Translate

7/07/2010

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

[கற்பனைக் கதை சிரிப்பதற்காக]

நடை பயிற்சி போகச் சொன்னார் மருத்துவர், முடிந்தபோதெல்லாம் நடைப்பயிற்சி சென்று வந்தேன், வீடு திரும்பும் வழியில் தினம்தோறும் தவறாமல் நம் எதிரில் நம்மை தாண்டிக் கொண்டு சிலர் செல்வது வழக்கமாகும், அப்படி ஒருவர் இரண்டு நாளாய் தவறாமல் என் எதிரில் வந்தார், [அவர் சொல்வார் அவர் எதிரில் இரண்டு நாளாய் நான் வந்தேன் என்பார்]. மூன்றாவதுநாள் என்னைப் பார்த்து, அதிக நாட்கள் என்னிடம் பழகியவரைப் போல சிரித்துவைத்தார். எனக்கு அறிமுகமில்லாத நபரை கண்டு சிரிப்பதற்கு சற்று யோசிப்பேன் என்பதால் எனக்கு அவரது செய்கை சங்கடமாகி போனது,

மறுநாள் அவரும் நானும் எதிரெதிரே வந்த போது அவர் நடை லேசாகி என்னெதிரில் நின்றார், நானும் தயங்கியவாறே நின்றேன், என்னிடம் 'உங்கள் அப்பா நெட்டையா ஒல்லியா சிவப்பா இருப்பாரே அவர்தானே' என்றார். நான் இல்லையே என் அப்பா நெட்டையாய் குண்டாக கருப்பாக இருப்பார்' என்றேன். சரி சரி என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அடுத்தநாள் மீண்டும் என்னை கடந்து போகும் போது தயங்கி நின்றார், 'போஸ்டாபீசில் வேலை பார்க்கிறாரே அவர் தானே உங்கப்பா' என்றார். நானோ இல்லையே அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாரே' என்றேன். ' சரிசரி' என்று சொல்லிக்கொண்டே கடந்து போனார். இவர் மறுநாள் இப்படி கேட்பதற்கு முன்பே இவருக்கு யாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கேட்டு விட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அடுத்தநாள் எதிரே என்னை கடந்த அவர் நின்று என்னிடம் கேட்பதற்கு ஆரம்பிக்கும்போதே நான் 'என்னை யாரென்று நினைத்துக் கொண்டோ என்னிடத்தில் விசாரிக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன், அல்லது நான் யாரென்று அறிய வேண்டுமா' என்று கேட்டேன், அதற்க்கு அவர் 'அதைத்தான் கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்களே கேட்டுட்டீங்க, உங்க பெயர் வசந்தாதானே உங்கம்மா கூட டீச்சரா வேலை பாக்கறாங்க இல்ல' என்றார். [எனக்கு கடுப்பாகிப் போனது வர வர மக்கள் சன் டிவி வர்ற அசத்தப் போவது யாரு, வடிவேலு காமெடியெல்லாம் பார்த்துட்டு லைவ் காமெடி வசனம் பேசறாங்களோன்னு சந்தேகம் வர ஆரம்பிச்சுது].

நீங்க யாரு உங்க அப்பா அம்மா யாரு என்ன பண்றாங்கன்னு நேரடியாக் கேட்டுத் தெரிஞ்சிக்க இப்படியெல்லாம் போட்டு வாங்கறது போலன்னு நான் நெனைச்சிட்டு இருக்கும்போதே அவர் தன் நடையை தெடர்ந்துவிட்டார். பார்ட்டி ரொம்ப கடுப்பாயிருச்சின்னு கண்டுகிட்டார் போல, எஸ்கேப்பு ஆகிட்டாரு. இனிமேல ஒண்ணும் கேட்க்க மாட்டாருன்னு மனசுக்குள்ள சந்தோஷப்பட்டேன்.

ஆனால் அவர் விடவில்லை மீண்டும் அடுத்தநாள் அதே போன்று நேருக்கு நேர் சந்தித்த போது நானே அவர் அருகில் சென்று 'என் பெயர் தேவகி, என் அப்பா பேரு ஆறுமுகம், குண்டா கருப்பா உயரமா இருப்பாரு, அம்மாப் பேரு பார்வதி, வேலைக்கு போகல வீட்டிலத்தான் இருக்காங்க', என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 'அதெல்லாம் எனக்கு எதுக்கும்மா சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்' என்றாரே பாருங்க,

இப்படித்தான் மனுஷங்க கிளருவதையும் கிளறி விட்டுட்டு நம்ம பதில் சொல்லப்போனா நம்மையே திருப்புறாங்க. இதுக்கு பேர்தான்
கலிகாலமுன்னு [இல்ல இல்ல 'காலி'காலம்முன்னு] சொல்வாங்க. ஊரு ரொம்ப கெட்டு கிடக்குது யாரு எப்போ நட்டு கழண்ட மாதிரி பேசுவாங்கன்னே சொல்ல முடியல, கடைசில ஏமாந்தா நம்மள நட்டு கழண்டவன்னு சொல்லிட்டு போயிட போறாங்க. வடிவேலு படத்து காமெடி மாதிரி 'என்னை வச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே',

அதுக்கப்புறம் நான் அவரைப்பார்த்து சிரிக்க ஆரம்பிச்சேன், ஆனா மனுஷன் என்னை கண்டுக்கறதே இல்ல.
'எல்லாரும் ஒரு டைப்பாவே திரியராங்கப்பா'.