Translate

7/30/2010

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

நமது வாழ்க்கை நம் கையில் என்று கூறப்படுகிறதே அது சாத்தியமா, எல்லோரது வாழ்க்கையிலும் இதை சாத்தியப்படுத்த இயலுவதில்லையே அதற்க்கு காரணம் என்ன, காரணங்களும் சூழ்நிலைகளுமே இதற்க்கு அடிப்படை என்றாலும் 'விதியை மதியால் வெல்ல முடியும்' என்பதை பழைய காலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நமது கையில் தான் உள்ளது, தேர்வு செய்கின்ற போது எதன் அடிப்படையில் தேர்வு செய்கின்றோம் என்பதையும் நாம் நன்றாக யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம், என்னதான் நாம் தேர்வு செய்த வாழ்க்கைமுறை மிகச் சரியானதாகத் தோன்றினாலும் பிறகு அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தனது தேர்வு சரியானதாக இல்லைஎன்பதை விளங்கிக்கொள்கின்ற போது அதிலிருந்து வெளியேறி அடுத்த தேர்வுக்குத் தன்னை தயார் செய்துகொள்ளுதல் என்பது சிறந்தது.

அல்லது முதலில் தேர்வு செய்திருந்த வாழ்க்கையே போதுமானது அதிலேயே போராடி முன்னேறுவது அல்லது நிலைத்திருப்பது என்று முடிவு செய்த பிறகு அதிலேயே இருந்துவிடவேண்டியதுதான். அப்படி தேர்வு செய்கின்ற போது தனது மனநிம்மதிக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமா, அல்லது பணம் மற்றும் வேறுவிதமானவற்றிர்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதும் நமது சிந்தனைக்கு மிகவும் முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன்னர் .வி.எம். நிறுவனம் 'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் (choice)' என்ற சின்னத்திரை தொடரை ஒளிபரப்பி வந்தது, அதை நான் ஒரு episode கூட பார்த்தது கிடையாது ஆனால் அந்த தலைப்பு எனக்குள் வாழ்க்கையின்
பல யதார்த்தங்களை காண்பித்தது,

எனக்குத் தெரிந்த பிரபல பழைய திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார், அவருக்கு புத்தக அறிவும் திறமையும் தொழில் பற்றும் மிகுந்த பாசமும் பண்பும் மிகுந்தவர், என் அப்பாவின் பால்ய சிநேகிதர், என் குழந்தைப் பருவ
முதலே அவர் எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு பல தரப்பட்ட கருத்துக்களை என் தகப்பனாருடன் உரையாடிக்கொண்டிருப்பார், அப்படி அவர் உரையாடுகின்ற போது பல திரைப்பட, புத்தக மற்றும் பல பொது விஷயங்களைப்பற்றி பேசுவதை கேட்க்கும் போது எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருக்கும், சிறிய வயதில் அவரை பிரபல இயக்குனர் என்று எனக்கு புரிந்து கொள்ள இயலாது என்றாலும் அவரை பார்க்கும் போது எனக்கும் அவரைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது, என் தகப்பனாரைவிட அவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் என் தகப்பனார் அவரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். நான் வளர்ந்து பெரிய பெண்ணாகி திருமணமாகி குழந்தைகளுக்குத் தாயாகியப் பின்னரும் அவர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம், (நாங்களும் அவரது வீட்டிற்கு சென்று வருவதும் வழக்கம்) அப்போது அவரது இளைய சம்சாரத்தின் பிள்ளைகள் அவர் மீது கடும் கோபமாக இருப்பதையும் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்ப்பதையும் இளைய மனைவி அவருடைய குறைகளை வாய் ஓயாமல் எங்களிடம் சொல்லி தீர்ப்பதையும் பார்க்க நேர்ந்தது.

ஒரு மனிதரை பல கோணங்களிலிருந்தும் பார்க்கலாம், ஆனால் அவரைப்பற்றிய எனது அபிப்பிராயம் சற்றும் குறையவில்லை, அடிப்படையான வாழ்க்கைமுறை என்பதை அவரவர் அமைத்துக் கொள்ளுகின்ற விதம் அவரவர் கையில்தான் உள்ளது என்பதற்கு அந்த பிரபல பழைய இயக்குனரின் வாழ்க்கையும் எனக்கு ஒரு சான்றாகவே தெரிந்தது, திரைப்படத்துறையைச் சார்ந்திருந்ததாலோ என்னவோ அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது (என் தகப்பனாருக்கு குடிப் பழக்கம் கிடையாது) அவருடைய முதல் மனைவி மூலம் ஏறக்குறைய ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனான பின்னர் அந்த மனைவியின் மூலம் இனி குழந்தைகள் பிறந்தால் மனைவி இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியதால் (அந்தகாலத்தில் கருத்தடை வசதிகள் கிடையாது) திரைப்படத்திற்கு துணை நடிகர்களை கொடுக்கும் ஒருவர் மூலம் தனக்கு மாற்றாள் ஒருத்தி தேவை என்று சொல்லிவைத்திருக்க அவர் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட இரண்டாம் தாரமாக பிற்காலத்தில் சொல்லப்பட்ட பெண்ணை தனது சுகத்திற்கும், அங்கு சென்று குடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கும் ஏற்படுத்திக் கொண்ட அம்மையார் மூலம் இரண்டு குடும்பத்திலும் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டது, பிரச்சினைகள் அனைத்துமே இயக்குனரின் இரண்டாம் மனைவி தேர்வை குறை சொல்லி பிள்ளைகளும் இரண்டாம் தாரமும் (முதல் மனைவிக்கு அவர் மீதும் அவருக்கு முதல் மனைவியின் மீதும் தீராக் காதல் மரணம் வரை நீடித்திருந்தது) இயக்குனர் உட்பட
குடும்பத்தில் எல்லோரும் அமைதி இழக்க நேர்ந்தது,

இதை போன்று தவறாக தேர்வு செய்வதை 'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்' என்று உதாரணத்திற்குச் சொல்லலாம்,
நிம்மதி என்பது பணத்திலோ பொருளிலோ தங்கத்திலோ வைரத்திலோ அதிக வருவாயிலோ கிடையாது என்பது நிச்சயமாக நமக்கு தெரிந்திருக்கவேண்டிய ஒன்று. இரண்டு காரியங்களினால் மன நிம்மதி நிச்சயம் அழிக்கப்படும் அது அதிக வறுமை, அதிக சொத்து பணம் முதனாலவைகள், ஒவ்வொன்றையும் அனுபவித்தப் பின்னர்தான் வாழ்க்கையில் சிறந்த தேர்வு செய்ய கற்றுக்கொள்ள இயலும் என்று நாம் முடிவு செய்து கொள்வோமானால், நிச்சயம் நெடுக போய் அல்லது பிரச்சினைகளினூடே சென்று வேதனைகளை அனுபவிக்க வேண்டியதன்றி வேறு வழி கிடையாது.