Translate

7/31/2010

சொந்தக்கதைகள்

பதிவுகள் எழுதுவதற்கு முன் அனுபவம் இருக்க வேண்டுமா அல்லது எவற்றைப்பற்றி எழுத வேண்டும் எவற்றைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா என்றால் கூகுளில் கொடுக்கபட்டிருக்கும் வரைமுறைகளில் மிகவும் முக்கியமானது ஆபாசம், மத இன கலவரங்களை தூண்டுகிற வகையில் எழுதி பிரபலபடுத்தக்கூடாது என்பவைகள்தான் மிகவும் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றது. இந்த வரையறைகளுக்கு உட்படவேண்டும் என்பது தனி மனித ஒழுக்கமும்தான் என்பதை யாவரும் அறிந்திருகக்கூடும் எவற்றை பிரசுரிக்கலாம் என்பதற்கும் கூகுளின் கட்டுபாடுகள் உள்ளன, அவற்றிற்கு மீறி பதிவு செய்தால் கூகிள் அவர்களது பதிவுகளை நிச்சயம் முடக்கும் என்பது குறிப்பிடபட்டு இருக்கிறது.

பதிவுகளை எழுதும் போது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக எழுதுவதென்பது எல்லா சமயத்திலும் இயலாத காரியம். எல்லோரையும் திருப்திபடுத்த எழுதுவதும் இயலாத ஒன்று, பொதுவாக திரைப்பட விமர்சனங்களைக் கூட அவரவர் பார்வையில் எவ்வாறு இருந்தது என்றுதான் எழுத முடியும், அதில் ஒருவரது விமர்சனம் போல அடுத்தவரின் விமர்சனம் இருப்பதில்லை, ஒருவரால் புகழப்பட்ட திரைப்படம் அடுத்தவரால் இகழப்படும். கற்பனை கதைகளாக இருந்தாலும் கவிதைகளாய் இருந்தாலும் அதிலும் அவரவர் அணுகுமுறை அவரவரது பாணி தனித்தன்மைகள் கொண்டதாகத்தான் இருக்க முடியும், மட்டுமில்லாது அவரவர் அனுபவங்களின் அடிப்படையிலும் அவரவரது மனதிலும் கருத்திலும் இருக்கும் எண்ணங்களும் நினைவுகளும் தான் எழுத்தில் வரும்.

இதில் ஒருவரது பதிவில் அவர்களின் சொந்தகதைகளையே பதிவுசெய்கின்றார்கள் என்று குற்றம் கண்டுபிடிக்கும் சில 'பாமரத்தனம்' பற்றி 'குற்றம் கண்டு பிடித்தே பிரபலமானவர்கள் உண்டு, குறைகளை கண்டுபிடிப்பதே பொழுதுபோக்காக கையாண்டு வருகின்றவர்களின்' பதிவுகளை படிக்காமல் குப்பை என்று கருதி குப்பைதொட்டியில் போட்டுவிட்டு போவதுதான் நியாயமாக இருக்க முடியும். சொந்தக்கதைகளை சொந்த அனுபவங்களை பதிவுசெய்யாமல் வேறு என்னத்தை பதிவு செய்தால் வாயை மூடுவார்களோ. பொதுவாக பதிவர்கள் எல்லோருமே தங்களது அனுபவத்தை, மற்றும் தங்களது சொந்த கதைகளைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர அடுத்த வீட்டுக்காரனின் பிரச்சினைகளையும் அனுபவங்களையும் எழுத இயலுமா.

நாட்டுப் பிரச்சினைகளை எழுதலாம் அதற்கும் கூட அனுபவம் தேவைப்படுகிறது, பொது பிரச்சினைகளை பற்றி எழுதும்போது அதில் கூட சில வரைமுறையோடுதான் நமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அரசியல் கட்சிகளைப்பற்றியும் அரசியல் பிரமுகர்களைப் பற்றியும் விளாவரியாக எழுதுவதென்ப
து எல்லோருக்கும் பிடிக்கின்ற விஷயம் இல்லை, உண்மைக்குப் புறம்பானத் தகவல்களை எழுதுவதும் அவதூறு பரப்புவதும் என்னைப்போன்ற பலருக்கும் பிடிக்காத விஷயம். பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி எரிவாயு விலை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு விலைவாசி அதிகரிப்பு இவற்றைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் கத்தியின்றி ரத்தமின்றி உண்ணாவிரதம், ஊர்வலம் எல்லாம் செய்து கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் பதிவில் மட்டும் எழுதவில்லை என்ற ஒரே ஒரு குறையால்தான் அவைகள் தீர்க்க இயலாத பிரச்சினைகளாய் காத்துக் கிடக்கின்றதா என்ன,

சொந்தக் கதைகளை எழுத வேண்டாம் என்று கூகிள் ஒரு விதி ஏற்ப்படுத்தினால் சொந்தக் கதைகள் சொந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்துக்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ளலாம். யாரோ எதற்கோ அதைப்பற்றி விமர்சிப்பதற்காக சொந்த அனுபவத்திலிருந்தோ தெரிந்ததையோ எழுதுவதில் நிச்சயம் சொந்தக் கதைகளும் சொந்த அனுபவங்களும் இடம்பெறாமல் இருக்க முடியாது, கிண்டல் கேலி செய்யும் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்க்க யாராலும் இயலாது.


7/30/2010

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

நமது வாழ்க்கை நம் கையில் என்று கூறப்படுகிறதே அது சாத்தியமா, எல்லோரது வாழ்க்கையிலும் இதை சாத்தியப்படுத்த இயலுவதில்லையே அதற்க்கு காரணம் என்ன, காரணங்களும் சூழ்நிலைகளுமே இதற்க்கு அடிப்படை என்றாலும் 'விதியை மதியால் வெல்ல முடியும்' என்பதை பழைய காலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நமது கையில் தான் உள்ளது, தேர்வு செய்கின்ற போது எதன் அடிப்படையில் தேர்வு செய்கின்றோம் என்பதையும் நாம் நன்றாக யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம், என்னதான் நாம் தேர்வு செய்த வாழ்க்கைமுறை மிகச் சரியானதாகத் தோன்றினாலும் பிறகு அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தனது தேர்வு சரியானதாக இல்லைஎன்பதை விளங்கிக்கொள்கின்ற போது அதிலிருந்து வெளியேறி அடுத்த தேர்வுக்குத் தன்னை தயார் செய்துகொள்ளுதல் என்பது சிறந்தது.

அல்லது முதலில் தேர்வு செய்திருந்த வாழ்க்கையே போதுமானது அதிலேயே போராடி முன்னேறுவது அல்லது நிலைத்திருப்பது என்று முடிவு செய்த பிறகு அதிலேயே இருந்துவிடவேண்டியதுதான். அப்படி தேர்வு செய்கின்ற போது தனது மனநிம்மதிக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமா, அல்லது பணம் மற்றும் வேறுவிதமானவற்றிர்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதும் நமது சிந்தனைக்கு மிகவும் முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன்னர் .வி.எம். நிறுவனம் 'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் (choice)' என்ற சின்னத்திரை தொடரை ஒளிபரப்பி வந்தது, அதை நான் ஒரு episode கூட பார்த்தது கிடையாது ஆனால் அந்த தலைப்பு எனக்குள் வாழ்க்கையின்
பல யதார்த்தங்களை காண்பித்தது,

எனக்குத் தெரிந்த பிரபல பழைய திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார், அவருக்கு புத்தக அறிவும் திறமையும் தொழில் பற்றும் மிகுந்த பாசமும் பண்பும் மிகுந்தவர், என் அப்பாவின் பால்ய சிநேகிதர், என் குழந்தைப் பருவ
முதலே அவர் எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு பல தரப்பட்ட கருத்துக்களை என் தகப்பனாருடன் உரையாடிக்கொண்டிருப்பார், அப்படி அவர் உரையாடுகின்ற போது பல திரைப்பட, புத்தக மற்றும் பல பொது விஷயங்களைப்பற்றி பேசுவதை கேட்க்கும் போது எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருக்கும், சிறிய வயதில் அவரை பிரபல இயக்குனர் என்று எனக்கு புரிந்து கொள்ள இயலாது என்றாலும் அவரை பார்க்கும் போது எனக்கும் அவரைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது, என் தகப்பனாரைவிட அவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் என் தகப்பனார் அவரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். நான் வளர்ந்து பெரிய பெண்ணாகி திருமணமாகி குழந்தைகளுக்குத் தாயாகியப் பின்னரும் அவர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம், (நாங்களும் அவரது வீட்டிற்கு சென்று வருவதும் வழக்கம்) அப்போது அவரது இளைய சம்சாரத்தின் பிள்ளைகள் அவர் மீது கடும் கோபமாக இருப்பதையும் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்ப்பதையும் இளைய மனைவி அவருடைய குறைகளை வாய் ஓயாமல் எங்களிடம் சொல்லி தீர்ப்பதையும் பார்க்க நேர்ந்தது.

ஒரு மனிதரை பல கோணங்களிலிருந்தும் பார்க்கலாம், ஆனால் அவரைப்பற்றிய எனது அபிப்பிராயம் சற்றும் குறையவில்லை, அடிப்படையான வாழ்க்கைமுறை என்பதை அவரவர் அமைத்துக் கொள்ளுகின்ற விதம் அவரவர் கையில்தான் உள்ளது என்பதற்கு அந்த பிரபல பழைய இயக்குனரின் வாழ்க்கையும் எனக்கு ஒரு சான்றாகவே தெரிந்தது, திரைப்படத்துறையைச் சார்ந்திருந்ததாலோ என்னவோ அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது (என் தகப்பனாருக்கு குடிப் பழக்கம் கிடையாது) அவருடைய முதல் மனைவி மூலம் ஏறக்குறைய ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனான பின்னர் அந்த மனைவியின் மூலம் இனி குழந்தைகள் பிறந்தால் மனைவி இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியதால் (அந்தகாலத்தில் கருத்தடை வசதிகள் கிடையாது) திரைப்படத்திற்கு துணை நடிகர்களை கொடுக்கும் ஒருவர் மூலம் தனக்கு மாற்றாள் ஒருத்தி தேவை என்று சொல்லிவைத்திருக்க அவர் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட இரண்டாம் தாரமாக பிற்காலத்தில் சொல்லப்பட்ட பெண்ணை தனது சுகத்திற்கும், அங்கு சென்று குடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கும் ஏற்படுத்திக் கொண்ட அம்மையார் மூலம் இரண்டு குடும்பத்திலும் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டது, பிரச்சினைகள் அனைத்துமே இயக்குனரின் இரண்டாம் மனைவி தேர்வை குறை சொல்லி பிள்ளைகளும் இரண்டாம் தாரமும் (முதல் மனைவிக்கு அவர் மீதும் அவருக்கு முதல் மனைவியின் மீதும் தீராக் காதல் மரணம் வரை நீடித்திருந்தது) இயக்குனர் உட்பட
குடும்பத்தில் எல்லோரும் அமைதி இழக்க நேர்ந்தது,

இதை போன்று தவறாக தேர்வு செய்வதை 'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்' என்று உதாரணத்திற்குச் சொல்லலாம்,
நிம்மதி என்பது பணத்திலோ பொருளிலோ தங்கத்திலோ வைரத்திலோ அதிக வருவாயிலோ கிடையாது என்பது நிச்சயமாக நமக்கு தெரிந்திருக்கவேண்டிய ஒன்று. இரண்டு காரியங்களினால் மன நிம்மதி நிச்சயம் அழிக்கப்படும் அது அதிக வறுமை, அதிக சொத்து பணம் முதனாலவைகள், ஒவ்வொன்றையும் அனுபவித்தப் பின்னர்தான் வாழ்க்கையில் சிறந்த தேர்வு செய்ய கற்றுக்கொள்ள இயலும் என்று நாம் முடிவு செய்து கொள்வோமானால், நிச்சயம் நெடுக போய் அல்லது பிரச்சினைகளினூடே சென்று வேதனைகளை அனுபவிக்க வேண்டியதன்றி வேறு வழி கிடையாது.

நன்றி சொல்வதைத் தவிர தமிழில்...

எனது பதிவுகளைப் படித்து ஓட்டுகள் அளித்தும் பின்னூட்டமிட்டும் கூகுளின் நண்பர்களாக பின் தொடர்ந்தும் என்னை உக்கமளித்து வருகின்ற உங்கள் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், குறை நிறைகளை எடுத்துச் சொல்லி இன்னும் பிற ஆலோசனைகளையும் வழங்கி மேலும் பதிவுகளை பயனுள்ளதாக்க உதவி செய்யுங்கள். தமிழில் இருக்கின்ற ஒரே வார்த்தை நன்றி, வள்ளுவப்பெருந்தகை கூற்றின்படி

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு"

என்பதற்கிணங்க ஒத்துழைப்பு வழங்கும் நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள் பல.

7/29/2010

முகமூடியணிந்த ஓநாய்

படித்து அறிந்து கொள்ள ஏராளமான தகவல்கள் வலையிலும் புத்தகங்களிலும் கொட்டிக்கிடக்க, பாதிரியார்களின் காம லீலைகளைப் பற்றியும், பாதிரியார்கள் என்ற பெயரில் மதத்தின் உள் நுழைந்திருக்கும் போலிகளின் தவறுகளைப் பற்றி மட்டுமே மிகவும் நுட்பமாக ஆராய்ந்து அறிந்து வைத்துக்கொண்டு, [இவன் ஆராய்ச்சி செய்து சேர்த்திருக்கும் குப்பைகளைப் பார்த்தால் 'போலிப் பாதிரியார்களின் இழிநிலை' என்ற புத்தம் புதிய தகவல் களஞ்சியத்திற்கு உரிமைதாரரும் அதில் முனைவர் பட்டமும் கொடுத்து 'கவுரவிக்கப்பட' வேண்டியவனாக இருப்பான் என்று தோன்றுகிறது]. எதையெல்லாம் படித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதோ அதைப்பற்றி தேடி படித்தறிவதர்க்கு கூகிள் என்ற பெரிய உலக சேவை இருக்க, இவன் எதற்கு பின்னூட்டம் போடும் இடத்தில் இவன் கண்டுபிடித்த பாதிரியார்களின் காம லீலைகளைப்பற்றிய லிங்க்குகளை உலக மகா வள்ளல் போல அள்ளி வழங்குகின்றான் என்பது தெரியவில்லை.

பாதிரியார்களின் காமலீலைகளை கண்டறிந்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் முகமூடி ஓநாயே புனைப்பெயருடன்
பின்னூட்டத்தில் உனது சாகசங்களை காண்பித்து உன் புகழை தேட நினைக்காதே, எங்களுக்கு வலையில் எதை படித்து அறிந்து கொள்வதற்கு விருப்பமோ அதை நாங்கள் தெரிவு செய்துகொள்வோம் யாரோ ஒருவனின் சிபாரிசோ அல்லது மேதாவித்தனத்தின் பெருமையை அறிந்து புகழுவதற்க்கோ நான் தயாரில்லை, தயாராக இருப்பவரிடம் சென்று உன் கண்டுபிடிப்பின் மகத்துவங்களை பறைசாற்றிக்கொள்.

7/28/2010

பெண்களைக் குதறும் மிருகங்கள்

தப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது, அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா, அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை பார்த்துட்டு உத்தமமா திரும்பி வர நெனைக்கிறவன் பைத்தியக்காரன். வெளியில, சினிமாவ பார்க்கும்போது ஏற்படற பளபளப்பு அழகு கவர்ச்சி எல்லாமே உள்ளே போனா பார்க்கமுடியாது, எங்கு பார்த்தாலும் பொய், வேஷம், பொறாமை. இதையெல்லாம் ஏற்கனவே தன் வாழ்க்கையில ரத்தமும் சதையுமா வச்சிருக்கவங்களுக்கு பெரிசா ஒண்ணும் வித்தியாசம் தெரியறது கிடையாது. ஒழுக்கம், உண்மை, நாணயம், நேர்மை, கற்ப்பு இத பத்தியெல்லாம் அரிச்சுவடிக்கூட அறியாதவங்களுக்கு மிகவும் சுலபமாக ஒத்து போகக் கூடிய இடம்.

நடிக்கனம்ன்னு ஆசை ஏற்பட்டு மிகவும் தெரிஞ்ச குடும்ப (சிநேகிதர) இயக்குனரை பார்க்கப் போனா, அங்க இருக்கிற ஆளுங்க நம்மள ஒரு சைகோவாவே மாத்திவிட முயற்சி பண்ணறாங்க, ஒண்ணு நாம சைக்கோவா மாறிடுவோம் இல்லைன்னா வேஷம் போடாத முழுநேர வேசியா மாத்திடுவாங்க. நிச்சயம் நடிகையா ஆகவே முடியாது, ஏன்னா ஏற்கனவே நாம எல்லாத்துக்கும் ஒத்து போகிற' பேர்வழியா இருந்தாத்தான் நடிகையா ஆகமுடியும்ன்னு சொல்றாங்க. துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு திரும்பிப் பார்க்காம ஓடிவரவேண்டிய நிலைமைதான்.

சில வருடங்களுக்கு முன் பத்திரிகையில் படித்த செய்தி ஒன்று நினைவிற்க்கு வருகிறது, எந்த நாடு என்பது சரியாக நினைவில் இல்லை ஆனால் ஐரோப்பியநாடுகளில் உள்ள சிறிய ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது கிராமத்திலிருந்து கிளம்புவதற்கு விமான சீட்டு பதிவு செய்திருந்தார், அவர் உலக அழகி போட்டிக்கு செல்பவர் என்பதை அறிந்த அந்த ட்ரவல்ஸ் உரிமையாளர் அந்தப் பெண்ணை குறிப்பிட்ட தேதியில் வந்து சீட்டுப் பெற்றுக்கொண்டு செல்லும்படி கூறியிருந்தார், சீட்டைப்பெற்றுக் கொண்டு விமான பயணத்திற்குச் செல்லவிருந்தப் பெண்ணை கற்பழித்து பின்னர் அவர் கையில் விமான பயணச் சீட்டை கொடுத்தார், அந்தப் பெண்ணிற்கு பெருத்த ஏமாற்றம், போட்டியில் கலந்து கொள்ள போதிய மனத்தெளிவை இழந்த நிலையில் போட்டியை எதிர்கொள்ள இயலாத மனோ நிலையில் வேதனைக்கு தள்ளபட்டார் அந்த இளம்பெண்.

பயணச் சீட்டு வாங்குவதற்காக செவழித்தப் பணத்தை அவர் சேர்ப்பதற்கு பலகஷ்டங்கள் படவேண்டியதாக இருந்ததால் அந்த பயணத்தை ரத்து செய்யவும் இயலாமல் விமானநிலையம் செல்வதற்காக வாடகைக்கார் ஒன்றில் ஏறி பயணமானார், அந்த கார் ஒட்டுனரிடமும் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டு பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டார், அங்கிருந்து விமான நிலையம் நோக்கி கால்நடையாக பல மையில் தூரம் நடந்து சென்று விமானம் ஏறி குறிப்பிட்ட நகரை சென்றடைந்தார், உலக அழகிப் போட்டியில் அவ்வருடத்தின் உலக அழகி பட்டமும் பணமும் எல்லா வசதிகளையும் பெற்றார், அப்போது அவர் மனம் சிறிது கூட சந்தோஷமாக இல்லை, அவரது முகத்தில் சோகம் மட்டுமே நிறைந்திருந்ததை கண்ட பத்திரிகைகளும் ஊடகங்களும் அவரிடம், உலக அழகிப் போட்டியில் வென்று இருக்கின்றீர்களே இருந்தும் நீங்கள் சந்தோஷப்படவில்லையே உங்கள் முகத்தில் வேதனைதான் தெரிகிறது அதற்க்கு என்ன காரணம் என்றனர்,

அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை விவரித்துச் சொன்னார், தான் வீட்டிலிருந்து கிளம்புகின்ற போது தனக்கிருந்த மனநிலையிலேயே உலக அழகிப் போட்டியை வென்றிருந்தால் நிச்சயம் தான் எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்திருக்க முடியும் ஆனால் தனக்கேற்பட்ட கேவலமான அனுபவங்களால் இந்த மகிழ்ச்சியை கொண்டாடவோ ஏற்கவோ மனதில் சந்தோசம் இல்லை, பல வருடங்களாக உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி அடைய பல முயற்ச்சிகளை மேற்கொண்ட போது இருந்த மனநிலை தற்போது இல்லாமல் போனதன் காரணம் தன்னை தாருமாறாக்கியவர்களின் துஷ்டச்செயல்கள்தான் என்று சொல்லி கண்ணீர் வடித்தாராம்.

இது போன்றதுதான் நடிக்க ஆசைப்பட்டு அங்கு சென்ற பின் கிடைக்கும் அனுபவங்களும், என்னதான் தெரிந்தவர்கள் அந்த துறையில் இருந்தாலும் சந்திக்கும் வேறு மனிதர்கள் எல்லோருமே நடிக்க வருகின்ற பெண்களிடமிருக்கும் பெண்மையை குறிவைக்கும் கோர மிருகங்களாகவே உள்ளனர், அவர்களிடம் சிக்குண்டு சின்னாபின்னமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம், அங்குள்ள சூழலுக்கு ஏற்றார் போல தன்னைமாற்றிக்கொண்டு பலருக்கு தன்னை இறையாகிய பின்னும் அதிலேயே வாழ்க்கையை தொடருபவர்களும் உண்டு. வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் அதில் மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம், இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு நாமே கட்டுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு வாழமுயலும் போது வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பதும் உண்டு. வாழ்க்கையே போராட்டம் மிக்கதுதானே. தெரிவு செய்வதில்தான் நம் வாழ்க்கையின் இன்பதுன்பம் அடங்கியிருக்கிறது.

7/27/2010

ஒன்றிருக்க ஒன்று வந்தால்....

பூவரசியின் பெயர் இரண்டு வாரமாக செய்திகளையும் பொதுமக்களின் பேச்சுக்களிலும் பேசப்பட்ட செய்தி, செய்தியின் அடிப்படை புதியது இல்லை என்றாலும், சரிகாஷாவின் மரணத்தைப் போல சிறுவன் ஆதித்யாவின் மரணமும் மிகவும் கொடூரமானதும் வேதனையை ஏற்ப்படுத்துவதுமாக இருந்ததுதான் இந்த பரபரபிற்கு காரணம். பூவரசியின் தரப்பிலும் ஜெயக்குமாரின் தரப்பிலும் சமமான தவறுகளும் குற்றங்களும் காரணங்களாக முன்வைக்கபட்டாலும் பூவரசியின் கோபம் மன உளைச்சலை ஏற்படுத்த கொடூரகொலை செய்யும் அளவிற்கு அவளை தூண்டியது ஜெயக்குமாரின் மனிதாபிமானமற்ற செய்கைகள். பூவரசியின் படிப்பு மற்றும் அவரது குடும்பச்சூழலை கவனித்துப் பார்க்கும்போது, அவருக்கு தகுந்த அறிவுரை வழங்க அல்லது தவறுகள் செய்யவிடாமல் தடுக்க யாரும் இருப்பதாக தெரியவில்லை.

தற்கொலை கொலை இரண்டுமே உணர்வுகளின் அடிப்படையை மையமாக கொண்டு செயல்படுத்தபடுவதால், இவற்றை நியாயப்படுத்துவதோ குற்றம் செய்தவரை இழிவாக எண்ணுவதோ சரியானதாக இருக்காது, சட்டத்தின் முன் பூவரசி குற்றவாளியாக இருந்தாலும், அவரது வேதனைகள், தோல்விகளின் அடிப்படையில், குழம்பியிருந்த மனநிலையில் சரியான முடிவெடுக்க இயலாமல் போனதால் பழிக்குப் பழி என்கின்ற எண்ணம் தோன்றி அவரை கொலை செய்ய தூண்டி உள்ளது. துவக்கத்திலேயே இந்த தவறான உறவை தவிர்க்கவில்லை என்றால் முடிவுகள் சோகத்தை ஏற்ப்படுத்துவது இயல்புதானே. தவறான உறவுகளால் பல குற்றங்களும் கொலைகளும் செய்திகளாக மாறுவதை நாம் கவனித்தாலும், இனியொரு தவறு நடக்காமல் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறான உறவுகளும் அதனால் ஏற்ப்படும் கொலைகளும் குற்றமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

கட்டுபாடற்ற வாழ்க்கை முறை, எப்படி வேண்டுமானாலும் இன்பம் அனுபவிக்க தயங்காத வாழ்க்கை, 'திருட்டுத் தண்ணீர் தித்திக்கும்' என்கின்ற இழிவான எண்ணம், முடிவு, மாறாத துயரம். காலம் கடந்த நிலையில் திருந்த நினைக்கும்மனம். 'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை'.

7/26/2010

மனமாற்றம் உண்மையா

கடவுள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் என்று ற்ப்புருத்துவதினால் யாரும் நம்பப்போவது கிடையாது, நம்புவது கிடையாது என்பதனால் கடவுள் இல்லை என்றாகி விடுவதும் கிடையாது. நம்பிக்கைகள் ஏற்ப்படுவதற்க்கு அதை அனுபவித்திருப்பது அவசியமாகிறது. எந்த ஒரு நம்பிக்கையும் அல்லது சுகமும் துக்கமும் அனுபவத்திற்குப் பின்னர் தான் நன்கு விளங்குகிறது, வறுமை நோய் வலி சுகம் துக்கமெல்லாம் அனுபவிக்கும் போது அதன் ஆழம் உணர முடிகிறது, அதனால்தான் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று. வறுமையும் நோயும் உபத்திரவங்களையும் அனுபவிக்கும் ஒருவனுக்குத்தான் அதிலிருந்து வெளியேறும்போது கிடைக்கும் அனுபவங்கள் தெய்வ நம்பிக்கையை அதிகரிக்கிறது.

தெய்வத்தின் மீது நம்பிக்கை என்பது குருட்டாட்டம் கிடையாது, குருட்டு நம்பிக்கை கிடையாது, தெய்வம் தன் மீது எல்லோரும் நம்பிக்கை வையுங்கள் என்று கூவி அழைத்தாலும் யாரும் அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவது கிடையாது. அப்படியே ஏற்றுக்கொ
ண்டாலும் அதன் அனுபவமில்லாமல் அந்த நம்பிக்கை நிலைத்து நிற்காது. நிலைத்து நிற்ப்பதே தெய்வ நம்பிக்கை, வயிற்றுப்பசி போக்குவதற்காக வேலை கிடைப்பதற்காக நோய் தீருவதற்காக மட்டுமே தெய்வ நம்பிக்கை ஏற்ப்படும் என்றால் அவை எல்லாம் கிடைத்த பிறகு அந்த நம்பிக்கை அதிகரிப்பதும் உறுதி என்பதால் தெய்வ நம்பிக்கை என்பது அனுபவங்களால் மட்டுமே நிலை நிற்க்கக் கூடியதாகும்.

அனுபவங்களின் வாயிலாக ஏற்ப்படும் தெய்வ நம்பிக்கைகள் உடையவர்களால் மட்டுமே அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது, அந்த அனுபவங்களை பெற இயலாதவர்கள் தெய்வ நம்பிக்கைகளை பொய் என்று சொல்வதால் தெய்வமும் அதனை உண்டென்று நம்புகின்ற நம்பிக்கைகளும் பொய்யாகி விடுவதில்லை. தெய்வத்தையும் அதன் செயல்பாடுகளையும் உண்டென்று அதை அனுபவப்பட்டவர் கூற்றினால் நம்புகின்ற
ர் உண்டென்றால் அது அவர்கள் அனுபவப்பட்டவரின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த கட்டத்தில்தான் போலிகளால் மக்கள் ஏமாற்றங்களை சந்திக்க நேருகிறது. போலிகள் பெருகுவதனால் உண்மைகள் இல்லாமல் போய்விடுமா, போலிகள் பெருக்கத்தினால் உண்மை எது பொய் எது என்று அறிந்துகொள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறதே தவிர உண்மையான உபதேசிகள் இல்லாமல் இல்லை. போலிகள் அதிகரிப்பதால் தெய்வம் பொய்யாவதில்லை.

யாரையும் யாரும் மாற்றவே
ண்டியது அவசியமில்லை, அது நடக்கின்ற காரியமும் இல்லை. மதமாற்றம் என்பது மன மாற்றத்தினால் மட்டுமே ஏற்ப்படக்கூடியது, கட்டாயத்தினால் ஏற்ப்படுத்தபட்டால் கடைசிவரையில் நீடித்திருக்க இயலாமல் போகும். ஒரே பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளிலேயே ஒரு குழந்தை தேர்வு செய்வதை அடுத்த குழந்தை தேர்வு செய்வதில்லை, பெற்றோர் விருப்பப்படி தனது விருப்பங்களை மாற்றிக்கொள்வதற்கு ஒத்து போவதில்லை என்கின்ற சூழல் நடைமுறையில் எங்கும் காணப்படுகின்ற நிலையாக இருக்கும் காலகட்டத்தில் யாரோ ஒருவரை பணம் கொடுக்கிறேன் வேலை கொடுக்கிறேன் இன்னும் என்னென்ன தேவைகளோ அவற்றையெல்லாம் கொடுக்கிறேன் உங்கள் மனதிலிருக்கும் தெய்வ நம்பிக்கைகளை நான் சொல்வதுபடி மாற்றிக் கொள்ளுங்கள் என்று வற்புருத்துவதனாலேயே அவர் மன மாற்றமடைந்து மதம் மாற்றம் செய்ய முன்வருகிறார் என்றால், உண்மையாகவே அவர் மனதளவில் மத மாற்றம் அடையவில்லை அவருக்கு கிடைத்த வேலையோ பொருளுக்காகவோ அவர் மாறியதாக கூறிக்கொள்கிராறேத் தவிர மனதளவில் மாற்றங்கள் ஏற்ப்பட வாய்புகள் இல்லை என்பது தெளிவாகிறது.

தெய்வ நம்பிக்கை என்பதை யாராலும் செயல்முறையில் நிரூபித்து காண்பித்து இது உண்மைதான் என்று நிரூபிப்பதற்கு வழியில்லை என்பதால் இல்லை என்பதோ பொய் என்பதோ ஆகிவிடுவதில்லை. மதங்களும் கடவுளும் வறுமையில் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு, இருக்க வீடு, மனை, தொழில் என்று ஏற்ப்படுத்திக்கொடுத்தால்தான் அது தெய்வம் என்ற சட்டத்தை மனிதர்கள் தெய்வத்திற்கு முன்வைப்பார்களேயானால், மனிதர்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நிலைமை கடவுளுக்கு கிடையாது, மனிதர்கள் தங்கள் வசதிகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப கடவுள் செய்தால்தான் கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்கின்ற மனித வரையறைகளுக்கு கடவுள் உட்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடர்களின் எதிபார்ப்பாக இருக்கும், நம்புவதும் நம்பாததும் அவரவர் மனதில் உள்ள முடிவு, அதற்காக முட்டாள்கள் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் கடவுள் என்பவர் செயல்படவேண்டும் அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுகொள்ளமுடியும் என்று சவால் விட்டுக் கொண்டு, இல்லையென்றால் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யான தகவல் மதங்களும் கடவுளும் பொய் என்று தன்னைத்தானே திருப்திபடுத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

7/25/2010

மரணத்தை சந்திக்கும்போது

பிறக்கும் அனைத்தும் நிச்சயம் சந்திக்க வேண்டிய அடுத்த நிலை மரணம், மரணம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏற்ப்படக் கூடும், மரணத்தை முன்னறிந்தவர் எவருமில்லை என்பதாலோ என்னவோ மரணம் சம்பவிக்கப்போகிறது என்பதை மறந்து செயல்படுகிறோம், ஒருசமயம் அந்த நேரமும் நாளும் முன்பே அறிந்திருந்தால் பல முன்னேர்ப்படுகளை செய்துகொள்வதிலும் தவறமாட்டோம். மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு என்றாலும் அதற்குப் பின்னும் வாழ்க்கை உள்ளது என்பது பலரது நம்பிக்கை, இறந்த உடல் மட்டும்தான் அழிவைக் காண்கிறது ஆன்மா அழிவதில்லை என்பது நம்பிக்கை.

மரணம் எப்பொழுது எப்படி நேரும் என்பதை நாம் அறியாதிருப்பதிலும் பல நன்மைகள் இருப்பதை நாம் அறிந்திருந்தாலும் மரணத்தை முற்றிலுமாக மறப்பதால் பல தீமைகளும் உள்ளது. மரணத்தை நாம் மறந்திருப்பதால் நன்மை என்னவென்றால் கிடைத்த வாழ்நாளை வாழ்வதில் தடையோ சோகமோ நமக்கு ஏற்ப்படாமல் இருப்பது, தீமை என்றால் பல தீய வழிகளை தைரியமாக ஏற்று
அதிலே நமது முழு கவனமும் ஆக்கிறமித்துவிடுவதால், திடீரென்று மரணத்தை எதிர்கொள்ளும்போது மனம் ஆழ்ந்த வேதனையடைவதால், உயிர் உடலை விட்டு பிரியும் சமயத்தில் நிம்மதியின்றி வேதனையிலும் பயத்திலும் உயிர் பிரியுமானால் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் கண்ட சுகமெல்லாம் வீணாகிவிடுகிறது. விபத்துகள் நேருமென்றால் அப்போதும் அதன் ஆத்மா கிடந்தது தவியாய் தவிப்பதும் உடலைவிட்டுப்ப்ரிய துயரடைவதையும் எவ்வாறு மாற்ற இயலும்.

வயது முதிர்ச்சி அடைவதால் மட்டுமே மரணம் ஏற்ப்படும் என்பது இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மரணம் உலக வாழ்க்கையிலிருந்து பிரித்து விடும் என்கின்ற எண்ணம் ஒரு சில நிமிடமாவது நமக்கு ஏற்ப்படுமாயின் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனம் விரும்பியபடி வாழ்க்கையயை வாழ்ந்து வந்தார் அவரது அம்மா அவரிடம் யோசனைகளை கூறும்போது அவர் அதற்கென்ன எனக்கு வயதாகிவிடவில்லை இப்போது இளம் வயதில் அனுபவிக்காமல் வயது முதிர்ந்த பின் இவற்றையெல்லாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பார். திடீரென்று உடலில் தீரா வியாதி ஏற்பட்டு படுக்கையில் கிடந்தார், அப்போது அவர் தாய் அழுதுகொண்டே இருந்தார், அதற்க்கு அவர் சொன்னார் நான் உடல் நலமாகி வந்தவுடன் முதல் வேலையாக நீ சொன்னதுபோல செய்துவிடுவேன் என்றார்.

அவரது அம்மாவிற்குத் தெரியும் மகன் இனி பிழைத்து வருவது கடினம் என்று, அப்போது மருத்துவர் மூலம் அவரது உடல்நிலை சுகமாக்குவது இயலாதது என்பதை அறிந்துகொண்டவர் மனம் மிகவும் வருந்தினார், காலம் கடந்தநிலையில் வருந்தி ஒருவித பயனுமின்றி இறக்கும் தருவாயில் மனவேதனையுடன் இறந்து போனார். பிறகு செய்துகொள்ளலாம் இன்னும் காலம் நிறைய இருக்கிறது என்று நினைத்து பல வருடங்களை துன்மார்க்கமான வழிகளை அனுபவிக்கிறேன்' என்ற சந்தோஷத்தில் கழித்துக்கொண்டிருக்கும் போது விபத்துக்கள் நேரிடுவதும் இயற்கையே. இன்னும் காலம் நிறைய இருக்கிறது அவற்றை வயது முதிர்ந்த பின் செய்து கொள்ளலாம் என எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும்போது மரணம் ஏற்படுவதும் இன்றைய வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான காரியமாகி வருகிறது,

மரணம் எந்நேரத்தில் ஏற்ப்பட்டாலும் மன ரம்மியத்துடனும் சமாதானமாகவும் இறப்பதற்கு என்னை நானே தாயாராக வைத்திருக்கின்றேனா என்பதை யோசிப்பது உண்டா. மரணத்திற்குப் பின் நரகமோ மோட்சமோ ஆனால் அப்படியே ஒன்று இருந்தாலும் நான் முன்னர் வாழ்ந்த வாழ்க்கையில் என் மனதிற்கு நியாயமான காரியங்களை மட்டுமே சிந்தித்து செயல்பட்டுள்ளேனா அல்லது எல்லோருக்கும் நியாயமான காரியங்களை அறிந்து செயல்பட்டு வந்தேனா, மற்றவர்களால் நான் நல்லவன் என்று சொல்லப்படுவதைவிட எனக்கு நானே சரியாக இருந்தேனா என்று ஒருமுறையாவது யோசிக்கவேண்டும், ஒன்றையும் செய்ய இயலாத உடல்நிலை ஏற்பட்டதற்குப் பின் சிந்திக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சும். ஒருமுறை ஒரு கூலித் தொழிலாளியை சந்திக்க நேர்ந்தது, அவர் கையின் மணிக்கட்டிற்கு கீழே குழி போன்ற காயம், அந்த காயம் என்பது சரியாக வட்டமாக ஆழமாகவும் இருந்தது அதை அவர் கட்டுபோட்டு மூடாமலேயே வைத்திருந்தார்.

அதை பார்த்தபோது என்னால் அவரிடம் அதைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை, இந்த காயத்தை கட்டு போட்டு மூடாமல் திறந்து வைப்பது சரியில்லை அதில் தூசு படும்போது இன்னும் அதிகமாக நேரும் என்று சொன்னேன், அதற்க்கு அவர் கட்டு போட்டு மூடி வைத்தாலும் இந்த காயம் சரியாகவில்லை என்றார், ஏன் எதனால் இப்படியானது என்றேன், அதற்க்கு அவர் சொன்ன பதில் என்னை ரணமாக்கியது. அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர், ஆனால் ஒரு பெண், அவரை உளமார நேசித்து வந்தாள், அந்தப் பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒழுக்கம் மிகுந்தப் பெண். ஆனால் அந்த பெண்ணிற்கு பெற்றோரும் உறவினர்களும் கிடையாது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இவரை அவள் கேட்டும் வந்தாள், அதற்க்கு ஒத்துக்கொண்டவர் போல இவர் அவளிடம் சரி என்று சொன்னார், அதற்குப் பின் அந்தபெண்ணிடம் பலமுறை உடலுறவு கொண்டார், அதனால் அந்தப் பெண் கருவுற்றார்,

தான் கருவுற்று இருப்பதாகவும் அதனால் உடனே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று இவரிடம் மன்றாடியுள்ளார், ஆனால் இவர் திருமணம் செய்துகொள்ள இயலாது என்று மறுத்துவிட்டார், இதனால் பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்யச்சொன்னார் அந்த பெண், பஞ்சாயத்தில் இந்த பெண்ணை தான் கெடுக்கவும் இல்லை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லவும் இல்லை என்றாராம், அதற்க்கு பஞ்சாயத்தில் கற்பூரம் கொளுத்தி அதன் மீது கையடித்து சத்தியம் செய்யும்படி பெரியவர்கள் சொன்னபோது இவர் கற்பூரத்தின் மீது அடித்து சத்தியம் செய்துவிட்டார், சத்தியம் செய்த ஒரு வாரத்தில் இவரது கையில் இந்த புண் ஏற்பட்டது, எல்லாவித வைத்தியங்களும் செய்தாகிவிட்டது ஆனால் அந்த காயம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வந்ததே தவிர குணமடையவில்லை.

நான் சொன்னேன் இது கான்சர் கட்டியாக அல்லது உடலில் சர்க்கரை அதிகமிருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கும் நீங்கள் சோதனை செய்து பார்த்தீர்களா என்றேன், மருத்துவர்கள் எல்லாவித சோதனைகளையும் செய்துவிட்டார்கள் உடலில் நோயின் அறிகுறி ஒன்றும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது என்றார். இன்னும் சில தினங்களில் அந்த கையையே துண்டித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சொல்லிவிட்டு, கற்பூரத்தின் மீது இந்தக் கையால்தான் அடித்து பொய் சத்தியம் செய்தேன் அதன் பலனை அனுபவித்து வருகிறேன் என்றார். கடவுளை நம்பும் ஒருவரானாலும் நம்பாதவரானாலும் இதைபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி மட்டும் ஒன்றுதான், நாம் செய்யும் பாவம் ஒருபோதும் நம்மை விடுவது இல்லை. இவர் திடீரென்று சாக நேர்ந்தால் கடைசி நிமிடத்தில் மனதில் தான் செய்த தவறுகள் மட்டுமே நினைவில் நின்றால் உடலை விட்டு உயிர் பிரியும்போது சந்தோஷமோ நிம்மதியோ இருக்க முடியுமா.
'

மதங்களும் கடவுளும்

மதங்கள் எதற்காகத் தோன்றியது, மதங்களின் மூலம் கடவுளைப் பற்றி பிரசாரம்செய்வதற்காகவா, அல்லது மதங்களின் பெயரால் குழுக்களாக மனிதர்களை பிரிப்பதற்கா, மதங்களை தோற்றுவித்தவர்களுக்கு பின்வரும் காலங்களின் மதம் மனிதர்களின் ஒற்றுமையை குலைக்கும் என்பது அறிந்திருக்குமா, அப்படிஅவர்கள் அறிந்திருந்தால் மதங்களையும் கடவுள்களையும் அடையாளம் காண்பித்திருப்பார்களா.

வரைமுறையற்ற வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்களுக்கு மதங்களைப்பற்றியும் கடவுளைப்பற்றியும் தெரிந்து கொள்வதற்கு பல நூறாயிரம் ஆண்டுகள் ஆனது, மதங்களும் கடவுளைப்பற்றிய செய்திகளும் மனிதனை ஒழுங்குபடுத்தவே கூறப்பட்டது, அப்படியென்றால் மதங்களைப்பற்றிய செய்திகள் பொய்யா என்றால் இல்லை, மனிதர்கள்தான் வகுத்துக்கொண்டனர். கடவுளைப்பற்றி சொல்லி வாழ்க்கையில் வரம்புகள் வரையறைகள் ஏற்ப்படுத்தப்பட்டது, அப்படியென்றால் கடவுளுக்கும் மதத்திற்கும் சம்பந்தமே இல்லையா என்றால் இல்லை என்று கூட பதில் கூறலாம். மதங்களை உருவாக்கும் முன்னர் இருந்த மக்களை வரம்புகுட்படுத்த உருவாகியது. மதங்கள், கடவுள் என்பதை அதற்க்கு காரணமாகவும் அல்லது அடிப்படையாகவும் கொண்டு வரம்புகள் வகுக்கப்பட்டது.

இன்றைய வாழ்க்கை முறையில் மதங்களையும் கடவுள்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையும் அதனால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் பிரிவினை மற்றும் பாகுபாடுகளும், நன்மை தீமைகளையும் யாரும் வரையருக்காமலேயே மனிதர்கள் தங்கள் வசதிக் கேற்ப அமைத்துக்கொண்டிருப்பது போலவே அன்றும் மதங்களும் கடவுள்களும் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. கடவுளைப்பற்றி புகழ்பாடுவதற்கோ மத பிரச்சாரங்கள் செய்து கூட்டம் கூட்டி யாருக்கு அதிக கூட்டம் என்று பெருமைபட்டுக் கொள்வதற்கு மதங்களும் கடவுள்களும் உருவாக்கப்படவில்லை. மாறாக ஒழுக்கமும் வரையறைகளை உள்ளடக்கிய வாழ்வின் நெறிகளை எல்லோரும் இவற்றின் வாயிலாக அறிந்து கொண்டு அதன்படி தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்லவே மதமும் கடவுளும் மனிதர்களால் கண்டறியப்பட்டது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடவுளின் பெயரால் மதக் கலவரங்கள், பல தவறுகள் என்று எண்ணிலடங்கா பிரச்சினைகள் நடப்பதை காணும் போது சிலர் கடவுளே இல்லை மதங்களே வேண்டாம் அவையெல்லாம் பொய் என்று இன்னொரு குழுவாக மாறியுள்ளதும் காலத்தின் கோலங்கள். அவ்வாறு சொல்லுவதுடன் நிற்காமல் ஒழுக்கமின்றி அல்லது தனி மனித ஒழுக்கங்களை மீறிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் போது பல எதிர்வினைகளை சந்திக்க நேருவதும் அதனால் பல வன்முறைச் சம்பவங்கள் பெருகுவதும் தற்காலத்தில் நாம் கண்டு கொண்டிருக்கும் மாற்றம். சட்ட திட்டங்களை அவமதிப்பதும் கடவுள் கிடையாது என்று ஒழுக்கமற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதால் வாழ்க்கை மிகவும் சோதனைக்குரியதாகி விடும். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதால் பாவம் இல்லை என்ற எண்ணம் தோன்றும், அதன் முடிவு விபரீதமான விளைவுகளை ஏற்ப்படுத்துவது இன்றைய நிலை.


7/23/2010

பாவமில்லாமல் வாழ முடியுமா

பாவம் என்பது என்ன, அநீதியெல்லாம் பாவம்தான், நீதி அநீதியை நாம் எப்படி பாகுபாடுசெய்கின்றோம், நன்னூல்களை படித்து அறிந்து கொள்வதாலும், அப்படி படித்து நன்நெரியினை அறிந்தவர்களின் உபதேசங்களாலும் இவற்றை அறிந்துகொள்கிறோம். உதாரணமாக; கரடு முரடான பாதையில் பயணம் மேற்கொள்ளும்போது காலில் முள் தைத்து அதனால் வலி ஏற்ப்படுபோது, அடுத்தமுறை முள் கால்களில் தைக்காமல் நடையில் கவனம் வைக்கின்றோம், பாதங்களை காப்பதற்கு முள் கல் எதுவும் தைக்க இயலாத ஏதோ ஒரு உறை போன்ற ஒன்றை உருவாக்கி கால்களில் அணிந்துகொண்டு நடந்து பழகுகிறோம், முதலில் அந்த உறையை காலில் அணிந்துகொண்டு நடப்பதற்கு சிரமமாக தோன்றி உறை ஏற்ப்படுத்தும் காயங்களிலிருந்து சுகம் பெற ஏதேனும் வைத்தியம் செய்து மீண்டும் உரையினை பாதங்களுக்கு அணிவித்து நடந்து செல்லப் பழகுகிறோம்,

இதே போன்று பாவம் என்கின்ற முள் நம் வாழ்க்கை பாதையில் தைக்காமலிருக்க அல்லது நம்மை பாவத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு ஏற்க்கனவே முள்பாதையில் நடந்து சென்றவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து அறிந்து நாம் எவ்வாறு நடந்தால் பாவம் என்கின்ற முள் தைக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று சிந்தித்து செயல்படுகிறோம். பாவம் செய்தால் என்னத் தவறு என்று நினைத்து அதிலேயே மூழ்கி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னே பல துன்பங்களுக்கு ஆளாகி சமூகத்தில் மரியாதை மதிப்பின்றி நோய்களின் பிடியில் சிக்கி மாண்டுவிட நேரிடுகிறது. அப்படி மாண்டுவிடுவதற்க்கு முன்பே மன அமைதி இழந்து உணவிழந்து உற்றார் உறவுகளை இழந்து தனிமையாக்கப்படும் நிலையில் மன உளைச்சல் பெருகுகிறது.

பாவம் செய்யத் தூண்டும் காரியங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது கண்கள், பசி, நண்பர்கள். கண்கள் பார்க்கும் ஆடம்பர வாழ்க்கை, அழகிய பெண்களின் மீதுமோகம் போன்ற பலவற்றை சொல்லலாம். கண்களினால் ஏற்ப்படும் ஆசை மனதினுள் சென்று உணர்வுகளைத் தூண்டி அதற்காக பல குற்றங்களை செய்து பொருள் பணம் வீடு நிலம் என யாவற்றையும் பெருக்கிக்கொள்ளும் ஆசைகளை மென்மேலும் அதிகப்படுத்துவது கண்களின் மூலம் ஏற்படுத்தபடுகின்ற ஆசைகள் அல்லது இச்சைகள், பாவ புண்ணியத்தை மறக்கச் செய்து மதியிழக்க வைக்கும் நிலைக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பாவத்தைப்பற்றி யாராவது சொன்னால் அவர்களை 'பிழைக்கத்தெரியாதவர்கள்' என்று நினைக்க வைக்கும். ஆசை என்பது மனதினுள் நுழைவதற்கு இடம் கொடுத்தால் நாளடைவில் அது பேராசையாக மாறி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து சேர்க்காமல் விடுவதில்லை. இதனால்தான் பலர் மென்மேலும் சம்பாதிக்க ஆசைப்பட்டு கடைசியில் குற்றவாளிக் கூண்டிற்கு வந்து சேருகின்றனர்.

பசி என்பதை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர இயலாதென்றாலும், பசிக்கு தேவையான உணவுக்காக பொருளீட்டுவதற்கு விலைமாதர்களாவது என்பது வீட்டிற்கு வெளிச்சம் தேவை என்பதற்காக இடுப்பிலிருக்கும் சேலையை பந்தம் கட்டி எரியச்செய்வது போன்றதாகும். சில பெண்கள் கூறுவது போல சம்பாதிக்கச் செல்லும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண் கூட்டம் இருப்பது போல பெண்கள் எங்கே தனியாக வேலைக்குச் சென்றாலும் அங்கு ஒருபாலியல் பலாத்காரத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பது நிஜம்தான். திருமணம் செய்துகொண்ட கணவனும் பொறுப்பானவராக இல்லாமல் போனால் பெண்ணின் நிலை என்பது சோகக்கதையாகி விடுவது உண்மை. பசிக்குப் போராடும் குழந்தைகளும் அல்லது குழந்தைகள் இல்லையென்றாலும் தன் பசிக்கு சம்பாதித்து தான் ஆகவேண்டும். பாவம் செய்ய இடம் கொடாமல் அதாவது பசிக்காக வேசியாக பாவத்தில் வயிற்றை நிரப்புவதை தவிர்க்க முயற்சி செய்து போராடி வாழத்தான் வேண்டும்.

பாவம் என்பதை வாழ்க்கையில் ஏற்க்கனவே செய்திருந்தாலும் இனி செய்யாமலிருக்க முயற்ச்சிகள் எடுத்தால் முடியாதது கிடையாது. முயற்ச்சிகளை எடுக்கும்போது நிச்சயம் நல்ல வழிகள் கிடைக்கும், மிகவும் கவனமாக வாழ்க்கை என்கின்ற பந்தயத்தில் ஓட வேண்டிய தூரத்தை ஓடி கடக்க வேண்டும். பாவம் செய்துதான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது அதிலிருந்து வெளியே வர இயலவில்லை என்பதால் தற்கொலை செய்து உயிரை விடுவதும் கூட பாவம் என்றுதான் நன்னெறி நூல்கள் சொல்கிறது, தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் உரிமை யாருக்கும் கொடுக்கப்படவில்லை அதனால் தற்கொலையும் பாவம்தான். பாவமின்றி வாழ முயற்ச்சிகள் செய்வதே மனிதனின் கடமை.
7/22/2010

கடவுள் ஒருநாள் உலகைக்காண வந்தாராம்

கடவுள் எல்லாவித ஜீவராசிகளையும் மிருகங்களையும் படைத்து முடித்தபின்னர் அதனதன் விருப்பப்படி வாழ்ந்துவந்த சமயத்துல சில காலம் இடைவெளி விட்டு பின்னர் பூமிக்கு வந்து ஜீவராசிகள் செடி கொடி மரம் பூ மனிதன் காய் கனி என்று எல்லாரிடமும் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் தேவை இருந்தால் சொல்லுங்கள் அதன்படி மாற்றியமைத்துவிடலாம் என்றாராம், அப்போது நாய் முதலில் வந்து எனக்கு அதிக ஆயுசு வேண்டாம் அதற்க்கு பதில் எல்லோரிடமும் விசுவாசம் நன்றிமறவாமை வேண்டும், மிருகங்களுடனேயே வாழ்ந்து சாகாமல் பிறருக்கு பிரயோஜனமாக வாழும் வாழ்க்கை வேண்டும் என்று கேட்டதாம், அடுத்தது மாடு வந்து நானும் எனது உடல் உயிர் எல்லாம் அடுத்தவருக்குப் பிரயோஜனப்படும்படியாக வாழும் வாழ்க்கை வேண்டும், என்னைப்போன்ற மிருகத்தின் மாமிசம் சாப்பிட்டு உயிர் வாழ்தலில் விருப்பமில்லை என்றதுவாம்.

ஒவ்வொரு மிருகமும் அதனதன் தேவைகளின் படி கேட்டுப் பெற்றுக்கொண்டது, கடைசியாக மரம் செடிக்கொடிகள் காய் கனிகள் பூக்கள் வந்ததாம், அவைகளும் தங்களது விருப்பத்தின் படி கேட்டுப் பெற்றுச்சென்றனவாம் அதில் பூக்கள் மட்டும் சில நிமிஷங்களும் ஒரு சில நாட்களும் எங்களுக்கு உயிர் வாழும்
வாழ்க்கையே போதுமானது என்றும் தங்களுக்கு கிடைத்திருக்கும் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குணநலன்களே போதும் ஆனால் எங்களையல்லாமல் ஒரு வைபவமும் நடக்கக்கூடாது என்றதுவாம். அப்போது கடவுள் சொன்னாராம் எனக்கும் உங்கள் அழகும் நறுமணமும் மிகவும் பிடிக்கும் என்பதால் என்னை நினைத்து பூஜிக்கும் பிரதானப் பொருளாவீர்கள் என்றாராம்.

கடைசியாக மனிதன் வந்தானாம் பூமியில் அனுபவிப்பதற்கு ஏராளமான காலம் எங்களுக்கு தேவைப்படுகிறது, அத்தனை இன்பங்கள் பூமியில் நீர் படைத்து இருக்கின்றீகள் அதனால் எங்களுக்கு ஆயுசுகாலம் மற்ற எல்லா உயிரினங்கள் கேட்டதை விட அதிகமாக வேண்டும் என்று கேட்டானாம், அது மட்டுமே போதுமா என்று கடவுள் கேட்டாராம், இப்போதைக்கு இது போதும், எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்ளுவோம் என்றானாம் மனிதன், அப்படியே ஆகட்டும் என்றாராம் கடவுள்,

அதனால் மனிதனின் தேவைகள் எதுவாக இருந்தாலும் கேட்கும் மனிதர்களுக்கு கொடுக்க தயாராக இருந்தாராம், ஆனால் மனிதர்கள் யாருக்குமே ஒரு தேவையும் ஏற்படவில்லையாம் பல காலம் காத்திருந்தாராம் ஒரு மனிதரிடமிருந்தும் ஒரு தேவையும் கேட்டு குரல் அவருக்கு வரவில்லையாம், அப்போது மனிதனுக்கு
முதலில் பசியை ஏற்ப்படுத்தினாராம், பசி எடுத்தபோது மனிதர்கள் அங்குமிங்கும் ஓடி கிழங்கு பழங்கள் காய்களைத் தின்று பசியாற்றிக்கொள்ள அலைந்த போது அவை போதாமல் மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின் மாமிச உணவைத்தின்று உடலில் பலம் அதிகரித்ததால் எல்லாவகை உணர்வுகளாலும் தூண்டப்பட்டு எல்லாவித நன்மை தீமைகளையும் சந்திக்க நேர்ந்ததாம், அப்போது உடலில் வியாதிகளும் மனதில் விரோதங்களும் தோன்ற ஒருவருடன் ஒருவர் சண்டையிடவும் அதினால் ஒருவரையொருவர் கொன்றும் வந்தனராம்,

இந்நிலையில் ஒரு சிலர் கடவுளை கூப்பிட்டு அங்கு நடக்கும் பிரச்சினைகளைப்பற்றி சொன்னபோது மற்றவர்கள் எங்கே என்று கடவுள் கேட்டாராம், சிலர் கொல்லப்பட்டுவிட்டனர் சிலர் பல தீயஉணர்வுகளுக்கு அடிமையாகி அதில் மூழ்கி கிடக்கின்றனர் என்றனர். அப்போது கடவுளிடம் முதலில் எங்களை காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொண்டார்களாம், அவர்கள் வேண்டிக்கொண்டதுக் கேற்ப அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து அனுப்பினாராம், மற்றவர்கள் கடவுளை மறந்து போய் அப்படியே வாழ்ந்தனராம்.

7/21/2010

பதிவுலக ரோமியோக்கள்

நான் கல்லூரியில் படித்த போது ராகிங் என்பது கிடையாது, ஆனால் சில 'வேலையற்ற' கூட்டங்கள் தெரு முனைகளில், பெட்டி கடைகளில், வாராவதியில் என்று அவர்களுக்கென்றே அமைந்திருக்கும் இடங்களிலெல்லாம் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோருக்கு இடைஞ்சல் செய்வதோடு ஆண் பெண் என்ற வேறுபாடின்றி வயதானோர் என்ற மரியாதையின்றி கிண்டல் செய்வது உண்டு, இதைவிட மிகவும் நேர்த்தியான செய்கை அந்த ஏரியாவிலிருக்கும் இளம் பெண்களில் ஆளுக்கொரு இளம் பெண்ணை தாங்களாகவே தேர்வு செய்துகொண்டு (அந்த பெண்களுக்கு தெரியாமலேயே) 'இவ என்னோட ஆளு' 'அவ உன்னோட ஆளு' என்று பேசி மகிழ்வதும், பொறுப்பின்றி, எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய எண்ணமின்றி, வீணே பொழுதை பேசி பேசி கழித்துக்கொண்டிருக்கும் வீணரவர்கள், இவர்கள் பெண்களைப்பற்றி பேசுன்கின்ற விஷயம் எப்போது குறிப்பிட்ட பெண்ணின் காதுக்கு போகும் என்றால் அந்த கூட்டத்திலிருக்கும் யாரேனும் ஒருவன் வந்து யாரிடமாவது சொல்லிவிட்டால் அந்த 'செய்தி' வெளியே தெரியவரும்.

அந்த செய்தியை யாரும் பெரிதுபடுத்துவதோ, அதை வைத்து கிசு கிசு பேசப்படுவதோ கிடையாது, ஆனால் சில இளம் பெண்களை சார்ந்த குடும்பத்தார் காவல் துறைக்கு தெரியபடுத்துவார்கள், அந்த கும்பல் கூட்டம் கூடும் இடத்திற்கு காவலர்கள் வந்து அவர்களை கூட்டி சென்று காவல் நிலையத்தில் வைத்து 'விசாரிப்பது' வழக்கம், பின்னர் பல மாதங்களுக்கு அல்லது முற்றிலுமாக ஒன்று கூடுமிடத்தில் அவர்களை பார்க்கவே முடியாது. சில தெருமுனை ரோமியோக்கள் வெறும் கற்பனையிலேயே அந்தந்த பெண்களிடம் சரசமாடிவிட்டு பிறகு காணாமல் தொலைந்து போய் விடுவார்கள், அப்படி வாழ்க்கையை தொலைத்த பல இளைஞர்கள் வாழ்க்கையில் அடுத்தவருக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தினருக்கோ யாருக்கும், ஏன் அவர்களுக்கே கூட உபயோகமில்லாதவர்களாகிப் போனார்கள்.

பதிவுலகத்தில் கூட சிலர் இப்படி 'மதத்தைப்பற்றிய பொய் கதை'களைச் தங்கள் கற்பனைக்கு தோன்றியபடி இல்லாதவைகளைஎல்லாம் இருப்பது போல பதிவு செய்து தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொள்கிறார்கள், சில வலைதளங்களில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தனிமனித தாக்குதல்களோ இன மதங்களைப்பற்றிய தாக்குதல் உரை மற்றும் கட்டுரைகளை பிரசுரிப்பதில்லை என்ற வரையறைகளையும் மீறி வீணர்களின் நியாயமற்ற 'வயிற்ரெரிச்சல்களை ' வெளியிட அனுமதித்திருப்பது எந்தவிதத்தில் சரியென்பது தெரியவில்லை. கைக்கு கிடைக்காத, நிஜத்தில் நடக்க முடியாதவற்றை, நடந்திராதவற்றை கற்பனையில் திரித்து எழுதி அற்ப சந்தோசம் அடைய நினைக்கும் அற்பர்களை அந்தக் கடவுள் (கள்?) கூட காப்பாற்ற முடியாது என்பது அவர்களுக்கு விரைவிலேயே தெரிந்துவிடும்.

நாட்டுக்கும் உதவாமல் வீட்டிற்கும் உதவாமல் தண்ட பிண்டங்களாக இல்லாத கதைகளை கேவலமாக எழுதிவரும் இந்த கோழைகளின் முடிவுக்காலம் கொடூரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

போதும் என்கிற மனமே

போலி சான்றிதழ்கள் போலி ஆவணங்கள் போலி முத்திரைத்தாள் போலி ரூபாய் நோட்டுகள் போலி பாஸ்போர்ட் போலி மருத்துவர் போலி உணவுப்பொருட்கள் போலி மாத்திரைகள் மருத்துகள், எங்கும் போலி எதிலும் போலி என்று போலிகளை உருவாக்கி அதன் மூலம் வரும்படியை பெருக்கிக்கொள்ளும் போலிகளை உருவாக்கிய பெற்றோரை உலகம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும், போலிகள் உருவாகக் காரணம் என்ன, இதற்க்கு பதில் அறிவது ஒன்றும் அத்தனை கடினமில்லை. போலிகளின் வரவை கண்டு பிடிப்பதற்கே பல ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால் போலிகளை உருவாக்குபவர்கள் மட்டுமில்லாது அதைச் சுற்றி பெருங்கூட்டமொன்றும் பயனடைந்து வந்துள்ளதால் அந்த ரகசியம் வெளிவருவதற்கு ஆண்டுகள் பல கடந்து பின்னர் வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது விளங்குகிறது.

போலிகளால் பயன் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்ககூடும் என்பதால் போலிகளால் அவதியுற்றோரின் எண்ணிக்கை வெளிவராமல் போனதோ என்ற கேள்வி எழுகிறது. போலிகளை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் பலரின் வீட்டில் தூக்குக் கயிறுகளை தயார் செய்து வைத்துவிட்டுத் தான் அவர்களை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டியிருக்கும் என்பதாலோ அரசு அவர்களிடம் விசாரணையே இல்லை என்ற முடிவு எடுத்திருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்வதைத்தவிர வேறு காரணம் என்னவாக இருக்க கூடும். போலிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாலும் போலிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதாலும் இனி போலிகள் உருவாகாமல் தடுக்க முடியாதா என்ற கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது.

இப்படி பல காரணங்களைக் கூறி இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட போலிகள் தப்பித்துக்கொள்வார்களே அல்லது புதிய போலிகள் வேறு வழிகளை கண்டுபிடித்து உருவாக மாட்டார்களா என்று சமுதாய நலம் விரும்பிகள் கேட்டால் யார் இதற்க்கு பதிலளிக்கப் போகின்றனர். ஆக போலிகளின் வரவும் சமுதாய விரோதிகளின் வரவும் ஒழிக்கப்படுவதில்லை அல்லது அவர்களை மன்னித்துவிட்டு விட்டோம், மனம் திருந்தி வாழ அவர்களை சிறையில் வைத்து செதுக்கி விட்டோம் என்பது அர்த்தமா. குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு மீண்டும் சிறைவாசம் வேண்டும் என்கின்ற அளவில் சிறையில் சுகம் கிடைக்கின்றதா அல்லது சிறைவாசமே இனி ஒருபோதும் வேண்டாம் என்று நினைக்கின்ற அளவிற்கு கடுமையானதாக உள்ளதா என்பதை கைதிகளை கேட்டுப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அளவில் போலிகளும் சமூக விரோதிகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனால் சிறை நிரம்பி விடும், சிறைகளில் உள்ள போலிகள் மட்டுமே போலிகள் என்றால் வெளியே சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கும் போலிகளும் சமூக விரோதிகளையும் எப்படி தண்டிப்பது, குற்றங்களை ஆராயும் கூட்டம் மிகவும் குறைவாகவும் குற்றங்களை செய்பவர்களின் கூட்டம் அதிகரித்து வருவதும் கூட இந்த தொய்வு நிலைகளுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். திறமையான காவல்துறை அதிகாரிகளை, திறமையான ரவுடிகளை, திறமையான தாதாக்களை திறமையான துப்பறிபவர்களை சினிமாத்தனமாக படம் பிடித்து அதை பொதுமக்கள் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாலும், மக்களின் பொறுப்புணர்ச்சி என்பது சுயநலத்தின் அடிப்படையிலேயே இருப்பதுதான் போலிகளின், சமுதாய விரோதிகளின் அட்டகாசங்களுக்கு மிக முக்கிய காரணம்.

பொன்னின் விலை மண்ணின் விலை அதின் ஏற்றமும் இறக்கமும், தங்க ஜுரம், நில ஜுரம் போன்று தினமும் ஏறுவதும் இறங்குவதும் மனிதனின் பேராசையின் அளவு கோலாக தினமும் நம்மை எச்சரிக்கை செய்கின்றன, மண்ணிற்கும் பொன்னிர்க்கும் விலையேற்றம் மனித நேயத்தின் வீழ்ச்சியை பறைசாற்றுகின்றதே, கொலை கொள்ளைகள் வங்கிகளின் திவால், பண வீக்கம் மனிதனின் வீழ்ச்சியை தெளிவாக்குகிறதே. கண்டுபிடித்தவனையே பணம் ஆட்டுவிப்பதை காட்டுகிறதே. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு 'போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்தே'.

7/20/2010

விபத்துகளா, சதி திட்டமா???


மேற்கு வாங்க மாநிலத்தில் தொடர்ந்து ஏற்ப்பட்டு வருகின்ற தொடர்வண்டி விபத்துக்கள் நிஜமான விபத்துக்கள் மட்டும் தானா அல்லது அரசியல் உள்நோக்கம் உடையதா என்பது கேள்வி, மம்தா பானர்ஜியை பதவிவிலகச் சொல்வதை பார்த்தால் இது அரசியல் உள்நோக்கம் உடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கையே, ஆனால் அதற்காக அப்பாவி உயிர்களையும் பொது சொத்துக்களையும் அழித்து கோடிக்கணக்கில் நாடடின் பணத்தை நஷ்டப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல், இந்த குற்றங்களை செய்தவரை கண்டு பிடித்து, என்னதான் அதிகபட்ச தண்டனை கொடுத்தாலும் இழந்தவைகளைத் திரும்பப்பெற வாய்ப்பு உண்டா.

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சதி வேலைகளுக்கும் பின்னணி இல்லாமல் இருக்க முடியாது, கசாப்பை தூக்கிலிட வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லோருமே நியாயம் கேட்ப்பவர்கள்தானா அல்லது அதிலும் அரசியல் உள்நோக்கமுள்ளதா என்று யோசிக்க வைக்கிறது. ஒருபுறம் உள்நாட்டு தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆட்டு மந்தைக்கூட்டம் இன்னொருபக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, இன்னொருபுறம் நாட்டு சொத்துக்களை கொள்ளையடிக்கும் அரசியல் சாயம் பூசப்பட்ட கொள்ளைகும்பல் என ஆங்காங்கே நடக்கும் திகில் சம்பவங்களில் அநியாயமாக உயிரை இழப்பது அப்பாவிகள். அப்பாவி பொது மக்களை பலிகடாவாக பயன்படுத்தும் சமூகவிரோதிகள், இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டுவது யார் எப்போது என்பது கேள்வி.

உலகமயமாக்கப்படுவதால் எத்தனையோ நன்மைகளும் உண்டு ஒரு சிலதீமைகளும் உண்டு, அந்த நன்மைகளில் ஒன்றாக இந்தியதேசம் காக்கப்ப்படுமானால், உலகமயமாக்கப்படுவதில் பல அப்பாவி உயிர்கள் காக்கப்படுமென்றால், பாதுகாப்புடன் பஞ்சம் பசி நீங்கிய சமுதாயமாக மாற்றப்படுவது உறுதி என்றால் உலக மயமாதல் அவசியம், உள்நாட்டு கொள்ளையர்களிடமிருந்தும் சுரண்டல் பேர்வழிகளிடமிருந்தும் நாடும் பொதுசொத்துக்களும் காக்கப்படுவது உறுதி என்றால் உலக மயமாக்கப்படுத்தல் அவசியம். பொதுமக்களுக்கும் நாட்டின் பொது சொத்துக்களுக்கும் நிச்சயம் நலம் பயக்கும் என்றால் எந்த மாற்றமும் வரவேற்கத் தகுந்ததே.

7/19/2010

முரண்பாடுகள்

நமது சமுதாயம் முன்னேறியுள்ளதா, நம் நாடு எந்தவகையில் முன்னேறி வருகிறது என்பதை கவனிக்கும் போது, சில சுவாரசியமான உண்மைகள் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்வதும் அவற்றில் சில உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவதுமாக, நேர் எதிர்மறையான இரு வேறு தோற்றங்களை கண்ணெதிரில் காண்பிக்கின்றது. நம்மை வியப்பில் ஆழ்த்தும் உண்மைகளை கவனித்தால், பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அவற்றை உபயோகிப்பதில் முதியவர்களை விட இளைஞர்களின் மாறுபட்ட நிலைகளும் வியப்பிற்குரியது. நாம் எதிர்பார்த்ததைவிட அறிவியல் முன்னேற்றம் நம் வாழ்க்கையில் பெரும் பகுதியினை கொள்ளை கொண்டு விட்டிருப்பதை பார்க்கும் போது வியப்பில் நம்மை ஆழ்த்துவது உண்மை. மனிதனுக்கு அறிவின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் அவற்றால் நன்மைகள் ஒருபுறம் ஏராளமாக இருந்தாலும் மற்றொருபுறம் அவை மனிதனை மனிதநேயத்தை மிஞ்சிவிடுவதை நினைக்கும் போது அத்தகைய முன்னேற்றங்கள் தேவைதானா என்ற எண்ணம் மேலோங்குவது இயற்கையே.

வரலாற்றில்
ஆதிமனிதன் சிக்கி முக்கி கற்களைக் கொண்டு தீயை கண்டு பிடித்ததும் காடுகளிலும் மலைக்குகைகளிலும் வாழ்ந்த மனிதன் ஹரப்பா மொகஜ்சதாரோ நாகரீகத்தில் வீடுகளை தனித்தனியே கட்டி வாழ்ந்தது மேம்பட்ட நாகரீகத்தின் அடையாள சின்னங்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுவதை படித்த பின் தற்கால மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றைய நாகரீகத்தின் அசுர வளர்ச்சியினை வரலாற்று ஆசிரியர்கள் என்னவென்று வருணிப்பார்கள் என்பது தெரியவில்லை, ஆக, தற்கால மனிதன் நாகரீகத்தில் முன்னேற்றம் வகிப்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம், ஆனால் அதே சமயம் ஜாதி மத இன பேதங்களை அதிகமாக அனுசரிக்கின்றோம், யாரேனும் ஒருவர் சமுதாயத்தில் தவறு செய்தால் அவர் எந்த மதத்தவர் எந்த ஜாதியை சார்ந்தவர் என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கேற்றார்போல அவரை தீர்ப்பு செய்ய முனைகின்றோம்.

அதே வேறொரு மனிதரின் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது சாதனைகளைப் பற்றி பேசுகையில் அவரது சாதனைகளைப் பற்றி மட்டுமே
பேசப்படுகிறதே தவிர அவரது ஜாதி மதம் தாய்நாடு பிறந்த ஊர் மாநிலம் என்று எதையுமே நாம் கணக்கில் கொள்வதில்லை, இந்த மாதிரியான உள்நோக்கமுள்ள சமுதாய சிந்தனைகளை வரலாற்றில் எந்த வரலாற்று ஆசிரியரும் வருணிக்க இயலாத மாறுபட்ட நாகரீகத்தினை தற்போதைய சமுதாயம் மிகவும் நேர்த்தியாக மிகவும் மோசமாக மிகவும் மிருகத்தனமாக வஞ்சம் தீர்க்கும் முறைகளில் பயன்படுத்தி வருவதை நாகரீகத்தின் இழிவானப் பகுதி என்பதா நாகரீகத்தின் படுதோல்வி என்பதா. நாகரீகம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது என்ன? எது?.

மனிதனை
மனிதனாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு சமுதாயமும் எளிதில் முன்னேறிவிடும் இதற்க்குச் சான்று பல ஐரோப்பிய நாடுகளைச் சொல்லலாம், தீண்டாமை, ஜாதி, மதம், மொழி, இனம், மாநிலம், நாடுகளை கடந்த மனித இனம் என்கிற உணர்வுள்ளவர்கள் மட்டுமே நாகரீகத்துடன் வாழ்வதாக சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர்கள். 'ஜாதி இரண்டொழிய வேறில்லை', இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்', 'நீதி, உயர்ந்தமதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' என்ற கூற்றுகளைப் போல ஏராளமான தமிழ் கூறும் அறிவுரைகள், நன்னெறிகளைப் படித்திருந்தும், இன்றைய நாகரீகத்தில் இவை எங்கே காணாமல் போனது, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று காற்றோடு போன கதையாகிவிட்டது. எதை வைத்து தாங்கள் நாகரீகத்தின் உச்சியில் வாழ்வதாக சொல்லிக்கொள்கின்றனர்?

வறுமை கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் என்ற பிரிவில், மக்களை
பிரித்து, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சொந்த வீடு இலவச படிப்பு இலவச விளை நிலம் வேலை வாய்ப்பு மருத்துவ வசதி தொழில் செய்ய உதவி போன்ற அத்தனை வசதிகளையும் இலவசமாக கொடுத்து சமுதாயத்தில் உயர்வு தாழ்வு வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதி அடிப்படையிலான மதம் மொழி அடிப்படையிலான அத்தனை பிரிவுகளையும் அரசாங்கம் ஒழிக்க வேண்டும், அரசியல் சாசனத்தில் ஜாதி மத இன மொழி பாகுபாடுகளை முற்றிலுமாக நீக்கி சட்டம் இயற்றப்பட வேண்டும் ஆண் பெண் என்ற பாகுபாடுகளை நீக்கி எல்லோரும் சமம் என்கின்ற ஒருங்கிணைப்பை அரசு வேலை வாய்ப்பு படிப்பு போன்ற எல்லாத்துறைகளிலும் அமல் படுத்தப்பட வேண்டும் உயர்வு தாழ்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இந்நாடு இந்திய பிரஜைகள் என்கின்ற அடையாள அட்டை மட்டும் போதாது உரிமைகளையும் கொடுத்து முழு ஜனநாயக நாடாக்க வேண்டும், 'குழந்தை வீட்டிற்கு ஒன்று' என்கின்ற கட்டாயதிட்டம் உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும், அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்காதவர்களுக்கு அரசின் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் நாடும் அதன் குடி மக்களுமே நாகரீகத்தினை முழு அளவில் அடைந்ததாக சொல்ல முடியுமேத் தவிர தற்போதுள்ள இந்தியதேசம் நாகரீகத்தின் அழிவின் விளிம்பில் இருப்பதாகவே வரலாற்று வல்லுனர்கள் வருணிக்க இயலும் என்பது திண்ணம்.