Translate

10/06/2010

இந்தியாவிற்கு 11 தங்கப்பதக்கங்கள்


காமன் வெல்த் விளையாட்டுகளில் இன்றைய நிலவரப்படி இந்தியாவிற்கு 11 தங்கப்பதக்கங்கள் கிடைத்திருக்கிறது, தனது தாய்நாடு பெருமையடைகிறது என்றால் அந்நாட்டு குடிமக்கள் எல்லோருக்கும் அந்த செய்தி மகிழ்ச்சியானதுதான், அதில் யாருக்கும் எப்போதும் மாற்று கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆசிய விளையாட்டுகளிலோ ஏற்கனவே நடந்த காமன்வெல்த் விளையாட்டுகளிலோ இந்திய விளையாட்டு வீரர்கள் இத்தனை பேர் ஒட்டு மொத்தமாக தகுதி பெற்று போட்டிகளில் விளையாட முடிந்ததும் இல்லை, அப்படியே தகுதி பெற்று விளையாடி இருந்தாலும் தங்கப்பதக்கங்களை இந்த அளவிற்கு வாங்கி குவித்ததில்லை என்பதை யாராலும் மறுக்க இயலாது.

விளையாட்டு வீரர்களை தனது சொந்த நாட்டிலேயே விளையாட வாய்ப்பளிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பது காரணமா, அல்லது போட்டியின் விதிகளை விட்டு விலகி இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றனவா என்பது கேள்விக்கு இடமாக உள்ளது. இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது கோச் [coach] என்பவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த வித்தகர்களாக வரவழைக்கப்பட்டு இந்திய வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்வி எழுந்தாலும் மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுடன் இந்திய பயிர்ச்சியாளர்களையே காண முடிந்தது [ஒரு சில விளையாட்டுகளைத்தவிர].

நம்ம
ஊர் மக்களுக்கு நம்ம ஊர் வீரர்கள் வெற்றியடைய வேண்டும் என்கின்ற ஆதங்கமும் ஆர்வமும் வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற முயற்ச்சிகளும் தேவைதான், அதற்காக வேற்று அணியினர் சிறப்பாக விளையாடுகின்ற போது விளையாட்டை ரசித்து ஓலம் எழுப்புவதில் என்ன வஞ்சனையோ தெரியவில்லை, மாறாக இந்தி விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடும்போது மட்டுமே கரவொலி எழுப்பி தங்களது ஆதரவை பதிவு செய்யும் விதம் வெட்ககேடாக தெரிகிறது. கிரிகெட்டு விளையாட்டில் கூட இதே விதமான அரசியலை வெகு சகஜமாக காண முடிகிறது.


அயல் நாடுகளில் மக்கள் விளையாட்டுகளின் மீது வெறிகொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளுவது என்பது பிரேசில் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட மைதானத்தில் காண முடியுமே தவிர உலகில் இந்திய ரசிகர்களைப்போல [வெறியர்களை] வேறெங்கும் காணவே இயலாது. வாழ்க்கையில் எதிலுமே ஒரு வெறியோடு செயல்படுவது இந்திய நாட்டில் அதிகம் என்பதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு, வரதட்சிணை கொடுமை, நிலத்திற்காக சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவது என்பன போன்ற மூர்க்கத்த்தனங்கள், ஜாதிக்கொடுமை, மதக்கொடுமை போன்ற வெறித்தனங்கள் நிறைந்து காணப்படும் நாகரீகமற்ற சமுதாய வளர்ச்சியை கொண்டுள்ளது இந்திய தேசம்,

காமன்
வெல்த் விளையாட்டுகளில் சில நாடுகளுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கின்ற நிகழ்வின் போது அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கும் சப்தம் கேட்பதே இல்லை, இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை வென்ற பின்னர் நாட்டு பண் இசைக்கும்போது அதனுடே அந்த பாட்டை பாடுவதற்கு அறிந்திராதவர் போல நிற்ப்பதை காணுகின்ற போது நாட்டுப்பண் அவருக்கு தெரியவில்லையா அல்லது பாட வேண்டிய அவசியம் இல்லை என்பதற்காக வாயடைத்து நிற்கின்றாரா என்பது தெரியவில்லை. தேசிய கீதம், தேசிய கொடி போன்றவற்றிற்கு எத்தகைய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பது இளைஞர்கள் எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ தெரியவில்லை, பழைய காலத்தில் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசியகீதம் இசைக்கப்படும் அப்போது அனைவரும் ஒருமித்து எழுந்து நின்று அதற்கான மரியாதையை அமைதியுடன் செலுத்திய பின்னரே வெளியேறுவார்கள், ஆனால் தற்காலத்தில் திரைப்படங்கள் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் இல்லை. தேசிய கீதத்தின் அர்த்தம் என்னவென்பது இன்றைய படித்த இளைஞர்கள் அறிவார்களா என்பதும் சந்தேகமே, அந்த பாடலை மனனம் செய்து வைத்திருக்கின்றனரா என்பது யாருக்கு தெரியப்போகிறது, ஏனென்றால் எல்லா இடங்களிலும் இசைத்தட்டிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட்டு விடுகிறதே. பாடும் வாய்ப்புகளே கிடையாதே.