Translate

10/29/2010

சட்டம் எங்கே

விபச்சாரம் என்பதை பற்றி பேசுகின்ற போது விபச்சாரி என்ற பெண்பாலைப் மட்டுமே உபயோகிப்பது காலம் காலமாய் தமிழ் நாட்டில் மட்டுமில்லாது உலக மனித சமுதாயம் குறிப்பிட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. விபச்சாரிக்கு ஆண்பால் என்பதே இலக்கணத்தில் கிடையாது, ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் விபச்சாரி என்பது பெண்ணை குறிக்கும் சொல்லாகவே நடை முறையில் இருந்து வருவது எதை காட்டுகிறது. விபச்சாரத்திற்கு பயன்படும் முக்கிய பொருள் பெண் என்பதாலா அல்லது பெண் என்பவள் படைக்கப்ப்படும்போதே ஆணுக்கு கீழே, ஆணால் ஆளப்படுபவளாக தோற்றுவிக்கபட்டவள் என்பதாலா, இப்படி பல கேள்விகள் எழுவதும் காலம் காலமாய் அவை பதிலுக்கு காத்து கிடக்கின்ற மாற்ற இயலாத நிரந்தரமாகி இருப்பதும் வினோதம்.

பெண் இன விருத்தி செய்வது இயற்கையால் அவளுக்கு கொடுக்கப்பட்ட வரமென்றே பெருமையாய் கூறிக்கொண்டாலும், இயற்கையில் இன விருத்தி செய்யும் விலங்குகள் பறவைகள் ஏன் மரம் செடி கொடி வகைகளும் கூட உண்டு, அவை பெண்களை விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதில்லை. விபச்சாரம் என்பது மனிதகுலத்தில் மட்டுமே நிலவுகின்ற கொடுமை. பெண் தன் பெண்மையை எப்படி விலை பேச ஆரம்பித்தாள், இதற்கும் முன்னோடிகள் ஆண்களாகத்தான் இருந்திருக்கின்றனர். தனது உடற் பசியை தீர்க்க பெண்ணை தேடி போகின்ற ஆணிடமிருந்து தன் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் எண்ணம் எவ்வாறு வந்தது, ஆண் வேட்டையாடுபவன், மரத்தின் மீதேறி காய் கனிகளை கொய்து வருபவன், கிழங்குகளை தோண்டி எடுப்பவன், அவனிடமிருந்து அந்த பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பண்டமாற்று பொருளாகியது பெண்மை.

ஆதிகாலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதர்கள் ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண்களிடம் அந்த கூட்டத்தில் இருந்த ஆண்கள் புணருவதில் தொடங்கி அடுத்த கூட்டத்தில் இருக்கும் பெண்ணை புணரும் போது இரு கூட்டத்திற்கும் சண்டைகள் ஏற்பட்டன, ஒரே கூட்டத்தில் இருக்கும் ஒரே பெண்ணை பலரும் புணர்ந்த போது, ஆண்களுக்குள் சண்டைகள் போட்டிகள் ஏற்படத் துவங்கியது. அவ்வாறு போட்டிகள் ஏற்பட்டு சண்டைகள் நடந்த போது சண்டையிட்டு பெண்ணை தனதாக்கிக் கொண்ட ஆணை அக்கூட்டத்தினர் வீரன் என்று கூறி பெருமை கொண்டனர், அவனால் கொடிய மிருகங்களை அடக்க அல்லது மேற்கொள்ள முடிந்த போது அவனை அக்கூட்டத்தின் தலைவனாக்கினர்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே திருமண முறைகளை கண்டு பிடித்து ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் வீதம் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண் தங்களை போகப்பொருளாக்குபவரிடம் கைமாறாக வீடு நிலம் உணவு தானியங்கள் என பெற்று வாழ்க்கை நடத்திய காலத்தில் அத்தகைய பெண்டிரிடம் ஊரில் இருந்த பலரும் தொடர்புகொள்வது என்பதும் அவள் ஊரின் ஆடவர்களுக்கு பொது பொருளாக்கபட்டதும் நாம் காணும் பல வரலாறுகளில் உண்டு. அத்தகைய பெண்களை கீழ்தரமானவள் என்றும் முத்திரை குத்தப்பட்டது, அவளிடம் ஊரில் உள்ள வேற்று பெண்கள் பேசுவதும் பழகுவதும் கூட தவறு என்று எண்ணி ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. பெண்களை தன் சுகத்திற்க்காக உபயோகிப்பவர்களை பற்றி இழிவாக எண்ணாத சமூகம் அதற்க்கு துணையாய் இருந்த பெண்ணகளை மட்டும் இழிவாக எண்ணி இழிவாக பேசி ஒதுக்கியது.

விபசாரம் என்பதை தற்காலத்தில் சட்ட விரோத செயலாக கொண்டு விபசாரிகளை சட்டத்தின் மூலம் தண்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விபசாரியை மட்டும் தண்டனைக்குள்ளாக்குவதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற கேள்வி எழ நாளடைவில் விபசாரத்தில் ஈடுபடுகின்ற ஆண் பெண் இருவரையும் சட்டத்தில் தண்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அயல் நாடுகளில் விபசார தடுப்புச் சட்டம் என்பது அமலாக்கபட்டிருந்தாலும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டங்கள் கிடையாது, குறிப்பிட்ட சில நாடுகளில் திருமணமாகாத இருவர் உடலுறவில் ஈடுபடுவதை சட்டம் குற்றம் என்று வரையறை செய்துள்ளது. நமது இந்திய தேசத்தை பொறுத்தவரையில் இரு திருமணமாகாத நபர்கள் உடலுறவில் ஈடுபடுவதை விபசாரம் என்று கூறி சட்டத்தில் தண்டிக்க வாய்ப்பளித்திருப்பதை அறிவோம், ஆனால் பல நயவஞ்சகர்களால் இந்த சட்டம் பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு சம்பந்தமே இல்லாமல் பலர் கைது செய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் தொடர்கதை.

சட்டத்தையும் நீதியையும் மதிக்கின்ற நாம் இத்தகைய அட்டுழியங்களை கண்டும் காணாதவர்கள் போன்று இருப்பதும் வாடிக்கை, அவரவர்க்கு வந்தால்தான் பிரச்சினையே தவிர அடுத்தவர்க்கு வரும்போது நமக்கென்ன என்ற மெத்தன போக்கு நமது சமுதாயத்தில் ஒன்றிவிட்ட போக்கு. சட்டங்கள் அத்தனையும் சமுதாய நலன் கருதியே அமலாக்கப்படுவது ஜனநாயகத்தின் மிகப்பெரிய அற்புதம், பலம், ஆனால் அச்சட்டங்களை பலர் தங்களது சுய விருப்பு வெருப்பிற்க்கேர்ப்ப பயன்படுத்துவதை சட்டம் தடுத்து நிறுத்தி தண்டிக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் குருட்டாட்டம் என்றே கூற முடியும். விபச்சாரிகளை நியாயப்படுத்தும் பலரும் கூட இத்தகைய குருட்டாட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதை எந்த சட்டத்தாலும் தண்டிக்க இயலாமல் முடக்கப்படுவது ஜனநாயகத்தை கொடூரமாக கொலை செய்வதற்கு நிகர்.

'சட்டத்தின் முன் எல்லோரும் சமம்' என்று பலகைகளிலும் ஏடுகளிலும் எழுதி வீர வசனம் பேசுகின்ற பலர், 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கபடக்கூடாது' என்று முழக்கமிடும் பலரும் ஜனநாயக படுகொலைகாரர்கள் பட்டியலில் இருப்பதை காணுகின்ற போது ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழுகின்றோமா இல்லையா என்கின்ற சந்தேகம் எழுவது நிச்சயம். ஜமீன்தார் அல்லது அரசன் ஆட்சி காலத்திற்கும் ஜனநாயக நாட்டில் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம். சட்டம் யார் கைபிள்ளை, பணம் படைத்தவரின் கையிலா, அல்லது பெரிய பொறுப்பு வகிப்பவர்களின் கையிலா, எடுத்தவர் கைபிள்ளையாகும் சட்டம் ஜனநாயகத்தின் விளையாட்டுப்பொருளா. சட்டத்தை தங்கள் கையிலெடுப்பவர்களே விபசாரிகள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று காத்து கிடப்போருக்கு எங்கே நீதி கிடைக்கும் மன்னர் ஆட்சியிலா ஜனநாயகத்திலா.


******************