Translate

8/12/2010

பிரம்மாண்டம்

சென்ற வாரம் முழுவதுமாக சன் டி.வியில் எந்திரன் திரைப்படத்திற்க்கான பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா பற்றிய விளம்பரத்தை பார்த்தவர்கள் நிச்சயம் அந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பை பார்க்க வேண்டும் என்று நினைத்து, பார்த்தும் இருப்பார்கள், மலேஷியாவில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியினை கண்டவர்கள் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பெரிய நிகழ்ச்சியா என்று தவறாமல் நினைத்திருக்க வேண்டும் [ரஜினிகாந்தின் ரசிகர்களைத் தவிர], சமீப காலமாக திரையுலகில் பாடல் வெளியீட்டு விழா என்பது திருமணத்திற்கு முன்னர் நடக்கும் நிச்சயதார்த்தம் என்கின்ற சடங்கைப் போல ஆகி இருப்பது குறித்து சற்று யோசித்துப் பார்த்தால் சில கேள்விகள் நமக்குள் எழுகிறது.

திரைக்கு வரப்போகும் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்ப்படுவதற்காக இந்நிகழ்ச்சி விளம்பரமாக பயன்படுத்தப்படுகிறதோ என்பதும், குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் மூலம் அந்த திரைப்படத்தில் வேலைபார்த்த இசையமைப்பாளரும் நடித்த நடிகர்களும் மற்றும் ஏனையோரும் முன் கூட்டியே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் அத்திரைப்படத்தை காண்பதற்கு மக்களின் ஆர்வம் தூண்டப்படுவதுடன், பாடல் காட்ச்சிகளை காண்பதற்கென்றே மக்கள் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்கின்ற நோக்கமாக இருக்கலாம். பாடல்களுக்காகவே 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய திரைப்படங்களும் நிறைய உண்டு ஆனால் அவற்றை யாரும் விளம்பரப்படுத்தியதில்லை, இசையும் பாடல் வரிகளும் அதற்கேற்ப அமைந்த காட்ச்சிகளும், ஆயிரக்கணக்கான பாடல்களும் விளம்பரங்கள் இல்லாமலேயே இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஒரு பாடல் காட்சியை பதிவு செய்வதற்கே பல கோடி ரூபாய்களை கொட்டி பதிவு செய்யப்படுவதாக செய்திகளை பத்திரிகைகளின் மூலம் வாசிக்கும் போது இத்தகைய மாற்றங்கள் அவசியம்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை. எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு செலவழிக்கப்பட்டிருக்கும் பணத்தையும் அதன் ஆடம்பரத்தையும் பார்க்கும்போது இதன் முதலீடு எத்தனை கோடிகள் இருக்குமென்று எண்ணத்தோன்றுகிறது, ஆடம்பரம் அவசியமானதா அவசியமற்றதா என்பதை அதன் தயாரிப்பாளர்தான் யோசிக்கவேண்டும், ஹாலிவூட் திரைப்படங்களில் காண முடியாத பிரமாண்டமா.

அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி அவர்கள் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப்
போன்று குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் உண்மையானது, 'எத்தனையோ திறமையான நடிகர்களும் நடிகைகளும் நகைகளை அடகு வைத்தெல்லாம் பிழைப்பை நடத்தி கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு நடிப்பு என்பது மட்டுமே தொழில், நடிப்பு அவர்களது பொழுதுபோக்கு கிடையாது, அவர்களுக்கெல்லாம் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்' என்றார், அது மிகவும் சரியானதொரு சூடு, திறமைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் ஏற்கனவே சம்பாதித்து போதும் போதும் என்ற அளவிற்கு பணம் நிறைந்திருக்கும் ஐஸ்வர்யாராய், ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ரகுமான் போன்றவர்களுக்கு மீண்டும் திரைப்பட வாய்ப்புகளையும் கோடிக்கணக்கில் பணச்சுமைகளையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பதனால் ஏழையாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருக்கும் ஏராளமானோர் அதே கதியில் இருந்து சாக வேண்டியதாகவும் கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவித்துக்கொண்டு சேமித்து வைக்க இடம் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலைமைதான் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக முதல்வர் செந்தமிழ் மாநாடு நடத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெவித்தனர், எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க எதற்க்காக இவ்வளவு பணத்தை செலவழித்து மாநாடு நடத்தப் பட வேண்டும் என்று, அதே போன்று தலைநகரில் நடக்கவிருக்கும் காமன் வெல்த் விளையாட்டுகளைக் கூட சில அமைப்புகள் நாட்டில் எத்தனையோ தேவைகள் இருக்க எதற்காக இவ்வளவு பெரிய தொகை விளையாட்டை நடத்துவதற்க்காக செலவிடப்பட வேண்டும் என்று
திர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றிருக்கும் நடிகர்கள் மட்டும் இவற்றிற்கு விதி விலக்கு போல பல கோடிகளை வீணாக ஆடம்பரமாக செலவு செய்வதைப் பற்றி எந்த ஏழை ரசிகனும் கேள்வி கேட்பதில்லை

மாறாக அவர்களது திரைப்படங்களுக்கு வெடி வைத்து மேளம் கொட்டி ஆரவாரம் செய்து பாலபிஷேகம் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர், இத்தகைய ரசிகர்கள் இருக்கும் வரையில் அத்தகைய திரைப்படங்களும் நடிகர்களும் உருவாகாமல் இருக்கவே முடியாது, ஏற்க்கனவே எம்.ஜி.ஆரை கூட பொதுமக்கள் தான் உயர்விற்கு கொண்டு சென்றனர் இப்போது அந்த வரிசையில் ரஜினிகாந்தை உயர்த்திக் கொண்டு செல்கின்றனர். ரசிகர்கள் என்றுமே ஏழைகள்தான் ஆனால் அவர்களால் பூஜிக்கப்படுகின்ற திரைப்பட நடிகர்கள் கோடீஸ்வரர்கள், திருப்பதி வெங்கடாசலம் உட்பட.