Translate

8/01/2010

ஆயிரம் ரூபாய்

அந்த ரூபாய் தாளின் வெண்ணிறப் பகுதியில் அடர்த்தியான பேனாவினால் ஐ லவ் யு என்று எழுதி அதன் கீழே மனோ ரம்யா என்ற பெயர்களுடன் காதலர் தினத் தேதியுடன் அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு, அன்று காலை வங்கியிலிருந்து முக்கிய செலவுகளுக்காக எடுத்து வரபட்ட ரூபாய் நோட்டுக்களுடன் இருந்தது, மஞ்சுவிற்கு ஏனோ அந்த ரூபாய் தாளை செலவழிக்க தோன்றவில்லை, மஞ்சுவின் கணவன் அலுவலக வேலையாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம், சில வித்தியாசமான நம்பிக்கைகளை கொன்டவன், தன் மனைவியை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் தனக்கு அதிஷ்டம் ஆரம்பித்தது என்பதும், மனைவியின் கையில் பணம் பெற்றுச்சென்றால் செல்லுமிடத்திலிருந்தும் வரவேண்டிய அல்லது கிடைக்கவேண்டிய பணம் எவ்வித தடையுமில்லாமல் கைக்கு வந்துசேரும் என்பதும் மஞ்சுவின் கணவன் சசிக்கு நம்பிக்கை.

அன்று அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு செல்லவிருந்த கம்பெனியின் பொது மேலாளர்
திடீரென்று உடல்நலமின்றி விடுப்பு எடுத்துவிட்டதால் சசிதரனை டெல்லிக்கு போக சொன்னார்கள், அதிலும் அந்த டெண்டர் மட்டும் இவர்களது கம்பெனிக்கு கிடைத்துவிட்டால் சசிக்கு நிச்சயம் பதவி உயர்வும் மற்றும் பலவிதமான வசதிகளையும் நிர்வாகம் கொடுத்து விடுவது நிச்சயம், வீட்டிற்கு வந்து உடனே விமானநிலையத்திற்கு புறப்படும் நேரத்தில் மனைவி மஞ்சுவிடமிருந்து பணம் கேட்டு வாங்கிச்செல்ல வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது, கைபேசியில் மஞ்சுவை தொடர்பு கொண்டபோது கதவின் சாவியை அடுத்த வீட்டில் கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகவும் அதை வாங்கி திறந்து பணம் எடுத்து செல்லச் சொன்னாள்.

மஞ்சுவின் கையில் வாங்கிச் சென்றால்தான் காரியம் நல்லபடியாக நடக்கும் என்ற தனது நம்பிக்கைப் பற்றி எப்போதுமே மஞ்சுவிடம் சசி தெரிவித்தது கிடையாது என்பதால் அடுத்த வீட்டிலிருந்து சாவியை பெற்று கதவை அவசரமாகத் திறந்து மஞ்சுவின் கைப்பையிலிருந்து அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான், ஆனாலும் அவன் மனதில் மஞ்சுவின் கையில் அந்த பணத்தை வாங்க இயலாமல் போனது குறித்து லேசான அதிருப்தி ஏற்பட்டிருந்தது. டெல்லி சென்று அங்கிருந்து வாடகைக்கார் ஒன்றை பதிவு செய்து டெண்டர் ஏலம் விடப்படும் இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்து ஏலத்தில் தனது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்ததில் மனதிற்கு மிகவும் நிம்மதி ஏற்பட்டது.

சசி எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வு மற்ற வசதிகளையும் கொடுத்தது நிறுவனம், அந்த ஆயிரம் ரூபாய் தாளை சசி எடுத்துக்கொண்டு போய் இருப்பதை கவனித்த மஞ்சுவிற்க்குச் சற்றே ஏமாற்றம், சசி ஊரிலிருந்து வந்த பின் அவன் எடுத்துச் சென்ற ஆயிரம் ரூபாய் தாளைப்பற்றி கேட்டு அதை அவன் செலவழிக்காமலேயே திரும்பவும் கொண்டு வந்து இருப்பதையறிந்து சந்தோஷத்துடன் வாங்கி மறுபடியும் தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். சசியிடம் அதில் எழுதப்பட்டிருந்தவற்றைக் காண்பித்து யாரோ காதலர்கள் அந்த ரூபாயை நினைவுச் சின்னமாக்கி இருப்பதையும் ஏனோ அந்த
ரூபாய் நோட்டை தனக்கு செலவழிக்கவே தோன்றவில்லை என காரணமும் கூறினாள்.

அந்த ரூபாய் நோட்டு மஞ்சுவின் கையில் கிடைத்த ஒருவாரத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் அன்றைய செய்தியில் 'கடற்கரையோரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காதலர்கள் இருவரை கத்தியை காண்பித்து மிரட்டி பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலி பணம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருகொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இருவரையும் கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு ரவுடிகள் தப்பியோட்டம், அந்த இளம் காதலர்களை இதுவரையில் யாரும் தேடி வராததால் பிணங்களை காவல்துறை கைப்பற்றி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, இளம் பெண்ணிடமிருந்த கைபையில்
கிடைத்த குறிப்புகளிலிருந்தும் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் உரிமத்திலிருந்த பெயர்களில் கொலைசெய்யபட்டுக் இறந்தவர்கள் மனோ,ரம்யாவாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. கொயாளிகளை பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.