Translate

6/21/2010

செம்மொழி உலகத் தமிழ் மாநாடு


உலகத் தமிழ் மாநாட்டின் புதிய பொலிவு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது, இன்னொரு புதுப் பொலிவு கலைஞரின் ஆட்ச்சியில் நடக்கும் செம்மொழி உலகத் தமிழ் மாநாடு, மாநாடு துவங்க இன்னும் ஒரு தினமே இருக்கின்ற நிலையில் தமிழின் இனிமையை சிறிதேனும் சுவைத்துப் பழகியதால் அதை பற்றி எழுதுவது தவறல்ல என்றே என் கருத்தை இங்கு பதிவு செய்ய நினைத்தேன், பலவித எதிர் வாதங்களும், குதர்க்க பேச்சுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் உலகசெந்தமிழ் மாநாட்டைப் பற்றி நினைக்கின்ற போழ்து எனக்கு சிறிய கதை ஒன்று நினைவிற்கு வந்தது, இந்த கதை நடக்கவிருக்கும் மாநாட்டை குறித்து மட்டுமில்லாது பொதுவாகவே சிலர் கூச்சலிடுகின்ற போது என் மனக்கண் முன் தோன்றி என்னை உள்ளூர சிரிக்க வைக்கும் ஒரு கதை, பீடிகை வேண்டாம் விஷயத்திற்கு வா என்று இதை படிக்கின்றவர் நினைப்பது எனக்குத் தெரியும்,

ஒரு சிறிய கிராமத்தில் வயது முதிர்ந்த கிழவர் இருந்தார் அவருக்கு பிள்ளைகுட்டிகள் நிறைய உண்டு, அந்த கிழவர்தான் அந்த கிராமத்திலேயே சுமாராக படித்தவர் என்பதால் பல விஷயங்களுக்கு அவரை நாடி வருபவர்கள் நிறைய உண்டு, அவர் கூற்றுப்படி செய்வது மிகவும் சரியாக நிறைவேறி விடுவதால் அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு வந்து கொண்டிருந்தனர், அந்த கிழவருக்கு வயது மிகுதியின் காரணமாக உடலில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு வந்தது, இதனால் வருவோர் போவோரை உபசரிப்பதற்கு, அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுவதற்கு தனது வாரிசுகளில் சிலரை நியமித்து வருவோர் போவோரது பிரச்சினைகளை கேட்டறிந்து கிழவரிடம் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி தீர்வுகளை பேசி அறிந்து பின்னர் அவரவர்களுக்கு தெரிவிப்பது தொடர்ந்தது,

இந்நிலையில் கிழவனாரின் பேத்தி ஒருத்தி பட்டினத்திற்க்குச் சென்று பாரட்லா படித்துவிட்டு வந்திருந்தாள், தனது தாத்தாவையொத்த அறிவும் ஆற்றலும் அவளுக்கு இயற்கையாகவே இருந்ததை கவனித்த கிழவர் தன்னை தேடி வரும் கூட்டத்தை தனது பேத்தியிடம் சென்று விசாரிக்கச் சொல்லி சிபாரிசு செய்துவந்தார், அதே போல கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி பேத்தியிடம் சென்று தங்களது பிரச்சினைகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் ஏற்ற தீர்வை கேட்டறிந்து வந்தனர், கிழவருக்குப் பின் வேறு யாரிடம் செல்வது என்று நினைத்திருந்த பலருக்கும் பேத்தியின் வருகை மிகவும் நிம்மதியை கொடுத்தது.


இதனிடையில் அந்த ஊரில் நாட்டாமை ஒருவர் இருந்தார் அவருக்கு கிழவரின் மீதிருந்த வெஞ்சினம், கிழவன் செத்தொழிந்துவிடுவான் என்று பொறுத்திருந்த நிலையில் பேத்தியின் வருகையும் அங்கு கூடும் மக்களின் கூட்டமும் கண்டு எப்படியாவது இந்நிலையை மாற்றியாக வேண்டும் என்கின்ற வெறி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. பேத்திக்கு மிகவும் நல்லது செய்வது போல வெளிநாட்டிலிருந்து வசதியான படித்த மாப்பிள்ளையை தேர்வு செய்து கிழவரின் பேத்திக்கு திருமணம் செய்துவிட்டால் பேத்தி திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்று விடுவாள், கிழவரும் முதிர்ச்சியின் காரணமாக பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வது இயலாமல் மக்கள் வருகை அத்துடன் முடிந்து போகும் என்று நினைத்து அதன் படி செயல்பட்டான்,

கிழவருக்கு எதிரானவர்களின் கூட்டத்தை கூட்டி தனது திட்டத்தை கூறி அதன்படி கிழவரின் பேத்திக்கு திருமணம் முடிவானது, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த சமயம், வியாதியுடன் வாழ்ந்து வந்த நாட்டாமையின் மகள் திடீரென்று உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கபட்டாள், உயிருக்கு போராடிய நிலையில் நாட்டாமையின் மகள் இருந்தபோது ஊரெங்கும் வண்ணவிளக்குகளும் அலங்காரங்களும் நாதஸ்வர இசையும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது, இதைக் கண்ட நாட்டாமைக்கு கோபம் கட்டுக்கடங்காமல், ஊரிலிருந்த பெரியவர்களை கூடி வரச் செய்து, தனது மகள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஊரில் கச்சேரி, பாட்டு, மேள தாள முழக்கம் என்று மூன்று நாள் வைபவம் நடைபெறுவதை தடை விதித்தார்.

கிழவரையும் அவரது பேத்தியையும் ஆதரித்தவர்கள் 'இதென்ன கொடுமை இவர் தானே மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடக்க காரணமானவர், தற்போது தனது மகளுக்கு திடீரென்று உடல் நிலை மோசமாகியதால்
கிழவரின் பேத்திக்கு தடபுடலாக ஏதும் செய்யக் கூடாது என்று தடை விதிக்கிறாரே ' என்று கூறி எரிச்சலடைந்தனர், நாட்டாமையின் இத்தகைய நடவடிக்கை அவரது சுயநலத்தை காட்டியது. அப்போது திருமணம் நடக்கவிருந்த கிழவரின் பேத்தியின் திருமணத்தை ஒத்தி போட இயலாத வகையில் வெளி நாட்டிலிருந்து வந்த மாப்பிள்ளை வீட்டாரும் மாப்பிள்ளையும் அந்த ஊரில் வியாதிப் படுக்கையிலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மற்ற இருவரையும் சுட்டிக் காண்பித்து, அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு ஒரு நியாயம் நாட்டாமையின் மகளுக்கு ஒரு நியாயமா என்று கேட்டு,

ஊரில் ஒரு வீட்டில் மரணமும் துக்கமும் இருந்தாலும் அடுத்த வீட்டில் வசிக்கும் வேறு ஒருவரின் வீட்டில் நிச்சயிக்கப்பட்ட அல்லது வேறு சுப காரியங்களை நடத்தக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும் நடைமுறைக்கு ஏற்க்க முடியாத சுயநலம் என்று சொல்லிவிட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் திருமணத்தை முடிக்காமலேயே திரும்ப தங்களது நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

நாட்டில் பல தேவைகளும் பிரச்சினைகளும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதற்காக நடக்கவேண்டிய காரியங்களை 'இது தேவையா, இது அவசியமற்றது, இது இந்த சமயத்தில் தேவையா, ஒத்தி போட வேண்டும் என்பன போன்ற அபிப்பிராயங்கள் எதற்காக எதைக்கொண்டு சொல்லப்படுகிறது என்று கவனித்தால் அப்பட்டமான சுயநலம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றின் வெளிப்பாடு என்பது வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

உலகத்தமிழ்
மாநாடு சிறப்புற நடந்தேற எமது நல் வாழ்த்துக்கள்.
தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதி சொன்னதுபோன்று தமிழ் தேன் வந்து காதுகளுக்கு மட்டுமில்லாது சிந்தைக்கும், மனதிற்கும், கருத்திற்கும், தமிழார்வத்திற்கும் திகட்டாத தேனாக பாயவிருக்கிறது. தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்புவதை மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்களும் கண்டு கேட்டு மகிழ்வுருவோம்.

வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !! வாழ்க கலைஞர் !! வாழ்க தமிழறிஞர்கள் !!