Translate

10/28/2010

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

சிக்கனம் என்பதைப் பற்றி எழுதத் துவங்கிய நேரமோ என்னவோ தெரியவில்லை தொடர்ந்து எழுத இயலாமல் போனது, சிக்கனத்திற்க்கும் சேமிப்பிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, சில கருமிகள் எச்சில் கையினால் காகத்தை கூட துரத்த பயப்படும் நபர்களுக்கு பணம் சேருவதும் உண்டும், ஒரு பழைய மொழி உண்டு 'இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும்' என்பார்கள், ஆனால் இறைத்துக்கொண்டே இருந்தால் காய்ந்து போகும் நிலைதான் தற்காலத்தில் காணப்படும் நிலையாக உள்ளது, சிலர் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு செய்து பார்க்கும் போதுதான் என்றைக்கும் இல்லாத அதிக செலவினங்கள் ஏற்பட்டு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் போவதும் உண்டு, இதற்க்கெல்லாம் நாம் காரணமில்லை,

சிக்கனக்காரர்களிடம் பணம் தங்குவதை நம்மால் காண முடிகிறது, சிக்கனத்திற்க்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம், ஒன்றையும் சாப்பிடாமல் எங்கேயாவது ஓசி சாப்பாடு கிடைக்குமா என்று அலைந்து கொண்டு தன் கையிலிருக்கும் பணத்தை தனது பசிக்காக செலவழிக்க தயங்குபவன் கருமி, சிக்கனம் என்பது, கையிலிருக்கும் இருப்பிற்க்கேர்ப்ப செலவு செய்து அன்றைய பசியை ஆற்றி அடுத்த நாளைக்கும் மீதம் எடுத்து வைப்பவர் சிக்கனக்காரர். இதில் ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைப்பதுண்டு, தன் கை காசை செலவழித்து வயிற்று பசியை தீர்க்காத தனது பணம் வேறு எதற்கு என்பதும், அவ்வாறு கருமித்தனம் செய்தே கோடிகளை சேமித்து வைக்கும் பணக்காரர்களும் நிறையவே உண்டு என்பதும் உண்மை.

பணமும் காசும் சிக்கனக்காரர்களிடமும் கருமிகளிடமும் மட்டுமே தங்கும் இயல்பை கொண்டதாக காணப்படுவது ஏன், சில பணக்கார வீடுகளில் வேலைக்காரர்களுக்கு குடிப்பதற்கு காப்பி அல்லது தேநீர் கொடுப்பதாக வாக்குக்கொடுத்திருந்தால் வெல்லம் போட்ட தேநீரையே பருக கொடுப்பது, நியாய விலைக்கடையில் வாங்கிய அரிசியில் சமைத்த சோற்றை உண்ண கொடுக்கும் கொடூரங்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களை கருமியில் சேர்த்துக்கொள்ளலாம், இவர்களிடம்தான் பணம், பொருள், நகை, நிலம், வீடு என்று ஐஸ்வரியங்கள் எல்லாமே வந்து குவிந்து கிடப்பதைக் காணுகின்ற போது என் கற்பனையில் தோன்றுவது, கையெல்லாம் குஷ்டரோகத்தினால் பழுத்துக் துர்நாற்றம் வீசுகின்ற ஒருவர் மிகவும் சுவையான பிரியாணி அல்லது வேறு சுவையான உணவை பரிமாறுவது போன்றது,

காசும் பணமும் கருமியிடம் சேர்வதின் பொருளென்ன, நீர் பள்ளத்தில் சேரும் ஆனால் அந்த நீர் பூமியையும் அதன் அருகில் உள்ள தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் கூட பெரும் உதவியாக இருப்பதுண்டு, ஆனால் கருமியின் பொருள் வேறு ஒரு சோம்பேறியிடம் சென்றடைவது வழக்கம், இந்த சோம்பேறிகள் யார் என்பதை கவனித்தால், கருமிகளால் உருவாக்கப்பட்ட அவர்களது வாரிசுகள், அல்லது வாரிசுகளே இல்லாத கோவில் சொத்தாக மாறுகின்ற வாய்ப்பை பெறுகின்ற ஐஸ்வரியங்கள், ஐஸ்வரியத்தை அடைவதற்காகவே காத்திருந்த உறவினர்கள் என்று கருமி அடைகாத்த பொருள் அத்தனையும் சென்றடையும் இடம் மிகவும் மோசமானதாகவே காணப்படுகிறது.

சிக்கனம் செய்து சேமித்த பணம் பொருள் நகை வீடு நிலம் எதுவாக இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் சேமித்தவரின் உடல் நலன் மற்றும் பலவித தேவைகளுக்கு பயன்படுவதை யாராலும் மறுக்க இயலாது. சிக்கனம் கருமித்தனம் இவற்றைத்தவிர வேறு ஒன்று உண்டு அது இவற்றிக்கு முற்றும் எதிரான ஆடம்பரம், சிலர் வரும்படிக்கு அதிகமாக செலவழித்து தங்களது அந்தஸ்த்தை உயர்த்தி காண்பிக்க பெரும்பாடுபடுவார்கள், சிலர் அடுத்தவருக்கு காண்பிப்பதற்காக இல்லையென்றாலும் வரவை விட அதிகம் செலவழித்தே கடன்காரனாகி அவதியுறும் நபர்களும் உண்டு, இவர்களை திருத்துவது இயலாத காரியம், இவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் கதி அதோ கதிதான், இந்த கெட்ட பழக்கம் வாலிபபருவத்திலேயே இவர்களிடம் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும், இன்னும் சிலர் சிறு வயது முதலே வீட்டில் திருடி அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்று விற்று ஆடம்பரத்தை அல்லது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு தீய பழக்கத்திற்கு அடிமைகளாகி விடுகின்றனர்.

பெற்றோர்கள் குழந்தைப் பருவம் முதலே இத்தகை செயல்களை கண்டு பிடித்து திருத்தாவிடில் இவர்களது நிலைமை சமூக விரோதிகளை உருவாக்கும். சிக்கனம் சேமிப்பு, ஆடம்பரம், தேவைக்கு ஏற்ப செலவழித்தல், கருமித்தனம் இவை எல்லாமே பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் அடிப்படை காரணம் தனிப்பட்ட நபரின் சிறு வயது முதலே கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய நல் ஒழுக்கங்களில் இவைகளும் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவை என்பதை பெற்றோர் நன்கு உணர வேண்டும், பிறவியிலேயே கருமியாகவும் ஆடம்பரமாகவும் பிறக்கும் நபர்களும் உண்டு எவ்வாறிருந்தாலும் ஒருவரின் வளர்ப்பு முறை என்பது எந்த பழக்க வழக்கத்திற்கும் மிகவும் அடிப்படையான சிறந்த காலம் என்பது உறுதி.

சிறந்த மனிதர்களை உருவாக்குகின்ற முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால் சிறந்த எதிர்கால தலை முறைகள் உருவாகும் வாய்ப்பு உண்டு.

<><><><><><><><><><><>