Translate

6/25/2010

தத்ரூபம்

மோகனும் மீனாவும் திருமணமாகிய புதிய தம்பதிகள் ஆனால் மோகனுக்கு முடித்து கொடுக்கவேண்டிய வேலைகள் நிமித்தமாக இரவு பகலென்று பாராமல் உழைத்தாக வேண்டியிருந்தது, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையென்பதால் பெரும்பாலும் மோகனுக்கு இரவு நேர வேலைகள் இருப்பது வழக்கம். மோகனின் மனைவி மீனா, இளம் வயது, நல்ல நிறம், காண்போரைக் கவரும் கவர்ச்சி, பேசும் கண்கள், மிதமான உயரம், மெல்லிய உடல் வாகு, கல்லூரியில் பொறியல் படித்து முடித்தவுடன் திருமணமும் முடிந்தது.

மீனாவை பார்ப்பவர்கள் கண்களை அகற்ற சிறிது அவகாசம் தேவைப்படும். மீனாவுடன் படித்த குமரனுக்கு மீனாவை அடையாமல் விட மனதில்லை, யாரிடமும் சிக்காமல் கல்லூரியை முடித்து வந்துவிட்டாலும் குமரன் அவளை துரத்துவது தொடர்கதையாகி வந்தது, மீனாவின் புகுந்த வீட்டின் விலாசத்தை எப்படியோ அறிந்து கொண்டு தவறாமல் தொலைபேசியில் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது, அன்றும் அப்படித்தான் அவன் தொலைபேசியில் மீனாவிடம் 'உன் புருஷன் இன்னைக்கு இரவு வேலைக்குச் சென்றுவிட்டான், சரியாக இரவு பத்துமணிக்கு உன் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டுவேன், நீ திறந்தாகவேண்டும் திறக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஏற்க்கனவே சொல்லிவிட்டேன், நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இரவு மணி பத்து, இடி மின்னல் பெருமழை ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது, தெருவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது, சொன்னபடி மீனாவின் வீட்டின் வாயிலில் வந்து நின்ற குமரன் கால்களிலிருந்த செருப்பை கழற்றிவிட்டு கதவை லேசாக தட்டுவதற்கு கதவில் கையை வைத்தவுடன் கதவு திறந்து கிடப்பதை கவனித்தான் மீனாவின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது, கதவை திறந்து ஒரு அடி உள்ளே வைத்தவன் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டான், லேசாக கைகள் இரண்டும் அவனையறியாமல் நடுங்கியது.

ரத்தவெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தாள் மீனா, அங்கே நின்று நேரம் கடத்துவது ஆபத்து என அவன் மனம் எச்சரித்தது, தனது கை ரேகைகள் எங்காவது எதிலாவது படிந்துவிடக் கூடும் என்ற பயத்தில், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அந்த வீட்டைவிட்டு வெளியேறினான், யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒருமுறை சுற்றிலும் பார்த்தபோது மழை வெள்ளம் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருந்தது, வீதியில் யாரும் தென்படவில்லை.

முழுமூச்சாக ஓடி தெருவிலே வந்தபோது அவனை உரசிக்கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தை வந்தடைந்து தான் செல்ல வேண்டிய ரயில் தயாராக நின்றிருக்கவில்லை என்றாலும் தயாராக நின்றிருந்த ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்னர் பத்து நிமிட நேரம் கழித்து ரயில் கிளம்பியது, ரயிலில் உட்கார்ந்திருந்த பத்து நிமிடங்களும் உள்ளத்தினுள் படபடப்பு.

ஒருவழியாக ரயில் கிளம்பிய பின்னர் தான் அந்த ரயில் ஏதோ ஊருக்குப் போவதை அவனால் உணர முடிந்தது. கண்ணிலிருந்து நீங்காத மீனாவின் அந்த கரு விழிகள் அவனை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்தியது. யாரோ தனக்கு முன்னர் வந்து எதற்காகவோ மீனாவை குத்தி கொன்று போட்டுவிட்டு போயிருப்பதை நினைத்தாலே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது குமரனுக்கு.

கடியாரத்தில் மணி பத்து அறைக்கு ஒரு மணி அடித்தவுடன் மீனா மெதுவாக எழுந்தாள், அவள் திட்டமிட்டபடியே சிகப்பு பேனாவிற்கு உபயோகிக்கும் மையை தன் மீதும் தரையிலே சிறிதும் ஊற்றி கொண்ட பின் கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு குமரன் அங்கு வந்து போகும் வரை அசையாமல் பிணம் போல கிடந்து, பார்ப்பவரை சிந்தனை செய்யவிடாமல் துரத்தியடிக்க அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, இனி குமரன் என்ற காமுகனின் போராட்டம் நீங்கியது என்ற நிம்மதி அடைந்தாள் மீனா.