Translate

10/03/2010

எங்கே மனிதன்

எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு சிறு போட்டி, எங்கெல்லாம் மக்கள் வசீகரிக்கப்படுவார்கள் என்பது பற்றி, மூன்று பேர் ஒருவர் ஒரு மூட்டை அரிசி, இன்னொருவர் இலவசமாக திரைப்படம் திரையிடும் கருவிகள், மூன்றாமவர் இலவச அருள் வாக்குகள் கூறி இலவசமாக வியாதிகளை சுகப்படுத்துபவர். மூவரும் வெவ்வேறு கிராமங்களுக்கு ஒவ்வொரு நாள் சென்று எடுத்துச்சென்றவற்றை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தோம், அதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இலவசத்தை பெற்றுச் சென்றனர், அடுத்தமுறை அதே பொருட்களை மிகவும் குறைவான விலையில் கொடுப்பதாகக்கூறினோம், கூட்டம் முதல் முறையைவிட பாதியாக குறைந்தது, அடுத்த முறை சில காரணங்களைக் கூறி உதவித்தொகை அல்லது பொருளுதவி கேட்டுசென்றோம். ஒருவர் கூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.

இதில் ஒரு விஷயம் நன்கு விளங்கியது, இலவசமாக கிடைக்கும் என்றால் ஏழைகள் மட்டுமில்லாமல் சற்று வசதியுள்ளவர்கள் கூட இலவசப் பொருட்களை பெற்றுச் சென்றனர், உதவி என்று கேட்டு சென்ற போது வசதி படைத்தவர்கள்கூட உதவி செய்வதற்கு முன்வரவில்லை. மக்களின் ஒட்டு மொத்த உணர்வும் இலவசமாக கிடைப்பதை பெறுவதில் எந்தவித தயக்கமும் இன்றி பெற்றுக்கொள்ளச் செய்கிறது, அதே போன்ற உதவியை திருப்பி செய்வதற்கு சுயநலம் இடம் கொடுப்பதில்லை. இன்னொரு சோதனையில் மூவரும் ஜன நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் கூடி நின்று ஏதோ நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்துவிட்டது போன்ற பரபரப்பை ஏற்ப்படுத்திய போது மக்கள் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்வதற்கு வேகமாக கூட்டம் கூடினர்.

ஆடு மாடு யானைகள் போன்ற விலங்கினங்கள் ஒன்று நடந்து போகின்ற பாதையிலேயே மொத்த கூட்டமும் பின்பற்றுவதைப்போல மனிதர்கள் ஒருவர் செய்வதைப்போல அல்லது ஒருவர் போகின்ற போக்கிலேயே மற்றவர்களும் செல்வது கூட பல சமயங்களில் காணப்படுகின்ற செயலாக உள்ளது. சிறுவயதில் படித்த குல்லா வியாபாரியும் குரங்குகளும் என்ற கதை நினைவிற்கு வருகிறது. எங்காவது பணமோ நகையோ வேறு பொருட்களோ கிடைத்துவிட்டால் அதை கையில் எடுத்த பின்னர் 'பாவம் யாருடையதோ, இதை தொலைத்துவிட்டு வருத்தத்தில் என்ன செய்கின்றாரோ' என்று எத்தனை பேரால் நினைக்க முடிகிறது. யாரோ ஒருவரின் உடமையாக இருந்தாலும் தனது கைக்கு வந்து சேர்ந்ததில் மகிழ்வுறும் மனிதர்களை நம்மால் பார்க்க முடிகிறது, கிடைத்த பணத்தையோ நகையையோ மற்ற உடமைகளையோ எடுத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எங்கோ ஒரு சிலர் செய்வதால்தான் அவரை ஊடகங்களில் செய்திகளில் வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றனர், அத்தனை அபூர்வமான செயல்.

பல பொருட்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கபட்டும் கூட அப்பொருளை இழந்தவரின் கைகளுக்கு சென்று சேருகிறதா என்பதும் சந்தேகம்தான். அடுத்தவருடைய உடமைகள் எதுவாக இருப்பினும் அதை இலவசமாக எடுத்துக் கொள்வதில் மனித மனம் திருப்தியடைவது ஏன், அதே சமயம் தன்னுடைய உடமைகளை இழக்கின்ற சமயத்தில் அல்லது தொலைத்துவிடுகின்ற சமயத்தில் நாம் படுகின்ற துன்பத்திற்கு அளவே இருப்பதில்லை என்பதை நாம் சிந்திக்க மறுப்பது ஏன். இத்தகைய சுயநலம் மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறதா அல்லது அதிகபட்சமாக காணப்படுகிறதா என்பதை நாம் யாவரும் நன்கு அறிவோம், அடுத்தவரின் உடமைகளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் மிகவும் குறைவா, அல்லது அதிகமா, அதில் நாம் எந்த ரகத்தை சேர்ந்தவர்கள்?

கோவிலின் வாசலில் கழற்றிவிட்டுச் செல்லும் புதிய காலணிகளைக் கூட விடுவதில்லை, அப்படியொரு காலணி திருடித்தான் அணிந்துகொள்ள வேண்டுமென்றால் அதைவிட வெறும் காலிலேயே நடந்து செல்வது மேன்மை என்பதை அறிந்திருக்கவில்லையா, 'எனக்கு வேலை கிடைக்கவில்லை, போதிய வருமானமில்லை, பட்டினி பசி' என்று கூறுகின்ற போது அடுத்தவரின் உடைமைகளின் மீது கவர்ச்சி உண்டாவது தவிர்க்க இயலாததா, அதைவிட இறந்து போதல் உத்தமம் அல்லவா. சொகுசு வாழ்க்கை பழகி போச்சு என்பதால் உடலை விற்கும் வியாபாரம் செய்தாவது அந்த வாழ்க்கையின் வசதிகளை தொடர, அப்படி சொகுசுகளில் வாழ்ந்த உடலில் பெயர் சொல்ல இயலாத வியாதிகள் வந்து மடிவதைவிட அதற்க்கு முன்பே மடிவது மேன்மையல்லவா.

மனிதன் என்றால் என்ன, பகட்டும் வசதிகளும் சுக போகங்களும் நிரம்பியதா, அப்படி இல்லாத மனிதன் பாவப்பட்ட ஜன்மமா, எதையும் எவ்வாறேனும் அடைந்து விடுவது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியா, வெற்றி தோல்விகள் என்பது பணம் மற்றும் புகழை எவ்வாறேனும் அடைந்து விடுவதில் உள்ளதா. அவ்வாறு அடைய இயலாதவர்கள் மனிதர்கள் இல்லையா, பூமியில் பிறப்பதே சுகமாக
வாழ்க்கையை வாழ்ந்துவிடுவதற்க்காக மட்டும்தானா.