Translate

7/10/2010

ஜன்னலோரத்தில் .....




தொடர்வண்டியிலோ பேருந்திலோ எந்த வாகனமாக இருந்தாலும் ஜன்னலோரத்தில் உட்க்கார்ந்து பயணிக்கும்போது கிடைக்கும் சுகமே தனிதான். எத்தனை முறை ஒரே வழியாக சென்று திரும்பினாலும் குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரையில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதில் சலிப்பே ஏற்ப்படுவது கிடையாது. சிலர் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு பகல் நேரங்களில் நன்றாக உறங்கிக்கொண்டு பயணம் செய்வதை பார்க்கும்போது சங்கடமாக இருப்பதுண்டு.

பல முறை ஆகாய விமானத்தில் சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனதினுள் வீட்டுப் பிரச்சினை அலுவலகப் பிரச்சினை என்று ஏதேனும்
பிரச்சினை அழுத்திக்கொண்டிருக்கும். அதனால் விமானத்தில் பயணம் செய்த திருப்தி ஏற்ப்படுவதே இல்லை. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும்போதும் அங்கிருந்து திரும்பும்போதும் இரவு நேரமாக இருப்பதால் ஜன்னல் அருகே இருக்கை கிடைத்தாலும் அதன் வழியே இருட்டில் ஒன்றும் பார்ப்பதற்கு இருக்காது விமானத்தினுள்ளே எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடியும்.


அதிக தூரம் செல்லும் போயிங் விமானம் பூமியின் மேற்பரப்பிலிருந்து ஐந்துஆயிரம் மைலுக்கு மேலே பறப்பதால் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து பயணித்தாலும் வெளியே பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது, விமானம் வானில் ஏறும் போதும் இறங்கும்போதும் மட்டுமே இயற்க்கை காட்சிகளும் வெண்பஞ்சு மேகக்கூட்ட நேர்த்தியை கண் குளிர கண்டு ரசிக்க முடியும்.

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு மிகச் சிறிய விமானத்தில் பயணம் செய்த
ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்சினைகளுடன்தான் பயணம் செய்யவேண்டி இருந்தது, ஆனாலும் பகலில் ஆகாயத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பறக்கும்போது அதன் சுகமே அலாதியானது என்பதை மறுக்க முடியாது. பெங்களூருவிற்கு சென்னையிலிருந்து போகும்போதும் வரும்போதும் இடையேயான தொலைவு மிகக் குறைவாக இருப்பதாலும் சிறிய விமானம் என்பதாலும் அதிக உயரம் மேலே போவதற்கு வழியில்லை என்பதால் பார்த்தது ரசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.


தொடர் வண்டியில் போனாலும் பேருந்தில் சென்றாலும் இயற்க்கை வனப்பை கண்டு களிப்பதற்கு எனக்கு எப்போதுமே ஆர்வம் குறைவதில்லை. மனதில் பாரங்களை அல்லது பிரச்சினைகளை சுமந்து கொண்டு பயணிக்கும்போது மனம் இயற்க்கையின் எழிலை கண்டு ரசிக்க விடாமல் தடுத்து விடும்போது, பலமுறை என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடிந்ததில்லை. இனி வரும் காலங்களிலாவது பயணத்தின் போது இயற்க்கை வனப்பை முழுவதுமாக ரசிக்க இறைவன் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.