Translate

6/28/2010

ஈ.சி. ஆர். பக்கம் போனால்

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது, சில சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும் அது நம்மை மறக்காது போலும் அந்த வகையில் இந்த சம்பவத்தைப் பற்றி இப்போது நினைத்தாலும் எனக்குள் ஏற்ப்படுகின்ற உணர்விற்கு என்ன பெயரிடுவதென்பது இன்றுவரை விளங்காத ஒன்று. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானும் எனது கல்லூரி தோழிகள் சிலரும் சில வகுப்புகளை புறக்கணிப்பதாக எண்ணிக்கொண்டு அருகிலிருந்த பாம்புப்பண்ணை, காந்தி பூங்கா, குழந்தைகள் பூங்கா என்று போய் உட்கார்ந்து அரட்டை அடிப்போம் அல்லது ஏதேனும் எழுத படிக்க தேவை இருந்தால் அதில் மும்முரமாக செயல்படுவோம், தப்பித்தவறிக் கூட அந்த பகுதியைத் தவிர வேறு பகுதிகளுக்கு போகமாட்டோம். எங்கள் வீட்டருகிலிருந்த ஒரு பெண்ணை அங்கிருந்த இளம் வயதுக்காரர்கள் 'காந்தி மண்டபம்' என்று கேலி செய்வதை நான் பல முறை பார்த்ததுண்டு, அதன் காரணம் அப்போது எனக்குத் தெரியாமலிருந்தது. என் அப்பாவிற்கு நாங்கள் அந்த பகுதிக்குச் செல்வதை சொல்லியிருந்தேன், அதனால் என் அப்பா தனியாக எலியட்ஸ் பீச் பக்கம் போகாதீர்கள், காந்தி மண்டபத்திலிருந்து இருட்டுவதற்கு முன்பே கிளம்பி விடுங்கள் என்று சொன்னார்,

அதற்க்குக் காரணம் காதல் ஜோடிகள் தனியே அந்த பகுதிகளுக்குச் செல்வதால் சமூக விரோதிகள் அவர்களை பின் தொடர்ந்து போய் பையனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை கற்பழித்து கொன்று விடுவதாகச் சொன்னார். இதனால் அப்பகுதி பாதுகாப்பற்றதாக கருதப்படுவதாக எச்சரித்திருந்தார். நான் கல்லூரியில் இளம்கலை முடித்தப் பிறகும் கூட சென்னையின் வேறு பகுதிகளுக்கு போனது கிடையாது, செக்கு மாடுகளைப்போல வீட்டை விட்டால் அலுவலகம் அலுவலகத்தை விட்டால் வீடு என்றே இளமை முழுவதும் கழிந்தது, தென்மாவட்டங்களில் வசிப்பவர்கள் சென்னையில் வசிப்பவர்கள் கட்டுப்பாடு அற்றவர்கள் என்று சொல்ல கேட்டதுண்டு ஆனால் என்னைப் போன்ற செக்குமாடுகள் தான் எனது தோழிகளும், சென்னையில் வசிப்பவர்கள் அல்லது சென்னைவாசிகள் என்றாலே நல்லொழுக்கம் அற்றவர்கள் என்று தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் சொல்வதும் நினைப்பதும் இன்றுவரையில் தொடரும் இழிச்சொல்லாகவே இருப்பதைக் குறித்து என்னைப்போன்ற பலரும் கொதிப்படைவது இயற்கையே.


திருமணத்திற்குப் பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் சென்னை தான் எங்கள் இருப்பிடம். எனது நண்பர் ஒருவருக்கு முட்டுக்காட்டில் இருந்த நிறுவனமொன்றில் வேலை என்பதால் அவரது வீடும் அதையடுத்திருந்தது, அவருக்குத் திருமணமாகி முதல் குழந்தை பிரசவத்திற்காக அவரது மனைவியின் தாய் வீடு ஒரு குக்கிராமத்தில் இருப்பதால் அங்கு அனுப்பி பிரசவம் பார்க்க பிடிக்காமல் மனைவியின் தாயாரை உதவிக்கு அவரது வீட்டிற்கு அழைத்து வந்து அருகிலிருந்த மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த அடுத்தநாள் தொலைபேசியில் சந்தோஷ செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவரது குழந்தையையும் மனைவியையும் சென்று பார்த்துவிட்டு வருவதற்காக நான் வருவேன் என்று நண்பரிடம் நான் சொன்னவுடன், வேண்டாம் நான் உங்கள் வீட்டு பக்கம் வரும் சமயத்தில் ஒருநாள் குழந்தை மனைவி இருவரையும் அழைத்து வருகிறேன் என்றார்.

அவர் அப்படி சொன்னதற்கு நிறைய காரணங்கள் இருந்தது, முதலாவது காரணம் எனக்கு மருத்துவமனை விலாசத்தை கண்டு பிடித்து போவதற்குத் தெரியாது என்பதும், ஏற்க்கனவே ஒருமுறை அவரது புதிய மனைவியை பார்க்கச் சென்றிருந்த போது ஆட்டோவில் சென்று ஆட்டோக்காரன் அதிக பணம் என்னிடம் வசூலித்தது போன்ற காரணங்கள் இருந்தது. வீட்டின் வாசலில் நிற்கும் ஆட்டோவில் ஏறிக்கொண்டு போகலாம் என்று வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தபோது அங்கே அந்த சமயத்தில் ஒரு ஆட்டோவும் இல்லாமல் இருந்ததால், நடந்து சென்று வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் வீதியில் நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் கிழக்கு கடற்க்கரை சாலைக்கு போக வேண்டும் என்று கூறியவுடன், ஏகப்பட்ட பணம் கேட்டார், அவர் கேட்ட பணத்திற்கு இமையமலைக்குச் சென்றுத் திரும்பிவிடலாம், அத்தோடு அவரது அடுத்தக் கேள்வி கிழக்குக் கடற்கரைச் சாலையில் எங்கு போகவேண்டும் என்பது.

எனக்கு மருத்துவமனையின் பெயர் உடனே நினைவிற்கு வராததால் அங்கே சென்றவுடன் சொல்கிறேன் என்று சொன்னபோது அவருக்கு என் மீது 'வேறுவிதமான' சந்தேகம் ஏற்ப்பட்டுவிட்டது என்பது அவர் பார்வையிலும் பேச்சிலும் தெரிந்தது. அதன் விவரம் எனக்கு அப்போது புரியவில்லை, கிழக்கு கடற்கரை சாலையை அடைந்த பின் எங்கே போக வேண்டும் என்று கேட்டார், நான் அங்கேயே இறங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டு பணத்தை கொடுத்த போது அந்த மனிதரின் பார்வையை என்னால் தாங்கவே முடியவில்லை. அப்போதெல்லாம் கைபேசிகள் கிடையாது, அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று தொலைபேசியில் என் நண்பருடன் தொடர்பு கொண்டு நான் அங்கு வந்திருப்பதை தெரிவித்து அந்த மருத்துவமனையின் பெயரை கேட்டபோது என் நண்பர் பதறிப்போனார்.

எதற்க்காக ஆட்டோவில் இந்த இடத்திற்க்கெல்லாம் தனியே வந்தீர்கள் என்னிடம் சொல்லியிருந்தால் நான் அங்கு வந்து அழைத்துச் செல்வேனே என்றார். என்னை அங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நண்பர் என்னை அவருடன் பின்னால் உட்கார்ந்து கொள்ளும்படி சொன்னார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை, இருசக்கர வாகனத்தை கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு என்னுடன் நடந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நண்பரிடம் ஆட்டோக்காரனின் பார்வையைப் பற்றியும் அவன் கேட்டத் தொகையை பற்றியும் சொன்னேன், அப்போது என் நண்பர் சொன்னத் தகவல் என்னை நிலை குலையச் செய்தது. சற்று தூரத்தில் தெரிந்த கருங்கல் மதிர்ச் சுவற்றைக் காண்பித்து அங்கே அது போன்ற பீச் ரெசார்ட் நிறைய இருப்பதாகவும் அங்கு வரும் பெண்களும் ஆண்களும் திருட்டுத்தனமாக உடலுறவுக் கொள்ள வருகின்றனர் என்றும் சொன்னார், அத்துடன் அந்தப் பகுதியில் கொள்ளைக் கொலைப் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்து வருவதாகவும் சொன்னார்.

சென்னையில் வசிப்பவர்களுக்கே சென்னையின் எந்த பகுதி எதற்குப் பெயர் போனது என்கின்ற இது போன்ற செய்திகள் தெரியாமலேயே இருந்துவிடுவதும் உண்டு என்பதற்கு இச்சம்பவமே சாட்சி, இதனால் அந்த பகுதிக்குத் தனியே செல்லும் பெண்களை தவறாக சந்தேகப்படும் நிலை இன்றுவரையில் நடைமுறையில் இருந்து வருகின்றது. பனை மரத்தடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்ததாக சொல்வார்களே அதைப் போன்றது. இன்றுவரையில் ஆட்டோக்காரர்களின் பார்வை என் மீது தவறாகத்தான் பதிந்திருக்கின்றதோ என்று கூட நான் நினைப்பதுண்டு. அதற்காக நான் என்ன பலகையில் எழுதி பறை சாற்றிக் கொள்ளவா முடியும்.

பெண்கள் இப்படியெல்லாம் கூட அவப் பெயர்களை சுமக்க வேண்டிய நிலை இருந்துவருவது வேதனைகுரியது, இத்தகைய நிலை பெண்களுக்கு இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் தவிர்க்க இயலாத நிரந்தர தலை எழுத்து. தனியே வீட்டிலிருக்கும் பெண்ணைத் தேடிக்கொண்டு யாரேனும் வீடு தேடி வந்தாலும் கூட காண்பவருக்குத் தவறாகத்தான் தெரிகிறது, இதற்க்கெல்லாம் கவலைபட்டால் வாழ முடியாது என்று நினைப்பவர்கள் தான் இந்த காலத்துப் பெண்கள். பெண்ணைப்பற்றி அவதூறு கூறும் சமுதாயத்தை யார் மதிக்கப்போகின்றார்கள் என்று கேட்கிறது இன்றைய இளம் பெண்கள் சமுதாயம். போதிய படிப்பும் பணம் ஈட்ட வேலையும் இருக்கும் போது அடுத்தவரின் ஆதாரமற்ற இழிவு பேச்சுகளை தூசு தட்டுவது போல தட்டி விடப் பழகிக் கொண்டுள்ளது இன்றைய இளசுகள். வாழ்க இளம் சமுதாயம்.