Translate

8/03/2010

படித்ததினால் அறிவு பெற்றோர் உண்டா

பள்ளிபருவ காலங்களை மறப்பது என்பது எளிதல்ல, அது இன்பமோ துன்பமோ அவை என்றும் நினைவைவிட்டு நீங்காத பசுமை மாறாத நினைவுகள். எங்கள் பள்ளியில் தமிழ் அல்லது ஆங்கில பாடம் தான் முதல் வகுப்பு, எப்போதுமே மாணவப்பருவத்தில் ஒரு குறிப்பிட்ட பாடத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்ப்படுத்துகிறவர்கள் அந்த பாடத்தை மாணவர்களுக்கு விளங்கும் வகையில் சுவைபட எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள், இதனால் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வம் தானாகவே ஏற்படுவதை தவிர்க்க இயலாது, அந்த வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை தொகுத்து மிகவும் நேர்த்தியான முறையில் விளக்கமளித்து வகுப்பில் மாணவர்களை தன்பால் இழுக்க வைத்த ஆசிரியர்களுள் முதன்மையானவர்கள் இந்த மூன்று பாடத்தின் ஆசிரியர்களும் மட்டுமே. தமிழ் பாடமென்றால் தித்திக்கும் அமுதாக, வகுப்பு இத்தனை சீக்கிரம் முடிந்துவிட்டதே என தோன்றும் வகையில் திரு வேணுகோப்பால் என்கின்ற தமிழாசிரியர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருக்கே உரித்தான புன்முறுவலுடன் தமிழ் செய்யுள்களையும் பாடங்களையும் இலக்கண இலக்கியங்களையும் விளக்குவதை இன்றும் மனக்கண் முன் காட்ச்சியாக்கி பார்க்க முடிகிறது.

தமிழில் கட்டுரைப்பகுதிகளில் ஆசிரியர் கொடுக்கும் தலைப்பில் கட்டுரை எழுதிக்கொண்டு வருவோர்க்கு அதற்கேற்ப மதிப்பெண்களும் வழங்கப்படும் அவ்வாறு எட்டாம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து அதிகமாக கொடுக்கப்பட்ட தலைப்பு 'நான் பிரதமரானால்', நான் முதலமைச்சரானால்', 'இலவச மதியவுணவு திட்டம்' போன்றவை. ஒவ்வொரு வகுப்பிலும் தொடரும் இந்த தலைப்புக்களின் மூலம் எதிர்கால இந்திய நாட்டின் பிரஜைகளைப் பற்றிய கருத்து அறிந்துக்கொள்ளப்படுவதுடன், நாட்டைப்பற்றிய மாணவர் கருத்தையும், சுதந்திர இந்திய பிரஜையின் மனதில் ஏற்ப்படுத்தபட வேண்டிய உரிமை மற்றும் உணர்வுகளையும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தும் நோக்கில் அவை அமையவேண்டும் என்பது நோக்கமாக இருந்திருக்கலாம்.

அத்தகைய மாணவர்களது நோக்கத்தை அவராகவே எழுதி வருவதுடன் மாணவர்களால் அறிந்துகொள்ள இயலாத கருத்துக்களை வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் கேட்டறிந்து எழுதும் போது மாணவர்களின் மனதில் அவை பதியவேண்டும் என்கின்ற நோக்கிலும் அந்த தலைப்புகள் கொடுக்கபட்டிருக்கலாம். இப்படிப்பட்ட நோக்கமெல்லாம் வீணாகும் வகையில் பல மாணவர்கள் கட்டுரைகளை பெரியவர்கள் எழுதி கொடுப்பதை அதன் அர்த்தம் சிறிதும் விளங்காமல் அப்படியே புத்தகத்தில் பதிவு செய்து கொண்டுவந்து மதிப்பெண் பெற்றுச் சென்றுவிடுவர், தேர்வில் கட்டுரைப் பகுதியில் அவ்வாறான கேள்விகளுக்கும் மனப்பாடம் செய்து பொருள் விளங்கிக்கொள்ள முயற்சிக்காமல் எழுதி மதிப்பெண் பெறுவார், இவ்வாறு கல்வியின் அடிப்படை நோக்கத்தை அறியாமல் 'படித்தவர்' என்ற பெயரில் வெளியேறும் ஒருவரால் நாட்டின் நிலையை, தங்களுக்கிருக்கும் ஓட்டுரிமையை எப்படி சிறப்பாக பயன்படுத்த இயலும்.

விஞ்ஞானப் பாடத்தில் உடலில்
எந்த சத்துக்கள் குறைந்தால் என்ன வியாதிகள் ஏற்ப்படுகின்றன, உடலின் இயக்கம் என்ன, உடலின் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, எந்த உடலுறுப்பில் எந்த நோய்கள் ஏற்படுகின்றது, தாவரங்களால், விலங்குகளால் மனிதனுக்கு என்ன பயன், மழை ஏவ்வாறு ஏற்படுகிறது, எந்த தானியத்தில் என்ன சத்துக்கள், தாதுக்கள் நிறைந்திருக்கிறது, போன்ற தகவல்கள் நிறைந்ததாகவும் மனிதனுக்கு வாழ்க்கையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களாகவும் இருக்கின்ற பாடங்களை அர்த்தங்களை விளங்கிக்
கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அதிகமாகப் பெற வேண்டுமென்கின்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில் தேர்வெழுதி அடுத்த வகுப்பிற்கு சென்று ஒவ்வொரு வகுப்பிலும் இவ்வாறே தொடரும் படிப்பு எவ்விதத்தில் ஒரு தனிமனித தினப்படி வாழ்க்கையில் தொடர்பு கொள்ள முடியும்,

மனப்பாடம் செய்து படிப்பதினால் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை மறுபடியும் மனனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்ற போது முதல் வகுப்பில் படித்தவற்றை மறக்கவேண்டும், இல்லையென்றால் மீண்டும் மனப்பாடம் செய்வது இயலாது, மனித மூளை என்பது ஓரளவுதான் நினைவில் நிறுத்திக்கொள்ளும் இயல்புடையது, நாமே படித்த எல்லாவற்றையும் அப்படியே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் அவை நினைவில் நிற்க்கபோவது இல்லை. நாம் படிப்பது நமது வாழ்க்கைக்கு உதவியாக இருக்கவேண்டுமென்பது மிகவும் முக்கியம். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போகும் ஒன்றை மனனம் செய்து எழுதுவதால் அவை மறந்துவிடுகிறதே தவிர நினைவில் நிற்ப்பதில்லை. படித்ததினால் அறிவு பெற்றோர் யார். அதை தங்களது சொந்த வாழ்வில் உபயோகிக்க இயலாதவாறு படிப்பதில் அதன் பொருளென்ன, அப்படி படித்தவர்களை 'படித்தவர்' என்று கூறுவது நியாயமா.

ஒரு முதலமைச்சர் அல்லது பிரதமரை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் அவரது பணிகள் என்ன என்பதும் நமக்கு அறிந்திராவிட்டால் ஓட்டுரிமை கொடுக்கப்பட்டிருந்தும் அவற்றை நம்மால் எந்த அளவு சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருக்க முடியும், அல்லது ஒரு பிரதமருக்கோ முதலமைச்சருக்கோ அவரது ஜாதி மதம் இனம் என்பவைகளை முக்கியமானதாக நாம் கருத்தில் கொள்வது என்பது அவசியமா, பதவியில் இருக்கும் ஒருவரால் எவற்றையெல்லாம் மக்களுக்காக செய்திட இயலும் என்கின்ற அடிப்படையான தகவல்களை படித்தவர் அறிந்திருப்பது அவசியம் அல்லவா, அப்படி படித்தவர் அறிந்திருப்பது அவசியம் என்றால் அவர் மனப்பாடம் செய்து தேர்வெழுதி பின்னர் அவற்றை மறந்துவிடும் படிப்பு முறை தவறானது அல்லவா, படிப்பென்பது ஒருவரின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவேயன்றி பணம் ஈட்டும் கருவியாக்கபட்டிருப்பது படிப்பினை அல்லது அறிவினை முடமாக்கும் செயல் அல்லவா?

படிக்கும் ஆர்வம் எனக்கு அதிகமிருந்ததால் முதுகலையில் ஏற்கனவே பட்டம் பெற்றிருந்தும், வேறொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் சேர்ந்தேன், அதற்க்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வேன், அப்போது அங்கு என்னுடன் படிக்க வந்தவர்கள் எல்லோருமே அரசாங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அல்லது கல்லூரிக்குச் சென்று பட்டதாரியாக இயலாமல் காலம் கடந்து பட்டதாரியாக வேண்டும் என்கின்ற எண்ணத்தில் வந்து சேர்ந்தவர்கள், நான் மட்டுமே இல்லத்தரசியாக மட்டுமே இருந்தேன், மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் 'நாங்கள் எல்லாம் பதவி உயர்விற்காக படிக்கின்றோம், பதவி உயர்வால் சம்பளம் கணிசமாக உயரும் இல்லாவிட்டால் நாங்கள்
எதற்கு வீணாக படிக்கப்போகிறோம் நீங்கள் எதற்கு மேலும் மேலும் வீணாக படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்' என்று என்னிடம் கேட்பது வழக்கம்,

படிப்பென்பது சம்பாதிக்க, பொருளீட்டும் கருவியாக என்று எண்ணப்படும் நிலையில் இருப்பதால்தான் படித்தவர் என்பவர் பண்புள்ளவர் என்கின்ற நிலை இல்லாமல் போனது, படிப்பிற்கு கணிசமாக முதலீடுகள் செய்யும் நிலை ஏற்ப்பட காரணமாகவும் உள்ளது, படிப்பிற்காக பலவிதங்களில் போலிகள் உருவாகி உள்ளது. இந்நிலை மாறுவதற்கு வாய்ப்புகளே இல்லாமல் போனதும் துரதிஷ்டவசமான நிலை, இவைதான் சமூகத்தின் பல அவலநிலைகளுக்கு மிகவும் முக்கிய காரணம்.