Translate

9/01/2010

இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள் - கடிதம் 4

அன்புள்ள இளைய சமுதாயமே

உங்கள் மீதுள்ள அக்கறையும் அன்பும் எதிர்கால சந்ததியினர் மீதும் வளங்களின் மீதும் ஏற்பட்டுள்ள தீராத ஐயத்தின் பால் உங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவற்றை கொண்டுவர மனம் சொன்னது, இதை படிக்கும் இளைஞர்கள் சற்றே யோசிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையாக எழுதும் இந்த கடிதம் நிச்சயம் உங்களை யோசிக்க வைத்தால் நான் மிகவும் சந்தோஷமடைவேன் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்கள் நினைத்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பதில் எனக்கு சிறிதேனும் சந்தேகமில்லை.

இளைஞர்களை
மிக அதிகமாக கொண்டிருக்கும், எண்ணற்ற இயற்க்கை வளங்களை பூமியில் வைத்திருக்கும், விவசாயத்திற்கு உகந்திருக்கும் மண் வளமும் சீதோஷ்ணமும் அருமையாக அமைக்கபட்டிருக்கும் இந்தியாவில் வாழும் இளைஞர்களின் இன்றைய இன்னொரு முகம் கஞ்சா அபின் போன்ற போதை மருந்துக்கு அடிமை, பணத்திற்காக எதையும் செய்கின்ற கீழ் தரமான மனநிலை, பெரியோரை அவமதித்தல், பெரியோரின் நல்ல போதனைகளுக்கு எதிராக செயல்படுதல் என்று இன்றைய இளைஞர்களின் நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான மாற்றம் நாளைய இந்தியாவின் நிலை என்னவென்பதை முன்னோட்டம் காண்பிக்கிறது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்று எல்லோரும் நினைப்பதில் தவறில்லை, விலைவாசி ஏற்றத்தை குறை கூறும் நாம் ஏன் விவசாயத்தை செய்யக் கூடாது. அதிக தானிய உற்பத்தி பெருகினால் தானியத்தின் விலை குறைவதை தவிர விலையேற்றம் ஏற்ப்பட வாய்ப்புகள் இருக்க முடியாதே.

படித்த இளைஞர்கள் எல்லாரும் அலுவலகங்களில் மட்டுமே பணிப் புரிய வேண்டும் என்று நினைக்காமல் அவரவர் கிடைக்கும் வேலையை செய்து அதிலே மென்மேலும் உயருவதற்கு ஏன் முயற்சி செய்வதில்லை. அவரவர் குடும்பத்தொழில் எதுவாக இருந்தாலும் அதையே மேம்படுத்த படித்த இளைஞர்கள் முயற்ச்சிகள் எடுக்காமல் வேறு தொழில்களை தேடி நகரங்களை நோக்கி ஏன் போகவேண்டும், தானியங்களுக்கு அரசு கொள்முதல் விலையை மிகவும் குறைப்பதாலும் இடைத்தரகர்களின் தலையீடுகளாலும் உற்பத்தி செய்யும் விலைக்கு கூட தானியங்களை விற்க இயலாத நிலை இருப்பதாக குறைகூருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களால் அவற்றை மாற்ற எந்தவிதமான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை சிந்தித்து ஏன் செயல்படகூடாது.

யாரோ ஒருவர் இந்தநிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக காத்திருப்பதால் யாரும் மாற்றியமைக்க இயலாமல் கிடப்பில் கிடக்க விட்டுவிட்டு குறைக்கூறிக்கொண்டு இருப்பதைவிட நாம் எப்படி அதை மாற்ற முடியும் என்பதை சிந்தித்தால் நிச்சயம் விவசாயம் போன்ற மற்ற எத்தனையோ தொழில்களில் முன்னேற வாய்புகள் உண்டு. எளிதில் பணம் சம்பாதித்து விரைவாக சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் எல்லா விதமான குறுக்கு வழிகளையும் குரூர வழிகளையும் தேர்ந்தெடுத்து பின் விளைவுகளைப்பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் செயல்படுவதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் காணும்போது பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது, உழைப்பு என்பதே இல்லாமல் சுகங்களை மட்டுமே வாழும் நாளில் அனுபவிக்க ஆசைப்படும் இன்றைய வாழ்க்கையில் சகஜமாகிப் போன நிலையால் நாட்டில் பல வன்முறை சம்பவங்களும் கொலை கொள்ளை கற்பழிப்பு திருடு வழிப்பறி, என்று அடுக்கடுக்காக சம்பவங்கள் தொடர்கின்றது.

இந்நிலை நீடிப்பதால் சுபீட்சம் விலகி போவதோடு மழை காற்று நீர் பூமி எல்லாமே தனது சுயநிலையை விட்டு விலகி நாளுக்குநாள் குறைந்த பலனை கொடுத்து வருகிறது.
இதற்க்கு மனிதர்களின் மனங்களில் நிச்சயம் பெரும் மாற்றம் உண்டாக வேண்டியது அவசியம். மனிதர்களின் நடத்தையில் சிறந்த மாற்றம் ஏற்படவில்லை என்றால் இயற்கையின் சீரழிவும் மனிதர்களின் அழிவும் மனிதர்களாலேயே உண்டாக்கபட்டுவிடும். இளைஞர்களே!! நாளைய இந்தியா எதிர் கால சீதோஷ்ணம் தட்ப வெட்பம் சிறப்புருவதும் அழிவதும் உங்கள் கையில் தான் உள்ளது என்பதை உங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். விவசாயம் இயற்க்கை வளங்களை மேம்படுத்துதல் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு துணைப் போகாமல் கவனமுடன் வாழ்க்கையை செம்மையாக்குவது போன்ற பலவற்றையும் இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்ளாமல் சொகுசு வாழ்க்கை எப்படியேனும் வாழ்ந்துவிட்டால் போதும் என்று செயல்பட்டால் அழிவிற்கு நாமே காரணமாகி விடுவோம் என்பதை மறந்து செயல்பட வேண்டாம்.