Translate

6/27/2010

நகை

கார் வேகமாக சென்று கொண்டிருந்தது, வெயலின் தாக்கத்தினால் தண்ணீர் குடித்தும் தாகம் தீராமல் மீண்டும் மீண்டும் தாகம் எடுத்துகொண்டிருந்தது தேவகிக்கு, சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி, அங்காங்கே ஒரு சில பனை மரங்களும் வேறு மரங்களும் மின்சார கம்பங்களும் வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏதாவது சிறிய குக்கிராமங்கள் வந்த போது சிறிய தேநீர் கடைகளும் இன்னும் சிறிய கடைகளும் தென்பட்டது, ஓட்டுனர் பரமேஸ்வரன் வேலையில் சேர்ந்தபின்னர் முதல் முதலாக அவனுடன் சேர்ந்து மைசூரில் தங்கி படிக்கும் ஒரே மகளை பார்க்க சென்று கொண்டிருந்தாள் தேவகி, மாதம் ஒரு முறை தேவகி தனது மகளை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

தேவகியின் பெயரில் பல சொந்த தொழில்கள் நடத்தி வந்தார் அவளது கணவர், கொள்ளை லாபம், சீக்கிரத்திலேயே அவர்களது அந்தஸ்த்து கோடீஸ்வரர்களாக மாற்றிவிட்டது, தேவகி சாதாரணமாக அணியும் மொத்த தங்க நகைகளின் மதிப்பு மட்டுமே சில பல கோடிகள் தேறும், அடிக்கடி கார் ஓட்டுனர்களை மாற்றிக்கொண்டு இருப்பது கணவன் மனைவியின் வழக்கம், அதிக பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு ஓட்டுனர் என்கின்ற கணக்கில் இதுவரையில் தேவகி மற்றும் அவளது கணவருக்கு ஓட்டுனர்களாக வேலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

தேவகி பரமேஸ்வரனை கூப்பிட்டு வழியில் இளநீர் விற்பவரை பார்த்தால் வண்டியை நிறுத்திவிட்டு குடிப்பதற்கு இளநீர் வாங்சொல்லி கட்டளை இட்டாள். பெங்களூருவை கார் நெருங்குகையில் நடுத்தர வயதில் ஒரு ஆண் இளநீர் விற்றுக் கொண்டிருந்தான், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு இளநீர் வாங்கி வந்து தேவகியிடம் கொடுத்தான் பரமேஸ்வரன். ஓட்டுனர் தனது இருக்கையின் கீழே இருந்த தண்ணீர் நிரம்பிய குப்பியை எடுத்து குடித்தார். கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து இளநீருக்குக் பணத்தை கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி கைப்பைக்குள் போட்ட பின்னர் கார் மறுபடியும் ஓடத் துவங்கியது.

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கார் ஓடிக்கொண்டிருந்தபோது சிறிது தொலைவில் வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தது காரை விட்டு இறங்கிய பரமேஸ்வரன் முன்னால் நின்றிருந்த கார் ஓட்டுனரிடம் எதனால் அந்த தேக்கநிலை என்பதை கேட்டறிந்தார், முன்னே சென்ற டாங்கர் லாரியும் சரக்கு எடுத்துச் சென்ற லாரியும் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது, மைசூருக்கு காரில் செல்வதற்கு வேற்று சாலை வழியை கேட்டறிந்து மாற்றுப்பாதையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது அந்த சாலை தார் போடாமல் யாரும் புழங்காமல் இருந்ததால் வண்டி துக்கியடித்துக்கொண்டு போனபோது திடீரென்று காரின் முன் சக்கரம் பழுதடைந்தது, ஓட்டுனர் பரமேஸ்வரன் காரைவிட்டு இறங்கி வேறு சக்கரத்தை மாற்றி போடுவதற்குள் முழுவதுமாக இருட்டி விட்டது.

திடீரென்று காரின் முன்புறம் வந்து நின்ற சிலர் கையசைத்து காரை நிற்க்கச் சொன்னதும் நிறுத்திய ஓட்டுனரிடம் கதவைத் திறக்கச் சொல்லி முரட்டுக் குரல்கள் ஓலமிட்டது, என்ன செய்வதென்று விளங்காத ஓட்டுனர் விழித்துகொண்டிருந்த போது காரின் முன் விளக்கை தட்டி உடைக்க முற்ப்பட்டனர் அந்த முரடர்கள், ஓட்டுனர் கதவைத் திறந்தவுடன் இரண்டு பேர் ஓட்டுனரின் கை கால்களை கயிறுகளால் கட்டி போட்டுவிட்டு பின்னால் உட்கார்ந்திருந்த தேவகியின் நகைகளை பணத்தை கேட்டனர், அவர்களிடம் கூரிய ஆயுதங்கள் இருப்பதை காரின் முன் விளக்கில் கண்ட தேவகி கொடுக்காவிட்டால் கொன்றுவிட்டு நகை பணத்தை எடுத்து போவார்கள் என்பதை அறிந்து எல்லா நகைகளையும் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை பொழுது விடியும் சமயம் அரைகுறை வெளிச்சத்தில் பரமேஸ்வரனின் கைகால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் காரை ஒட்டிக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தனர். பரமேஸ்வரன் தேவகியிடம் அங்கிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் என்று சொன்ன போது தேவகி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மகளை பார்த்த பின் மறுபடியும் காரில் வீட்டை வந்தடைந்தாள் தேவகி. பரமேஸ்வரன் தேவகியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.

ஒருநாள் காரின் உட்புறம் சுத்தம் செய்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் கண்ணில் நல்ல கனமான தங்க நகை தென்பட்டது, இதை கொண்டுசென்று தேவகியிடம் கொடுப்பதா அல்லது அவர்களாகவே வந்து தேடும்போது கொடுப்பதா என்று யோசித்தபோது, அளவிற்கு அதிகமாக அவர்களிடம் இருப்பதால் தானோ நகையை கேழே விழும் அளவிற்கு அலட்சியமாக வைத்திருக்கின்றனர் என்று தோன்றியது, அதனால் அந்த நகையை திரும்ப கொடுக்காமலேயே பரமேஸ்வரன் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

தேவகியின் வீட்டின் ஓட்டுனர் வேலையிலிருந்து பரமேஸ்வரனை நீக்கி விட்டனர், பணத்திற்கு மிகவும் கஷ்டம் ஏற்படத் துவங்கியது, தேவகி வீட்டில் வேலை செய்தபோது கிடைத்த நகையின் நினைவு வந்தது. கடைக்கு எடுத்துச் சென்று அதன் எடையை அறிந்து விற்று பணமாக்க கடைக்காரரிடம் கொடுத்தபோது நகை வியாபாரி அந்த நகை தங்கமல்ல என்று கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார். அப்போதுதான் பரமேஸ்வரனுக்குப் புரிந்தது தேவகி திருடுபோன நகைகளையோ காணாமல் போன நகைகளையோ தேடுவதே கிடையாது ஏன் என்பது.