Translate

10/01/2010

எனக்கு நடிக்க ஆசை !!!!

நெடுங் காலமாக ஒரு ஆசை என்னை விடாமல் துரத்தி வருகிறது, சூழ்நிலைகளின் காரணமாக சில காலம் அடங்கி கிடக்கும் அந்த ஆசை திடீரென்று பேயாய் கிளம்பி சுனாமி ஆழி அலைகளைப்போல் என்னை உரு தெரியாமல் வேரோடு பிடுங்கிக்கொண்டு சென்று நான் அறியாத ஏதோ ஒரு பகுதியில் பிணமாக கிடத்திவிடுவதுண்டு. அப்போதுதான் நான் பல உண்மைகளை முதன் முதலாக உணர்ந்தேன், அதுதான் பரம்பரை எண்ணங்கள், பரம்பரை வியாதிகளைப்போல, பரம்பரை பரம்பரையாக தானாகவே ஏற்ப்படுகின்ற கலைகளின் மீது ஆசைகள். காதலைக் கூட என் மதியால் வென்றதுண்டு ஆனால் இந்த கலையார்வத்தை என்னால் மாற்றிக்கொள்ளவே இயலாமல் போனதன் காரணம்,

என் பெற்றோர் மூலம் மரபணுக்களின் மூலமாக என் உடலினுள் புகுந்து அதன் வீரியம் கிளம்பும்போதெல்லாம் எவ்வாறெல்லாம் ஆட்டி படைக்கும் என்பதை நான் நன்றாகவே உணர்ந்தேன், இந்த ஒரு ஆசையை மட்டும் என்னைவிட்டு என்னால் அகற்றவே முடியாதபடி என்னை முழுவதுமாக தன் பிடிக்குள் இறுகப்பிடித்து வைத்திருக்கும் ராட்சசனுக்கு, அடிப்படை காரணம் எனது பெற்றோர்தான். என் அப்பா கலை கலை என்று சித்தம் கலங்கியவரைபோல சுற்றி அலைந்தபோது அதற்க்கான முழு வீச்சு என்னவென்பதை என்னால் முழுவதுமாக உணர இயலாமல் போனது, அவர் மறைவிற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் என்னுள் அதுவரையில் உறங்கி கிடந்த இந்த கட்டுக்கடங்கா ஆர்வம் தலை தூக்க ஆரம்பித்தது.

எனது அப்பா அடிக்கடி சொல்வது எனக்கு ஒரு மகன் பிறந்தால் அவன் மூலம் என் கனவுலகை நான் நிச்சயம் காண்பேன் என்று, நான் பெண்ணாக பிறந்தது அவரது கலையார்வம் முழுமை பெறாமல் போக காரணமானது. என் அம்மாவும் சிறந்த கலையார்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்தும் முழுமையடையாமல் போன கலையார்வம், இந்த இருவருக்கும் பிறந்த எனக்கு மட்டும் அதுவரையில் உறங்கி கிடந்த அந்த ராட்சசன் அவர்களது மறைவிற்கு சற்றே முன்னர் விழித்துக் கொண்டபோது அதை அறிந்த எனது பெற்றோர் திகிலடைந்தனர், ஏனென்றால் அதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ளவதற்காக நான் கிளம்புகின்ற போது என் தகப்பனார் அந்த பாதை மிகவும் மோசமானது, குடும்ப பெண்களுக்கு ஆகாதது என்று பலமுறை எடுத்துரைத்தார்.

அவர் கூறியதிலிருந்த உண்மை அப்போது எனக்கு விளங்கவில்லை நான் சென்ற ஒவ்வொரு இடங்களிலும் அதன் தாக்கத்தை என்னால் நன்கு உணர முடிந்தது, தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்க்கு குடிப்பதற்கு தண்ணீரோ ஆகாரமோ அல்லது உறங்குவதற்கு சரியான இடமோ தேவைப்படும் என்றாலும் அந்த நாயின் ஓட்டம் அதற்க்கு தேவையான இவைகள் கிடைக்கின்ற இடத்தை நோக்கித்தான் ஓடுகின்றனவா என்பது அவைகளுக்கு தெரியாமலேயே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது போல கலையார்வமிக்க மனநிலையில் அதை எப்படியாவது அடைந்துவிடுவதென ஓடுகின்ற ஓட்டமும் அதே நிலைமையை நினைவுபடுத்துவதாக உள்ளது, அவ்வாறு இங்குமங்கும் ஓடுகின்ற போது இடையே கிடைக்கின்ற வேற்று நாய்களின் கடிகளும் குதறல்களும் மனிதர்களின் கல்லடிகளும் வாகனங்கள் அதன் மீது ஏறி நசுங்கி இறந்து போகின்ற சம்பவங்களும் சில சமயம் கிடைக்கும் ஆகாரமும் இதைத்தான் 'நாய் பிழைப்பு' என்பார்களோ என்று எண்ண வைக்கும்.

திறமை உள்ளவர்களுக்கு வாய்புகள் கிடைக்கின்றதா கிடைக்கின்ற வாய்ப்புகளை திறமையுடன் பயன்படுத்துபவர்கள் முன்னேறி வெற்றி பெறுகின்றார்களா, இடையில் அதிஷ்டம் என்ற ஏதோ ஒன்றை எல்லாரும் உச்சரிக்கின்றார்களே அந்த அதிஷ்டம் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது அது எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பது தெரியவில்லை. எண்கள் எழுத்துக்களை கண்டு பிடித்தவன் மனிதன், பின்னர் வார, மாத, வருட கணக்குகளை கண்டு பிடித்தவனும் மனிதன், இதில் எப்படி ஒருவருடைய பிறந்த தேதியில் உள்ள எண்கள் அதிஷ்டம் உள்ளனவாகவும் துரதிஷ்டம் உடையனவாகவும் இருக்க முடியும் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை, அதே போல எழுத்துருவை அதாவது மொழியை கண்டு பிடித்த மனிதன் அதற்கான இலக்கண இலக்கியங்களையும் கண்டுபிடித்து தன் கற்பனையில் எழுதியும் வைத்தான் இவ்வாறிருக்க ஒருவரின் பெயரில் எப்படி அதிஷ்டம் ஏற்ப்பட முடியும்.

நம்புகின்றவர்களுக்கு உள்ளதென்பதும் நம்பாதவருக்கு இல்லை என்பதுமே முடிவாக உள்ளது. நடிப்பதற்கும் வாய்புகள் கிடைப்பதற்கும் அதிஷ்டம்தான் காரணம் என்றால் மற்ற எல்லோருமே அதிஷ்மில்லாதவர்கள் என்பதல்லவா அர்த்தம். அது போகட்டும், நடிக்கவேண்டும் என்கின்ற வெறி ஏற்ப்பட்டுவிட்டால் அதற்க்கு இடையுறாக எதையுமே எண்ண முடியாத வெறியை அல்லது போதையை ஏற்ப்படுத்துவது எது, அறிவையும் சுய கவுரவத்தையும் மறந்து எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்கின்ற நெருப்பை உண்டாக்குவது எது, அதனால் இழப்புகள் ஏராளம் என்றாலும் அடங்கா தாகத்தைக்கொடுப்பது எது. அது என்னுள் வந்தது எப்படி. ஆசைக்கு அளவில்லை என்பதுதான் இதுவா, எனக்கு புரியவில்லை, நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை ஆனால் எனக்கு நடிக்க தெரியாது, எனக்கு அதிஷ்டம் இல்லை போலும், ஆனால் ஆசை என்கின்ற நெருப்பு அணைய மறுக்கிறது, நீ பெண் என்று தன்மானம் தடுக்கிறது ஆனாலும் நடிக்க ஆசை, அது என்னை துரத்துகிறது இதற்க்கு நான் காரணமா, இல்லையே, மரணத்தை வெல்ல இயலாதது போல் இந்த உணர்வையும் வெல்ல இயலாது,

ஆம், மரணத்தை யாராலும் வெல்ல இயலாது, அதற்க்கு காரணம் மனிதனால் வெல்ல இயலாத எண்ணங்களையும் செயல்களையும் மரணத்தின் மூலம் அழித்துவிடலாம் என்பதனால் மரணத்தை யாராலும் வெல்ல இயலாது.

யாரேனும் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்களேன், ப்ளீஸ்!!