Translate

6/15/2010

சுவாரசியம்

அந்த பங்களாவின் தோற்றத்தைப் பார்க்கும் போதே மிகப் பழமையானது என்பது தெரியும், சுரேஷுக்கு கருத்து தெரியும் வயதிலிருந்தே தங்கள் சொந்த ஊரான அல்லிக்குளத்திற்க்கு எபோதாவது பள்ளி விடுமுறைக்கு தனது தாய் கமலாவுடன் வந்தது நினைவில் இருந்தது, சிறுவனாக இருந்த போது தனது தாய் கமலாவால் சொல்லப்பட்ட அவர்களது பூர்வீகத்தைப் பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமானதாக இருந்ததுண்டு.

ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளை கடந்து அந்த பங்களா இன்னும் நின்று கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் அந்த வீட்டில் வாழ்ந்த தலை முறையினர் பங்களாவை தங்களது மிக முக்கிய சொத்தாக பாவித்து பாதுகாக்கும் நோக்கில் பராமரித்து வந்ததுதான். ஆனால் சுரேஷின் முந்தைய தலை முறையினர் பலரும் மேற் படிப்பு பணி நிமித்தமாக தங்களது குடியிருப்பை மாற்றிக் கொண்டு சென்று விட்டதால் அந்த பங்களாவை பராமரிப்பதற்க்கென்று வேலையாட்களை நியமித்தனர், விசுவாசமான வேலையாட்களின் மறைவிற்குப் பின் பங்களா தன் பொலிவை இழக்க ஆரம்பித்தது.

போதிய கட்டுமான அறிவியல் வளர்ந்திராத காலத்தின் பெருமையை அந்த பங்களா பறை சாற்றிக்கொண்டிருந்தது, சுரேஷின் தாய் சொன்ன பல தகவல்களும் சிறப்பும் இன்னும் குறையாமல் பாதுகாப்பையும் பராமரிப்பையும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவே சுரேஷுக்குத் தோன்றியது. சுரேஷ் அந்த பரம்பரையின் கடைசி தலைமுறையைச் சார்ந்தவன், வயது இருபத்து இரண்டு , பட்டினத்தில் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு முடிந்து கோடை விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்கு தாய் கமலாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்.

சுரேஷ் அங்கு வந்த போது அந்த பங்களாவை தற்போது பராமரித்துக் கொண்டிருந்த சின்னையன் அந்த பங்களாவிலேயே தங்கி இருந்தான், சுரேஷின் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவனது சாப்பாட்டையும் அவனே தயாரித்து வந்தான், அந்த பங்களாவிற்கு ஏற்கனவே சுரேஷ் பல முறை வந்திருந்தாலும் அதிலிருக்கும் ஏராளமான மிகப்பெரிய அறைகளையும் இன்னும் கிடக்கும் மிகப்பழைய பொருட்கள் ஓலைச் சுவடிகள் பல தட்டு முட்டு சாமான்கள் எல்லாவற்றையும் பார்த்ததில்லை, பல அறைகளை திறப்பதே இல்லை.

அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு கட்டிலில் படுத்திருந்த சுரேஷிற்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இதுவரையில் தான் பார்த்திராத ஒவ்வொரு அறையையும் அதில் கிடக்கும் பல புத்தகங்கள் சாமான்கள் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும், சின்னையனின் துணையுடன் சில அறைகளை பார்த்தான், இன்னும் இருக்கும் ஏராளமான அறைகளையும் அதை பற்றிய தகவல்களையும் அறியும் ஆவல் கொண்டு கைப்பேசியில் தன் தாய் கமலாவிடம் அங்குள்ள அறைகளைப்பற்றி கேட்டான், அவன் தாய் கமலா சொன்ன ஒவ்வொரு அறையைப்பற்றிய சிறிய விளக்கமும் சுரேஷிற்கு மிகவும் வியப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

குறிப்பிட்ட ஓர் அறையைப்பற்றி சொல்லி அதை திறக்க வேண்டாம் என்று கூறியதும் சுரேஷின் மனதில் ஆவல், எதற்காக அந்த அறையை திறக்க கூடாது என்று விடாப்பிடியாக அவனது தாயை நச்சரித்தான் சுரேஷ். சின்னையனுக்கு ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றிருந்ததால் அந்த குறிப்பிட்ட அறையை திறக்கும் போது சின்னையன் சுரேஷுடன் இருக்கவில்லை.

அந்த பெரிய அறையின் கதவு பழங்கால பர்மா தேக்கு மரத்தால் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது, எல்லா அறைகளின் கதவுகளும் மரச்சாமான்களும் பர்மா தேக்கு மரத்தால் மிக அழகாக செய்யப்பட்டதுதான், ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விதமாக கலை நயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருந்த ஷேல்ப்புகளில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள், அந்த புத்தகங்களை கையில் எடுக்காமலேயே அதன் பெயரை மட்டும் படித்துவிட்டு கூரையிலிருந்த மச்சுப் பகுதியில் வைத்திருந்த ஓலைச்சுவடிகளையும் வேறு சில புத்தகங்களையும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறிய மர ஏணியின் மீது ஏறி ஒவ்வொன்றாக எடுத்து சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அங்கே வைத்துவிட்டு, சுவாரசியமாக தோன்றிய பல பக்கங்கள் செல்லரித்துப் பழுப்பேறியிருந்த சில பழைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அறைக்கதவை பூட்டி சாவிக்கொத்தை அலமாரியில் வைத்துவிட்டு தனது அறைக்கு வந்து கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தான் சுரேஷ்.

மிகவும் சுவாரசியமான புத்தகம் இதுவரையில் கதைகளிலும் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து கேட்டு வந்த கூடுவிட்டு செல்லுதல், தன் உடலைவிட்டு ஆவியில் நடமாடுவது, கட்டிலின் மீது படுத்து அந்த புத்தகத்தில் வரிசையாக குறிப்பிடப்பட்டிருந்த செய்முறை விளக்கத்தின் படி ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தான் சுரேஷ், ஆச்சரியமாகவும் சுவாரசியம் மிகுந்துமிருந்த அந்நிலை தன் உடலை தானே சற்று மேலே மிதந்து கொண்டு பார்க்கும் போது சந்தோஷத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் மேலே மேலே பறக்க, திடீரென்று தன் உடன் படிக்கும் நண்பன் தினேஷின் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது, தினேஷ் அப்போது அவனது வீட்டில் இல்லை அவனது அம்மா தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள், தினேஷின் தங்கை கைபேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தாள், நேரம் செல்ல செல்ல ஏதோ இனம் புரியாத அச்சம் தோன்ற ஆரம்பித்தது தன் சொந்த கிராமம் அல்லிக்குளத்திற்க்கு விரைந்தான்,

அங்கே அறையில் அவனது உடல் கட்டிலில் அதன் அருகே இருந்த பழைய புத்தகம் தனது உடலுடன் தன்னை மறுபடியும் இணைக்க என்ன செய்யவேண்டும், பக்கங்களைப்புரட்ட சில பக்கங்களை காணவில்லை, ஐயோ எனது உடலில் நான் இப்போது நுழைந்தாக வேண்டுமே இல்லையென்றால் நிரந்தரமாக என்னுடலை விட்டு பிரிய வேண்டியதாகிவிடுமே, என்ன செய்வதென்றே விளங்காமல் புத்தகத்தை கண்டெடுத்த அறையின் சாவியை எடுத்து பூட்டை திறந்து மறுபடியும் மச்சுவில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கிடையில் விடுபட்டுப் போன பக்கங்கள் கிடைத்துவிட வேண்டுமே என்கிற அவசரத்தில் தேட

விடுபட்ட பக்கங்களை பூச்சிகள் தின்றிருக்குமா அல்லது தொலைந்து போயிருக்குமா அந்த பக்கங்கள் கிடைக்கவே இல்லை, அடுத்தநாள் சின்னையனின் தகவல் கேட்டு அங்கு வந்த அவன் தாய் கமலம் ஓவென்று அழும் குரல், வெளியில் சென்று தன்னுடலையும் அழும் தாயையும் பார்க்க இயலாமல் அந்த அறைக்குள்ளேயே முடங்கியது சுரேஷின் ஆன்மா.