Translate

9/23/2010

ஜனநாயக நாட்டில் நீதிக்கு ஏன் தட்டுப்பாடு
இந்தியாவில் மட்டும் பல வழக்குகள் இழுபறி நிலையிலேயே கிடப்பில் போடப்படுவது மிகவும் பழகிப்போன விஷயம். நீதிமன்றத்தில் போதிய நீதிபதிகள் இல்லையென்பது தொடர் காரணமாக இருந்தாலும் பல வழக்குகள் முடிவிற்கு வருவதற்குள் வழக்கு தொடுத்தவர்களில் பலர் வயதாகி இறந்து போய் தொடர்ந்து வழக்கு நடத்துவதற்கு கூட ஆட்கள் இல்லாமல் போன கதைகள் உண்டு. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு தொடர சட்டத்தில் இடமிருப்பதால் வழக்குகள் மீண்டும் இழுபறி நிலைக்கு செல்வது தொடர்கதை. பல வழக்குகள் தொடக்கத்தில் மிகவும் பரபரப்பாக முதன்மை செய்திகளில் இடம் பெற்று அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிப்பதுண்டு, ஆனால் பெரும்பாலான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும்போது அவை செய்திகளில் முதன்மை இடத்தை பிடிக்க முடியாமல் வேறு பல நிகழ்வுகள் முதன்மை பகுதிகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதும் பல வழக்குகளின் முடிவு பத்திரிகையின் ஏதோ ஒரு பகுதியின் கடைக்கோடியில் கண்ணுக்கு தெரியாத சிறிய எழுத்தில் பிரசுரமாவதும் வேடிக்கை.

பாப்ரி மசூதியின் வழக்கு அதே போன்ற நிலையை அடையும் வாய்புகள் மிகவும் குறைவு ஏனெனில் இதன் அடிப்படை மதம் சார்ந்த பிரச்சினை, அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு கொண்டு செல்லபட்டாலும் அங்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இன்னும் எத்தனை காலமாகும் என்பதை காண மீண்டும் [எத்தனை ஆண்டுகள் ?] பொறுத்திருக்க வேண்டியது கட்டாயம். மேல் முறையீடு என்பது சட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் கிடப்பில் கிடத்தப்படுவதை எண்ணும் போது சட்டத்தின் மீதும் தீர்ப்பின் மீதும் பொருமை இழக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று.

தனி மனிதர்களின் வழக்கானால் அதன் தீர்ப்பு அவரைச் சார்ந்தவர்களை மட்டுமே பாதிப்படையச் செய்து பிரச்சினைகள் வெளியே தெரிய வழி இல்லாமல் போகும், ஆனால் அரசியல் பிரமுகர்கள் அல்லது பொது நல வழக்குகள் மற்றும் ஊழல் வழக்குகள் போன்றவற்றிக்கு தீர்ப்புகள் வழங்கப்படும்போது அவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இதன் பாதிப்பை கருதி தீர்ப்பு வழங்கப்படுவதில் இழுபறிநிலை ஏற்ப்படுவது ஜனநாயகத்தின் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் மேலை நாடுகள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வழக்குகளின் தீர்ப்பும் அதற்க்கான தண்டனைகள் நிறைவேற்றப்படுவதும் மிகவும் விரைவானதாகவும் சரியானதாகவும் இதில் பொது மக்களின் தலையீடுகளும் இழப்புகளும் அறவே இடம்பெறுவது கிடையாது. இந்த வகையில் இந்திய தேசம் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலைமையிலேயே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் மற்றொரு தீமையாக ஜனநாயக நாட்டில் நீதிக்கும் அதன் தீர்ப்பிற்கும் பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் பணம் பெருத்தவர்களும் பெரும் இடையுறாக இருப்பது ஜனநாயகத்தின் இருட்டுப்பகுதி, இதனால் பல தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு இயலாமல் கிடப்பில் கிடத்தப்படுவதுடன் நீதியை கொலை செய்யவும் கூட வாய்புகள் ஏற்ப்படுகின்றது. பல வழக்கறிஞர்கள் நீதிபதிகள் கொலை செய்யப்பட்ட கதைகளையும் வரலாறுகள் நமக்கு காட்டுகிறது. இதற்க்கு காரணம் ஜனநாயகத்தை நாம் நமது சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும், சட்டத்தை அதன் வரையறைகளுக்கு உட்பட்டு இயங்க விடாமல் ஜனநாயகம் தடுத்தால் அதற்குப் பெயர் ஜனநாயகப்படுகொலை அல்லது சுயநலம் என்பதுதானே அர்த்தம்.

இப்படிபட்ட காரணங்களால் நீதி செத்து போனதால் அப்பாவிகள் ண்டனைக்கு உள்ளாவதும் உண்டல்லவா, நிரபராதிகள் தண்டனையை அனுபவித்த காரணத்தால் அபலைகள் வேதனையடைந்த, அடைகின்ற கதைகளும் உண்டல்லவா, நீதியை கொன்ற நாடு சுபீட்சம் பெறுவது உண்டா, பல நீதிக்கதைகளை நாம் படித்து கேட்டிருந்தாலும் 'படிப்பது ராமாயணம் இடிப்பது ..........' போன்ற நிலைதானே இருந்து வருகின்றது. 'கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதை நாம் படித்திருக்கிறோம் ஆனால் முதுமொழியாக 'கோவிலை இடிக்கும் ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற நிலை உண்டாக்கப்பட்டுவிட்டது துரதிஷ்டவசமானது.