டாம், சிறிய உடலமைப்பு போதும் மானுடப்பிறவிகளை ஒரு வழி செய்து விடுவோம் என்பதுதான் அவர்கள் எடுத்துக்கொண்ட மிக புத்திசாலியான முடிவு. இத்துனூண்டு ஜன்மம் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் அரக்கர்கள் என்பதால் செந்நீர் அருந்தவே அதிகப்பிரியம். வெறும் செந்நீரை மட்டும் அருந்தி விட்டு போனால் போதாது என்று தங்களை விட மிகச் சிறிய, மனித கண்களுக்கு புலப்படாத, மனிதர்களை துன்புறுத்தும் மற்ற கிருமிகளையும் துணைக்கழைத்து கொள்வது என ஓர் உடன்பாடும் ஏற்படுத்தி கொண்டது அந்த மனித செந்நீர் பருகும் அரக்க கூட்டம்,

மனிதர்கள் எத்தனையோ வகையில் அவைகளுடன் போராடி கோடி கணக்கில் அவைகளை தினம் தினம் அழித்தாலும் அவை மீண்டும் மீண்டும் கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் வரம் வாங்கி கொண்டனவாம். முன் பிறவிகளில் அரசியல்வாதிகளாய் வாழ்ந்து தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிபடுத்த இயலாமல் போன பல மனிதர்களும், உணவில் கலப்படம், பாலில் தண்ணீர் கலந்து பணம் ஈட்டி பின்னர் உயிர் நீத்த மனிதர்களும், பணம் வாங்கிக்கொண்டு மனிதர்களின் கை கால் கழுத்து வயிறு போன்றவற்றை வெட்டி பின்னர் காவல்துறையால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட சமூக விரோதிகளும், ஆறு மணியாகிவிட்டால் குடிக்காமல் வாழ இயலாமல் இறந்து போனவர்களும், இப்படிப்பலரும் செந்நீர் குடிக்க இந்த அரக்க கூட்டத்தில் அரக்கர்களுடன் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அறிய முடிந்தது.

எவரது வீட்டுக்குள் நுழைவதற்கும் விருந்தாளியாக, அல்லது சொந்தகாரராக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என நினைக்கும் இந்த அரக்க கும்பலுக்கு, மாளிகை குடிசை என்கின்ற பாகுபாடெல்லாம் கிடையாது, செந்நீர் மட்டும் அருந்தியே ஆகவேண்டும், இந்த பாழைப்போன கொசு இருக்கிறதே இவைகளைத்தான் சொன்னேன். அரசியல்வாதியின் 'கடி'யாவது தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரியும்வரை தான், ஆனால் இந்த பாழாய்ப்போன கொசுக்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அப்பப்பா என்ன கடி என்ன கடி.


()()()()()()()()()()()()()()()()()()

4/12/2011

அன்புள்ள எனது.....கடிதம்

அன்புள்ள எனது .........

நான் உன்னை பிரிந்த நாளாய் நலமில்லை, நீ அங்கு நலமா, கனவுகளே இல்லாமல் வாழ்ந்து வந்த என்னை விடாமல் பின் தொடர்ந்தாயே, ஒரு நாளா ஒரு மாதமா, ஒரு வருடமாக பின் தொடர்ந்தாய், நீ எழுதிய காதல் கடிதங்களை எடுத்து வந்த தபால்காரரிடம் பெறுவதற்கும் உனது கடிதங்களை என் பெற்றோரிடமிருந்து மறைக்கவும் பின்னர் பாதுகாத்து படிக்கவும் ஒவ்வொருமுறையும் நான் பட்ட கஷ்டம் அப்பப்பா... அதை திறந்து படிக்க வீட்டில் யாருமில்லா ஏற்ற சமயத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் அந்த இடைவெளியில் கடித உருவத்தில் கம்பளி பூச்சாக நீ என்னை நெருடி எனது குழந்தைத்தனமான இயல்பை கள்ளத்தனமாக மாற்றினாயே. அத்தனை விடாப்பிடியாக என்னை நீ தொடர்ந்தது நிச்சயம் காதலினால் அல்லவென்று அந்த இளமை வயதிலும் என் உள்மனம் என்னிடம் விடாமல் கூவிக்கொண்டே இருந்ததே.

உன்னுடன் பழகிய அந்த சில மாதங்கள் என் மனதில் உன்மீது மாறாதக் காதலை ஏற்ப்படுத்தியதே, இவை எல்லாம் உண்மை என்பதை நீ உனக்கு நிரூபித்துக் கொள்ள என்னை காதலித்தது போல பாவனை செய்தாய் என்பதை பின்னால் அல்லவா பேதை நான் உணர்ந்தேன். நீ என்னுடன் பழகிய அந்த சில மாதங்களில் என் ஸ்பரிசத்தை நீ விரும்பவில்லை, என் பெண்மையை கிளுகிளுக்க வைக்க எவ்வித முயற்ச்சிகளையும் செய்ததில்லை. காதல் என்ற உணர்வை எனக்கு முதன் முதலில் உணர வைத்தாயே. காலம் பல கடந்த பின்னர் இன்று அந்தக் காதல் சாகவும் முடியாமல் வாழவும் இயலாமல் என்னை வம்பு செய்கிறதே, என் மனதை நான் கேட்பதுண்டு 'இன்னும் நீ அவனை காதலிக்கின்றாயா' என்று என் மனம் என்னிடம் அழுதுகொண்டே கேட்கிறது 'சாகத்தான் எண்ணுகிறேன் இயலவில்லை, வாழத்தான் எண்ணினேன், கானல் நீராகியது, நான் என்ன செய்வதென அறியாமல் காலமெல்லாம் வேதனைப்படுகிறேன்' என்கிறது.

உன் நிலை என்னவென்று என்னால் யோசித்து ஒரு முடிவிற்கு வர இயலவில்லை, ஒன்றுமட்டும் உறுதி, என் உருவம் அல்லது என் நினைவுகள் வந்து உனது மனதில் குற்ற உணர்வுகளை ஏற்ப்படுத்த தவறாது. திருமணமாகி மனைவி குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் நமது நினைவுகளை குறைத்திருக்கும், உனக்கு என்னிடம் நிச்சயம் காதல் ஏற்ப்படவில்லை, உனது காதலி திருமணமாகி உன்னைவிட்டு அதிக தூரம் பிரிந்து போனாள் என்பதால் ஏற்பட்ட உனது துயர் அகற்றும் இன்னொரு பெண்ணாக என்னை வந்தடைந்தாய், நாம் இருவரும் பணி செய்த நிறுவனத்தில் பணி புரிந்த பெண்களை பற்றிய கட்டுக்கதைகள் நிறையவே பொழுதை போக்குவதற்கு பேசப்பட்டதில், நான் புதிதாய் அந்நிறுவனத்தில் சேர்ந்ததினால் என்னைப்பற்றிய கிசு கிசுக்கள் சற்று சுவாரஸ்யமானதாக பேசப்பட்டதை நீ அறிந்து கொண்டு அவை உண்மைதானா என்றறிய என்னிடம் காதல் மொழி பேசி மயக்க வைக்க முயன்றாய் என்பதை அறிந்தபோது நான் உன் மீது வைத்திருந்த மரியாதை தகர்ந்தது.

அடிக்கடி நீ குறிப்பிடுவாயே, ' உடம்பை தொடுகின்ற ஆசையில் பழகவில்லை' என்பாயே. என் உடம்பை நீ தொடும் ஆசையில் பழகியிருந்தால் கூட நான் உன்னிடமிருந்து ஒரு சில நிமிடங்களில் விலகியிருந்திருபேன். மனதை தொட்டாயே அதற்க்கான அத்தனை தகுதியையும் காட்டினாயே. காதல் வலைக்குள் என்னை சிக்க வைத்துப் பின் விதி வசத்தால் நாம் பிரிந்தோமே. அப்படி பிரிந்ததில் உனக்கொன்றும் காயம் ஏற்ப்பட்டிருக்காது, ஒருசமயம் அவ்வாறு ஒரு பிரிவை நீ எதிர்பார்த்திருந்திருப்பாய். அந்த பிரிவு கூட எத்தனை அழகாய் எனக்கு சம்பவித்தது. காலமெல்லாம் என் இறைவனுக்கு நான் நன்றி கடன்பட்டவள் என்பதை இவ்வாறு பல சம்பவங்கள் எனக்கு உணர்த்துகின்றன.

உனக்கு நிச்சயம் பெண்குழந்தை இருக்கவேண்டும் அவளுக்கும் திருமணம் செய்திருப்பாய், தகப்பனின் வேதனைகளை இப்போது உணர்ந்திருப்பாய், நிச்சயம் அந்த வேதனை வழிகளை நீயும் கடந்திருப்பாய். என்னைப்பற்றிய நினைவுகளும் சம்பவங்களும் உன் கண் முன் திரைப்படம் போல ஓடியிருக்கும். என்னை அடிக்கடி நினைவுபடுத்தியிருக்கும், அதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி உன் நினைவு எனக்கு ஏற்ப்படுகிறது என்று நம்புகிறேன். உன்னை கடைசியாக பார்த்த உடையுடன் என் கண் முன் வந்து நிற்கிறாய், நீ அடிக்கடி உபயோகிக்கும் கருப்பு நிற பான்ட்டும் நீலநிற முழுக்கைச்சட்டையை முக்கால் கை தெரிய மடித்துவிட்டுக்கொண்டு தொடர்வண்டி நிலையத்தில் எனக்காக காத்திருப்பாயே..... என் கண் முன் நிழலாடுகிறது உனது பழைய உருவம்.

எனக்கு உன் மீது ஏக்கம் இல்லை. கோபம் இல்லை, காதலுமில்லை, இவை யாவற்றையும் தாண்டிய ஓர் உணர்வு, என்னால் வார்த்தைகளால் வருணிக்கத் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழிந்துவிட்டதால் உன் உருவம் நிச்சயம் மாறி இருக்கும், நீ இப்போது எப்படி இருப்பாய் என்று கற்பனை செய்து பார்க்கிறேன், என் கற்பனையில் வரும் முகங்களைஎல்லாம் ஒவ்வொன்றாய் மனக்கண்ணில் பாரத்துவிட்டு இறுதியில் இப்படியெல்லாம் இருக்கப்போவது நிச்சயமில்லை என்ற சலிப்பும் ஏற்ப்படும். நீ எத்தனை நல்லவன், நீ எத்தனை படிப்பாளி, நீ எத்தனை துடிப்பானவன், உன்னுடன் நான் பழகிய அந்த நாட்கள் இன்று நினைத்தாலும் அருமை......எல்லா காதலர்களும் கடற்கரைக்கு போவார்கள், நாமும் சென்றோம், ஆனால் அந்த அலைகள் கரையை தொடும் இடத்தில் நாமிருவரும் சனத்திரளுள் அமர்ந்து கொண்ட போது நீ என்னுடன் பேசிய உரையாடல் போல மற்ற காதலர்கள் பெரும்பாலும் பேசியிருக்க மாட்டார்கள் என்பதை நான் பல காலம் கழிந்த பின்னரே அறிந்தேன்.

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஏன் வந்தது என்கின்ற கேள்வியை என்னிடம் கேட்டாய் நான் பதில் சொல்ல இயலாமல் விழித்தபோது அதை பற்றிய விரிவுரை தந்தாய், கப்பல் எப்படி நடுக்கடலில் மூழ்காமல் மிதக்கிறது என்றாய், நான் உன் சிகப்பு இதழ்களையே பார்த்திருந்தேன், கடற்காற்றில் கூத்தாடிய முன் நெற்றி மீது அழகாக விழுந்த ரோமங்களை ஏக்கமுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நீயும் நானும் பழகிய அந்த நாட்களை அழகிய தொகுப்பாக எழுத ஆசைப்படுகிறேன். எனக்குள் கிடக்கும் அந்த எண்ணக் கவிதைகளை எழுத்தின் மூலம் பதிக்க விரும்புகிறேன். ஒருசமயம் நீ படித்தால் அல்லது நாம் இறப்பதற்கு முன்னால் சந்திக்க நேர்ந்தால் இவற்றை உனக்கு காண்பிப்பேன். இல்லையென்றால் சிறு காவியமாய் இருந்துவிட்டு போகட்டும்.

உன்னை என்றும் மறவாத

நான்


@@@@@@@@@@@

4/10/2011

படித்தால் மட்டும் போதுமா
எதிர் வீட்டுக்காரனையும் அடுத்த வீட்டுக்காரனையும் பார்த்து அவசரப்பட்டு கோபத்தில் அல்லது....பொறாமையில் ....வாய்தவறி ஏதாவது இடக்கு முடக்கா பேசிவிட்டால் அது நமக்கு நாமே வச்சுகிட்ட ஆப்பாக மாறுவது எப்படி, அதற்க்கு நல்ல உதாரணம்; தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியுடன் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிபொருப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், எதற்கெடுத்தாலும் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' என்று குறிப்பிட்டு தனது காழ்ப்பை வெளிப்படுத்தியதன் விளைவுத்தானா எந்த முக்கிய கட்சிகளுடனும் கூட்டு சேராமல் தனித்து நின்று போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது என்று நினைக்கத்தோன்றுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மதவாதிகளுடன் கூட்டணி ஏற்ப்படுத்திகொண்டு ஆட்சி பொறுப்பை பகிரும் நினைப்பு இருந்தாலும் இருக்கலாம், எப்படி பார்த்தாலும் தான் உபயோகித்த ஆப்பு தனக்கே திரும்பி கேள்வி கேட்டால், அதாவது ருத்ராட்ச பூனைகளுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்து கொண்டாலும் அதுவும் 'மைனாரிட்டி' என்பதை நிருபித்துவிடுமே. ஆனால் எதிர்கட்சியின் தலைவர் நிச்சயம் அதை எடுத்து சொல்லுவார், எங்களை 'மைனாரிட்டி தி.மு.க' என்று சொன்னவர்கள் இப்போது வேறு கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது மட்டும் 'மைனாரிட்டி' இல்லையா என்று.

மைனாரிட்டி என்பதன் பொருள், தான் எப்போதுமே மைனராகவே [செல்வி, அல்லது 'திரு'வில் 'மதி' இழந்து நிற்ப்பதை தனக்குத்தானே அடிக்கடி நினைவுப்படுத்தி கொள்கின்றாரோ என்னவோ தெரியவில்லை] இருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்வதோ. அடுத்தவர்களை கேலி பேசும்போது, தன்னைப்போல கேலி கிண்டல் பேசித் திரிபவர்கள் தன்னையும் கேலி பேசக் மாட்டார்களா என்று சற்று யோசித்துப் பார்த்தால் அடுத்தவர்களை விமர்சிக்க அல்லது கேலி பேசி கிண்டலடிக்கத் தோன்றாது. இவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அச்சகத்தில் 'ப்ரூப் ரீடர்' பணிக்கு மிகவும் பொருந்தியிருப்பாரோ. அடுத்தவரின் மீதுள்ள வெஞ்சினத்தை வேறு வார்த்தைகளால் தொடுக்கத்தெரியாத பேதைதான் கிண்டல் அடிப்பதும் கேலி செய்வதுமாக இருப்பார்.

அரசியல் ஆசான் பெரியாரிடமும் அண்ணாவிடமும் தான் கற்று வந்த பல அரசியல் பாடங்களில் அரசியல் ஒழுக்கங்களையும் கற்று தேர்ந்தவர் கலைஞர், ஆசான் இல்லாத குயில் பாட்டை எழுதிய பாரதிக்கு கூட பல முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் குருக்குலமாக அமைந்தது. அரசியல் ஒழுக்கங்களை கற்றரியாதவர்கள் நடத்துகின்ற அரசியலில் ஒழுக்கத்திற்கும் நியாயத்திற்கும் எங்கே இடமிருக்கப்போகிறது. தந்தை பெரியார் தன் இயக்கத்தை செவ்வனே வளர்க்க எத்தனையோ விதமான அரசியலை கையாண்டார், அதில் ஒன்று மறைந்த எம்.ஜி. ஆர் அவர்களை தன் அறிவினாலும் அன்பினாலும் கவர்ந்து கட்சிக்காக பல மேடைகளில் எம்.ஜி.ஆரை வரவழைப்பதும் அங்கே பேசப்படும் கழக சீர்திருத்த கொள்கைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வழிவகுத்தது. நடிகர்களை அரசியல் மேடைக்கு வரவழைத்த பெரியாரின் துவக்கம் இன்றுவரை தொடருகிறது.


எம்.ஜி.ஆர் என்றாலே பெரிய ஜனத்திரள் அவரை மேடைகளில் காண ஒன்று திரளுவதும், அண்ணா அவர்களின் ஒப்பற்றப் பேச்சாற்றலாலும் கலைஞரின் திறமையான உரைநடைகளாலும் மக்கள் கவரப்பட்டு மேடைப்பேச்சுகளை கேட்க்க திரள்வது வழக்கம், அதனால் கழகம் வளர்க்கப்பட்டது, மக்கள் இவர்களுக்காகவே கூட்டங்களுக்கு படைஎடுக்கத்தவருவதில்லை. இருபத்து ஐந்து கால காங்கிரசின் உறுதியான பிடியிலிருந்த இந்திய திருநாடும் அதன் ஒப்பற்ற தலைவர்களிடையே திராவிடக் கழகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வெற்றிபெற்றது என்றால் அதற்கான உழைப்பும் அரசியலும் அதை நடத்திச் சென்ற பாங்கும் கணக்கிலடங்கா. காங்கிரசின் ஒரே மாபெரும் எதிர் கட்சியாக உருவெடுத்த தி.மு.க இயக்கம் மற்ற மாநிலங்களின் அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்தது.

இத்தகைய ஒரு நடவடிக்கையும் இல்லாமலேயே அரசியல் நடத்த வேண்டுமெனில் அதற்க்கான நாகரீகம் எங்கிருந்து வந்துவிடப் போகிறது. அரசியல் பாடங்களை பாட புத்தகத்தில் படித்து அறிந்து செயல்படுத்தினால் இப்படித்தான் அரசியல் நடத்தமுடியும். அறியாமை இருள் இன்னும் முழுவதுமாக அகன்றுவிடவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளின் நடமாட்டம் நமக்கு உணர்த்துகிறது. என்னதான் படித்தாலும், ஆங்கிலத்தை விளாசி பேசினாலும் ஒழுக்கம் என்பது வார்த்தைகளில் இல்லாதபோது, நாவை எவ்வாறு உபயோகிப்பது என்கின்ற நாகரீகம் அறியாமல் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு போகின்ற இவரை காணும்போது 'இவரெல்லாம் ஆங்கிலம் படித்து, பல ஆங்கில நூல்களைப் படித்து என்ன பயன் என்கின்ற கேள்வி எழுகிறது.

இதற்க்கு முன்பிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் யாரேனும் இத்தனை தரமற்ற வார்த்தைகளை மக்கள் முன் மேடைகளிலும் வேறு ஊடகங்களின் வாயிலாகவும் பேசியிருக்க கூடுமா என்றால் இருக்கவே முடியாது என்பதை உறுதியாக கூற முடியும். குழாயடிச் சண்டையை போல விட்டால் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து அடித்துக் கொள்வாரோ என்று கூட எண்ண வைக்கிறது. சண்டையிடுவதற்கு மாமியாரும் நாத்தனாரும் கிடைக்காமல் போனதன் விளைவுதானோ என்னவோ, ஒலிபெருக்கியிலும் மேடையிலும் திட்டி தீர்க்கச் செய்யும் ஆவேசம் தோன்றக் காரணம். இதில் அப்பாவி பொதுமக்கள் விழி பிதுங்கி நின்று வாயினுள் ஈக்கள் போகும் அளவிற்கு வேடிக்கை பார்க்கின்றனர். அல்லது உடலினுள் வேறு ஏதேனும் கெட்ட ஆவிகள் புகுந்து கொண்டு துவம்சம் செய்விக்க சொல்லுகிறதா.


XXXXXXXXXXXXXXXXXX

4/09/2011

வாழையடி வாழையாக..சுப காரியங்களுக்கு அடையாளமாக வாழை மரத்தை வாசலில் கட்டுவதும் தோரணங்களில் தென்னங்குருத்துகளை கட்டுவதும் மாவிலை தோரணங்கள் கட்டுவதும் ஏதோ சம்பிரதாயத்திற்கு மட்டும் அல்ல, வாழை மரம் எப்போதுமே தனது கன்றுகளை தனது வேரிலேயே விளைவிக்கிறது, தென்னை காலங்களை கடந்து ஓங்கி வளர்ந்து எல்லோரையும் குளிர்விக்கும் இளநீரையும் தேங்காயையும் தன் தலைமீது சுமந்து தருகிறது, மாவிலை என்பது முக்கனிகளில் ராஜக்கனியாக திகழ்கிறது, இவைகளைப்போல மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதும் இதன் உள்நோக்கம், இதுமட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்கள், அர்த்தங்கள் இவற்றிற்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழைமரம் தனது கன்றுகளை தனது வேரிலேயே உற்பத்திசெய்து பின்னர் மரமாக வளர்ந்து முக்கனிகளில் ஒன்றாகிய வாழைக்குலையை நமக்கு அள்ளிக் கொடுத்து விட்டு பின்னர் அதன் ஒவ்வொரு உறுப்பும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயனுற வாழ்ந்து மறைகிறது. அறிய பண்புகளை உள்ளடக்கிய இயற்க்கை நமக்கு செய்வதெல்லாம் நன்மையன்றி தீமை ஏதுமில்லை. மனிதர்களும் தாங்கள் வாழுகின்ற காலத்தில் மா போல இனிய கனிகளைக்கொடுத்து வாழைப்போல தன்னையே மற்றவர்களுக்கு அள்ளி வழங்கி, தென்னை போல ஓங்கி, உயர்ந்து நின்று உபகாரம் செய்வதே இவை நமக்குச் சொல்லும் பாடம்.தனி மரமாக நின்றாலும் வேம்பூவும் அரச மரமும் கொடிய கோடையில் குளிர் நிழலை கொடுப்பதோடு பல மருத்துவக் குணங்களையும் உடையது என்பதை இக்காலத்தவர்கள் எத்தனை பேர் அறிந்துள்ளனர். இவ்வாறு இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நன்மைகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி செய்து வருவதோடு, காற்றில் கலந்திருக்கும் நச்சுக்காற்றை, மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றி தூய ஆக்சிஜனை நமக்கு சுவாசிக்க கொடுப்பதற்கு ஒவ்வொரு நொடிபொழுதும் அயராமல் தங்கள் பணி செய்து வருகிறது.

மனிதர்கள் வாழையைப்போல் கூடி வாழ்ந்து நன்மைகளை ஓய்வின்றி செய்யவேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வரும் நமது கலைஞரும் அவரது தோளுக்கும் உயர்ந்த பிள்ளைச் செல்வங்களும், பேரன் பேத்திகளும் என்றால் அது மிகையாகுமா? ஆலமரம் போல் வளர்ந்திருக்கும் கலைஞரின் குடும்பத்தை பார்த்து, 'குடும்ப ஆட்சி' என்று சொல்லால் மட்டுமல்ல வேலிக்காத்தான் முள் குத்துவது போல உபயோகமற்ற முட்செடிகள் நச்சுக்காற்றை வெளியிடுவதை பார்க்க கேலிக் கூத்தாகவே தோன்றுகிறது. வேலிக்காத்தான் முட்செடி வளரும் நிலம் பாழ், வேலிக்காத்தானின் அருகிலே வேறு மரங்களோ செடிகொடிகளோ வளருவதில்லை, அதன் நச்சுத்தன்மை விலங்குகள் பறவைகள் முதலியவற்றிற்கு உபயோகமற்றதால் பறவைகள் அதில் கூடு கட்டுவது கிடையாது. அதன் நச்சுக்காற்றை சுவாசிப்பதனால் ஏற்ப்படுகின்ற தீமைகளை எவரேனும் அறிவாரா?


வாழ்ந்திடின் வாழைப்போல தென்னைபபோல, ஆலமரம் போல, கலைஞரைப்போல குடும்பத்துடன் வாழ்ந்து மற்றவர்க்கு நன்மையன்றி யாருக்கும் தீமை செய்யாமல் வாழ்தலே சிறப்பு என்பதை வாழையும் தென்னையும் ஆலமரமும் நமக்கு உணர்த்துவது போல கலைஞரின் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்வதை கண்டு பொறுக்க இயலாமல் வேலிக்காத்தான் முட்செடிகள் விஷ வாயுவை நச்சுக்காற்றை பூமியிலும் மக்களின் சுவாசத்திலும் கலக்கசெய்வதை மக்களால் புரிந்து தெளிந்துகொள்ள இயலாதா. வேலிகாத்தான் வேலிக்குகூட உபயோகமில்லை, ஏனெனில் அது வளரும் இடமெல்லாம் விஷத்தன்மை நச்சுத்தன்மையையே காற்றில் பரப்பும் என்பதை நாம் புரிந்துகொள்வது எப்போது, வெட்டித் தீயிலிட்டு கொன்றால் மட்டுமே அதன் விஷம் பரவாது என்பதை எத்துணை பேர் அறிவர். அதன் புகை நுரைஈரல்களுக்குச் சென்றால் புற்று நோய்க்கு உரம். நச்சு எது நன்மை எது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களை நாம் கைவிட்டால் அதன் துன்பங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் பின்னர் யாராலும் காப்பாற்ற இயலாமல் காரியங்கள் சோகத்திலும் வேதனைகளிலும் தான் நடந்தேறும்.

வாழையடி வாழையாக கலைஞரின் குடும்பம் தமிழக மக்களுக்கு தொண்டாற்றப்போகிறது அந்த இன்பக்காற்றை நாம் சுவாசித்து சுகம் பெறப்போவதும் திண்ணம்.


><><><><><><><><><><

4/08/2011

உள்ளது உள்ளபடி
காலையில் படுக்கையை விட்டு எழுந்து முதல் வேலையாக செய்தித்தாள் படித்தால்தான் வேறு பணிகளில் மனது முழுவதுமாக ஈடுபட முடியும் என்ற பழக்கம் பலருக்கு உண்டு, என் தந்தையாரும் அவரது அண்ணன் எனது பெரியப்பாவும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இருவருமே எனது முதல் குருக்கள், என் பெரியப்பா முரசொலியை வாங்கி அதில் கலைஞர் எழுதும் கடிதத்தை படிப்பது முதல் வேலை, ஆனால் என் அப்பா முரசொலி வாங்கும் அளவிற்கு வருமானமில்லாமல் வறுமையில் வாழ்ந்ததினால், காலையில் எழுந்து அருகே இருக்கும் தேநீர் கடைகளில் கிடைக்கும் தினத்தந்தியை படிப்பார், பின்னர் அங்கு தினமும் கூடுகின்ற வாடிக்கைகாரர்களிடம் அன்றைய செய்திகளைப்பற்றிய அலசல் நடக்கும், என் பெரியப்பாவும் என் தகப்பனாரும் மெட்ராஸ் டெலிபோன்ஸில் [அக்காலத்தில் நடுவன் அரசுப்பணி] பணி செய்துவந்தனர், என் அப்பாவிற்கு திரையுலகில் பெரியதாக எதையோ சாதித்துவிடவேண்டும் என்கின்ற வெறி பிடித்துக்கொண்டு ஆட்டிப்படைத்ததால் அதைபோன்ற பல நல்ல பணிகளை உதறித்தள்ளிவிட்டு திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான நண்பர் கிருஷ்ணன்[பஞ்சு]விடம் நினைக்கும்போதெல்லாம் சென்றுவிடுவதுடன் 'அவர் வந்து பார்க்கச்சொன்னார்' என்று வேலைகளை சற்றும் மதிக்காமல் சென்றுவிடுவார்.

என் பெரியப்பா அங்கேயே பணி செய்து ஓய்வும் பெற்றார், எப்போதாவது அருகில் இருந்த என் பெரியப்பாவின் வீட்டிற்க்குச் சென்றால் என் பெரியப்பாவும் எனது அப்பாவும் முரசொலியில் வந்த செய்திகளைப்பற்றியும் கலைஞரின் சொல் விளையாட்டுக்களையும் அவரது திறைமைகளையும் அதிகமாக பேசுவதுண்டு என்னையும் உடன் அழைத்து போகும்போதெல்லாம் அவர்களது உரையாடல்களை நான் உற்று கவனிக்கத் தவறியதில்லை. எங்களது குடும்பத்தார் அனைவரும் [ஒரு சிலர் விதிவிலக்கு, காங்கிரசுக்குத்தான் ஒட்டு போடுவார்கள்] தி.மு.க. உருவாகி தேர்தல்களில் போட்டியிடத்துவங்கிய காலம் முதல் அவர்களது இறுதி ஓட்டுவரையில் தி.மு.காவிற்க்கே போடுவது வழக்கம். கலைஞருடன் பழகிய நாட்கள் பற்றி என் அப்பாவிடம் நான் கேட்டு அறிந்ததும் உண்டு, சில சம்பவங்களில் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது பற்றி என் அப்பா என்னிடம் கூறியதும் உண்டு.

நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரையில் எனக்கு தற்போது வயது 54, இதுவரையில் எனது ஓட்டுக்கள் அனைத்தும் தி.மு.கவிற்கே ஆனால் இம்முறை தி.மு.க கட்சியின் கூட்டணியான காங்கிரசுக்கு எங்கள் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு எனது முதல் வாக்கு பதிவு செய்யவிருக்கிறேன். கலைஞருடன் நெருங்கி பழகி கழகத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு கலைஞர் மற்றும் அண்ணா போன்றவர்களின் எழுத்து மற்றும் திறமைகளால் வியந்து அக்கட்ச்சியின் மீது அதிகமாக ஆர்வம் இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் எவரும் தி. மு. கவில் உருப்பினராகியது கிடையாது.

நாட்டில் பலர் தாங்கள் எந்த கட்சிக்கு ஒட்டு போடப்போகிறோம் என்பதை வெளியே உள்ள நபர்களிடம் சொல்வதற்கு தயங்கி, 'எந்த கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்' என்கின்ற கேள்வியையே எவரும் எவரிடமும் கேட்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாகியதன் விந்தைதான் என்னவோ புரியவில்லை. பரிச்சயமே இல்லாத நபரிடம் பதில் சொல்வதற்கு தயங்கினால் கூட நியாயமான காரணம் ஏதேனும் இருக்கலாம் என்று நம்பலாம், ஆனால் தெரிந்தவர்களிடம் கூட சொல்லத்தயங்கும் அதிசயம் நமது நாட்டில் மிகவும் அதிகம். வயதை குறைத்து சொல்வதில் கூட பலரும் இத்தகைய நிலையிலேயே உள்ளனர், நடிப்புத் தொழிலை உடையவர்கள் உண்மை வயதை மறைத்தாலாவது அதில் நியாயம் உண்டு, எல்லோருமே எல்லோரிடமும் உண்மை வயதை மறைப்பதற்கு என்ன காரணம் என்பதும் விந்தைதான்.
எனக்குத்தெரிந்த மிகவும் வயதான முதியவர் ஏறக்குறைய 98 வயதிருக்கும் அவர் தனது பிறந்தநாளை இறுதிவரையில் கொண்டாடிவந்தார் அவரிடம் உங்களுக்கு என்ன வயது என்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேட்டேன், எனக்கு வயது 89 என்றார். நான் அறிந்துகொண்டவரையில், இதில் ஒவ்வொரு தனி நபருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக அறிந்து கொள்ளமுடிந்தது. எல்லோருமே தங்களது வயதை குறைத்து சொன்னாலும் அதற்க்கு சொல்லப்படும் பல காரணங்கள் ஏற்ப்புடையதாக இருப்பதில்லை. அதே நிலைமைதான் 'இம்முறை எந்த கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்' என்று கேட்டால் பதில் சொல்வதன் தயக்கத்திற்கும் காரணமாக கூறுகின்றனர். உள்ளதை உள்ளபடி பேச வேண்டிய இடங்களில் பேசினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்பது விளங்காத ஒன்று.


&&&&&&&&&&&&&&

4/06/2011

நடிகை திருமதி சுஜாதா -அஞ்சலி


நடிகை சுஜாதா நான் ரசிக்கும் நடிகைகளில் ஒருவர், மிகவும் அதிஷ்டகாரர் எடுத்த எடுப்பிலேயே திரு கே. பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர், அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவருடைய முதல் திரைப்படம் வெளியாகி பலராலும் புகழ்ச்சியின் உச்சியில் பேசப்பட்டார், திரு பாலச்சந்தர் என்றாலே பெமினிஸ்ட், [பெண்ணியவாதி] என்ற முத்திரையுடன் முதல் முறையாக நடிப்பவர்களை உருவாக்கும் சிற்பி என்றும் [ஸ்ரீதருக்குப் பின்னர்] கருதப்பட்டவர் என்பதாலோ என்னவோ பட்டை தீட்டிய வைரமாக நடிப்பின் எல்லைக்கே சென்றவர் திருமதி சுஜாதா அவர்கள்.

எந்த கிசு கிசுவிற்கும் அவர் இடம் கொடுத்ததில்லை என்று நிச்சயமாக சொல்லலாம், நல்ல கதைகளமும் அதற்கேற்றார் போல் இயக்குனர்களும் இருந்த காலம். அவரது தமிழ் திரைப்படங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையுமே நான் பார்த்துவிடுவதுண்டு. திரு பாலச்சந்தர், திரு பீ. மாதவன், திரு கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுக்கு பெண்கள் புதிதாய் நடிப்பதற்கு வந்துவிட்டால் தங்கள் கற்பனையில் கண்ட நாயகியை 99% அப்படியே பதிவு செய்துவிடும் வல்லவர்கள். அதில் திருமதி சுஜாதாவிற்கு நடிப்பு கைவந்த கலை. அவரைப்பற்றிய எந்த துணுக்குச் செய்தி பத்திரிகையில் இருந்தாலும் தவறாமல் படிப்பது என் வழக்கம்.

ஆரம்ப காலத்தில் தான் வாழ்க்கையில் மிகவும் வறுமை நிலையில் இருந்ததாக அவன் கூறியிருந்தார், மாற்றி கட்டும் ஒரு சேலையோ அடுத்தவேளை உணவோ இன்றி இருந்த சமயத்தில் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் திரு பாலச்சந்தர் அவர்களின் அலுவலகம் சென்று ஸ்க்ரீன் டெஸ்ட் செல்ல நேர்ந்தபோது மாற்றுடை இல்லாமல் தான் அவதியுற்றதை கூறிய போது நெஞ்சம் நெகிழ்ந்தது. அவர் இலங்கையில் பிறந்ததும் அவரது அப்பா மருத்துவர் என்றும் விரைவிலேயே காலமாகிவிட்டார் என்பதும் அதனால் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வந்து பிழைக்க வழி தேடியதையும் அவரது பேட்டிகளில் நான் படித்து, கேட்டதுண்டு. அவரைவிட வயதிலும் நடிப்புத்துறையிலும் முதிர்ந்தவர்கள் எத்தனையோ பேர் நலமுடன் வாழ்ந்திருக்க இந்த பெண்மணி இத்தனை சீக்கிரத்தில் காலமானது நெஞ்சை வேதனையடையச் செய்கிறது.

'தானுண்டு தன் வேலையுண்டு' என்கின்ற அவரது பழக்கவழக்கம் திரைப்படத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள் நன்கு அறிவர். ஆரம்ப காலத்தில் ஜெயகர் என்பவற்றின் வீட்டில் குடியிருந்தபோது ஜெயகருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து, இரண்டு மகன்களுக்கும் தாயானார் என்பது வரையில் அவரைப்பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து படித்து அறிந்து கொண்டேன், அதற்க்கு பின்னர் பல ஆண்டுகளாக அவரைப்பற்றிய செய்திகள் அதிகம் ஏதும் வெளியிடப்படவில்லை, இன்றைய செய்திகளில் அவர் பேஸ் மேக்கர் பொருந்தியிருந்ததும் அது பழுதடைந்து சில தினங்களில் இறந்தார் என்பதும் கேட்டபோது நெஞ்சின் வேதனை அதிகரித்தது, மலையாள உச்சரிப்புகளுடன் அவர் தமிழைப் பேசி நடித்தாலும் நடிப்பில் சாவித்திரி, பத்மினி என்பவர்களின் வரிசையில் சுஜாதாவும் சிறந்த நடிகை என்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


&&&&&&&

4/04/2011

ஓட்டளிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்


அந்த காலத்தில் அதாவது ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம்கடைக்குசென்று ஒரு ஜோடி கால்அணி அல்லது செருப்பு ஒரு ஆளுக்கு வாங்கி வருவதே பெரிய விஷயம், அந்த செருப்பை முடிந்த வரையில் திரும்ப திரும்ப தைத்து போட்டுக்கொள்வதும் எங்கும் பலரவலாக காணப்படுகின்ற சாதாரண நடைமுறை பழக்கமாக இருந்தது, ஆனால் இந்த காலத்தில் அதே மக்கள் ஒவ்வொருவக்கு ஏறக்குறைய பத்து ஜோடி செருப்புகள் ஷூக்கள் வாங்குகின்றனர். இதனால் பலவித செருப்புகள் ஷூக்கள் அங்காடிகளில் நிரம்பி வழிகிறது. பொதுவாக யாரும் செருப்புக்களை தைத்து பலமுறை போட்டுக் கொள்ளுவது குறைந்தே காணப்படுகிறது.

அக்காலத்தில் சிறிய பையன்கள் அரைகால் சட்டையும் பள்ளிக்கூட படிப்பு முடிந்த பின்னரே முழுக்கால் சட்டை அணிவதும் வழக்கமாக இருந்தது, வீடுகளில் இருக்கும் ஆண்கள் 'கைலி' என்ற லுங்கியை அணிந்து கொள்வர், பெண்கள் அரைப்பாவாடை அணிவதென்பது பத்து வயதிற்கும் கீழ் இருப்பவர்களே, அதிலும் சில குடும்பங்களில் எந்த வயதிலும் முழுப்பாவாடையும் சட்டையும், பன்னிரண்டு வயதிற்குமேல் அரைதாவாணி, பின்னர் சாகின்ற வரையில் புடவை, தென்னகத்தில் சில பெண்கள் சாக்கெட்டு என்கின்ற மேல் உடையை அணிவதென்பது கிடையாது, பெரும்பாலும் வயதில் மூத்தவர்களும் கிராமத்தில் வசிப்பவர்களும் வேட்டி சட்டை அணிந்து நிச்சயமாக மேல்துண்டு அணிந்து கொள்வார்கள்.

இன்றைக்கு ஷாட்ஸ் என்பது வாலிபர் முதியோர் என்று அரை கால்சட்டை அணிவது சகஜமாகி பெண்கள் எந்த வயதிலும் அரைப்பாவாடையும் சூடிதார் அணிவதும் வீட்டில் இருக்கும் எல்லா நேரத்திலும் மேக்சி அல்லாது இரவுஉடை அணிவதும் என்று மாறி விட்டது. இப்படி எல்லா விதத்திலும் மாற்றங்களை சமுதாயம் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு தனிமனித விருப்பு வெறுப்புக்களில் எவ்வித பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கவனிக்கும்போது அது ஓட்டளிப்பதில் தான் வெளிப்படையாக காண முடிகிறது, வெள்ளைக்காரனிடமிருந்து சுதத்திரத்தை மிகவும் கஷ்டப்பட்டு பெற்றிருந்ததாலேயோ என்னவோ அதன் தாக்கம் மக்களிடம் இரண்டு தலைமுறைவரை, அதன் தேவையை உணர்திருந்ததே மக்கள் ஒட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்து தாங்கள் ஓட்டளித்தநபர் வெற்றி பெற்று விடுவாரா என்று ஆர்வத்துடன் எதிர்பாத்திருந்தனர்.

ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மேன்மை புரிவதற்கு வழியில்லை. அதைப்பற்றி யார் எடுத்து சொன்னாலும் செவிகொடுத்து கேட்கின்ற பொறுமை இல்லை, அதை அறிந்துகொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது பெரும்பாலோரின் எண்ணமாக இருக்கிறது. இதனால் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்கும் ஓட்டளிப்பு இன்று நலிந்துபோய் 45 விழுக்காடு ஓட்டுக்கள் பதிவானாலே மிகபெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஜனயாகத்தை சிலர் தங்கள் சொந்த நலனுக்கு உபயோகித்து லாபம் சம்பாதிப்பதும் இந்நிலைக்கு மிகப்பெரிய காரணம். இதற்கெல்லாம் தீர்வு, தனிமனித சுயநலம் இல்லாத பொதுநல தொண்டிர்க்கென அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக ஓட்டு கேட்டால் மக்களை திசை திருப்ப இயலும்,

அரசியல்வாதியாக மாறினால் அல்லாது ஜெயித்து பதவி கிடைத்தால் தனக்கு என்ன லாபம் என்கின்ற கணக்குப்பார்த்து அரசியலில் இறங்குவதும், தனது விரோதியை பழி தீர்க்க அரசியலில் இறங்குவதும் என்று இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, இதை கவனிக்கும் பொதுமக்கள் இவர்களுக்கு நாம் வாக்களித்து வெற்றி வாய்ப்பை எதற்காக ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று எண்ணி ஓட்டுச் சாவடிபக்கமே திரும்பாமல் தங்களது வெறுப்பை காட்டுவதும் நடைமுறையாகி வருகிறது, அரசியல் என்றாலே ஏமாற்றுக்காரர்களின் இடம் அல்லாது ரவுடிகளின் இடம் என்ற நினைப்பை மேலோங்க வைத்து பொதுமக்களை ஒட்டுச்சாவடிபக்கமே தலை வைத்து படுக்க கூட இயலாத நிலைமை உருவாகி உள்ளது.

இவை மாற்றப்படவேண்டும் என்றால் அரசியலை நன்கு அறிந்த, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒரே எண்ணமும் செயலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்து பணியாற்றி படிந்துவிட்ட வெறுப்புணர்வை போக்கும் வழியை கடைபிடிக்க வேண்டும் அப்போதுதான் பொதுமக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்து செல்லும் நிலை திரும்ப வரும் தற்போதுள்ள நிலை நீடிக்குமானால் மேலும் ஓட்டளித்தவர்களின் விழுக்காடு குறைந்து மக்களாட்சி முடிவிற்கு வரும்நிலை ஏற்பட்டாலும் அதிசயமில்லை. கட்டாயமாக ஓட்டளித்தே ஆகவேண்டும் என்கின்ற அரசு ஆணை பிறப்பிக்க நேர்ந்தாலும் நேரலாம். அல்லது ஓட்டளிக்காத நபர் அபராதம் கட்டவேண்டும் அல்லது வேறுவிதமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும், இல்லையெனில் தேர்தலுக்காக செலவழிக்கும் பணம் வீணாவதைப்பற்றி எந்த குடிமகனும் வருந்தப்போவது கிடையாது.


^^^^^^vvvvvv^^^^^^

4/01/2011

ஏகவாக், யெகவாக்.........


எனக்கு அப்போது நான்கு வயது இருக்கலாம், என் தாயார் சொல்லுவார் நான் பிறந்த நாளிலிருந்து ஒருபோதும் எனது பெற்றோரை எதற்காகவும் தொல்லை கொடுத்ததே கிடையாதாம், ஜுரம் விடாமல் அடித்துக்கொண்டிருக்கும் போது மட்டும் முழு நேரமும் என் அப்பாவின் தோள் மீது உறங்க வேண்டும் என்று கேட்பேன் என்று சொல்வார்கள், அதனால் என் அப்பா இரவு முழுவதும் தனது தோளைவிட்டு என்னை இறக்க இயலாமல் அவரும் உறங்க மாட்டாராம்.

இதை எதற்க்காக சொல்லுகிறேன், சுயபுராணமா என்று நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகவே கேட்கிறது, நாங்கள் வாழ்ந்த அப்பகுதியில் காது கேளாத ஊமையன் ஒருவன் இருந்தான், அவனை அறியாதவர்கள் அந்த பகுதியிலேயே யாரும் இருந்திருக்க முடியாது, அவன் அடிக்கடி நாங்கள் வசிக்கும் வீட்டிற்கும் வருவதுண்டு, அவனால் பேச முடிந்த ஒரே வார்த்தை 'ஏகவாக், ஏகவாக் யேகவாக்' என்பதுதான். நம்மை பொறுத்தவரையில் அவன் ஊமை அல்லது அவனது அந்த ஒரே வாக்கியத்திற்கு அர்த்தமிருக்காது, ஆனால் அவன் மொழியில் அந்த வார்த்தை எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கியிருந்தது.

அந்த சிறு வயதில் என் உயிரே போகின்ற அளவிற்கு பயப்படுகின்ற ஒரே ஆளும் அவனது அந்த ஒரே வார்த்தையும் தான். வேறே எதற்காகவும் அதன் பின்னர் இன்றுவரையில் அத்தனை பயம் எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்டதே கிடையாது என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். எனது குலையே நடுங்க வைக்கும் அவனது வருகை, என் அம்மா அவனிடம் மிகவும் அன்பு காட்டுவார் அதனால் அவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்க்கு வருவதும் தவிர்க்க இயலாததாகியிருந்தது. அவனுக்கு வயிறு காலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் அம்மாவை அடிக்கடி வந்து பாரத்துவிட்டு போவான், என் அம்மாவிடம் அவனை இங்கு வரவிடாதே என்று ஒருநாள் சொன்னேன், அதற்க்கு என் அம்மா 'பாவம், அவன் பசியெடுத்தால் எங்கேயும் சோறு கிடைக்கவில்லைஎன்றால் வருவான், அவனை எதற்கு இங்கு வரவேண்டாம் என்று சொல்லுகிறாய்' என்றார்.அதற்க்கு நான் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது அவன் சொல்லும் வார்த்தையை கேட்டாலே என் உயிரே போய்விடுகின்ற அளவிற்கு பயம் என்பதை நடுங்கிக்கொண்டே சொன்னேன், என் அம்மா என்னிடம் அவனிடம் இங்கே வராதே என்று சொன்னாலும் அவனால் விளங்கிக்கொள்ள இயலாதே, அவன் ஒரு நன்றியுள்ள நாயைப்போன்றவன், அவனை அறியாமலேயே சும்மா கூட வந்துவிட்டுத்தான் போவான்' என்றார். அவர் சொல்வதை அந்த வயதில் புரிந்துகொள்ளும் அளவு நான் இல்லை, இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் வெயல் காலத்தில் தர்பூசணி பழ துண்டுகள் வெள்ளரி பிஞ்சுகள், மாம்பழங்கள் என்று எதையாவது ஒரு கூடையில் போட்டு யாரோ அவனை விற்று வர அனுப்பி வைப்பார்கள், இப்போது நான் அதைப்பற்றி யோசித்துப்பார்க்கிறேன், அவன் அதை எப்படி விற்றிருப்பான் என்று.

ஆனால் அந்தகாலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பரிச்சயப்பட்ட வாய் பேச காது கேட்டக்க இயலாத நபரிடம் ஏமாற்றி பொருளை வாங்கிகொண்டு போகும் அளவிற்கு மக்கள் மிகவும் மோசமானவர்களாக இருந்திருக்க இயலாது . 'ஏகவாக் ஏகவாக்' என்று பேசியே அவனது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தான். அப்போது தேர்தல் சமயம் ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தை துண்டு பிரசுரத்தில் அச்சடித்து அவனிடம் கொடுத்து விநியோகம் செய்ய சொல்லியிருக்கிறார்கள், அவன் எல்லாரையும் 'ஏகவாக் ஏகவாக்' என்று கூவி அழைத்தபடி ஒவ்வொரு வாசலாக ஏறி இறங்கி அந்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தான், மற்றொரு முறை கொடியை கையில் எடுத்துக்கொண்டு சில இளம் வாலிபர்களுடன் 'ஜே' போட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தான், எல்லோரும் அந்த கட்சிக்கொடியுடன் வீராவேசமாக 'ஜே' என்று சொல்லும்போது அவன் என்னவென்று கூவியிருக்க முடியும் 'ஏகவாக்' என்றுதானே கூவியிருக்க முடியும்,

தேர்தல் முடிந்த பின்னர் கை நிறைய சாக்லெட்டுகளும் அந்த கட்சியின் சிறிய அளவிலான கொடியை தன் சட்டைபொத்தானின் மீது குத்திக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தான், எல்லா சாக்கலேட்டுகளையும் என் அம்மாவிடம் கொடுத்து சைகையில் என்னை காண்பித்து என்னிடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு மிகவும் சந்தோஷமாக அங்கிருந்து துள்ளி குதித்துக்கொண்டு சென்றான், அவனுக்கு தேர்தலில் ஜெயித்தவரைப்பற்றித் தெரியுமா, ஜனநாயகத்தைப்பற்றி தெரியுமா, எதையும் அறிந்து கொள்ள அவனால் முடிந்ததா, எதற்காக அவன் இத்தனை சந்தோஷப்படுகிறான், தான் தொண்டு செய்த கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர் வென்றுவிட்டது அவனுக்கு விளங்கியதா, இந்திய பிரஜைகளில் தானும் ஒருவன் என்பதால் அவன் சந்தோஷமடைந்தானா. இந்திய அரசியலின் நிலைமையும் இன்று அவனைப்போலத்தான் உள்ளது.இந்திய ஜனநாயகத்தை எத்தனைப் பேர் புரிந்திருக்கின்றார்கள், ஏகவாக்கை போலத்தான் பலரும் ஒட்டு கேட்கின்றார்கள், ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னால் தாங்கள் எதையெல்லாம் ஓட்டு போட்ட மக்களுக்கு செய்வோம் என்பதை சொல்லித்தான் ஒட்டு கேட்பது என்பது ஜனநாயக மரபு, ஆனால் காலம் முழுவதும் எதிர்க்கட்சி தலைவரையும் ஆளும் கட்சியையும் ஏளனம் செய்து, ஏசியே பழக்கப்பட்டுப்போன நாவும் மூளையும் எப்படி நலத்திட்டங்களை யோசித்து ஆராய்ந்து தயாரிக்க இயலப்போகிறது, எதைபற்றியும் அறியாது அரியணை ஏறுவதன் நோக்கமும் அர்த்தமும் விளங்காமல், கையிலிருக்கும் பண மூட்டையை, யாரோ கட்டி உருவாக்கிய கட்ச்சியினுள் புகுந்துவிட்டு, ஒப்பனை பூசி மெருகேற்றிய முகத்தை வெட்டவெளியில் அரையாடை அல்லது பகட்டாடைகள் கட்டி பதிவு செய்த ஒளிபேழையின் உதவியால் பல கோடிகளை இருட்டறைகளில் முடக்கி வைத்து, அவற்றை வெளிக்கொணர வழியின்றி செய்வதறியாது அரசியலில் கால் வைத்து, அரசியலில் அரிச்சுவடியைக்கூட அறியாமல் 'ஏகவாக், யேகவாக்' என்று பேசி ஓட்டு என்கின்ற ஜனாயக உரிமைகளை பாழாக்க நினைக்கும் சிலர் வெற்றி பெற்று தலைவரும் அமைச்சர்களுமாக பதவியேற்றால் இந்த பூமி தாங்குமா.

அடுத்த சுனாமி நிச்சயம் நம் நாட்டிற்கு வரும் பூகம்பம் வரும், இல்லையென்றால் மூன்றாவது உலகப்போரில் நாடழியும். அப்படிப்பட்ட தலைவர்களை பிரதமராகவும் முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் பெறுவதைவிட சாவதே மேல். எதிர்கட்சித்தலைவரை திட்டி திட்டியே பிரசாரம் செய்தால் அந்த தலைவரை வெறுப்போர் ஓட்டு கிடைக்கும், தேர்தலுக்கு கட்டிய டெபாசிட் தொகையாவது திரும்ப கிடைக்கும், மற்ற தலைவர்களை தலைவிகளை திட்டிப்பேசினால் அல்லது வாழ்த்திப் பேசினாலும் மரியாதை கூட கிடைக்காது. இன்று சிலரின் நிலை அப்படி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

'ஏகவாக் ஏகவாக் ஏகவாக்...............