Translate

6/29/2010

மன வலி என்பது தொடரும் கதை

வயது கூடும் போது அதனுடன் தனிமையும் வெறுமையும் இணைந்து கொண்டால் பழைய சம்பவங்களை அசைப் போட வைக்கும் என்பது புதிய அனுபவம். அப்போது பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம், புதியதாக தைத்த பாவாடைச் சட்டையை அணிந்து கொண்டு கோவிலுக்குச் சென்றேன், அந்த வயதில் புதிய உடைகள் அணிவது என்றாலே மனதிற்கு மகிழ்ச்சிதான், கோவிலுக்குச் செல்லும் வழியும் பள்ளிக்குச் செல்லும் வழியும் ஒன்றுதான், பலத் தெருக்களைத் கடந்து செல்லும் போது வழியில் இருக்கும் எனது வகுப்பில் படிக்கும் மாணவிகளின் வீடுகளை கடந்து செல்ல வேண்டும், அவர்கள் வீட்டைக் கடக்கும் போது அவர்கள் யாருமே வீட்டின் வெளியே இல்லை.

ஆனால் ஒரு வாரம் கடந்த பின் என் வகுப்புத் தோழி என்னிடம் சொன்னாள் நம் வகுப்பில் படிக்கும் விஜயா கடந்த வாரம் நீ புதிய உடை அணிந்து செல்வதை கவனித்தாளாம், நீ அணிந்து சென்ற அதே நிறம் அதே போன்ற உடை அவளிடமும் இருக்கிறதாம், வறுமையில் இருக்கும் இவளுக்கு இந்த உடை எப்படிக் கிடைத்திருக்கும், யாரேனும் துவைத்து உலர்த்துவதற்க்காக வெளியே கொடியில் போட்டிருப்பார்கள் அதை இவள் அம்மா அல்லது இவள் திருடி இருக்கக் கூடும் என்று சொன்னதாக என்னிடம் கூறினாள். அதைக் கேட்ட போது என் மனம் வலித்தது. ஆனால் ஏன் என்னைப் பற்றி இழிவாக அப்படிப் பேசினாய் என்று நான் அவளிடமும் என் பெற்றோரிடமும் சொல்லவில்லை.

ஒரு முறை நான் மதிய உணவு எடுத்து போகாமலேயே பள்ளிக்கு சென்று விட்டேன், என் அப்பா எனது மதிய உணவை எடுத்து வந்து என்னிடம் கொடுப்பதற்குள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு முடித்துவிட்டனர், இன்னும் நிறைய சமயம் இருக்கிறது உணவை சாப்பிடு என்று என் அப்பா என்னை வற்ப்புருத்தினார், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த என் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் ஒரு குழுவினரில் ஒரு மாணவி மட்டும் கிண்டலடித்து சத்தமிட்டு கைதட்டி என்னையும் என் அப்பாவையும் பார்த்து கேலி செய்தாள், இப்போது சாப்பிட ஒன்றும் வேண்டாம் மாலை வீட்டிற்கு வந்த பின் சாப்பிடுகிறேன் என்று சொல்லி என் அப்பாவையும் உணவையும் திருப்பி அனுப்பி விட்டேன். என் பசியை விட அத்தனை தூரம் வெயலில் காலில் செருப்பில்லாமல் தானும் சாப்பிடாமல் என் பசியை தீர்க்க என் அப்பா எடுத்து வந்த உணவை சாப்பிடாமல் திருப்பி அனுப்பிவிட நேர்ந்ததே என்று எண்ணி என் மனம் மிகவும் வலித்தது.

பள்ளியில் பாட புத்தகங்களுக்கான பணம் கட்ட பணமில்லாமல் என் அப்பா எனது தலைமை ஆசிரியரை அணுகிய போது என் தலைமையாசிரியர் விளையாட்டு மைதானத்திலிருந்த இரும்பு குழாய்களுக்கு வர்ணம் பூசச் சொல்லி அதற்க்கு கூலியை நிர்ணயித்து அந்த கூலியை புத்தக கட்டணமாக செலுத்தியப் போது என் மனம் வலித்தது. இருக்கும் சிறிதளவு உணவைக் கூட என்னை சாப்பிடச் சொல்லிவிட்டு பட்டினியாய் உறங்கிய என் தாய் எதற்காவது கண்ணீர் விட நேரும் போது என் மனம் வலித்தது. செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த என் பெற்றோர் எனக்காக என் சுகத்தை மட்டுமே தங்கள் சுகமாக வறுமையிலும் என்னை மகாராணியாக வைத்திருந்ததை நினைக்கையில் என் மனம் வலித்தது.

என் வகுப்பில் இரண்டு ராதாக்கள் அதில் ஒருத்தி என் வீட்டருகில் இருந்தாள் அவள் என் தோழி. மற்றொரு ராதா என் வகுப்பில் உடன் படித்தாள் நாங்கள் ஒருமுறை பேசியது கூட இல்லை, இருவரும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள், எனக்கு அறிமுகமே இல்லாத ராதா கூலி வேலைபார்க்கும் படிப்பறிவு இல்லாத யாரோ ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடிப்போன போது அவளது உறவினர்கள் என் வீட்டைத் தேடிக்கொண்டு வந்து என்னை அடிக்காதக் குறையாக (அப்போது என் பெற்றோர் வீட்டில் இல்லை) அவள் யாருடன் எங்கே போனாள் என்று விசாரித்த போது என் மனம் வலித்தது.

என் வீட்டருகிலிருந்த ஒரு பணக்கார பெண்மணி அடிக்கடி என்னை உதவிக்கு கூப்பிடுவார், அப்படி ஒருநாள் அவர் என்னை கூப்பிட்ட போது அவர் வீட்டிற்கு வந்திருந்த அவரது திருமணமாகிய மகளின் காதணி காணாமல் போனது நான் தான் எடுத்திருக்க முடியும் என்று சொல்லி என்னிடம் விசாரித்ததும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்த போது என் மனம் வலித்தது, இரண்டு நாட்களில் அந்த காதணி அவரது வீட்டில் வேலை பார்த்தப் பெண் எடுத்திருந்தது தெரிய வந்ததும் அவள் அதை திருப்பிக் கொடுத்த போதும் என் மனம் மேலும் வலித்தது.

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் தான் மாறாதா.

மன வலி தீராதது...... ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மன வலிகள், மன வலி என்பது மனிதனின் உயிர் உள்ளளவும் நிழலைப் போலத் தொடரும், எந்த ரூபத்திலாவது மனிதனை துரத்திக் கொண்டே தான் இருக்கும் மன வலி என்பது மனிதனால் மனிதனுக்கு ஏற்ப்படும் ஓயாத ஒழியாத தொடரும் கதை........