Translate

10/30/2010

விஜய் டி.வி நீயா நானாவில் நானும் ......

எத்தனை நாட்களுக்குத்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கவியரங்கங்களையும் பட்டிமன்றங்களையும் நீயா நானாவையும், கருத்து யுத்தத்தையும் பார்த்து மட்டுமே ரசித்துக்கொண்டிருப்பது நாமும் கலந்து கொண்டால் என்ன என்று திடீர் எண்ணம் மனதில் எழுந்தது, அதன் விளைவு நீயா நானாவிற்கு கருத்துக்களை தெரிவிக்க சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது, அங்கே என்ன தான் பேசுகிறார்கள் என்பதைவிட எப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்குகிறார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆவலுடனேயே சென்றேன், அன்றைக்கு பார்த்து பிரசாத் ஸ்டுடியோவில் நீயா நானா நிகழ்ச்சிகள் மட்டும் காலை ஒன்பதுமணி முதலே பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்தது, சாதாரணமாக என் பிள்ளைகள் எப்போதும் வெளியூர்களில் இருப்பவர்கள் அன்றைக்கு பார்த்து விடுமுறையில் என்னுடனிருக்க 'நானும் வருகிறேன் என்று என்னுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது' ஆசைதானே, வந்துவிட்டு போகட்டும் வேறு ஒரு சந்தர்ப்பம் இதற்கென்று கிடைக்கவா போகிறது என்று எண்ணி உடன் அழைத்துச் சென்றேன்.

பார்ப்பதற்கு திரைப்பட நடிகையைப்போல இருந்த என் மகளை அங்கிருந்தவர்கள் உற்று பார்க்கத்தவறவில்லை, அதை பார்த்த என் மகளும் என் கணவரும் சற்றே ஆச்சர்யம் அடைந்தனர், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'ஆண்களுடன் பெண்கள் நண்பர்களாக பழகுவதை எதிர்ப்பவரா அல்லது ஆதரிப்பவரா' என்பது, நான் இந்த விஷயத்தில் மிகவும் தாராளம் என்றும் கூறிவிட இயலாது, கருமி என்றும் சொல்லிவிட முடியாது. நான் [டீன் ஏஜில்] பதின்ம வயதில் இருந்த காலத்தில் என் தகப்பனார் எனக்கு அப்பகுதில் புதிதாய் குடி வந்திருந்த ஒரு பையனை அறிமுகப்படுத்தி இரவில் மிகவும் நேரம் சென்றபின்னர் முடியும் வகுப்புகளில் இருந்து வீட்டிற்கு திரும்புகின்ற போது உடன் படித்த பையனுடன் சேர்ந்து வர அனுமதி கொடுத்து அறிமுகமும் செய்து வைத்தார்.

என் பெற்றோர் நான் என் வயதொத்த பையன்களிடம் பேசினாலோ பழகினாலோ தவறு என்று கட்டுபாடுகள் விதித்தது கிடையாது, ஆனால் அதற்கென்று என் வீட்டின் அருகிலிருந்த எல்லா பையன்களிடமும் நான் பழகியதும் கிடையாது. படித்து முடித்த பின்னரும் அந்த பையன் எங்கள் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து மணி கணக்கில் அரட்டை அடிப்பதும் வழக்கமாகியது, அந்த பையனின் அப்பாவும் என் அப்பாவின் நண்பர், ஆனால் அந்த பையன் என் வீட்டில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது அவர்கள் வீட்டிற்கு சில மாதங்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்தது, அப்போது அந்த பையன் வேலைக்காக விண்ணப்பித்து மும்முறமாக வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், அவனது அம்மாவிற்கு அவன் எங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து பேசுவது தெரிந்த போது அவனை கண்டித்துள்ளார்,

அந்த பெண்ணுடன் பழகுவதில் தவறில்லை என்றாலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வருபவர்களுக்கு இப்படி பழகுவது தெரிந்தால் அவளை யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்பதால் இனி அந்த பெண்ணுடனான பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விட வேண்டும் என்று அவனுடைய அம்மா கடுமையாக விவாதம் செய்திருக்கின்றார். இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த பையனின் அம்மாவின் அண்ணனின் ஒரே மகளுக்கும் இந்த பையனுக்கும் தீவிரமான காதலுண்டு, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் அவனுள் தீவிரமாக இருந்து வந்தது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அந்த திருமணத்தை எதிர்த்தவர் அந்த பையனின் அப்பா மட்டுமே. அதற்க்குக் காரணம் அந்த பெண் படிக்காதவள், இந்த பையனின் வீட்டில் இவனைத் தவிர அவனுடன் பிறந்திருந்த இரண்டு தங்கைகள் ஒரு தம்பி உட்பட எல்லோருமே மருத்துவம் படிப்பவர்கள், இவனையும் அதிகம் படிக்க வைக்க அவனது தந்தை விரும்பியும் இவன் அதிகம் படித்தால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள இயலாமலே போய்விடும் என்பதால் படிப்பை பாதியிலே விட்டுவிட்டதும் உண்டு.

அன்றைக்கு தாயுக்கும் மகனுக்கும் என்னுடன் பழகக் கூடாது என்று சண்டை நடந்த பின்னர், அந்த பையன் காணாமல் போனான், அப்போது கல்பாக்கம் அணுமின் நிலைய வேலையில் இருந்தவன், அதை விட்டுவிட்டு ஊருக்குச்சென்று வன் விரும்பிய பெண்ணை அழைத்துக்கொண்டு போனவன் எங்கேயோ ஒரு மாத காலம் இருந்துவிட்டு, பின்னர் கிடைத்த வங்கி பணியில் இணைந்து அந்த பெண்ணுடனேயே குடும்பம் நடத்தி வந்தான். இன்றுவரையில் அவன் என்னுடைய நண்பன், என் கணவருக்கும் அவனை அறிமுகபடுத்தி வைத்திருக்கிறேன். இது போன்ற நண்பர்கள் பலர் எனக்கு திருமணத்திற்கு முன்னரே இருந்திருந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஆண்களுடன் பழகும் வாய்ப்பு அதிகம் ஏற்படவில்லை, இருந்தும் நான் எதிர்கட்சியில் அதாவது எதிர்க்கும் கட்சியிலேயே பேச விரும்பினேன், அதற்க்கு காரணம் நான் இளமையாக இருந்த காலத்தில் ஆண்களுடன் சகஜமாக பேசி பழகியதை தவறான கண்களுடன் பார்த்து வந்தவர்கள் என் திருமணத்தை நிறுத்துவதற்காக என் கணவரிடம் திருமணத்திற்கு முன்னர் அதைப்பற்றி தவறாக கூறி நிறுத்த முயன்றிருந்ததும் அதை என் கணவர் தவறாக கருதாமல் திருமணம் நடந்ததும் எனக்கு திருமணத்திற்கு பின்னர் என் கணவர் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

நாம் சரியான எண்ணத்தோடு ஆண்களோடு பெண்களும் பெண்களோடு ஆண்களும் பழகினாலும் அதை கவனிக்கும் பலர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை அறிந்த நான் எனது பிள்ளைகளுக்கு அந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாகவும் இருந்தேன். திருமணமான பெண்களாக இருந்தாலும் கூட சந்தேக கண்களோடு பார்ப்பவர்கள் எப்போதும் எதையும் தவறாகவே நினைப்பதும் அதனால் பலரது குடும்ப வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் ஏற்ப்படுவதையும் நான் நன்கு அறிவேன் அதற்க்கு நிறைய உண்மை சம்பவங்களும் எனக்குத் தெரியும் என்பதால் எதிர்க்கும் அணியில் நான் பேச விரும்பினேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி எதிரணிக்கே அதிகமாக பேச வாய்ப்பளித்து சிறப்பு பரிசும் வழங்கினார்கள்.

சமுதாயத்தை எதிர்த்து நிற்ப்பதோ புரட்சி செய்வதோ தனி நபரால் கூடாத காரியம், பெருவாரியான மக்கள் எதை ஏற்றுக்கொள்கின்றார்களோ அதையே வழக்கமாகவும் சரியானதாகவும் உறுதிபடுத்தி பின்பற்றியும் வருகின்றனர், சமுதாயத்திற்கு எதிராக எந்த சம்பவம் நடந்தாலும் அது தோற்றுபோவதன் காரணமும் இதனால்தான். அதுமட்டுமில்லாமல் தனக்கொரு நீதி அடுத்தவர்க்கு ஒரு நீதி என எண்ணி செயல்படும் மக்களைக் கொண்ட சமூக அமைப்புதான் நடைமுறையில் உள்ளது என்பதாலும் கூட இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன, விவாதத்திற்கும் ஏட்டிற்கும் வேண்டுமென்றால் பல விஷயங்கள் சரியானதாகவும் புரட்சி மிக்கதாகவும் கருதப்படலாம் ஆனால் நடைமுறைக்கு அவை ஒத்து போவதே இல்லை என்பதே எனது வாதம்.


@@@@@@@@@@