Translate

9/06/2010

ஒன்று படுவோம் வல்லரசாக்குவோம் !! வாரீர் !!

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஈராக் போர் நிறுத்த அறிவிப்பும் அங்கிருக்கும் அமெரிக்க போர் படைகளை திரும்ப அழைக்கும் முடிவும் அமெரிக்க மற்றும் அரபுநாடுகளில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்லாமல் மத்திய கிழக்குநாடுகளுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் கருத்துக்கு அமெரிக்கமக்களின் பேராதரவு நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை, போர் நிறுத்த முடிவு மட்டுமில்லாமல் உள்நாட்டின் வேலை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான புதிய திட்டங்களையும் பாரக் ஒபாமாவின் தலைமையிலான அரசு செய்யவிருப்பதை அவரது அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் மறுபடியும் சீரடையும் என்று எதிர்பார்க்கபட்டாலும் இந்தஅறிக்கை வரபோகின்ற அமெரிக்க பொது தேர்தலில் தங்களது கட்சிக்கு மக்களின் ஆதரவை திரட்டி வெற்றி வாய்ப்பை பெறுவதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது என்கின்ற எதிர்கட்சிகளின் கூக்குரலும் ஒலிக்கத் தவறவில்லை.

மாவோயிஸ்ட்டுகளின் மனிதவேட்டைக்கும் தீராத போராட்டங்களுக்கும்
இந்திய அரசியலின் மிகப்பெரிய வெற்றியாக முடிவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாலும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி திரும்பவும் கிடைத்திருப்பதால் மன்மோகன் சிங்கின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு மீண்டும் பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதிலும் நம்பிக்கை தெரிகிறது. சோனியாகாந்தியின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பற்றிய அக்கறை அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கவேண்டுமே தவிர எதிர்கட்சியின் சிந்தனைக்கும் வாதத்திற்கும் அவசியமற்றது என்பதை எதிர்கட்சிகள் அறியவேண்டியது அவசியம். எதிர்கட்சி என்பதற்கு அர்த்தம் எதிரிகள்கட்சி என்று புதிய அகராதியை தோற்றுவிக்கும் இந்திய கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் நடவடிக்கைகளையும் கவனித்தால் நாட்டை ஜாதி மத இன வேறுபாடுகளால் மட்டுமின்றி எந்தவித பிரச்சினையாலும் பிரித்து குளிர்காய நினைக்கும் தரம் கெட்ட அரசியலை 'சாக்கடை' என்று சொல்லி வருங்கால இளைஞர்கள் ஒதுங்கிச் செல்லாமல் சாக்கடையை மூடிவிட்டு புதிய வழிகளை காணாவிட்டால் இந்தியநாடு வல்லரசாகுமா என்கின்ற கேள்விக்கு கூட இடமில்லாமல் போகும் நிலையை தவிர்க்க இயலாது.

தன்னலமற்ற தலைவர்களை ஈன்றெடுத்த இந்திய மண்ணில் தன்னலம் மிகுந்த தலைவர்களை இந்திய தேசம் ஒருகாலும் உருவாக்க கூடாது என்பதில் உறுதியாக இருத்தல் இன்றைய இந்தியாவிற்கு மிகவும் அவசியம். 'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்கின்ற பழமொழிக்கேற்ப ஜாதி இனம் மதம் நாடு ஆகியவற்றை கடந்து 'அரசியல் கூத்தாடிகளுக்கு' இடம் கொடாமல் இருக்க இளைஞர்கள் அரசியலுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும். லஞ்சமோ பஞ்சமோ நாட்டை சூறையாட அனுமதிக்க கூடாது. கொஞ்சும் மொழி பேசும் வஞ்சியரைப் பற்றிய கனவில் இளமையை வீணடிக்காமல் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்கும் வழிகளில் முனைப்புடன் பணி செய்தால் வல்லரசாகுமா என்கின்ற கேள்விக்கே இடமிராது. ஒபாமாவின் அறிக்கைக்கு செவி சாய்க்கும் அமெரிக்காவின் மக்களைப் போல செயல் வீரர்கள் இந்தியதேசத்திற்கு முக்கிய தேவை, அமெரிக்காவின் பல கலாச்சாரங்களை விரும்பி ஏற்கின்ற இளைஞர்கள் அமெரிக்கர்களைப் போல அர்ப்பணிப்பும் தேசிய பற்றும் மிகுந்து தங்களை அரசியலில் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

மக்கள் சக்திக்கு இணையான சக்தி உலகில் வேறில்லை என்பதை இளைஞர்சமுதாயம் உணரவேண்டும், நாளைய இந்தியாவில் அமெரிக்கர்கள் பணிசெய்ய விண்ணப்பித்து காத்து கிடக்கின்ற நிலையை உருவாக்க வேண்டும், அப்துல்கலாம் சொன்னது போன்று வெறும் கனவிலேயே நின்றுவிடாமல் கனவுகளை நனவாக்க முயற்ச்சிகளையும் மேற்கொள்ளுதல் மிகவும் அவசியமானது. இளைஞர்களே ஒன்றுபடுங்கள், 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; இங்குஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே'.