Translate

8/11/2010

மீண்டும் பிறவா வரம்

முகம் காட்டும்
கண்ணாடி
முன்
முதன் முதலாக
என் முகத்தை
நான் கண்ட போது
எனக்கு சரியாக
வயது பதினெட்டு

அடுத்த வீட்டுப்
சிறுமி
'அழகு' என்று
சொன்னதும் வீதியில்
நடந்த போது
காண்பவரெல்லாம்
வைத்தக்
கண் வாங்காமல்
பார்த்துச் செல்வதும்
இதற்குத்
தானா என்று
அன்றுதான்
அறிந்தேன்

மீண்டும் காலம்
மிக வேகமாய்
ஓடியது
தற்செயலாய்
ஓர் நாள் அவசரமாய்
வெளியே செல்ல
அனைவரும்
விரைவாக கிளம்பினோம்

குறிப்பிட்ட சமயத்தில்
போய்ச் சேருமிடம்
தாமதமாகாமல்
விரைவாக புறப்பட
என்னைத் தவிர
மற்ற யாரும்
தயாரில்லை

என் வீட்டு பிள்ளைகள்
என்னிடம்
சீக்கிரமாய் கிளம்பு
என்றார்,
எப்போதோ
நான்
தயாராகி விட்டேன்
என்றேன்

எல்லோரும் ஏகமாய்
சிரித்து வைத்து
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் போய்தான் பாரேன்
என்றார், என் முகம் பார்த்து
ஆண்டு பல கடந்ததென்றேன்

எங்களுக்காய் ஒருமுறை
முகம் பார்க்கும் கண்ணாடி
முன்னாடி வாயேன்
என்று என் கையிரண்டை
பிடித்து இழுத்துச் சென்றார்

காதோரத்து நரைமுடிகள்
காட்டியது காலத்தை
பதினெட்டு வயதில்
கண்ட
என் முகத்தை
புதிய நரைமுடியின்
வரவோடு
மீண்டும்
கண்டேன்,
ஒதுக்கி
சீவி
இறுகக்கட்டிய
தலைமுடியும்
சிறிதே அவசரத்தில் கட்டிய
சேலைக் கொசுவம்

ஏற இறங்க தொங்கிய
முந்தானையுமாய்
என் வயதிற்க் கொத்த
அலங்காரம் அதுவே
என்று என்னுள் நான்
திருப்தி கொண்டேன்

பிள்ளைகளுக்கு தன்
அம்மா எப்போதும்
கலியுக யுவதிப் போல
ஒப்பனைகள் செய்யவேண்டும்
என்று ஆசை,
யுவதிப் போல
உடையணிந்த
கிழவிகளை
காணும்போது
அவரை
குறை சொல்லி
புறம் கூறுவது தவறுதான்

அவரவர் விருப்பம்,
மன நிறைவு,
பழக்க வழக்கம் என்று
காரணங்கள் நிறைய
உண்டு
நடையுடை பாவனை
என்பது ஒரு மனிதனை
இன்னொரு மனிதன்
இனம் கண்டு கொள்வதற்கு
மிகப் பெரிய அடையாளம்

நடையுடை பாவனையிலிருந்து
அவர் இன்னார் என்பது
அடுத்தவருக்குத் எளிதில்
புரிந்து கொள்ள இயலும்
தற்காலத்தில் இவை
எல்லாம் இருந்த இடம்
சுவடு இல்லாமல்
பழையன கழிதலும்
புதியனபுகுதலும்
என்று

நடையுடை பாவனை
எதிலும் பொய்மை
நிறைந்து
உபாத்தியார்
வேடத்திலும் கொள்ளை
பாதிரியார் வேடத்திலும்
திருடர்கள் என்று
நடையுடை பாவனையைக்
விட்டு வைக்காமல்
பல வேடங்களில்
திருட்டு கொள்ளை கொலை
என்று மோசம் போக்கும்
மனிதர்களின் மாசுநிறைந்த
வாழ்க்கை எனக்கு துளியேனும்
விருப்பமில்லை
மனிதர்களை எனக்கு
துளியேனும் பிடிக்கவில்லை
அதனால்

மறு பிறப்பில்
நம்பிக்கை எனக்கில்லை
அப்படியொன்று எனக்கிருந்தால்
பசுமை மாறாகக் காடுகளில்
கொஞ்சி பேசும்

வண்ணக் குருவிகளாய்
நான் பிறப்பேன்
எஞ்சியோரின் தாகம்
தீர்க்கும் அருவிகளாய்
நான் பிறப்பேன்

தான் பிறந்த
பயனை
தன் மரணத்திலும்
பிறர்க்கென ஈந்திடும்
ஈகைக்கொண்ட
பச்சை பசேல்
மரமாவேன்

பனித்துளியின்
உறவாவேன்
பசும் புல்லாவேன்
புல்லின் மீதுறங்கும்
மழைத் துளியாவேன்
இயற்கையன்னை
மடியினில்
பூத்துக்
குலுங்கும் பூவாவேன்

கருங்குயிலின் இசையாவேன்
துள்ளித்திரியும் மானாவேன்
தோகை விரிக்கும் மயிலாவேன்
மழைதரும் கார் முகிலாவேன்
சித்தம் தெளியும்
பச்சையிலை மருந்தாவேன்
இனியொரு முறை
மனிதகுலத்தில் மட்டும்
மானுடமாய் பிறக்கமாட்டேன்