Translate

9/06/2010

அமலாக்கபட்டிருக்கும் விதிமுறைகள் கோமாவில் உள்ளது

மருத்துவ ஸ்தாபனங்களில் நடக்கும் பலதரப் பட்ட ஏமாற்று வேலைகளை ஒரே இடுகையில் கொட்டி தீர்க்க இயலாது, சென்னையில் உள்ள பிரபல பரிசோதனை மையத்தில் நடந்த ஒரு சம்பவம், அங்கு பலவித உடல் பரிசோதனைகளை செய்ய வருகின்ற நபர்களுக்கு அவர்கள் அணிந்திருக்கும் உடை நகை போன்றவற்றை கழற்றி சிறிய அறைகள் கொண்ட அலமாரியில் வைத்துவிட்டு அடுத்த அல்லது வேறு அறைகளுக்குச் சென்று குறிப்பிட்ட ஸ்கேன் அல்லது வேறு விதமான உடல் பரிசோதனைகளை செய்வதற்கு நோயாளியை அழைத்துச் செல்லும்போது நகைகள் மற்றும் பணப்பையை கூட அந்த சிறிய அறைகள் கொண்ட மர அலமாரியில் வைத்துவிட்டு அதற்குரிய சிறிய சாவியையும் எடுத்துச் செல்லும்படி நமது கையில் கொடுக்கிறார்கள்.

நோயாளியின் உடன் வருபவர் நோயாளியுடன் உதவிக்குச் செல்லும் போது அவர்கள் வைத்துவிட்டு போகும் நகை பணம் வைத்திருக்கும் அலமாரியை அங்கு வேலை பார்க்கும் ஆண் ஊழியர்கள் அதே போன்ற வேறு சாவியை போட்டு திறந்து பணம் நகை எதையாவது திருடிவிடுகின்றனர். இத்தகைய பாதுகாப்பின்மை அங்குள்ள அலமாரியில் உள்ளது என்பதை நோயாளியுடன் வந்திருப்பவர் முன்னரே அறிந்திருக்கவில்லை என்றாலோ நோயாளியை பற்றிய கவலையிலும் சிந்தனையிலும் இருக்கும் போது அவிழ்த்து வைக்கும் பொருட்களின் மீதான அக்கறையும் நினைவும் குறைந்திருக்கும் நிலையை உபயோகித்து அவர்கள் வைத்துவிட்டு போகும் நகை மற்றும் பணத்தின் மீது குறி வைத்து திருடும் அநியாயம் நடந்துவருகிறது.

திருட்டு போன பின்னர் கேட்டால் அதற்க்கு
அங்குள்ளவர்கள் யாரும் பொறுப்பேற்க தயாராக இல்லை, இதனால் அங்கு போகும் புதிய நபர்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் இத்தகைய இழப்பிற்கு ஆளாக நேருகிறது. சி.டி.ஸ்கேன் எடுப்பதற்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையில் ஒவ்வொரு இடத்தில் வெவ்வேறு தொகை வசூலிக்கப்படுகிறது, சில நோயாளிகளுக்கு சி.டி ஸ்கேன் எடுக்க அவசியம் இல்லாவிட்டாலும் கூட அனாவசிய செலவினமாக அத்தனைப் பெரிய தொகையிலான செலவை ஏற்க்க வேண்டிய நிலையை மருத்துவர்களின் அசட்டையான போக்கினால் ஏற்ப்படுகிறது, பல் மருத்துவத்திற்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, பல மருத்துவமனைகளில் மருத்துவர் அங்கு அனுமதிக்கபட்டிருக்கும் நோயாளிக்கு எழுதி கொடுக்கும் மருந்து பொருட்களை அங்குள்ள செவிலிகள் எடுத்துச் சென்று மருந்துக்கடைகளில் விற்று பணமாகக்கிக் கொள்ளும் திருட்டு வேலைகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை.

ஒரு சில வியாதிகளுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர அல்லோபதி மருத்துவத்தில் வேறு தீர்வுகளே இல்லை என்பதால் அறுவை சிகிச்சைகளுக்கு பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது, சில மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் கம்பனிகளிலிருந்து அறுவை சிகிச்சைக்கான பணத்தை நோயாளிக்காக மருத்துவமனைகள் பெற முடிவதால் நியாயமான தொகையை இன்சூரன்ஸ் கம்பெனிகளிலிருந்து பெறாமல் இருமடங்கு அதிகமான தொகையை பெற்று கொள்ளை லாபம் பெறுகின்றனர். பரிசோதனை மையங்களில் பலவற்றில் சோதனை செய்யாமலேயே பரிசோதனைக்கான முடிவுகளை எழுதி கொடுத்துவிட்டு 3000, 5000 என்று கட்டணம் வசூலித்து அதின் கமிஷனை மருத்துவருக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் பாதிப்பிற்கு உள்ளாவது நோயாளிகள் மட்டுமே.

ஒவ்வொன்றிற்கும் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அத்தகைய கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பவருக்கு அபராதம் வழங்கினால் இத்தகைய அக்கிரமங்கள் நடக்காது. நமது நாட்டில் ஏற்கனவே நடைமுறைபடுத்தபட்டிருக்கும் பலவிதமான விதிகளின்படி ஒவ்வொரு துறையிலும் செயல்பாடு இருந்திருந்தால் நாட்டில் எத்தனையோ அக்கிரமங்கள் இல்லாமல் இருந்திருக்கும், லஞ்சம் வாங்கிக் கொண்டு அமலில் இருக்கும் சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நாட்டில் ஏற்க்கனவே நடைமுறைக்கு உட்படுத்தபட்டிருக்கும் பல விதிகள் மீறப்பட்டு வருவதே சகஜமாகி வருகிறது. எதற்காக சட்டதிட்டங்கள் போடப்படுகிறது என்பதே இன்றைய
நிலையில் கேள்விக்குறியாக இருப்பதை பார்க்கும் போது நாளைய நிலையைப்பற்றிய பயம் அதிகமாகி வருகிறது.