Translate

7/19/2010

முரண்பாடுகள்

நமது சமுதாயம் முன்னேறியுள்ளதா, நம் நாடு எந்தவகையில் முன்னேறி வருகிறது என்பதை கவனிக்கும் போது, சில சுவாரசியமான உண்மைகள் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்வதும் அவற்றில் சில உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவதுமாக, நேர் எதிர்மறையான இரு வேறு தோற்றங்களை கண்ணெதிரில் காண்பிக்கின்றது. நம்மை வியப்பில் ஆழ்த்தும் உண்மைகளை கவனித்தால், பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அவற்றை உபயோகிப்பதில் முதியவர்களை விட இளைஞர்களின் மாறுபட்ட நிலைகளும் வியப்பிற்குரியது. நாம் எதிர்பார்த்ததைவிட அறிவியல் முன்னேற்றம் நம் வாழ்க்கையில் பெரும் பகுதியினை கொள்ளை கொண்டு விட்டிருப்பதை பார்க்கும் போது வியப்பில் நம்மை ஆழ்த்துவது உண்மை. மனிதனுக்கு அறிவின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் அவற்றால் நன்மைகள் ஒருபுறம் ஏராளமாக இருந்தாலும் மற்றொருபுறம் அவை மனிதனை மனிதநேயத்தை மிஞ்சிவிடுவதை நினைக்கும் போது அத்தகைய முன்னேற்றங்கள் தேவைதானா என்ற எண்ணம் மேலோங்குவது இயற்கையே.

வரலாற்றில்
ஆதிமனிதன் சிக்கி முக்கி கற்களைக் கொண்டு தீயை கண்டு பிடித்ததும் காடுகளிலும் மலைக்குகைகளிலும் வாழ்ந்த மனிதன் ஹரப்பா மொகஜ்சதாரோ நாகரீகத்தில் வீடுகளை தனித்தனியே கட்டி வாழ்ந்தது மேம்பட்ட நாகரீகத்தின் அடையாள சின்னங்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுவதை படித்த பின் தற்கால மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றைய நாகரீகத்தின் அசுர வளர்ச்சியினை வரலாற்று ஆசிரியர்கள் என்னவென்று வருணிப்பார்கள் என்பது தெரியவில்லை, ஆக, தற்கால மனிதன் நாகரீகத்தில் முன்னேற்றம் வகிப்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம், ஆனால் அதே சமயம் ஜாதி மத இன பேதங்களை அதிகமாக அனுசரிக்கின்றோம், யாரேனும் ஒருவர் சமுதாயத்தில் தவறு செய்தால் அவர் எந்த மதத்தவர் எந்த ஜாதியை சார்ந்தவர் என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கேற்றார்போல அவரை தீர்ப்பு செய்ய முனைகின்றோம்.

அதே வேறொரு மனிதரின் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது சாதனைகளைப் பற்றி பேசுகையில் அவரது சாதனைகளைப் பற்றி மட்டுமே
பேசப்படுகிறதே தவிர அவரது ஜாதி மதம் தாய்நாடு பிறந்த ஊர் மாநிலம் என்று எதையுமே நாம் கணக்கில் கொள்வதில்லை, இந்த மாதிரியான உள்நோக்கமுள்ள சமுதாய சிந்தனைகளை வரலாற்றில் எந்த வரலாற்று ஆசிரியரும் வருணிக்க இயலாத மாறுபட்ட நாகரீகத்தினை தற்போதைய சமுதாயம் மிகவும் நேர்த்தியாக மிகவும் மோசமாக மிகவும் மிருகத்தனமாக வஞ்சம் தீர்க்கும் முறைகளில் பயன்படுத்தி வருவதை நாகரீகத்தின் இழிவானப் பகுதி என்பதா நாகரீகத்தின் படுதோல்வி என்பதா. நாகரீகம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது என்ன? எது?.

மனிதனை
மனிதனாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு சமுதாயமும் எளிதில் முன்னேறிவிடும் இதற்க்குச் சான்று பல ஐரோப்பிய நாடுகளைச் சொல்லலாம், தீண்டாமை, ஜாதி, மதம், மொழி, இனம், மாநிலம், நாடுகளை கடந்த மனித இனம் என்கிற உணர்வுள்ளவர்கள் மட்டுமே நாகரீகத்துடன் வாழ்வதாக சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர்கள். 'ஜாதி இரண்டொழிய வேறில்லை', இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்', 'நீதி, உயர்ந்தமதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' என்ற கூற்றுகளைப் போல ஏராளமான தமிழ் கூறும் அறிவுரைகள், நன்னெறிகளைப் படித்திருந்தும், இன்றைய நாகரீகத்தில் இவை எங்கே காணாமல் போனது, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று காற்றோடு போன கதையாகிவிட்டது. எதை வைத்து தாங்கள் நாகரீகத்தின் உச்சியில் வாழ்வதாக சொல்லிக்கொள்கின்றனர்?

வறுமை கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் என்ற பிரிவில், மக்களை
பிரித்து, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சொந்த வீடு இலவச படிப்பு இலவச விளை நிலம் வேலை வாய்ப்பு மருத்துவ வசதி தொழில் செய்ய உதவி போன்ற அத்தனை வசதிகளையும் இலவசமாக கொடுத்து சமுதாயத்தில் உயர்வு தாழ்வு வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதி அடிப்படையிலான மதம் மொழி அடிப்படையிலான அத்தனை பிரிவுகளையும் அரசாங்கம் ஒழிக்க வேண்டும், அரசியல் சாசனத்தில் ஜாதி மத இன மொழி பாகுபாடுகளை முற்றிலுமாக நீக்கி சட்டம் இயற்றப்பட வேண்டும் ஆண் பெண் என்ற பாகுபாடுகளை நீக்கி எல்லோரும் சமம் என்கின்ற ஒருங்கிணைப்பை அரசு வேலை வாய்ப்பு படிப்பு போன்ற எல்லாத்துறைகளிலும் அமல் படுத்தப்பட வேண்டும் உயர்வு தாழ்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இந்நாடு இந்திய பிரஜைகள் என்கின்ற அடையாள அட்டை மட்டும் போதாது உரிமைகளையும் கொடுத்து முழு ஜனநாயக நாடாக்க வேண்டும், 'குழந்தை வீட்டிற்கு ஒன்று' என்கின்ற கட்டாயதிட்டம் உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும், அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்காதவர்களுக்கு அரசின் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் நாடும் அதன் குடி மக்களுமே நாகரீகத்தினை முழு அளவில் அடைந்ததாக சொல்ல முடியுமேத் தவிர தற்போதுள்ள இந்தியதேசம் நாகரீகத்தின் அழிவின் விளிம்பில் இருப்பதாகவே வரலாற்று வல்லுனர்கள் வருணிக்க இயலும் என்பது திண்ணம்.