Translate

8/20/2010

ராஜுவின் கதை

சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,

அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.

அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.

திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு .வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது.தொடரும்....