Translate

6/22/2010

விபத்து

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கல்கத்தாவிற்கு திரும்பி செல்லவேண்டும் என்று கோபால் முன்பே கூறி இருந்தான், எல்லா சடங்குகளையும் தெனிந்திய கிராமத்தின் பழமை மாறாமல் அப்படியே செய்து முடித்துவிட்டு மாப்பிள்ளை கோப்பாலும் மணமகள் சுமதியும் முதல் முதலாக தனிக் குடித்தனம் நடத்த கிளம்பிய போது அவர்களுடன் ஒருவரும் செல்லவில்லை, என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முன் பின் தெரியாத யாரோ ஒருவருடன் செல்வது போன்ற உணர்வுடன் தான் சுமதி கோப்பாலுடன் பயணமானாள்.

ஒருவார பழக்கத்தில் கோப்பால் சுமதியை முன்பே பரிச்சயப்பட்டவனைப்போல மிகவும் சகஜமுடன் பழகினான், தனது முதல் காதலியைப் பற்றி விரிவாக சொன்னான், முதல் முத்தம், தான் ஸ்பரிசித்த முதல் பெண் என்று ஒன்றுவிடாமல் சொன்னான், சுமதிக்கு கேட்பதற்கு முதலில் அருவெருப்பாக இருந்தது, என்ன மனிதன் இவன், புதியவர்களிடம் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா, அசிங்கம் என்று தோன்றியது.

சுமதி நீ பட்டினத்திலே பிறந்து வளர்த்தவள் உனக்கும் இப்படி ஏதேனும் மறக்க முடியாத அனுபவங்கள் இருந்திருக்குமே எதையும் என்னிடம் பயப்படாமல் சொல்லு நான் மத்தவங்களப் போல பெண்களை தீக்குளித்து சத்தியம் செய்விக்கும் ஆசாமியல்ல என்றான். சுமதியின் மௌனம் கோபாலுக்கு பிடிக்கவில்லை. சுமதியின் அக்காவின் திருமணத்திற்குப் பின் அக்காவுடன் படித்த ஒரு பையனை எதேச்சையாக எங்கோ வழியில் பார்த்த போது அந்த பையன் அக்காவைப் பார்த்து சிரித்ததை பார்த்துவிட்ட அக்காவின் கணவன் அவனுக்கும் உனக்கும் ஏற்கனவே என்ன உறவு, அவனை நேரில் பார்ப்பதற்காக வரச் சொல்லி இருந்தாயா என்றெல்லாம் கேட்டு இம்சை செய்வதாக தன் அம்மாவிடம் சொல்லி அழுதது நினைவிற்கு வந்தது.

சுமதி மிகவும் எச்சரிக்கையுடன் அப்படியெல்லாம் எனக்கு ஒரு அனுபவமும் கிடையாது என்றாள். கோப்பால் சுமதியிடம் எதைப்பற்றி பேசினாலும் முடிக்கும் போது அவளது 'முன்' அனுபவத்தை பற்றி விசாரிப்பதை மட்டும் மறக்காமல் கேட்டுவிட்டுதான் பேச்சை முடிப்பான். திருமணமாகிய ஒரு வாரத்திற்குள் அவன் சுமதியிடம் கூறியிருந்த 'முன்' அனுபவங்களை கேட்டு பைத்தியமே பிடித்துவிடும் நிலைக்கு வந்துவிட்டாள் சுமதி. இவனுடன் எப்படி காலம் போகப் போகிறதோ என்று கூட தோன்றியது.

தொடர் வண்டி பயணத்தின் போதும் கூட இளம் வயது மற்றும் திருமணமாகிய ஆகாத பெண்களை பார்த்துவிட்டால் பக்கத்தில் சுமதி இருக்கும் நினைவு கூட மறந்து போயி 'ஜொள்ளு' விடுவதை பார்க்கவே சகிக்காது சுமதிக்கு. தனது அக்காவின் தாம்பத்தியத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தனது பெற்றோர் பட்ட அவஸ்தையை நினைத்தாலே சுமதிக்கு கண்களில் ரத்தம் வர ஆரம்பிக்கும் அளவிற்கு வேதனைகள். தம்பியை படிக்க வைக்கவும் தனக்கு திருமணச் செலவுகளை செய்வதற்கும் தன் பெற்றோர் பட்ட கஷ்டம் அவள் நினைவிலிருந்து விலகவில்லை, வரதட்சிணையொன்றும் வாங்காமல் நகைகள் அதிகம் எதிர்பார்க்காமல் பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் இருக்கும் கோபால் தங்களுக்கு மாப்பிள்ளையாக கிடைத்தது பாக்கியம் என்று தன் பெற்றோரும் உறவினர்களும் அதிசயித்து கொண்டிருக்கும் நிலையில் கோப்பாலைப்பற்றிய இந்த உண்மைகளை யாரிடம் சொல்ல முடியும் என்று நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

தொடர்வண்டி கல்கத்தாவை சென்று சேர இன்னும் ஒருமணிநேரம் இருந்தது, கோபால் உட்பட எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர், எண்ணச்சுமைகள் அவளது இமைகளை மூடவிடாமல் தடுத்தது, மூன்று அடுக்குகளில் மேலே கோப்பாலும் கீழே சுமதியும் இடையே ஒரு நடுத்தரவயது பெண்ணும் படுத்திருந்தனர், இரவு மணி ஒன்றை கடந்துகொண்டிருந்த சமயம், 'தடால்' என்ற பேரிடி சப்தம். கண் விழித்துப் பார்த்தபோது தொடர்வண்டியின் இருக்கையிலிருந்து எங்கோ ஒரு மூலையில் அவள் கிடப்பது தெரிந்தது, ஒரே இருட்டு, சிலரின் அழுகைக்குரல்.

மருத்துவமனையில் இரண்டு கால்களிலும் கைகளிலும் பலத்த கட்டுகளுடன் படுக்கையில் கிடந்த போது அங்குமிங்கும் நடமாடிய ஒன்றிரண்டு செவிலியர்களை காண முடிந்தது, ஒருவரும் அவளருகில் வரவில்லை, கோப்பால் எங்கேயென்று யாரிடம் கேட்பது, கை கால்களை அசைக்க முடியவில்லை, எல்லோரும் வங்காளம் பேசுகிறார்கள் சிலர் ஹிந்தி பேசுகிறார்கள், அடுத்தநாள் அங்கு வந்த மருத்துவரிடம் ஆங்கிலத்தில் தனது கணவர் கோபாலின் பெயரைச் சொல்லி அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரித்தபோது உயிருடன் இருப்பவர்களில் யாரும் கோபால் என்ற பெயர் சொல்லவில்லை என்று கூறினார். தன் கால் கைகளை அசைக்க இயலாததைபற்றி கேட்டாள், கைகளில் பலத்த எலும்பு முறிவிற்கு கட்டு போடபட்டிருப்பதையும் கால்களிரண்டையும் அகற்றவேண்டியிருந்தது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

திருமண வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையும் அத்தனை எளிதில் முடிவிற்கு வந்துவிடுமென்று சுமதியும் மற்றவர்களும் எதிர்பார்க்கவில்லை. பாக் டு பெவிலியன் [Back to Pavillion}.