Translate

7/25/2010

மரணத்தை சந்திக்கும்போது

பிறக்கும் அனைத்தும் நிச்சயம் சந்திக்க வேண்டிய அடுத்த நிலை மரணம், மரணம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏற்ப்படக் கூடும், மரணத்தை முன்னறிந்தவர் எவருமில்லை என்பதாலோ என்னவோ மரணம் சம்பவிக்கப்போகிறது என்பதை மறந்து செயல்படுகிறோம், ஒருசமயம் அந்த நேரமும் நாளும் முன்பே அறிந்திருந்தால் பல முன்னேர்ப்படுகளை செய்துகொள்வதிலும் தவறமாட்டோம். மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு என்றாலும் அதற்குப் பின்னும் வாழ்க்கை உள்ளது என்பது பலரது நம்பிக்கை, இறந்த உடல் மட்டும்தான் அழிவைக் காண்கிறது ஆன்மா அழிவதில்லை என்பது நம்பிக்கை.

மரணம் எப்பொழுது எப்படி நேரும் என்பதை நாம் அறியாதிருப்பதிலும் பல நன்மைகள் இருப்பதை நாம் அறிந்திருந்தாலும் மரணத்தை முற்றிலுமாக மறப்பதால் பல தீமைகளும் உள்ளது. மரணத்தை நாம் மறந்திருப்பதால் நன்மை என்னவென்றால் கிடைத்த வாழ்நாளை வாழ்வதில் தடையோ சோகமோ நமக்கு ஏற்ப்படாமல் இருப்பது, தீமை என்றால் பல தீய வழிகளை தைரியமாக ஏற்று
அதிலே நமது முழு கவனமும் ஆக்கிறமித்துவிடுவதால், திடீரென்று மரணத்தை எதிர்கொள்ளும்போது மனம் ஆழ்ந்த வேதனையடைவதால், உயிர் உடலை விட்டு பிரியும் சமயத்தில் நிம்மதியின்றி வேதனையிலும் பயத்திலும் உயிர் பிரியுமானால் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் கண்ட சுகமெல்லாம் வீணாகிவிடுகிறது. விபத்துகள் நேருமென்றால் அப்போதும் அதன் ஆத்மா கிடந்தது தவியாய் தவிப்பதும் உடலைவிட்டுப்ப்ரிய துயரடைவதையும் எவ்வாறு மாற்ற இயலும்.

வயது முதிர்ச்சி அடைவதால் மட்டுமே மரணம் ஏற்ப்படும் என்பது இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மரணம் உலக வாழ்க்கையிலிருந்து பிரித்து விடும் என்கின்ற எண்ணம் ஒரு சில நிமிடமாவது நமக்கு ஏற்ப்படுமாயின் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனம் விரும்பியபடி வாழ்க்கையயை வாழ்ந்து வந்தார் அவரது அம்மா அவரிடம் யோசனைகளை கூறும்போது அவர் அதற்கென்ன எனக்கு வயதாகிவிடவில்லை இப்போது இளம் வயதில் அனுபவிக்காமல் வயது முதிர்ந்த பின் இவற்றையெல்லாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பார். திடீரென்று உடலில் தீரா வியாதி ஏற்பட்டு படுக்கையில் கிடந்தார், அப்போது அவர் தாய் அழுதுகொண்டே இருந்தார், அதற்க்கு அவர் சொன்னார் நான் உடல் நலமாகி வந்தவுடன் முதல் வேலையாக நீ சொன்னதுபோல செய்துவிடுவேன் என்றார்.

அவரது அம்மாவிற்குத் தெரியும் மகன் இனி பிழைத்து வருவது கடினம் என்று, அப்போது மருத்துவர் மூலம் அவரது உடல்நிலை சுகமாக்குவது இயலாதது என்பதை அறிந்துகொண்டவர் மனம் மிகவும் வருந்தினார், காலம் கடந்தநிலையில் வருந்தி ஒருவித பயனுமின்றி இறக்கும் தருவாயில் மனவேதனையுடன் இறந்து போனார். பிறகு செய்துகொள்ளலாம் இன்னும் காலம் நிறைய இருக்கிறது என்று நினைத்து பல வருடங்களை துன்மார்க்கமான வழிகளை அனுபவிக்கிறேன்' என்ற சந்தோஷத்தில் கழித்துக்கொண்டிருக்கும் போது விபத்துக்கள் நேரிடுவதும் இயற்கையே. இன்னும் காலம் நிறைய இருக்கிறது அவற்றை வயது முதிர்ந்த பின் செய்து கொள்ளலாம் என எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும்போது மரணம் ஏற்படுவதும் இன்றைய வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான காரியமாகி வருகிறது,

மரணம் எந்நேரத்தில் ஏற்ப்பட்டாலும் மன ரம்மியத்துடனும் சமாதானமாகவும் இறப்பதற்கு என்னை நானே தாயாராக வைத்திருக்கின்றேனா என்பதை யோசிப்பது உண்டா. மரணத்திற்குப் பின் நரகமோ மோட்சமோ ஆனால் அப்படியே ஒன்று இருந்தாலும் நான் முன்னர் வாழ்ந்த வாழ்க்கையில் என் மனதிற்கு நியாயமான காரியங்களை மட்டுமே சிந்தித்து செயல்பட்டுள்ளேனா அல்லது எல்லோருக்கும் நியாயமான காரியங்களை அறிந்து செயல்பட்டு வந்தேனா, மற்றவர்களால் நான் நல்லவன் என்று சொல்லப்படுவதைவிட எனக்கு நானே சரியாக இருந்தேனா என்று ஒருமுறையாவது யோசிக்கவேண்டும், ஒன்றையும் செய்ய இயலாத உடல்நிலை ஏற்பட்டதற்குப் பின் சிந்திக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சும். ஒருமுறை ஒரு கூலித் தொழிலாளியை சந்திக்க நேர்ந்தது, அவர் கையின் மணிக்கட்டிற்கு கீழே குழி போன்ற காயம், அந்த காயம் என்பது சரியாக வட்டமாக ஆழமாகவும் இருந்தது அதை அவர் கட்டுபோட்டு மூடாமலேயே வைத்திருந்தார்.

அதை பார்த்தபோது என்னால் அவரிடம் அதைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை, இந்த காயத்தை கட்டு போட்டு மூடாமல் திறந்து வைப்பது சரியில்லை அதில் தூசு படும்போது இன்னும் அதிகமாக நேரும் என்று சொன்னேன், அதற்க்கு அவர் கட்டு போட்டு மூடி வைத்தாலும் இந்த காயம் சரியாகவில்லை என்றார், ஏன் எதனால் இப்படியானது என்றேன், அதற்க்கு அவர் சொன்ன பதில் என்னை ரணமாக்கியது. அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர், ஆனால் ஒரு பெண், அவரை உளமார நேசித்து வந்தாள், அந்தப் பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒழுக்கம் மிகுந்தப் பெண். ஆனால் அந்த பெண்ணிற்கு பெற்றோரும் உறவினர்களும் கிடையாது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இவரை அவள் கேட்டும் வந்தாள், அதற்க்கு ஒத்துக்கொண்டவர் போல இவர் அவளிடம் சரி என்று சொன்னார், அதற்குப் பின் அந்தபெண்ணிடம் பலமுறை உடலுறவு கொண்டார், அதனால் அந்தப் பெண் கருவுற்றார்,

தான் கருவுற்று இருப்பதாகவும் அதனால் உடனே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று இவரிடம் மன்றாடியுள்ளார், ஆனால் இவர் திருமணம் செய்துகொள்ள இயலாது என்று மறுத்துவிட்டார், இதனால் பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்யச்சொன்னார் அந்த பெண், பஞ்சாயத்தில் இந்த பெண்ணை தான் கெடுக்கவும் இல்லை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லவும் இல்லை என்றாராம், அதற்க்கு பஞ்சாயத்தில் கற்பூரம் கொளுத்தி அதன் மீது கையடித்து சத்தியம் செய்யும்படி பெரியவர்கள் சொன்னபோது இவர் கற்பூரத்தின் மீது அடித்து சத்தியம் செய்துவிட்டார், சத்தியம் செய்த ஒரு வாரத்தில் இவரது கையில் இந்த புண் ஏற்பட்டது, எல்லாவித வைத்தியங்களும் செய்தாகிவிட்டது ஆனால் அந்த காயம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வந்ததே தவிர குணமடையவில்லை.

நான் சொன்னேன் இது கான்சர் கட்டியாக அல்லது உடலில் சர்க்கரை அதிகமிருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கும் நீங்கள் சோதனை செய்து பார்த்தீர்களா என்றேன், மருத்துவர்கள் எல்லாவித சோதனைகளையும் செய்துவிட்டார்கள் உடலில் நோயின் அறிகுறி ஒன்றும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது என்றார். இன்னும் சில தினங்களில் அந்த கையையே துண்டித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சொல்லிவிட்டு, கற்பூரத்தின் மீது இந்தக் கையால்தான் அடித்து பொய் சத்தியம் செய்தேன் அதன் பலனை அனுபவித்து வருகிறேன் என்றார். கடவுளை நம்பும் ஒருவரானாலும் நம்பாதவரானாலும் இதைபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி மட்டும் ஒன்றுதான், நாம் செய்யும் பாவம் ஒருபோதும் நம்மை விடுவது இல்லை. இவர் திடீரென்று சாக நேர்ந்தால் கடைசி நிமிடத்தில் மனதில் தான் செய்த தவறுகள் மட்டுமே நினைவில் நின்றால் உடலை விட்டு உயிர் பிரியும்போது சந்தோஷமோ நிம்மதியோ இருக்க முடியுமா.
'