Translate

8/19/2010

காதலென்பது எதுவரை

காதலின் அனுபவங்களைப் யோசித்துப் பார்த்தால் பயித்தியக்காரத்தனமாகவே தோன்றுகிறது, காதல் என்கின்ற பேய் மனதினுள் ஏற்ப்படுத்துகின்ற சலனங்களை நினைக்கையில் நிச்சயமாக உடலினுள் இன்னொரு சக்தி புகுந்து கொண்டு ஆட்டுவிக்கின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சாலையில் நடந்து போகின்ற போது முன்னே அல்லது வீதியின் எதிர் புறத்தில் பார்க்கும் நபரெல்லாம் காதலிக்கும் நபராகவே தெரிவது என்ன விந்தை. உறங்கும்போதும் உணவருந்தும் போதும் பாடங்களை படித்துக்கொண்டிருக்கும் போதும் காதலித்தவர் உடன் உரையாடிய உரையாடல்களெல்லாம் கண் முன் தோன்றி சிரிக்கவும் அழவும் வைத்து இருக்கின்ற சூழலை மறக்கச் செய்யும் மந்திரம் புதுமையன்றோ.

அடுத்தவரிடம் ஒரு வார்த்தை கூட பேச பிடிக்காமல் போகும் அந்த மாயாஜாலம் காதலினால் ஏற்ப்படும் மாயம் தானே. நீயின்றி நானேது என்று நம்மை நம்மிடமிருந்து பிரித்து வைக்கும் வித்தை அந்த காதலின் மாய வித்தையல்லவா. அதுவரை கண்டிராத வார்த்தைகள் அதுவரை கற்றிராத கவிதைகள் தானாகவே அருவி போல கொட்டி தீர்க்கும் காதல் கவிஞனாய் மாற்றும் புரியாத புதிரல்லவா காதல். காதல் தரும் போதையில் மயங்கி கிடக்கும் அந்த காலங்கள் பிறகு அவற்றை இழந்த போது மதுவினாலும் கிடைக்காத அரும் போதையல்லவா. பெற்றவரை மறந்து உற்றவரை துறந்து வாழ்நாளெல்லாம் காதல் மட்டுமே போதும் என்று மதியிழக்கச் செய்யும் செப்புடு வித்தையல்லவா அந்த மர்மக்காதல்.

காதல் நோய்க்கு மருந்து கண்டவர் இதுவரை இல்லை என்பார், ஆனால் காதல் தோல்விதான் அதற்க்கு சரியானதொரு மருந்தென்பேன் நான் நிச்சயமாய், காதலனின் வார்த்தைகளில் ஏற்ப்படும் நயவஞ்சகமும் சந்தேகமும் காதல் முறிக்கும் சரியான மருந்தென்பேன். காதல் என்பதெல்லாம் பொய், காதல் உணர்வுகளெல்லாம் உடற்கூறுகளி
ல் ஏற்ப்படும் மாற்றங்கள் தாம் என்று உணர்வடையச் செய்யும் காலம் வரும்போது காதலித்த காலங்களை எண்ணி பார்த்தால் அவை நிச்சயம் சித்தம் கலைந்தவனது செயலாகத் தோன்றுதலும் இயற்கையன்றோ. அதுவரை காதல் படுத்தும் பாடுகள் தான் என்ன, அதன் பிரிவுகூட மரணத்தை விடக் கொடியதாகி நம்மை கொல்லும் வலிமை என்ன. எந்த இருமனிதனும் தொடர்ந்து இரண்டு வருட காலத்திற்கு மேல் கருத்தொருமித்து வாழ இயலாது என்கிறது மனிதவியல்.

இதற்க்கு எதிராக செயல்படுதல் அரிது, சூழ்நிலை, காலத்தின் கட்டாயம் என்று எத்தனையோ சமூக காரணங்களை உள்ளடக்கியது தான் சம்சாரம், அதிலும் இந்திய, குறிப்பாக தமிழகக் கலாச்சாரமென்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று இயல்புக்கு மாறாக பெரிய தடை என்கின்ற விதியை நியமித்து வைத்ததினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியின் உறவு கூட கடமையாகி போனது. இயல்புகளை, இயற்கையின் விதிகளை மீறி மனிதன் செயல்பட நினைக்கும் போது சமுதாயத்தில் ரகசிய அத்து மீறல்கள் அதிகரிப்பதை தவிர்க்க இயலுமா. கடமைக்காக குழந்தைகளை பெற்றெடுக்கும் நிர்பந்தங்களை தவிர்க்கத்தான் இயலுமா. இன்றைய இளைய சமுதாயம் இவற்றிற்கு விதிவிலக்கு. காதல் என்பதும் கணவன் மனைவி உறவென்பதும் கடவுளுக்கு சமமல்ல அல்லது ஒன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் இல்லை என்கின்ற
நிலையில் செயல்படுகிறது.

காதலுக்காக எதையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை, காதலென்பது அவரவர் சுதந்திரம், வரம்பு மீறிய உறவுகள் தேவையற்றவை, ஆனால் காதலுக்காக கண்களை இழக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை இளைஞர்கள் நன்றாகவே புரிந்து வருகின்றனர், அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலும் கல்யாணமும் மிகவும் புனிதமானது என்கின்ற பழைய சித்தாந்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது, காலப்போக்கில் அவை இல்லாமல் போகும் என்பதும் உண்மை.