Translate

8/13/2010

நீர் ஆதாரங்களை மழை நீர் சேமிக்க தயாரக்கவேண்டும்

ஆகஸ்டு மாதம் துவங்கி பாதி மாதம் கடந்த பின்னும் வெயலின் உக்கிரம் குறைந்ததாக இல்லை, ஆடி மாதமென்றால் அம்மியும் பறக்குமென்பார்கள், வீடுகளில் அம்மி இல்லாமல் போனதால் ஆடி மாதக்காற்றுக் கூட வீசியடிக்காமல் மௌனமாகிப் போயிற்றோ, மழை மேகங்கள் திரண்டு வந்தால் மழைப் பொழியும் என்று அர்த்தம், இப்போதெல்லாம் மேகக் கூட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை சுற்றிப் பார்க்க வந்து வந்து நோட்டம் விட்டு போகிறதே தவிர மழை பொழிவதாக இல்லை, அக்கிரமம் அநியாயம் அதிகரித்து மனித நேயம் குறைந்து போன காரணமோ என்னவோ ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் மேகமெல்லாம் ஒன்று திரண்டு 'பொத்துகிட்டு ஊத்துதடி வானம்' என்ற பாடலைப்போல மேகம் உடைத்துக் கொண்டு மழை கொட்டி தீர்த்து மக்களை அள்ளிக்கொண்டு சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு மழை வருவதற்கு முன்பு ஆறுகள் குளங்கள் ஏரிகள் என்று தண்ணீர் நிற்கும் இடங்களையெல்லாம் தூர் வாரி ஆழப்படுத்தினால் பொழிகின்ற மழை வெள்ளத்தோடு வீணாக கடல் நீரில் கலந்துவிடாமல் நாட்டிற்குள்ளே தங்கி நிற்க்கச் செய்யலாம், இதனால் சுற்றுப்புறத்திலிருக்கும் கிணறுகளில் குடிதண்ணீர் உற்றுகள் பெருகும், மக்களின் குடிநீர் பிரச்சினை ஓரளவாவது குறையும். இருந்த ஏரி குளங்கலெல்லாம் மூடப்பட்டு அதன் மீது குடிசை மற்றும் கட்டிடங்கள் பெருகி மழை பொழியும் போது நீர் நிலைகளில் நீர் தேங்கி நிற்ப்பதற்கு இடமில்லாமல் பொழியும் மழை எல்லாம் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக்கொண்டு கடலினுள் சென்று கலந்து விடுவதால் மழை பொழிந்தும் கூட நீர் ஆதாரங்களில் ஊற்றுகள் தோன்றாமல் காய்ந்து கிடக்கும் நிலை ஏற்ப்படுகிறது,

மழை பெய்தும் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்ப்படுவதை தவிர்க்க இயலாமல் அரசும் பொதுமக்களும் அவதியுறுகின்ற நிலை ஏற்ப்படுகிறது, மழை வருகின்ற காலத்திற்கு முன்னதாகவே நீர் தேங்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் குடிசைகளை குடிசை மாற்றுவாரியமும் அரசும் அகற்றும் பணியினை மேற்கொள்ளுதல், அந்த இடங்களில் போதிய நீர் தேங்கி நிற்கும் அளவிற்கு தேவையற்ற மண்ணை அகற்றும் பணிகளை வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பாகவும் அதே சமயத்தில் நீர் ஆதாரங்களை மழைக்கு தயார் படுத்தும் பணியாகவும் முனைப்புடன் செயல்பட்டால் ஓரளவு நீர் ஆதாரங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக்கலாம். அதிக மழைப்பொழிந்தாலும் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் அங்கீகாரமற்ற குடிசைகளும் கட்டிடங்களும் அதில் வசிக்கின்ற மக்களும் பெரும் சேதத்திலிருந்து காக்கப்படுவதும் உறுதி என்பதால் இத்தகைய பணிகளை மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே அரசு கவனம் செலுத்தி முயற்ச்சிகள் செய்யுமானால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிணறுகளில் நீர் ஊற்றுக்கண் திறக்கும் வாய்புகள் உண்டாகும், இதனால் பலரும் பயனடைவர்.

மரம் செடிக் கொடிகளை வெட்டி அங்காங்கே வீடு கட்டும் நிலமாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே மேலோங்கி இருப்பதால் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி வளர்ப்பதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஆட்களை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை சரியாக செய்யவேண்டும் இதனால் மழை உருவாகவும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பத்தை தவிர்க்கவும் முடியும். இவ்வாறானப் பணிகளை மழைக்கு முன்னதாக செய்யும் பட்சத்தில் பெய்யும் மழை குறைவான அளவாக இருந்தாலும் அதிகமான அளவில் இருந்தாலும் மழை நீரால் பயன் பெறுவது உறுதி, மழை நீரை சேமிக்கவும் அதிக மழையால் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகாமல் தடுக்கவும் முடியும்.