Translate

7/21/2010

போதும் என்கிற மனமே

போலி சான்றிதழ்கள் போலி ஆவணங்கள் போலி முத்திரைத்தாள் போலி ரூபாய் நோட்டுகள் போலி பாஸ்போர்ட் போலி மருத்துவர் போலி உணவுப்பொருட்கள் போலி மாத்திரைகள் மருத்துகள், எங்கும் போலி எதிலும் போலி என்று போலிகளை உருவாக்கி அதன் மூலம் வரும்படியை பெருக்கிக்கொள்ளும் போலிகளை உருவாக்கிய பெற்றோரை உலகம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும், போலிகள் உருவாகக் காரணம் என்ன, இதற்க்கு பதில் அறிவது ஒன்றும் அத்தனை கடினமில்லை. போலிகளின் வரவை கண்டு பிடிப்பதற்கே பல ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால் போலிகளை உருவாக்குபவர்கள் மட்டுமில்லாது அதைச் சுற்றி பெருங்கூட்டமொன்றும் பயனடைந்து வந்துள்ளதால் அந்த ரகசியம் வெளிவருவதற்கு ஆண்டுகள் பல கடந்து பின்னர் வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது விளங்குகிறது.

போலிகளால் பயன் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்ககூடும் என்பதால் போலிகளால் அவதியுற்றோரின் எண்ணிக்கை வெளிவராமல் போனதோ என்ற கேள்வி எழுகிறது. போலிகளை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் பலரின் வீட்டில் தூக்குக் கயிறுகளை தயார் செய்து வைத்துவிட்டுத் தான் அவர்களை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டியிருக்கும் என்பதாலோ அரசு அவர்களிடம் விசாரணையே இல்லை என்ற முடிவு எடுத்திருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்வதைத்தவிர வேறு காரணம் என்னவாக இருக்க கூடும். போலிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாலும் போலிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதாலும் இனி போலிகள் உருவாகாமல் தடுக்க முடியாதா என்ற கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது.

இப்படி பல காரணங்களைக் கூறி இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட போலிகள் தப்பித்துக்கொள்வார்களே அல்லது புதிய போலிகள் வேறு வழிகளை கண்டுபிடித்து உருவாக மாட்டார்களா என்று சமுதாய நலம் விரும்பிகள் கேட்டால் யார் இதற்க்கு பதிலளிக்கப் போகின்றனர். ஆக போலிகளின் வரவும் சமுதாய விரோதிகளின் வரவும் ஒழிக்கப்படுவதில்லை அல்லது அவர்களை மன்னித்துவிட்டு விட்டோம், மனம் திருந்தி வாழ அவர்களை சிறையில் வைத்து செதுக்கி விட்டோம் என்பது அர்த்தமா. குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு மீண்டும் சிறைவாசம் வேண்டும் என்கின்ற அளவில் சிறையில் சுகம் கிடைக்கின்றதா அல்லது சிறைவாசமே இனி ஒருபோதும் வேண்டாம் என்று நினைக்கின்ற அளவிற்கு கடுமையானதாக உள்ளதா என்பதை கைதிகளை கேட்டுப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அளவில் போலிகளும் சமூக விரோதிகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனால் சிறை நிரம்பி விடும், சிறைகளில் உள்ள போலிகள் மட்டுமே போலிகள் என்றால் வெளியே சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கும் போலிகளும் சமூக விரோதிகளையும் எப்படி தண்டிப்பது, குற்றங்களை ஆராயும் கூட்டம் மிகவும் குறைவாகவும் குற்றங்களை செய்பவர்களின் கூட்டம் அதிகரித்து வருவதும் கூட இந்த தொய்வு நிலைகளுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். திறமையான காவல்துறை அதிகாரிகளை, திறமையான ரவுடிகளை, திறமையான தாதாக்களை திறமையான துப்பறிபவர்களை சினிமாத்தனமாக படம் பிடித்து அதை பொதுமக்கள் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாலும், மக்களின் பொறுப்புணர்ச்சி என்பது சுயநலத்தின் அடிப்படையிலேயே இருப்பதுதான் போலிகளின், சமுதாய விரோதிகளின் அட்டகாசங்களுக்கு மிக முக்கிய காரணம்.

பொன்னின் விலை மண்ணின் விலை அதின் ஏற்றமும் இறக்கமும், தங்க ஜுரம், நில ஜுரம் போன்று தினமும் ஏறுவதும் இறங்குவதும் மனிதனின் பேராசையின் அளவு கோலாக தினமும் நம்மை எச்சரிக்கை செய்கின்றன, மண்ணிற்கும் பொன்னிர்க்கும் விலையேற்றம் மனித நேயத்தின் வீழ்ச்சியை பறைசாற்றுகின்றதே, கொலை கொள்ளைகள் வங்கிகளின் திவால், பண வீக்கம் மனிதனின் வீழ்ச்சியை தெளிவாக்குகிறதே. கண்டுபிடித்தவனையே பணம் ஆட்டுவிப்பதை காட்டுகிறதே. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு 'போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்தே'.